நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் தென்கோடியில் நாகர்கோவில் சட்டமன்றத்தில் இருந்து ஒரு 75 வயது முதியவர் வெற்றி பெற்றார். அவர் பெயர் மாவிளை ராமசாமி காந்தி என்னும் M . R . காந்தி . கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவிளை என்ற கிராமத்தில் 1946 ஜூலை 26 ஆம் நாள் பிறந்தார்.
அரசியல் களத்தில் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணமாக இன்று M R காந்தி அவர்கள் திகழ்கிறார்கள். அரசியலில் சிலருக்கு வெற்றி எளிதாக அமைந்து விடுகிறது. சிலர் கடுமையான போராட்டத்திற்கு பின்பே வெற்றி அடைகிறார்கள், இந்த வகையில் M R காந்தி அவர்கள் கடுமையான போராட்டத்திற்கு பின் 75 ஆவது வயதிலேயே வெற்றியை அடைந்தார்.
தன்னுடைய மாணவர் பருவத்திலேயே பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜனசங்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார் . 1984 இல், முதல் சட்டமன்ற தேர்தலை குளச்சல் சட்டமன்ற தொகுதியில் சந்தித்தார். தன்னுடைய இளம் வயதிலேயே தேர்தல் வெற்றியை சுமார் 350 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தார். இந்தத் தோல்வியால் அவர் துவண்டு விடவில்லை.
1989ஆம் ஆண்டு நாகர்கோவில் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்றார். அதிலும் தோல்வியைத் தழுவினார். மீண்டும் 1991 ஆம் ஆண்டு நாகர்கோயில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டார். அதிலும் வெற்றியை நழுவ விட்டார்.
இப்படி தொடர்ந்து தோல்விகள் வந்த போதும் அவர் தோல்விகளைக் கண்டு மனம் கலங்கவில்லை. தொடர்ந்து போராடினார்.
2001 ஆம் ஆண்டு வெற்றிக்கான நல்ல கூட்டணிகள் இருந்தபோதும் கட்சி அவருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அதிலும் அவர் மனம் கலங்கவில்லை. தொடர்ந்து கட்சி பணி செய்து வந்தார், தன்னை தேடி வரும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை இல்லை என்று சொல்லாமல் செய்து கொடுத்தார்.
அடுத்து வந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலில் கட்சி அவருக்கு மீண்டும் குளச்சல் சட்டமன்றத்தில் நிற்க வாய்ப்பு கொடுத்தது. அதிலும் தோல்விதான், ஆனாலும், அவர் மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.
தேர்தல் அரசியலில் அவர் தோல்வி கண்டாலும் மக்களுக்காக சேவை செய்கின்ற தன்னுடைய பணியை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருந்தார்.திருமணம் செய்து கொள்ளாமல், காலில் செருப்பு கூட அணியாமல், தனக்கென்று ஒரு சொந்த வாகனம் இல்லாமல் மக்களுக்கான பணியை எளிமையாகவும் நேர்மையாகவும் தொடர்ந்தார்.
மீண்டும் 2011 ஆண்டு கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிற்க வாய்ப்பு கிடைத்தது. ஐந்தாவது முறையாக அதிலும் தோல்வியைத் தழுவினர். சிலர் அவரை "அதிர்ஷ்டம் இல்லாதவர்" என்று கூட சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும், அவரின் மக்கள் பணி மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
மீண்டும் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் அவருக்கு நாகர்கோவில் சட்டமன்றத்தில் நிற்க மீண்டும் வாய்ப்பு கொடுத்தது கட்சி. இந்த முறை எப்படி வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கையோடு எல்லோரும் பணிசெய்ய, மீண்டும் வழக்கம்போல் தோல்வியைத் தழுவினார்,
இதனால் அவர் மனம் சோர்வடையவில்லை. தன்னுடைய மக்களுக்கான பணியையும் கட்சி பணியையும் அவர் கைவிடவில்லை. தொடர்ந்து உழைத்தார். அவருடைய அந்த தொடர் தன்னம்பிக்கையான உழைப்பு மீண்டும் அவருக்கு இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்றத்தில் நிற்க வாய்ப்பு கிடைத்தது. 7-வது முறையாக தேர்தலை சந்தித்த அவர் இந்த முறை வெற்றி பெற்றார்.
6 முறை தோற்ற போதும் தன்னம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியோடு மக்கள் பணியைத் தொடர்ந்த அவருக்கு மக்கள் இந்த முறை வெற்றிக்கனியை பரிசாகத் தந்தார்கள்.
அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு விடா முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு நல்ல உதாரணமாக திகழ்கிறது. நாம் எடுத்துக்கொண்ட பணியில் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் செய்தால் , என்றாவது ஒருநாள் நமது வெற்றியை கட்டாயம் அடைய முடியும் என்பதை M R காந்தி அவர்களின் 75வது வயது வெற்றி நமக்கு காட்டுகிறது.
என் பார்வையில் M .R.காந்தி அவர்கள்;-
இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரிடம் நான் கண்டு வியந்தது அவரின் எளிமை. தன்னை சுய விளம்பரம் செய்து கொள்வதில் அவருக்கு எப்பொழுதும் ஈடுபாடு கிடையாது. எல்லா நிலையில் உள்ள மக்களிடமும் இயல்பாகப் பழகக் கூடியவர். சிறுவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு ஏற்றால் போல் பேசும் தன்மை கொண்டவர்.
காலில் செருப்பில்லாமல் சூடான ரோட்டிலும் களைப்பின்றி அவர் நடப்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். தன்னிடம் உதவி என்று வருபவர்கள் யாராக இருந்தாலும் இரவு பகல் பார்க்காமல் உடனே உதவி செய்ய அவர்களுடன் கிளம்பி சென்று விடுவார்.
தன்னிடம் உதவி நாடி வருபவர்களிடம் கார் இல்லாவிட்டாலும்கூட இருசக்கர வாகனத்திலும் அவர்கள் அழைத்த இடத்திற்கு செல்லும் பண்பு கொண்டவர். இத்தகைய சிறப்பான நற்குணங்களால் அவர் மக்களால் நேசிக்கப்பட்டார் என்பதே உண்மை .
-----------------------
கட்டுரையாளர்:
மணி. தணிகைகுமார்
9443177764.
எம் .ஆர் .காந்தி அவர்களின் பேட்டி --வீடியோ தொகுப்பு
கருத்துரையிடுக