-புத்தம் புதிய தொடர்.
பிரபல எழுத்தாளர் குன்றில் குமார் அவர்கள் வழங்கும் "எப்படி? எப்படி ?"-புத்தம் புதிய தொடர்.
நெல்லைகவிநேசன் டாட் காம் இணையதளத்தில் முதல்முறையாக எழுத்தாளர் குமார் அவர்கள் தொடர் வழங்குகிறார்.
இந்த தொடரில் ஒவ்வொரு நிகழ்வுகளும் எப்படி நிகழ்த்தப்படுகின்றன ? என்பதை விளக்கி அதற்கான காரணத்தையும் அருமையாக படம் பிடிக்கிறார், பிரபல எழுத்தாளர் குன்றில் குமார்
எந்தக் கார் வாங்கலாம்?
--குன்றில்குமார்-
ஒரு காலக்கட்டத்தில் வீடு மற்றும் கார் வாங்குவது என்றால் அதற்கு ‘யோகம் வேண்டும்’ என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு கடலில் குண்டூசியைத் தேடுவது போல சிம்ம சொப்பனம் தான்.
ஆனால் இன்று நிலைமை வேறு.
காலையில் போய் ஷோரூமில் காரைப் பார்த்தால் மாலையில் புதிய காருடன் வீடு திரும்பலாம்.
கார் வாங்குவது என்பது அத்தனை எளிதாகிவிட்டது.
சூ... மந்திரகாளி கதைதான்.
எல்லாமே நொடிப் பொழுதுதான். நினைத்தது நடந்துவிடும். ஆசைப்பட்டது நிறைவேறிவிடும்.
டெக்னாலஜி அப்படி...
அப்படி எளிதாகக் கார் வாங்கும் வசதி இருப்பதால் வாங்குகிற கார் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.
முக்கியமாகக் காரில் இரண்டு வகை உண்டு. தற்போது அது மூன்று வகையாக விரிவடைந்துள்ளது.
1. பெட்ரோல் கார்
2. டீசல் கார்
3. மின்சார கார்.
மின்சார கார் என்பது தற்போதுதான் மெல்லத் தலையை நீட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. அதன் தயாரிப்பும், விற்பனையும் இன்னும் ஓகோ என்று சொல்கிற அளவிற்கு வளர்ந்துவிடவில்லை.
எனவே மின்சார காரைத் தற்போது ‘எப்படி... எப்படி...’ என்பதில் பார்க்க வேண்டாம்.
அப்படியானால் பெட்ரோல் கார் மற்றும் டீசல் கார் என்று இரண்டு வகை கார்கள் தான் இன்று சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இதில் டீசல் கார் வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது.
விலையைப் பொறுத்தமட்டில் பெட்ரோல் கார் விலையைக் காட்டிலும் டீசல் காரின் விலை சற்று அதிகம்.. விலை குறைவாக உள்ள பெட்ரோல் காரை வாங்குவதன் மூலம் கணிசமான பணத்தை நீங்கள் மிச்சப்படுத்த முடியும்.
அப்புறம் சர்வீஸ் செலவைப் பார்த்தால் பெட்ரோல் காரை சர்வீஸ் செய்வதற்கு ஆகும் செலவு டீசல் காரை சர்வீஸ் செய்வதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் குறைவு. எனவே சர்வீஸ் செய்யும்போதும் பெட்ரோல் கார் உங்களுக்குக் கணிசமான பணத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும்.
பெட்ரோல் மட்டும் டீசல் ஆகியவற்றிற்கு இடையேயான விலை வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது ஒரு காலத்தில். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அநேகமாக ஒரே மாதிரிதான் என்ற நிலைமை வந்துவிட்டது. எனவே டீசல் மூலம் இன்னும் கணிசமான செலவை மிச்சப்படுத்தலாம் என்ற எண்ணத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிடுங்கள்.
உங்கள் பெட்ரோல் காரை நீங்கள் சிஎன்ஜி-க்கு மாற்ற விரும்பினால், அதை எளிதாக செய்து விடலாம். சிஎன்ஜ் என்பது பெட்ரோல், டீசல், எல்பிஜிக்கு மாற்று.
பெட்ரோல் காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்குப் பெரிய அளவிலான மாற்றங்கள் எல்லாம் தேவைப்படாது. ஆனால் இதுவே டீசல் கார் என்றால் கொஞ்சம் சிரமம்தான். டீசல் காரை சிஎன்ஜி-க்கு மாற்ற அதிகளவிலான மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும்.
அத்துடன் பெட்ரோல் கார்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்கு ஆகும் செலவை விட டீசல் கார்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்கு அதிகம் செலவாகும் என்பதும் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
தற்போது சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. விலை குறைவு என்பதும் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.
டீசல் இன்ஜின்கள் எழுப்பும் அதிகப்படியான சத்தம், காரை ஓட்டும்போது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற உடல் நலப் பிரச்னைகளுக்கு ஒலி மாசுவும் ஒரு காரணமாக உள்ளது என்பதும் இங்கே நினைவில் கொள்வது நல்லது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களை டீசல் இன்ஜின்கள் அதிகமாக உமிழ்கின்றன. பெட்ரோல் கார்களும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்பதும் உண்மைதான் ஆனால் டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது குறைவாகவே இருக்கும்.
