திருப்புகழ் - சிவஸ்ரீ கந்த பிரசாந்த்-

 

திருப்புகழ்

 - சிவஸ்ரீ கந்த பிரசாந்த்- 




......... பாடல் .........


அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்

  அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்

    அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய


அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய

  முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய

    அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம்


நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை

  நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை

    நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும்


நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு

  பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய

    நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே


தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு

  டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு

   குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ


தனதனன தனதனன தந்தந்த னத்ததன

  டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு

   ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும்


மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்

  அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட

    முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி


முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி

  நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட

    முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........


அகரமுத லெனவுரைசெய ... அகரம் முதல் எழுத்தாக கூறப்படுகின்ற


ஐம்பந்தொர் அக்ஷரமும் ... (வட மொழியிலுள்ள) ஐம்பத்தி ஒன்று 

எழுத்துக்களும்,


அகிலகலைகளும் ... உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும்,


வெகுவிதங்கொண்ட தத்துவமும் ... பலதரப்பட்ட (96)

தத்துவங்களும்*,


அபரிமித சுருதியும் ... அளவிட முடியாத வேதங்களும்,


அடங்குந்தனிப்பொருளை ... தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள

ஒப்பற்ற பரம்பொருளை,


எப்பொருளும் ஆய ... தன்னைத் தவிர மற்ற எல்லாப் போருள்களும்

தானே ஆகி விளங்கும்


அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை ... ஞான நிலையை

அறிபவர் அறிந்து அனுபவிக்கும் பரமானந்தப் பொருளை,


துரிய முடிவை ... யோகியர் தன்மயமான நிலையில் தரிசிக்கும் முடிவுப்

பொருளை,


அடிநடுமுடிவில் துங்கந்தனை ... தொடக்கம், இடைநிலை, இறுதி

இவை ஏதும் இல்லாத பரிசுத்தப் பொருளை,


அணுவினின் சிறிய அணுவை ... அணுவைக் காட்டிலும் சிறிய

அணுவாக விளங்கும் பொருளை,


மலமு நெஞ்சுங் குணத்ரயமும் ... மும்மலங்களும் (ஆணவம், கன்மம்,

மாயை), மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு கரணங்களும்,

த்வம், ராஜதம், தாமதம் என்ற முக்குணங்களும்,


அற்றதொரு காலம் நிகழும் வடிவினை ... நீங்கின ஒரு வேளையில்

துலங்கும் அருள் உருவத்தை,


முடிவி லொன்றென்றி ருப்பதனை ... ஊழிக்காலம் முடிகின்ற சமயம்

ஒன்று என்னும் பொருளாக இருப்பதனை,


நிறைவுகுறைவு ஒழிவற ... நிறைந்தது, குறைந்தது, நீங்கிப் போவது

என்பது ஏதுமற்று


நிறைந்தெங்கு நிற்பதனை ... நிறை பொருளாக எல்லா இடங்களிலும்

நிலைத்து நிற்கும் பொருளை,


நிகர்பகர அரியதை ... இதற்கு சமம் அதுதான் என வேறொரு

பொருளை ஒப்புரைக்க இயலாததை,


விசும்பின்புரத்ரயம் எரித்தபெருமானும் ... வானில் சஞ்சரித்துக்

கொண்டே இருந்த திரிபுரத்தை சிரித்தே எரித்த சிவபெருமானும்,

(உன்னை நோக்கி)


நிருப குருபர குமர என்றென்று ... அரசனே, குருமூர்த்தியே,

குமரனே, என்றெல்லாம்


பத்திகொடு பரவ அருளிய ... பக்தியுடனே போற்றித் தொழுதவுடன்

அவருக்கு அருளிச் செய்த


மவுன மந்த்ரந்தனை ... மெளன உபதேசமந்திரத்தை**


பழைய நினது வழியடிமையும் விளங்கும்படிக்கு ... உன் பழைய

அடிமையாகிய அடியேனுக்கும் புரியும்படி


இனிது உணர்த்தியருள்வாயே ... இனிமையாக உபதேசித்து

அருள்வாயாக.


தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு

  டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு

   தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ

தனதனன தனதனன தந்தந்த னத்ததன

  டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு

   தரரரர ரிரிரிரிரி என்றென்று ... (என்று பலமுறை இந்த ஓசையுடன்)


இடக்கையும் உடுக்கையுமியாவும் ... இடது கையால் கொட்டும்

தோல் பறைகளும் உடுக்கை வாத்தியங்களும் பிற எல்லா

ஒலிக்கருவிகளும்,


மொகுமொகென அதிர ... மொகு மொகு என்னும் பேரொலியோடு

அதிர்ச்சி தரும்படி முழங்க,


முதிர் அண்டம் பிளக்க ... இப் பழமையான முதிர்ந்த பூமி பிளவுபட்டு

வெடிக்க,


நிமிர் அலகை கரணமிட ... நிமிர்ந்து நின்று பேய்கள் கூத்தாட,


உலகெங்கும் ப்ரமிக்க ... உலகம் எங்கிலும் உள்ள மக்கள்

திகைத்து நிற்க,


நடமுடுகு பயிரவர் பவுரி கொண்டின்புற ... வேகமாக நடனம்

செய்யும் பைரவ மூர்த்திகள் கூத்தாடி மகிழ,


படுகளத்திலொரு கோடி ... அசுரர்கள் இறந்து படும் போர்க்களத்தில்

கோடிக்கணக்கான


முதுகழுகு கொடிகருடன் ... முதிர்ந்த கழுகுகளும், காக்கைகளும்,

கருடன் பருந்துகளும்


அங்கம்பொரக்குருதி நதிபெருக ... பிணங்களின் அங்கங்களைக்

கொத்தித் தின்ன, ரத்த வெள்ளம் பெருக,


வெகுமுக கவந்தங்கள் நிர்த்தமிட ... பலவகையான தலையற்ற

உடல் குறைகள் கூத்தாட,


முரசதிர நிசிசரரை வென்று ... முரசு வாத்தியம் பேரொலி முழக்க

அசுரர்களை வெற்றி கொண்டு,


இந்தி ரற்கரசளித்த பெருமாளே. ... தேவேந்திரனுக்கு விண்ணுலக

ஆட்சியைத் தந்த பெருமாளே.

1 கருத்துகள்

  1. அட்சரம் பிசகாமல் அகரம் பயில திருப்புகழ் நல்ல பயிற்சி. இன்றைய Rj /Vj சிலருக்கு தேவையான நல்ல தமிழை கற்றுத் தரும் ஏடு இது. 'நா' பிறழ் பயிற்சி... மொழி புலமை இரண்டும் ஒரு சேர கிடைக்கும் இடம் இது. உங்கள் மேடைகளில் இதை வலியுறுத்துங்கள். நல்ல தமிழ் வளர்ப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை