கணினித் தமிழ்ச் சாதனையாளர் தேனி மு. சுப்பிரமணி ----சிறப்பு நேர்காணல்


கணினித் தமிழ்ச் சாதனையாளர்
 தேனி மு. சுப்பிரமணி

சிறப்பு நேர்காணல் 


பிரபல எழுத்தாளர் ,கணினித் தமிழ்  சாதனையாளர் என பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற தேனி எம். சுப்பிரமணி அவர்களோடு ஒரு நேர்முகம்

தங்களின் இளமைக் காலம் பற்றி.....

தேனி அருகில் பழனிசெட்டிபட்டி எனும் ஊரிலிருந்த போஜராஜ் நூற்பாலையில் என் அப்பா பணிபுரிந்ததால், ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பு, பழனிசெட்டிபட்டி, பழனியப்பா வித்தியாலயம் பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பு பழனியப்பா உயர்நிலைப்பள்ளியிலுமாக இருந்தது.

 1981-1982 ஆம் கல்வியாண்டில் என்னுடன் பத்தாம் வகுப்பு படித்தவர்களெல்லாம் ஐடிஐ, பாலிடெக்னிக்கில் படித்தால் உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்று அதில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தனர். நானும் பாலிடெக்னிக்கில் சேரலாம் என்று நினைத்து, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கிற்குச் சேர்க்கைக்காக விண்ணப்பித்தேன். அங்கு எனக்கு இடம் கிடைக்கவில்லை. 

அதன் பின்னர், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படிப்பதற்காக விண்ணப்பித்தேன். விண்ணப்பத்தில் தொழிற்கல்விப் பிரிவில் கட்டிடப் பராமரிப்பு (Building Maintenance) எனும் பிரிவினைத் தேர்வு செய்தேன். பள்ளித் தலைமையாசிரியர் (சீத்தாராமன்) என்னை உள்ளே அழைத்து, "உனக்குத்தான் நல்ல மதிப்பெண் இருக்கிறதே, கணிதம், அறிவியல் பாடங்களிருக்கும் முதல் பிரிவில் சேர்ந்து படிக்கலாமே? முதல் பிரிவில் படித்தால் எந்தக் கல்லூரியிலும், எந்தப் பிரிவிலும் சேரலாம்" என்று அறிவுரை வழங்கினார். ஆனால், அவர் சொன்னது எதுவும் எனக்கு அப்போது புரியாததால், தொழிற்கல்விப் பிரிவே இருக்கட்டுமென்று சொல்லிச் சேர்ந்தேன். 



எனக்குள் ஒரு வருத்தம்

தூத்துக்குடியில் என் தாத்தா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த எனக்கு, அப்போது "மாலைமுரசு" நாளிதழில் தினமும் இடம் பெறும் "தமாசு" எனும் பகுதிக்கு நாமும் ஏதாவது நகைச்சுவை எழுதி அனுப்பலாமென்று தோன்றியது. ஒரு அஞ்சலட்டையில் இரண்டு நகைச்சுவைகளை எழுதி அனுப்பினேன். பின்னர் அதை மறந்தே போய்விட்டேன்.  ஒரு நாள் தபால்காரர் எனக்கு மாலைமுரசு நாளிதழிலிருந்து ஒரு ரூபாய் மணி ஆர்டர் வந்திருப்பதாகச் சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றார். தபால்காரர் கொடுத்த மணி ஆர்டர் படிவத்தின் கீழ்ப்பகுதியிலிருக்கும் தகவல் பகுதியில் மாலைமுரசு நாளிதழில் வெளியான நகைச்சுவைத் துணுக்கு வெளியான தேதி குறிப்பிட்டு, அதற்கான பரிசாக ஒரு ரூபாய் அனுப்பப்பட்டிருக்கிறது எனும் செய்தி இருந்தது. அந்தத் தேதிக்கான மாலைமுரசு நாளிதழை வாங்கிவிடலாமென்று பல வழிகளில் முயற்சித்தேன். தூத்துக்குடியிலிருந்த சில நூலகங்களுக்குச் சென்று தேடினேன். தங்களது நூலகங்களில் மாலை நாளிதழ்கள் வாங்குவதில்லை என்று சொல்லிவிட்டனர். முதன் முதலில் பத்திரிகையில் வெளியான எனது பெயரை, நானேப் பார்க்க முடியவில்லை என்கிற வருத்தம் இன்று வரை எனக்குள் இருக்கத்தான் செய்கிறது. 


துணுக்கு எழுத்தாளர்

அதன் பிறகு, பத்திரிகைகளுக்குத் துணுக்குகள், நகைச்சுவை என்று நிறைய எழுதி அனுப்பத் தொடங்கினேன். எனது பெயர் பல்வேறு இதழ்களில் இடம் பெறத் தொடங்கியது. பத்திரிகைகளிலிருந்து பணமும் வரத் தொடங்கியது." இதயம் பேசுகிறது" வார இதழ் மணியன் அவர்கள் நடத்திய பாலஜோதிடம் இதழில் நான் எழுதிய துணுக்குகள் அதிக அளவில் இடம் பெற்றன. அதற்கான பணமும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சில இதழ்களிலிருந்து பணத்திற்குப் பதிலாகக் காசோலைகள் வந்தன. அப்போது எனக்கு 18 வயதுக்குக் குறைவாக இருந்ததால் வங்கிக் கணக்கு தொடங்க முடியாமல், பல காசோலைகள் என் பார்வைக்கு மட்டுமானதாக இருந்து, பின்னர் அவை பயனில்லாமலேயேப் போய்விட்டன.

பத்திரிகைகளில் எழுதும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே போனதால், படிப்பில் ஆர்வம் குறைந்து போய்விட்டது. முடிவு பிளஸ் டூவில் கணிதம் பாடத்தில் தேர்ச்சியடைய முடியாமல் போனது. 



இடை நீக்கம்- தடை நீக்கம்

எனது கல்வி திசை மாறியது. அதன் பிறகு, தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (1985–1987) மின்சாரப் பணியாளர் படிப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். அப்போதும் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதிக் கொண்டுதானிருந்தேன். 

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் கள்ளர் சீரமைப்புத் துறை விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு போதுமானதாக இல்லை என்று என்னிடம் சில விடுதி மாணவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். நான் அதைச் செய்தியாக்கி, தினமலர் நாளிதழுக்கு அனுப்பி விட்டேன். அந்தச் செய்தி ஒரு வாரத்திற்கு மேலாகியும் வரவில்லை. நானும் அதை மறந்து விட்டேன். 

அப்போது, தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள் மதுரை மேற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அரசு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு எம்ஜிஆர் வந்த நாளன்று, தினமலர் நாளிதழில் அந்தச் செய்தியை “கஞ்சி கூட கிடைக்காத ஹாஸ்டல்’ எனும் தலைப்பில் வெளியிட்டு விட்டனர். அதனைப் படித்த எம்ஜிஆர் அவர்கள், அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த இராம. வீரப்பன் அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்க, அமைச்சர் கள்ளர் சீரமைப்புத் துறையின் தனி ஆட்சியர் அவர்களைக் கூப்பிட்டுச் சத்தம் போட்டிருக்கிறார். 

மறுநாள், கள்ளர் சீரமைப்புத் துறை தனி ஆட்சியர் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான விடுதிக்குச் சென்று விசாரித்துவிட்டு, எனக்குத் தகவல் தெரிவித்த விடுதி மாணவர்கள் சிலரையும், என்னையும் தண்டிக்க வேண்டுமென்று தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவர் என்னையும், விடுதி மாணவர்களையும் விசாரித்துவிட்டுப் பயிற்சியிலிருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அந்த இடைநீக்க உத்தரவு, தொழிற்பயிற்சி நிலைய விதிமுறைகளுக்கு முரணானது என்று நான் முறையீடு செய்ய, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் இடமாற்றம் செய்யப்பட்டு, எனக்கு மட்டும் மீண்டும் தொழிற்பயிற்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது. 

