53 முறை ரத்த தானம்

 

உயிர்காக்கும் உத்தமர்

53 முறை ரத்த தானம்


22-04-2022 அன்று வெள்ளிக்கிழமை.. ஒரு பெருநாளின்  மகத்துவம் கொண்ட அந்தத் திருநாளில், புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ் நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின்  அவர்களை சந்திக்க  தந்தையும் மகனும் அழைக்கப்பட்டிருந்தனர்.  

இந்தத் தருணம் சாதரணமாய் நிகழ்ந்ததன்று.



கொற்கைப்பட்டினமாம் இன்றைய காயல்பட்டினம்,

முத்துக்களால் பெருமை கொண்ட, தென் தமிழ்நாட்டின், கடைக்கோடியில்,  பண்டைய  கொற்கைப்பட்டினமாம் இன்றைய காயல்பட்டினம், குத்துக்கல் தெரு, அல்ஹாஜ். ஷேக் சம்சுத்தீன் மக்கீ, அஹ்மத் மீரா நாச்சி தம்பதியருக்கு இளைய மகனாய் 1970 ம் ஆண்டு காயல்பட்டினத்தில் பிறந்தார். 

எஸ்.எஸ். எம். ஷேக் சதக்கத்துல்லாஹ், அவர்களின் ஜார்ஜ் கோட்டை நோக்கிய இந்த பாதை  உயிர்க்கொடை எனும் இரத்த தானத்தால் அமைக்கப்பட்டது.

இவர் சென்னை ஜியோன்  மற்றும் ஹோலி டிரினிட்டி  பள்ளிகளில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பின்  இஸ்லாமிய கல்வி  பயிலவும் காயல்பட்டினத்தில் அமைந்துள்ள ஜாவியா அரபிக் கல்லூரியில் 1982 ம் ஆண்டு சேர்க்கப்பட்டார். 

அமெச்சூர் ரேடியோ   ( HAM Radio ) 

1990 களில் மிகவும் பிரபலமாக இருந்த பயனுள்ள  பொழுதுபோக்குகளில்  மிக முக்கிய பங்காற்றிய அமெச்சூர் ரேடியோ   ( HAM Radio ) என்று அழைக்கப்படுகின்ற  ரேடியோ அலைவரிசை, ஸ்பெக்ட்ரத்தை வணிக ரீதியாக அல்லாத செய்தி பரிமாற்றம், வயர்லெஸ் பரிசோதனை, சுயப் பயிற்சி, தனிப்பட்ட பொழுது போக்கு, ரேடியோ ஸ்போர்ட் போட்டி மற்றும் அவசரகால தகவல் தொடர்புகளுக்கும் பயன்படுத்தப்படும் அன்றைய நவீன தகவல் மற்றும் பொழுது போக்கு சாதனமாகும்.

 ஹாம் ரேடியோவில்  உறுப்பினராகி ( Callsign - VU2SDU ) அதில் பயணிக்கக் கூடிய நண்பர்களுடன் உறையாடி வந்த ஷேக் சதக்கத்துல்லாஹ் அவர்களுக்கு அன்றைய தினம் ( 20-10-1993 ) ரேடியோ தோழி திருமதி. ஹேமா, ( VU2HMN ) அவர்கள் மூலம் வந்த செய்திதான் இன்றைய முதல்வரின் சந்திப்பிற்கான முதல் படி.


தன் முதல் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொழுது, அகம் குளிர்ந்து முகம்  மலர்வதை உணர முடிகின்றது. 

இறைவன் தனக்கு வழங்கிய  அருட்கொடை

சென்னை, சதர்ன் ரெயில்வே மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் சர்ஜரி ( Open Heart Surgery ) நடப்பதாகவும் திரு. நாராயணன், அவர்களுக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் ஹாம் ரேடியோ தோழி ஹேமா அவர்கள் சொன்னவுடன் ஒருவித பதற்றத்துடன் தான் மருத்துவமனை உள் நுழைகின்றார்.

அன்றுதான், அங்குதான் இறைவன் தனக்கு வழங்கிய மிகப்பெரும் அருட்கொடையை அறிகின்றார்.

