உணவு உண்பது எப்படி?
குன்றில்குமார்
kundrilkumar@gmail.com
பிரபல எழுத்தாளர் குன்றில் குமார் அவர்கள் வழங்கும் "எப்படி? எப்படி ?"-புத்தம் புதிய தொடர்.
நெல்லைகவிநேசன் டாட் காம் இணையதளத்தில் முதல்முறையாக எழுத்தாளர் குமார் அவர்கள் தொடர் வழங்குகிறார்.
இந்த தொடரில் ஒவ்வொரு நிகழ்வுகளும் எப்படி நிகழ்த்தப்படுகின்றன ? என்பதை விளக்கி அதற்கான காரணத்தையும் அருமையாக படம் பிடிக்கிறார், பிரபல எழுத்தாளர் குன்றில் குமார்
உணவு உண்பது எப்படி?
‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...’ என்றார் திருமூலர்.
உடம்பை வளர்ப்பதன் மூலமே நம் உயிரைக் காத்துக் கொள்ள முடிகிறது என்ற அரிய உண்மையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கண்டறிந்துள்ளார்.
நாளன்று மூன்று வேளை சாப்பிடுவது மனித வழக்கம். அதுவும் விதவிதமாக சாப்பிடுவதுதான் நமது பழக்கம். இன்று சாப்பிட்டது நாளை இருக்கக்கூடாது. புதிதான உணவு வேண்டும்.
இப்படித்தான் நாம் சாப்பிடுகிறோம். நமது நாக்கு விதவிதமான சுவை மிகுந்த உணவுகளைத்தான் விரும்புகிறது.
அப்படிப்பட்ட உணவை நாம் எப்படி சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் நம் முன்னோர்கள் திறம்பட வகுத்து வைத்துள்ளார்கள்.
அவற்றை நாம் இப்போது பின்பற்றுகிறோமா என்று கேட்டால் அதற்கு ‘ஆமாம்’ என்று பதிலளிப்பது கடினமே.
இருப்பினும் அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு வேளை உணவைச் சாப்பிடும் முன்பும் ஆண்டவனை வணங்கிய பிறகே உண்ணவேண்டும். அந்த உணவைத் தந்ததற்கு நன்றியும், தான் உண்ணும் உணவு செரித்து நல்ல உணர்வைத் தர வேண்டும் என்பதும் தான் இந்த வேண்டுதலின் அடிப்படை சாராம்சம்.
சுத்தமான எளிய உணவை கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும். இது அவரது கல்வி, திறமை, கலைகள் வளர உதவும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், செல்வம் பெருகும். பீடை ஒழியும்.
தெற்கு நோக்கி அமர்ந்து உண்பதால் அழியாத புகழ் உண்டாகும், சொல்வன்மை பெருகும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அந்த உணவு நோயை உருவாக்கும். எனவே, வடக்கு நோக்கி உண்பதைத் தவிர்க்கவேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கைகளால்தான் உண்ணவேண்டும். கைகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது ஜீரண சக்தி அதிகரிக்கும். உடலின் நரம்புகள் நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடை பெறுகிறது.
குளிக்காமல் உண்பது, பேசிக்கொண்டே உண்பது, பெரும் சத்தம் எழுப்பிக்கொண்டே உண்பது, கைகளை ஊன்றிக்கொண்டே உண்பது போன்றவை தவறு.
பேசிக்கொண்டே சாப்பிட்டோம் என்றால் உணவை நன்றாக மெல்ல முடியாது. பேசாமல் வாயை மூடிக்கொண்டு சாப்பிடும்போதுதான் உமிழ்நீர் சுரக்கும் என்பதோடு, அப்போது ஏற்படும் வெப்பம் உணவைக் கூழாக்க உதவி புரியும்.
உணவைச் சிந்துவதும், அலட்சியமாக உண்பதும் உணவுக்கு இழுக்கை ஏற்படுத்தும்.
விரல்களைத் தாண்டி உள்ளங்கை நனைவது கூட சாப்பிடும் முறை அல்ல. ஒழுங்காக தகுந்த மரியாதையோடு பிறர் முகம் சுழிக்காத வகையில் நாம் உணவு உண்ணும் முறை இருக்க வேண்டும்.
தற்போது மேலைநாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கம் நம் உண்ணும் முறையைக் கூட மாற்றி விட்டது. பஃபே சிஸ்டமும், தெருவோரத் தள்ளுவண்டி உணவும் நின்று கொண்டே சாப்பிடும் முறையைக் கற்றுத் தந்துவிட்டன.
நின்று கொண்டு சாப்பிடும்போது குனிந்து நிமிர மாட்டோம். அதனால் இயக்கு தசைகள் வேலை செய்யாது என்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். இரைப்பையில் இருக்கும் வாயு வெளியேறாது.
