எப்படி... எப்படி?
-புத்தம் புதிய தொடர்-
பணம் சம்பாதிப்பது எப்படி?
குன்றில்குமார்
kundrilkumar@gmail.com
பிரபல எழுத்தாளர் குன்றில் குமார் அவர்கள் வழங்கும் "எப்படி? எப்படி ?"-புத்தம் புதிய தொடர்.
நெல்லைகவிநேசன் டாட் காம் இணையதளத்தில் முதல்முறையாக எழுத்தாளர் குமார் அவர்கள் தொடர் வழங்குகிறார்.
இந்த தொடரில் ஒவ்வொரு நிகழ்வுகளும் எப்படி நிகழ்த்தப்படுகின்றன ? என்பதை விளக்கி அதற்கான காரணத்தையும் அருமையாக படம் பிடிக்கிறார், பிரபல எழுத்தாளர் குன்றில் குமார்.
பணம் சம்பாதிப்பது எப்படி?
மனித வாழ்க்கையில் மனிதத்தைவிடவும் உயரத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பது பணம் மட்டுமே. பணம் இருந்தால் மட்டுமே இந்தச் சமுதாயத்தில் உயரிய மதிப்பைப் பெற முடியும் என்ற சித்தாந்தம் தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
பணத்தை விடப் பெருமைக்குரியது கல்வி என்பார்கள். ஆனால் அந்தக் கல்வியே பணம் சம்பாதிப்பதற்கான அடிப்படைத் தகுதி என்ற சூழலுக்கு மாறிவிட்டது. அல்லது மாற்றப்பட்டு விட்டது.
மொத்தத்தில் என்னதான் பணம் சம்பாதிப்பதைப் பற்றி இளக்காரமாகவும், நக்கலாகவும் பேசினாலும் அதுதான் உலகில் முதலிடத்தை வகிக்கிறது.
அதுவே நிஜம்.
இப்போது தவறுகள் செய்யாமல், நியாயமாகவும், உண்மையாகவும் பணம் சம்பாதிப்பது அல்லது பணத்தை சேமிப்பது எப்படி என்பதைப் பற்றி அலசுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர் ரச்சித் சாவ்லா. அவர் முதலீடு செய்வது எப்படி என்பதற்கான விதியைக் குறிப்பிடுகிறார்.
’’உங்கள் வருமானத்தில் 50 சதவீதம் பயன்பாட்டு ரசீதுகள், வாடகை, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசியத்திற்கு செலவிடவும்.
அடுத்த 30 சதவீதம் உங்கள் பொழுதுபோக்கு அல்லது பிற பொழுதுபோக்குகளுக்கு செலவிடவும்.
மிக முக்கியமான பகுதி 20 சதவீதம் ஆகும். ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக கோடிகளில் சேமிக்க வேண்டும்’’
இப்படிச் சொல்கிறார் ரச்சித் சாவ்லா.
எப்போது தொடங்க வேண்டும்? என்று கேட்டால், எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ. அவ்வளவு சீக்கிரம் சேமிப்பைத் தொடங்க வேண்டும் என்கிறார்.
தனக்கு செலவழிக்கப் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்வதற்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்குத் திட்டமிட வேண்டும்.
அதேபோல் அவர்கள் ஓய்வு பெறும் காலத்திற்காக ஒரு நல்ல தொகையை சேமிக்க வேண்டும்.
இந்த அணுகுமுறை கார், வீடு, திருமணம், விடுமுறை சுற்றுலா மற்றும் பல பொருட்களை வாங்குவதற்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் உறுதி செய்யும்.
பெற்றோரைச் சார்ந்து இருக்கக்கூடாது. வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதும் கூடாது. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும்.
எப்படி?
நிதித் திட்டத்தில் ஐந்து முக்கிய விதிகள் உண்டு.
1. அவசர நிதி
2. கடன் இல்லாத வாழ்க்கை
3. பல வருமான ஆதாரங்கள்
4. பணப்புழக்க திட்டமிடல்
5. ஓய்வூதிய திட்டமிடல்
இந்த முக்கிய விதிகள் மகத்தானவை. சேமிப்பின் உன்னத அச்சாரம்.
ஒருவேளை வேலை இழப்பு அல்லது பண நெருக்கடி ஏற்பட்டால் அவசர நிதி அப்போது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
முதலீடு செய்வது முக்கியம். அதை உடனே தொடங்கவும்.
முதலில் காப்பீடு மிகமிக முக்கியம். ஒருவர் காப்பீடு செய்ய விரும்பும் தொகைக்கு ஏற்பத் திட்டங்கள் மாறுபடும். பெரும்பாலான இளம் தொழில் வல்லுநர்கள் நிதி ரீதியாகப் போதுமான அளவு திட்டங்களை வகுத்துக்கொள்வது இல்லை.
ஓய்வுக்குப் பிறகு நிறைய பணம் தேவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஓய்வூதியத்திற்குப் பிறகும் உங்கள் வருமானம் குறைவாக இருப்பதால் நிதி திட்டமிடல் முக்கிய பங்கினை வகிக்கிறது.
