கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர் - ரேனியஸ் ஐயர்-

 

இன்றைய நவீனக் கல்விக்கு வித்திட்ட 

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர் 

- ரேனியஸ் ஐயர்-




ஐரோப்பாவிலிருந்து கிறித்தவத்தின் ஒளியை உலகெங்கும் ஏற்றிட விளைந்த மிஷனெரிகளின் பணிகள் மகத்தானவை!

வெறும் சமயம் பரப்புதல் மட்டுமே இவர்களது பணியாக இருந்திருந்தால் ,பிற மதப் பரப்புநர்களைப் போலவே இவர்களையும் காணாமல் போக விட்டிருக்கலாம் நாமும்! ஆனால் ,மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை முதற்கண் நிறைவேற்றி அந்தந்த நாடுகளில் காணப்பட்ட ஆதிக்க நிலையையும் அடிமை முறைகளையும் களைந்து, விடுவித்து அதன் பின்னரே தாங்கள் கண்டுணர்ந்த ஆன்மீக வெளிச்சத்தைக் காண்பித்தனர் இவர்கள்.

அதற்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியது ஜெர்மனின் ஹலே பல்கலைக்கழகத்தின் மிஷனெரி பயிற்சிக் களத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளே! அவற்றுள்:

 1. அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும். 

2. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக்கான தொழில் பயிற்சி அளிக்க வேண்டும். 

என்ற இவ்விரு அடிப்படைத் தேவைகளையும் அளித்தலின் விளைவால் தான் நமது சமய ஏற்பு அமையப் பெறல் வேண்டும் என்பதே அதன் மையக் கருத்தாக்கம். அத்தகைய அழுத்தமான பயிற்சிக்குப்பின்னரே அவர்கள் பிற நாடுகளுக்குச் சமயப்பணியாளர்களாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


அவ்விதத்தில் ஹலே பல்கலைக்கழகத்தினால் பட்டைத்தீட்டப்பட்ட வைரமாய் கி.பி.1814 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தவர் தான் சார்லஸ் தியோபிலஸ் ஈவார்ட் ரேனியஸ் என்ற செயல் வீரர். 1790 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள் ஜெர்மன் நாட்டில் பிறந்த இவர்.  


இந்தியாவிற்கு வந்த அனைத்துக் கிறித்தவ மிஷனெரிகளிலும் மிகவும் சிறப்பிற்குரியவராகத் திகழ்ந்த இவர், வெகு துணிச்சலோடு இந்தியக் கட்டமைப்பின் மிக மோசமான சாதியத்தின் சாதி வேரை முதன் முதலில் அசைத்தவர்!


ஆதிக்க வர்க்கத்தினரால் ஏற்படுத்தப்பட்ட அடிமைத்தன மரபுவழிச் சாசனங்களின் சூட்சுமங்களைப் பாமர மக்கள் தாங்களாகவே உணராதவரை அவர்களை அதிலிருந்து விடுவிப்பது என்பது தற்காலிகமானதாகவே இருந்து வந்தது. நிரந்தரமான தீர்வை, கல்வியைக் கொண்டுதான் அடையச் செய்ய முடியும் என்பதை உணர்ந்திருந்த ரேனியஸ் தாம் ஏற்படுத்திய சபைகள் அமைந்திருந்த ஊர்களிலெல்லாம் சாதி, சமயப் பாகுபாடின்றி கல்வியைக் கட்டாயமாக்கினார். அவருக்கு முன்பு இங்கு வந்திருந்தோரும் கல்விப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் இவரது கல்விப்பணி நவீனக் கல்விமுறைக்கு முதல்தர விதைகளாயின.கல்வியே அறியாமையை அகற்றும் ஆயுதமாதலால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தினார்.


வெறும் எண்ணும் எழுத்தும் தான் கல்வி என்ற நிலையை மாற்றி, பொது அறிவு, தாவரம், மண்வளம், வரலாறு, புவியியல், கணிதம், கனிப்பொருள்கள், மொழியறிவு என்று இன்றைய கல்விமுறையை போன்ற கல்வித் தரத்தை ஏற்படுத்த, நூல்களையும் தாமே எழுதி இச்சமூகத்தின் அறிவுக் கண்களைத் திறந்து வைத்தார்.