என்னுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட விடுதி மாணவர்களை மீண்டும் தொழிற்பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய முதல்வரிடம் முறையீடு செய்தேன். அதனைத் தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தொழிற்பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கள்ளர் சீரமைப்புத் துறையினர், விடுதி மாணவர்களுக்கு விடுதியில் தங்க இடமளிக்க மறுத்து விட்டனர். அதன் பிறகு நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், இச்செய்தியினை அடிப்படையாகக் கொண்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகையினை தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் இரு மடங்காக உயர்த்தி ஆணையிடப் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 



தங்களின்  பணிஅனுபவங்கள்   பற்றி....

மின்சாரப் பணியாளர் தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற எனக்கு, விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம், தமிழ்நாடு சிமெண்ட் கழக ஆலையில் (அரசு சிமெண்ட்) தொழில் பழகுநர் (Apprentice) பயிற்சிக்கான இடம் கிடைத்தது. அங்கு மின்சாரப் பணியாளராகப் பணியாற்றிய சேது என்பவருடன் பயிற்சிக்கு அனுப்பப் பெற்றேன். மின்சாரப் பணிகளில் கடினம் என்று நினைத்துக் கொண்டிருந்ததையெல்லாம், மிக எளிமையாகச் செய்யும் வழிமுறைகளை அவர் சொல்லிக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்த பல நுட்பங்கள், பிற்காலத்தில், சில தனியார் நூற்பாலைகளில் பணியாற்றிய போது, எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. 

திருநெல்வேலி, திருப்பணிக்கரிசல்குளம், கற்பகம் நூற்பாலையில் மின்சாரப் பணியாளராகப் பணியிலிருந்த நான், மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்று தேர்வுக்கு விண்ணப்பித்தேன். முதல் முறையிலேயே எழுத்துத் தேர்வுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்ற போதிலும், அந்தத் தேர்வில் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தேர்ச்சி முடிவுகள் இருக்கும் என்கிற நிலையில், செய்முறைத் தேர்வில் மூன்று ஆண்டுகள் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது. நான்காவது ஆண்டில் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்றினைப் பெற்றேன். 

இதற்கிடையேப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த கவிஞர் தேனி முருகேசன், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, நகைச்சுவை எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன் ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். அவர்கள் மூலமாகத் தேனியில் மருத்துவராக இருந்த டாக்டர் உ. கண்ணப்பன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு எழுதுவதில் இருந்த ஆர்வம் போன்று மேடைப்பேச்சில் இல்லை என்கிற போதிலும், அந்த மருத்துவருடன் சேர்ந்து சில பட்டிமன்றங்கள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்றேன். ஏற்கனவே புதுக்கவிதை நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டிருந்த அந்த மருத்துவருக்குத் தனியாக இதழ் ஒன்றை நடத்த வேண்டுமென்கிற ஆசையும் இருந்தது. 

தேனியில் ஓடிக்கொண்டிருக்கும் முல்லைநதி எனும் ஆற்றின் பெயரில் மாத இதழை வெளியிட முடிவு செய்து வெளியிட்டோம். டாக்டர் உ. கண்ணப்பன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக இருந்தார். நானும் என் நண்பர்கள் வி.பி. மணிகண்டன், தேனி எஸ். செந்தில்குமார் ஆகியோர் துணையாசிரியர்களாகச் செயல்பட்டோம். 