நீங்கள் சம்பாதிக்கத் தொடங்கும்போது செய்யப்படும் சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
உங்கள் ஓய்வூதியத்திற்காக உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைத் திட்டமிட்டு சேமித்து வைப்பது அவசியம்.
ஒருவர் பணக்காரனாக மாற வேண்டும் என்றால் அதற்கு நான்கு முக்கியக் குறிக்கோள் தேவை. அதாவது நிதியில் தன்னிறைவை எட்டுவதற்கு சில முக்கியப் பழக்க வழங்கள் இருப்பது அவசியம். அதிலும் குறிப்பாக இந்த நான்கு குறிக்கோள் இருந்தால் நீங்கள் பணக்காரனாக மாற முடியும்.
1. வரவு செலவைத் திட்டமிடல்
2. சேமித்தல்
3. முதலீடு செய்தல்
4. வருமானத்தை அதிகரித்தல்
கடன் வாங்குவது என்பதே பாவச் செயல் என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. அதேபோல கிரெடிட் கார்டு வைத்திருப்பது மிக ஆபத்தான பழக்கம் என்ற கருத்தும் பலரிடமும் உள்ளது. நண்பர்களிடம் கடனே வாங்கக்கூடாது என்று உறுதியாக இருப்பவர்களும் உண்டு.
ஆனால் நீங்கள் ஒரு சராசரி மனிதராகத்தான் உள்ளீர்கள். சுமாரான சம்பளம் தான் உங்கள் வருவாய்.
அதற்காக வருத்தப்பட வேண்டாம்.
ஓய்வு மற்றும் வேடிக்கை உட்பட பெரும்பாலான செலவுகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
இந்தத் திட்டமிடல் உங்களைக் கைநீட்டிக் கடன் வாங்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதன்மூலம் பாவச் செயல் என்று கருதும் கடன் பழக்கத்தை உங்களால் நிச்சயம் தவிர்க்க முடியும்.
அடுத்து சேமிக்கும் பழக்கம்.
உங்களின் குறைந்த வருமானத்தில் செலவுகளும், சேமிப்புகளும் இருக்கும். அதைத் தவிர்த்துக் கூடுதலாக மிஞ்சும் பணத்தை என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். பணம் எங்கே மிஞ்சுகிறது என்று விரக்தியாகப் பேச வேண்டாம். குறைவாக இருந்தாலும் ஏதோ சில அளவு மிஞ்சத்தான் செய்யும். அவற்றை சேமித்து வைத்து விலை உயர்ந்த பொருட்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும்.
மூன்றாவதாக முதலீடு செய்தல்
சேமிப்பதும், முதலீடு செய்வதும் மற்றொரு செலவு என்பதை முழுமையாக மனதில் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களால் அவற்றைச் சாதிக்கவே முடியாது.
விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல் விலை தாறுமாறாகப் போகிறது. வீட்டைவிட்டு வெளியே போய் வந்தாலே பெரிய அளவில் பணம் செலவாகிவிடுகிறது.
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல. இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இப்படித்தான் கஷ்டக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் பலரும் முதலீடு செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
எனவே முதலீடு என்பது முடியாத ஒன்றல்ல. காரணங்கள் கூறித் தப்பிக்க நினைக்காமல் அதுவும் ஒரு கட்டாயச் செலவினம் என்று நினைத்தால் போதும்.
முதலீடு சாத்தியமே.
கடைசியாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் திறமையற்றவர் கிடையாது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் திறமைமிக்கவர்களே.
ஒவ்வொருவரும் சாதிக்கப் பிறந்தவர்களே.
ஒருவரிடம் எழுத்துத் திறமை இருக்கும். இன்னொருவரிடம் ஓவியத் திறமை இருக்கும். மற்றொருவரிடம் விளையாட்டுத் திறமை இருக்கும். வேறொருவரிடம் பாடும் திறமை இருக்கும்.
இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான திறமைகள் இருக்கத்தான் செய்யும்.
உங்கள் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாத ஒரு வேலையை நீங்கள் செய்து கொண்டிருப்பீர்கள். அதில் குறிப்பிட்ட அளவு ஊதியம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
அதைக் கடந்து உங்களிடம் புதைந்து கிடக்கும் திறமையைக் காட்டுங்கள். ஓய்வு நேரங்களில் அந்தத் திறமையை செம்மைப் படுத்தி உழையுங்கள்.
நீங்கள் செய்யும் வேலையே உங்களுக்குப் பிடித்தமானது என்றால் அந்த வேலையில் அடுத்த அடுத்த நிலையை எட்டுவது எப்படி என்று சிந்தியுங்கள். அதற்காக உழையுங்கள்.
நிச்சயமாக இந்த முயற்சி உங்கள் வருமானத்தை மேலும் அதிகரிக்க உதவியாக இருக்கும்.
முயற்சியும் பயிற்சியும் இருந்தால் முன்னேற்றம் நிச்சயம் கைகூடும்.
வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது என்பது முடியவே முடியாத ஒன்றல்ல.
முழுமையான திட்டமிடமும், சீரிய முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் பணம் உங்களை வந்து சேரும்.
-----------------------------
கருத்துரையிடுக