எந்த ஒரு உறுப்பும் சரியாக வேலை செய்ய இரத்த ஓட்டம் தேவை. நின்று கொண்டும், இருக்கையில் காலைத் தொங்கப் போட்டபடி அமர்ந்தும் சாப்பிடும்போது ரத்த ஓட்டம் இரைப்பைக்கு சரியான அளவு கிடைக்காமல், கால்களுக்குச் சென்று விடும். இரைப்பைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து அது சரியாக இயங்கினால்தான் செரிமானத் தொந்தரவு வராது.
நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ‘நொறுங்கத் தின்றால் நூறு வயசு’ என்பார்கள். வாயில் பற்கள் இருப்பதே மென்று சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான்.
மென்று சாப்பிடும்போது வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவுடன் கலந்து அதைக் கூழாக்க உதவும். அப்படிக் கூழான உணவு இரைப்பைக்குச் செல்லும்போது செரிமானம் சுலபமாக நடைபெறும்.
சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிப்பது தவறு என்கிறார்கள் நம் முன்னோர்கள். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. உணவைச் செரிப்பதற்கான அமிலத்தின் வீரியத்தை தண்ணீர் இளக்கி விடும். சாப்பிடுவதற்கு முன் ஒரு மடக்கு வெந்நீர் அருந்தலாம்.
சம்மணமிட்டு அமர்ந்து குனிந்து சாப்பிடுவதுதான் சரியான முறை. இன்று நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கமோ டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். சம்மணமிட்டு அமர்தல் என்பது ஒரு ஆசன நிலை. அந்த நிலையில் அமர்ந்து குனிந்து சாப்பிடும்போதுதான் வயிற்றின் இயக்கு தசைகள் வேலை செய்யும். இரைப்பைக்குள் உள்ள காற்று வெளியேறி வாயுத் தொந்தரவுகள் ஏற்படாது.
காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதும் ஆபத்துதான். பீர்க்கங்காயை அதிகம் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகி, இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
முள்ளங்கி அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்னை மற்றும் அதிகம் சிறுநீர் வெளியேறுதல் நடக்கும்.
சாப்பிட்ட உடனே படுக்கைக்குச் செல்லக் கூடாது. ஏனென்றால் உணவை கூழாக்குவதற்காக வயிற்றில் சுரக்கும் அமிலம் படுக்கும்போது இரைப்பையில் இருந்து உணவுக்குழலுக்கு வந்துவிடும்.
பிடிக்காத உணவுகளைக் கஷ்டப்பட்டு உள்ளே தள்ள வேண்டாம். அதற்காக ரொம்பப் பிடித்த உணவை அளவிற்கு அதிகமாக உண்பதும் தவறு.
சாப்பாட்டுக்குப் பின் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உடனே படுக்கவும் கூடாது. சற்றே காலாற நடப்பது நல்லது.
சீரான உணவை உண்பது ஆரோக்கியமானது. சீரான உணவு என்பது ஐந்து வகையாக இருக்கிறது.
1. தானியங்கள், திணை, விதைகள்.
2. பருப்பு வகைகள், முட்டை, இறைச்சி, மீன்.
3. பால், பால் பொருட்கள்.
4. பழங்கள், காய்கறிகள்.
5. கொழுப்பு மற்றும் எண்ணெய் சரியான அளவில் உண்பது.
இந்த உணவுகள் உங்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்கள் பெறுவதை உறுதி செய்கின்றன:
புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
நாள் முழுவதும் குறைந்தது நான்கில் மூன்று பாகம் காய்கறிகளையும், இரண்டு பாகம் பழங்களையும் சாப்பிடுங்கள்.
காஃபின் மற்றும் வறுத்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்ப்பதற்காக காலை அல்லது சிற்றுண்டி நேரத்தில் பழங்களை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சைக் காய்கறிகளும் பழங்களும் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, கே மற்றும் ஈ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சக்திகளைத் தருகின்றன.
சாதம் சூடாக சாப்பிடுவது சிலருக்குப் பிடிக்கும். அதற்காக கொதிக்க கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டில்தான் சாப்பிட வேண்டும்.
அதேபோல் சில்லென்று ஆறிப்போன சாதத்தை சாப்பிடுவதால் கீழ்வாதம், மூட்டுவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பழைய சாதத்தில் தயிர் கலந்து சாப்பிடக் கூடாது. மோர் ஊற்றி சாப்பிடுவதே சிறந்தது.
பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.
தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக் கூடாது.
ஈரத் துணியை அணிந்து கொண்டு சாப்பிடக்கூடாது.
பந்தியில் சாப்பிடும்போது முன்னதாக எழுந்து செல்லக் கூடாது.
பழம், பலகாரம் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங்களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.
காலையில் உடற்பயிற்சி முடிந்ததும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
மாலை வேளையில் சிற்றுண்டியாக வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.
எக்காரணம் கொண்டும் இரவில் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.
உணவு சாப்பிட்ட பிறகு எக்காரணம் கொண்டும் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.
நாம் உணவை உண்பதற்குக்கூட இதுபோன்று நிறைய விதிமுறைகள் இருப்பதை நாம் கடைப்பிடித்தால் நம் உடம்பிற்கு நல்லது.
---------------------------------------------------
கருத்துரையிடுக