நானும், எனது நண்பர்களும் முல்லைநதி இதழை எப்படியாவது முன்னிலைக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று கடுமையாக உழைத்தோம். முல்லைநதி இதழுக்கு அரசுப் பதிவு எண் பெறப்பட்டது. எங்கள் பணிகளுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படாத நிலையிலும், எங்களது கடுமையான உழைப்பால், இதழ் தொடங்கப்பெற்ற மூன்று மாதங்களுக்குள் தேனியிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதழுக்கு ஆயிரம் பேர் வரை சந்தா செலுத்தியிருந்தனர். இது தவிர, பல்வேறு ஊர்களுக்கு ஐநூறு இதழ்கள் வரை அஞ்சலில் அனுப்பப்பட்டன. தேனிப்பகுதியில் நல்ல வரவேற்பு பெற்ற இதழாக இருந்ததால், தேனியிலிருக்கும் வணிக நிறுவனங்களிடமிருந்து இதழுக்குப் பல விளம்பரங்கள் கிடைத்தன. சில நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் விளம்பரங்கள் வெளியிடப் பணத்தைச் செலுத்தின. தேனியிலுள்ள நகைக்கடை ஒன்று முன்பக்கத்தில் அட்டைப்படத்தையும், வெளியட்டையில் அந்தக் கடையின் விளம்பரம், உள்பக்க அட்டைகளில் எங்களால் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் போன்றவற்றை அழகிய வண்ணத்தில் அச்சடித்துக் கொடுத்தது.

கல்லூரிப் பணி

1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தேனி - அல்லிநகரம்நகர்மன்றத் தேர்தலில் டாக்டர் உ. கண்ணப்பன் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு,இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்அவர்களது சமதா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார். நானும், எனதுநண்பர்கள் வி.பி. மணிகண்டன், தேனி எஸ். செந்தில்குமார், செல்வ. மனோகரன்உள்ளிட்ட பலரும் அவருக்குத் தேர்தல் பணிகளில் அவரது எரியும் தீப்பந்தம்சின்னத்தை  விளம்பரப்படுத்துதல், தேனி நகராட்சிப் பகுதி மக்களிடையேகொண்டு போய்ச் சேர்த்தல் போன்ற பணிகளில் அவருடன் இணைந்து செயல்பட்டோம்.

அந்தத் தேர்தலில் போட்டியிட்ட  முதன்மையான அரசியல் கட்சிகள் அனைத்தையும்பின்னுக்குத் தள்ளி, அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று தேனிநகராட்சித் தலைவரானார்.

தேனி நகராட்சித் தலைவராக அவர் தேர்வு செய்யப் பெற்றதை அறிந்த அவரதுகுடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். அமெரிக்காவில் இருதய நோய் சிறப்புமருத்துவராக இருந்த அவரது சகோதரர் ஒருவர், தனது சகோதரரைத் தேனிநகராட்சித் தலைவராக்கிய தேனிப்பகுதி மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்கிற எண்ணத்துடன் தேனியில் ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கிட ஒருகோடி ரூபாய் வழங்கினார்.

பொறியியல் கல்லூரி தொடங்க, என்ன செய்ய வேண்டும்? என்று எதுவும் தெரியாதநிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப்பணியாற்றி ஓய்வு பெற்று, மதுரையிலுள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரிஒன்றில் இயக்குநராகப் பணியிலிருந்தடாக்டர் நாகப்பன் அவர்களைச் சந்தித்துஆலோசனைகளைக் கேட்டோம். அவர் வழங்கிய ஆலோசனைகளின்படி, கல்லூரிக்கட்டிடங்களுக்குத் தேவையான இடங்கள் வாங்குதல், பொறியியல் கல்லூரிஅனுமதிக்கான விண்ணப்பங்கள் அனுப்புதல், அதற்கான ஆவணங்களுடன் திட்டஅறிக்கை தயாரித்தல் போன்ற முதற்கட்டப் பணிகளை எந்தவிதமானஎதிர்பார்ப்புமின்றி நான் செய்து கொடுத்தேன்.