பிஎஸ்-6 விதிகள் காரணமாக பெட்ரோல் இன்ஜின்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது இன்னும் அதிகமாகக் குறைந்துள்ளது.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் டீசல் இன்ஜின் கார்களின் விற்பனையை நிறுத்தி உள்ளன. இந்தியாவின் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
மாருதி சுசூகி நிறுவனம் தற்போது டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வது கிடையாது.
சிறிய டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு அதிகம் செலவாகும். இந்தச் செலவு, டீசல் கார்களின் விலையில்தான் எதிரொலிக்கும். மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால், லாபம் ஈட்ட முடியாது என்பதால், பல்வேறு நிறுவனங்களும் டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வதை நிறுத்தி உள்ளன.
டீசல் கார்கள் பெட்ரோல் கார்களை விட சுமார் 50 சதவீதம் அளவிற்கு சிறந்த மைலேஜ் தரும். பெட்ரோல் கார்களில் தொழில்நுட்பம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. என்றாலும் மைலேஜ் என்று வருகிறபோது டீசல் கார்களை பெட்ரோல் கார்கள் முந்தவே முடியாது.
பெட்ரோல் காரைவிட டீசல் காரில் எரிபொருள் அதிகம் செலவாகும். அதாவது பெட்ரோலை விட முப்பது மடங்கு டீசல் அதிகம் செலவாகும்.
வாடகை வாகனங்கள் எப்போதும் டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டனவாகவே இருக்கின்றன. டீசல் இன்ஜின் கார்கள் அதிக வேகமாக செல்லாது பெட்ரோல் காரைக் காட்டிலும் குறைந்த வேகத்தில் தான் செல்லும்
பொதுவாகவே பெட்ரோல் காரை விட டீசல் காரின் செயல்திறன் குறைவுதான். குறைந்த ஆர்பிஎம் மிலேயே அதிக டார்க் திறனை பெற்றாலும் அந்தத் திறன் பெட்ரோல் காரைக் காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும். இதனால்தான் பெட்ரோல் காரைக் காட்டிலும் டீசல் கார் அதிக வேகமாக செல்ல முடியாது.
ஒழுங்காகப் பாரமரிக்காமல் இருந்தால் காரில் அடுத்தடுத்த பிரச்னைகள் வரிசையாக ஏற்படத் துவங்கும். டீசல் கார் மெக்கானிக்கைத் தேடிச் சென்று காரை சீர் செய்ய வேண்டும். எனவே டீசல் காரை முறையாகப் பராமரிக்காவிட்டால் பெட்ரோல் காரைக் காட்டிலும் அதிக செலவை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.
டீசல் கார்களின் இன்ஜினில் இருந்து புகை அதிகளவில் வெளியேறும். எனவே கரித்துகள்கள் அதிகமாகப் படியும். ஆனால் பெட்ரோல் கார்களில் எரிபொருள் முழுமையாக எரிக்கப்பட்டுவிடுவதால் கரித்துகள்கள் இன்ஜினில் படிவதில்லை. இதனால் பெட்ரோல் கார்களைக் காட்டிலும் டீசல் கார்களின் ஆயுள் மிகவும் குறைவாக இருக்கிறது.
பெட்ரோல் காரில் பிக்அப் நன்றாக இருக்கும். ஆனால் டீசல் காரில் அப்படி இருக்காது.
அதேபோல பெட்ரோல் கார் இன்ஜினைவிட டீசல் கார் இன்ஜினில் இரைச்சல் அதிகமாக இருக்கும்.
பெட்ரோல் கார்கள் ஓட்டுவதற்கு மிக சுகமாக இருப்பதால் நிம்மதியான பயணம் கிடைக்கிறது. ஆனால் டீசல் கார்களில் இதை எதிர்பார்க்க முடியாது.
பெட்ரோல் கார்களின் உதிரிபாகங்களைவிட, டீசல் கார்களின் உதிரிபாகங்கள் விலை சற்று அதிகமாகவே இருக்கும். எனவே பராமரிப்பின்போது செலவும் சற்று அதிகமாகவே இருக்கும்.
பெட்ரோல் கார் வாங்கினால் நீண்ட நாட்கள் தொந்தரவு இல்லாமல் பயணிக்கலாம்.
தற்காலத்தில் டீசல் கார்களின் தொழில்நுட்பம் மேம்பட்டு இருந்தாலும் பெட்ரோல் காரைப் போன்று மேம்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.
பெட்ரோல் கார்களைப் பயன்படுத்திய பிறகு மறுவிற்பனை செய்ய நினைத்தால் நல்ல விலைக்கு விற்க முடியும். ஆனால் டீசல் கார்கள் அப்படிக் கிடையாது. மறுவிற்பனை செய்யும் போது அதற்கு மவுஸ் மிகக் குறைவு. அதிலும் ஐந்தாண்டுகள் பயன்படுத்திவிட்டு விற்க நினைத்தால் அதன் மதிப்பு மிகமிகக் குறைவு. ஏனென்றால் டீசல் கார்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிறைய செலவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைப் பற்றிய நுண்ணிய பல விஷயங்களை நாம் பார்த்தோம். இவற்றில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவாக இருக்கும் என்றால் டீசல் காரை விடவும் பெட்ரோல் கார் தான் பல வகையிலும் சிறந்தது என்கிற உண்மைதான்.
ஆனால் ஒரு உண்மையை நாம் நிச்சயமாகத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். தினமும் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் பெட்ரோல் காரை விடவும் டீசல் காரைப் பயன்படுத்துவதே நல்லதாக இருக்கும்.
--------------------------------
---------------------------------------
கருத்துரையிடுக