உலகம் வாழ் முழுமைக்கும் 1% சதவிகித மக்களுக்கு மட்டுமே வாய்க்கப் பெற்ற AB NEGATIVE அறிய வகை  இரத்த வகையை இறைவன் தனக்கு வழங்கியிருப்பதைக் கண்டு அவனுக்கு நன்றி சொல்லி, தன்னால் முடிந்த அளவிற்கு தேவைப்படுபவர்களுக்கு உதவுவதெனவும் தீர்மானிக்கின்றார்.


'ஒரு மனிதரைக் காப்பாற்றுபவன், ஒரு சமுதாயத்தைக் காப்பாற்றுகின்றான் ' என்ற இறைவனின் அருள் வாக்கை இதயத்தில் ஏந்தி,1993 ம் ஆண்டு தொடங்கிய இரத்தத்தான சேவைப் பயணம் இன்று வரை மொத்தம் 53 தடவை கொடுத்துள்ளார்.

'மத நல்லினக்கமும், சகிப்புத்தன்மையும் மேன்படவேண்டும், இந்தியத் திருநாட்டின் உயர்ந்த கொள்கையாகிய, வேற்றுமையில் ஒற்றுமை என்ற தார்மீகத் தத்துவதின் அடிப்படையில் சமூகம் ஓங்க வேண்டும், --என்பன போன்ற சீரியக் கொள்கைகளை,  தான் இதுவரை வழங்கிய இரத்த தானத்திற்கான குறிக்கோளாக கொண்டு சேவையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடி வந்த அங்கீகாரங்கள் 

தற்போது, தொழில் நிமித்தமாய் ( கட்டிட பராமரிப்பு பணி மற்றும் வாடகை வசூல் செய்யும் பணி / Property Management and Rent Collecting Agent ) சென்னையில் வசித்துவரும் ஷேக் சதக்கத்துல்லாஹ் அவர்களின் சேவையைப் பாராட்டி அவரைத் தேடி வந்த அங்கீகாரங்கள் சில: 

11-08-2014 அன்று, சென்னை மெட்ரோ ஆங்கிலேய மாலை நாளேட்டின் சார்பில் மீடியா கில்டு அவார்ட் சான்றிதழும், கேடயமும் மேனாள் தமிழ்நாடு கவர்னர் மாண்புமிகு டாக்டர், கே. ரோசையா அவர்கள் மூலம் வழங்கி சிறப்பித்தது.

CONVERSATION TODAY என்ற மாதப் பத்திரிகை தனது ஜனவரி 2023 இதழில் 'THE GIFT OF KINDNESS' என்ற தலைப்பில், அவரின் இரத்தக் கொடைகளின் சேவைகளைப் பாராட்டி  கட்டுரை ஒன்றை வெளியிட்டு பெருமைப் படுத்தியுள்ளது.


Trinity Mirror ஆங்கில தினசரி நாளிதழும் பலமுறை இவரை சிறப்பித்து செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி தன் நாளிதழில் , 'உயிர்க்காக்கும் தோழர்' என்று தலைப்பிட்டு மரியாதை செய்தது. 

மற்றும் பல சமூக சேவை நிறுவனங்கள் ஷேக் சதக்கத்துல்லாஹ் அவர்களின் இரத்தக் கொடையை போற்றும் விதத்தில்  பாராட்டுப் பத்திரங்களை வழங்கி சிறப்பித்துள்ளது. குறிப்பாக ,'THE TAMILNADU DR. M.G.R MEDICAL UNIVERSITY'

அன்னாரது சேவைகளைப் பாராட்டும் முகமாக, 2012 ம் ஆண்டு நடைபெற்ற 'WORLD BLOOD DONOR DAY' விழாவில், பாராட்டுப் பத்திரம் வழங்கி சிறப்பித்துள்ளது.


