கவிஞர் தியாரூ புதிய நூல்கள்

 பெஸ்ட் மணி கோல்டு வழங்கிய

இலக்கியத் திருவிழா!

----------------------------------------

கவிஞர் தியாரூ எழுதிய 

4 புதிய நூல்கள் வெளியீட்டு விழா!

***** ***** ***** ***** *****


               கவிஞர் தியாரூ எழுதிய ' கைகளுக்குள் வைகறை வானம்' -  'அப்பாவின் கடிதம்' - 'வாழ்வெல்லாம் வசந்தம்' - 'இந்நாள் நமது பொன்னாள்' ஆகிய 4 புதிய நூல்களின் வெளியீட்டு விழா, 1.10.2022 சனிக்கிழமை மாலை, சென்னை மியூசிக் அகாடமி - கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அரங்கில் வெகுசிப்பாக நடந்தேறியது. தங்க நகைத் தொழிலில் 90 வருட பாரம்பரியம் மிக்க பெஸ்ட் மணி கோல்டு நிறுவனம் இந்த விழாவை இலக்கியத் திருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தது.

படைப்பாளர்கள், திறனாய்வாளர்கள், இலக்கியவாதிகள், விளம்பரத்துறை நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலநூறு பேர் பங்கேற்ற இவ்விழாவிற்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சண்முகம் சரவணன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திரு.திண்டுக்கல் I.லியோனி விழாவிற்குத் தலைமை தாங்கி, நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தின் தலைவர் திரு.PLA ஜெகநாத் மிஸ்ரா, நூல்களின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு மகிழ்வுரை வழங்கினார்.


தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயலகத் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.டாக்டர் இரா.குறிஞ்சிவேந்தன் மற்றும் பால சாகித்ய பரஸ்கார் விருதாளரும் 'ராணி' பத்திரிகை ஆசிரியருமான திருமதி ஜி.மீனாட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஓசூர் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் எல்லோரா மணி தமது கம்பீரக் குரலில் சிறப்பு வாழ்த்துக் கவிதையை அரங்கேற்றினார். விழாவின் தொடக்க உரையை அரிமா சிவ ரமேஷ் வழங்கினார்.



இறுதியில் கவிஞர் தியாரூ ஏற்புரை நிகழ்த்தினார்.

இம்மாபெரும் இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியினை, காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர் அ.நசீமா கவித்துவத்துடன் தொகுத்து வழங்கினார். பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் திரு.கந்தராஜ் நன்றியுரை வழங்க, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

திரு.திண்டுக்கல் I.லியோனி தமது சிறப்புரையில், 'கவிஞர் தியாரூ நூல்கள்  சமுதாயச் சிந்தனை கொண்டவை. ஆழமான கருத்துடையவை. எனவே, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளின் நூலகங்களிலும் இந்த நூல்கள்  இடம்பெறுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன்' என்று குறிப்பிட்டதும் அரங்கம் கரவொலியால் நிரம்பியது. கவிஞரின் நூல்களிலுள்ள பல்வேறு சிறப்புகளை அவர் சுவைபட எடுத்தியம்பினார்.


பேராசிரியர் டாக்டர் இரா.குறிஞ்சிவேந்தன் தமது வாழ்த்துரையில், கவிஞர் தியாரூ படைப்புகளில் உள்ள தனித்துவத்தை தெள்ளத் தெளிவாக விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தஞ்சைத் தமிழ்த்துறை மாணவர்கள் அனைவரையும் கவிஞரின் நூல்கள் பற்றிய கட்டுரைகளை எழுதச் சொல்லப் போவதாகவும், அங்கு கருத்தரங்குகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் உறுதி அளித்தார். திருமதி ஜி.மீனாட்சி, கவிஞரின் சிறுகதைகளைப் பற்றி மிகச்சிறப்பான திறனாய்வு உரையை வழங்கிச் சிறப்பித்தார்.

பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், 'கவிஞரின் நூல்களைப் படித்தால் உங்களுக்கு நோயே வராது. ஆரோக்கியமாக வாழலாம்' என்று குறிப்பிட்டார்.

திரு.PLA ஜெகநாத் மிஸ்ரா, கவிஞருடனான தமது அனுபவத்தை இயல்பாக இனிமையாக எடுத்தியம்பி அனைவரையும் கவர்ந்தார். கவிஞர் தியாரூ தமது ஏற்புரையில், பெஸ்ட் மணி கோல்டு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனங்களின் சேவைகளை வெகுவாகப் பாராட்டுயதோடு, அனைவருக்கும் தமது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்தார்.



தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் மாலை 6 மணிக்குத் தொடங்கிய விழா இரவு 9 மணிக்கு நிறைவுற்றது. கவிஞர் தியாரூ நூல்களின் வெளியீட்டு விழா, அனைவரையும் கவர்ந்த இலக்கியத் திருவிழாவாகவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

                                                       -----------------------------------


தொடர்பிற்கு:

----------------------

கவிஞர் தியாரூ

'சங்கம்'

37, விஜிபி செல்வா நகர் விரிவு,

வேளச்சேரி,

சென்னை - 600042

மொபைல்: 

9940056332, 9677183419

மின்னஞ்சல்:

thiyaru@gmail.com


                                 -----------------------------------------------


Post a Comment

புதியது பழையவை