அதில், கி.பி1832 ல் அவரெழுதிய" பூகோள சாத்திரம்" என்ற அறிவியல் நூல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாயிற்று! இந்நூல், இந்தியர்களின் தவறான அறிவியல் பார்வையை மாற்றி தீர்க்கமாக சிந்திக்கத் தூண்டியதில் முதலிடம் பிடித்தது; ஆசியாவிலேயே முதன்முதலாக எழுதப்பட்ட அறிவியல் நூலாக ஏற்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பிரதி  வரலாற்றுச் சங்கத்தின் நூலகத்தில் இருப்பது பெருமைக்குரியதாகும்.


அந்நூலில் வானம், பூமி, சூரியகிரகணம், சந்திரகிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளைத் தம் கற்பனையில் தோன்றிய கதைகளாகப் புனைந்து, அவற்றை எழுத்துக்கள் வாயிலாகவும், வாய்வழிச் செய்தியாகவும் மக்கள் நம்பிக்கொண்டு வந்தவற்றை மாற்றியமைக்க ரேனியஸ் அரும்பாடுபட்டிருப்பதை அதில் அறியமுடிகிறது!


முறையான கல்வியளிப்பதிலும் அதில் செழுமையடையச் செய்வதிலும் பெரும் கல்வியாளராகவே செயல்பட்டிருக்கிறார் ரேனியஸ். ஏனோதானோவென்று பெற்றோர்களின் அக்கரையற்று பெயரளவில் செயல்பட்ட பள்ளிகளை மூடினார். பள்ளிகளுக்கென்றே சிறந்த ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பள்ளிகளை(செமினரி) ஏற்படுத்தி மிகச் சிறந்த ஆசிரியர்களை உருவாக்கினார். சாதியத்தைக் கடைப்பிடிப்பதைத் தமது பள்ளிகளிலும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளிலும் கடுமையாக எதிர்த்தார். 


பள்ளியின் கல்வித் தரத்தை ஆராய, கல்வி விசாரணை அல்லது பரீட்சிக்கும் ஆசிரியர் என்றதொரு(பதவியை) ஆய்வுக் குழுவையும் ஏற்படுத்தி (Inspecting School Master I.S.M) அவ்வப்போது பள்ளிக்கல்வியின் தரத்தைச் சீரமைத்தார். இச்செயல் முறை இந்தியாவில் முதன்முதலாக ரேனியசால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையாகவே அறியமுடிகிறது!


பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்து அதற்கென்றே பெண்கள் பள்ளிகளை ஏற்படுத்தி அனைவருக்குள்ளும் சமத்துவச் சிந்தையை விதைத்தவர் ரேனியஸ். 


கி.பி1823 ஆம் ஆண்டு பெண் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் , பெண் ஆசிரிய பயிற்சிப்பள்ளியையும் ஏற்படுத்தினார். இப்பள்ளியே இந்தியாவில் இரண்டாவது பெண்களுக்கான தங்கும் விடுதியுடனான பள்ளியாகும்.


இன்றும் இது பாளையங்கோட்டையில் மேரி சார்சன்ற் பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அடுத்தவர் சீரமைத்த நிலங்களை விளைவிப்பது எளிது! ஆனால் ,காட்டையும் ,மேட்டையும் திருத்தி விளைநிலமாக்கும் பணிகள் கடினமானவை! அதனை சுமார் 24 ஆண்டுக்காலம் நேர்த்தியாக செய்து புரையோடிப் போய்க்கிடந்த தமிழக மண்ணின் அசுத்தங்களை அறிவொளிப் புகுத்தி, அடையாளங்கண்டு ஒதுங்கவும் ஒழிக்கவும் செய்தவர் சமூகச் செயற்பாட்டாளர் ரேனியஸ் அவர்களே!!


1838 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 48 வது வயதில் இவ்வுலகவாழ்வை நிறைவு செய்தார்.அவரது கல்லறை, பாளையங்கோட்டை, தூய யோவான் ஆலயக் கல்லறைத்தோட்டத்திற்கு வெளியே சற்று தள்ளி ஊரின் நடுவில் அமைந்துள்ளது.

                                                   ----------------------------------------




  —  முனைவர். த.ஜான்சி பால்ராஜ்-

      எழுத்தாளர்.


Post a Comment

புதியது பழையவை