தேசத்தின் ஒற்றுமை

எந்த உதவிகளும், சேவைகளும், இறைப் பொருத்தத்தை நாடி மட்டுமே செய்யப்படவேண்டும் என்ற இஸ்லாம் வகுத்த உயர்ந்த நோக்கத்தை மட்டுமே தனது இலட்சியமாய் கொண்டு செயல்படும் அவர், தனக்குக் கிடைத்த அனைத்துப் பாராட்டுகளையும், தனது தேசத்தின் ஒற்றுமைக்கு சமர்ப்பிக்கின்றார்.

தனது அலுவலகம் முதற்கொண்டு, தான் செல்லும் இடமெல்லாம் இரத்தத்தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறுவதே இல்லை.

எந்த சமூக மாற்றங்களும், சமூகச் சீர்திருத்தங்களும் தன்னிலிருந்தே தொடங்க வேண்டும் என்ற நியதிப்படி, தன் மகனிடம் இருந்தே மாற்றத்தை துவக்கி இளைஞர்களை உயிர்க் கொடையாம் இரத்தக் கொடையின் சேவையில் ஈடுபட அழைக்கின்றார்.

தன் அறிய வகை இரத்த வகையைக் கொண்ட தனது மகன் இது வரை 15 முறைகள் இரத்தக் கொடை வழங்கி உயிர்க் காத்திருப்பதை மிகவும் சந்தோசத்துடன் பகிர்ந்து கொள்வதோடு, 18 வயது தொடங்கி 65 வயதுவரை உள்ள ஆரோக்கியமானவர்களை கண்டிப்பாக இரத்தக்கொடை கொடுக்கும் படி எல்லாவிதங்களிலும் ஊக்குவித்து வருகின்றார் என்பது சந்தோசமான குறிப்பு.

மனித நேயம், மத ஒற்றுமையை வழியுறுத்தி இரத்தக் கொடையில் ஈடுபட்டு வருவதோடு, நாட்டின் எண்ணற்ற பொது நல அமைப்புகளோடு இணைந்து சமூகச் சேவையாற்றி வருவது கூடுதல் சிறப்பு

அவற்றில் சில,

அரிமா சங்கம்,

கல்வி நிறுவனங்கள்,

காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை ( Kayalpatnam Medical Trust Hospital )

மற்றும் பல்வேறு பொதுச்சேவை நிறுவனங்கள்.

இப்போதும், அவர் நெகிழ்வோடு அந்தத் தருணத்தை குறிப்பிடுகின்றார்.

' என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் மிக முக்கியமானதும், எனக்கு வந்த அழைப்புகளிலேயே மிகவும் சந்தோசம் கொள்ளச் செய்ததுமான, தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பைக் குறிப்பிட்டு, தந்தை மகன் இருவரையும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பாராட்டியதை, இறைவனுக்கும், தன் தந்தைக்கும் சமர்ப்பிப்பதோடு 'தொடர்ந்து சேவையாற்றுங்கள்'   என்ற முதல்வரின் அறிவுரையை ஏற்று செயல்படுவதோடு,இரத்தம் கொடுக்கத் தகுதியான  அனைவரையும், சேவையாற்ற  ஊக்குவித்து வருகின்றார்.


குதியானவருக்கு, தகுதியானவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற இந்த அங்கீகாரம்,  பல புதிய இரத்தக் கொடையாளர்களை உருவாக்கி, பல உயிர்கள் பாதுகாக்கப்படும். அதன் மூலம் சமத்துவமும், சகோதரத்துவமும் மேன்மைப்படும் என்ற தன் உயர்ந்த கொள்கைக்கு உரமிட்டுக் காத்திருக்கின்றார்.

இன்றைய நல்ல விதைகளே நாளைய நற்பயிர்கள்...

இன்றைய நல்ல எண்ணங்களே நாளைய வளமான தேசம்....

சிறப்புக் குறிப்பு:

கடந்த பல வருடங்களாக இவருடைய முகநூல் மற்றும் வலைத்தளம் மூலம் சமூக நல்லிணக்கம் மற்றும் குருதிக்கொடை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

 Facebook Page - www.fb.com/shaikhsadaqathullah


                          ------------------------------

Post a Comment

புதியது பழையவை