அதன் பிறகு, 1998 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் கல்லூரிக்கான கட்டிடப்பணிகள் தொடங்கின. கட்டிடப்பணிகளுக்கான மேலாளராக நான் நியமிக்கப்பட்டேன்.கல்லூரிக் கட்டிடப் பணிகளுக்கான மேலாளர் பணியுடன் நகராட்சித் தலைவருக்கானதனி உதவியாளர் பணியையும் சேர்த்துப் பார்த்து வந்தேன். கல்லூரிக்கு அகிலஇந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவிடமிருந்து அனுமதி கிடைப்பதில் பல்வேறுசிக்கல்கள் இருந்தன. அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சென்னை,புதுடெல்லி என்று அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது.கல்லூரி தொடங்க அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடித்துக்கொண்டேயிருந்ததால், கல்லூரி தொடங்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து, அதற்காகவும் அலையவேண்டியிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அகில இந்தியத்தொழில்நுட்பக் குழுவினால் தெரிவிக்கப்பட்ட குறைகளை மட்டும் சரி செய்து கொள்ள எங்கள் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதுடன், கல்லூரி தொடங்குவதற்கான அனுமதியினை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு நான்கு வாரகாலத்திற்குள் வழங்கிட உத்தரவிட்டது.

அதன் பிறகு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உடையப்பா பொறியியல்மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு இணைப்பு பெறுதல், புதிய மாணவர்கள்சேர்க்கை, மாணவர் சேர்க்கைக்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில்ஒப்புதல் பெறுதல், மாணவ / மாணவியர்களுக்கான தங்கும் விடுதிகள் ஏற்பாடுசெய்தல் என்று நிறைய பணிகளை நானே முன்னின்று செய்தேன். கல்லூரிக்கட்டிடங்களுக்கான பணிகளுடன், நிருவாகப் பணிகளையும் சிறப்பாகச் செய்தகல்லூரி தொடக்க விழா நாளில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில்,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்அவர்கள் மூலம் எனக்குத் தங்க மோதிரம் பரிசளித்துப் பாராட்டியது இன்றும்என் மனதில் நிறைந்திருக்கிறது.

நகராட்சித் தலைவர் பணி நிறைவடைந்த நிலையில், அவர் தேனியில் புதிதாகமெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்றைத் தொடங்க நினைத்து, அதற்கான அறக்கட்டளைஒன்றை உருவாக்கினார். அந்த அறக்கட்டளையில் என்னையும் ஒரு இயக்குநராக்கிஎன்னை மகிழ்ச்சிப்படுத்தினார். பள்ளிக்கான கட்டிடப்பணி, பள்ளிக்கானஅனுமதி பெறுதல், பள்ளிக்கான மாணவர் சேர்க்கை என்று என் பணிகள்அதிகரித்தாலும், அதனை மனநிறைவுடன் செய்து கொண்டிருந்தேன். இதற்கிடையேத்தேனி நகரில் புதிய மருத்துவமனை ஒன்றைக் கட்டத்திட்டமிட்டு, அதனையும்சிறப்பாகச் செய்து கொடுத்தேன்.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரும் தனது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு,ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்த கல்லூரிச் செயலாளர் டாக்டர் உ.கண்ணப்பன், அவருடைய தேனி நகராட்சித் தலைவரின் பணிகளை நூலாக எழுதிவெளியிடும் பணியை எனக்குக் கொடுத்தார். தேனி நகராட்சித் தலைவரின் தனிஉதவியாளர் பணியையும் நான் சேர்த்துப் பார்த்துக் கொண்டிருந்ததால், அவரதுநகராட்சிப் பணி அனுபவங்களில் சில குறிப்பிடத்தக்க அனுபவங்களை மட்டும்தொகுத்து, “ஒரு நகராட்சித் தலைவரின் சுவையான அனுபவங்கள்” எனும் தலைப்பில்நூலாக்கிக் கொடுத்தேன். சென்னை, பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தால்வெளியிடப்பட்ட அந்த நூலின் வெளியீட்டு விழா, அவரது விருப்பப்படி அவரின்ஐம்பதாவது பிறந்த நாளிலேயே லேனா தமிழ்வாணன் அவர்களைக் கொண்டு தேனியில்வெளியிடப் பெற்றது. அப்போதைய தினமணிக் கதிர் இதழின் பொறுப்பாசிரியர்சுகதேவ் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், கேரள மாநிலம்,பாலக்காடு மாவட்டம், வாளையார் எனுமிடத்தில் மருத்துவக் கல்லூரிதொடங்கிடக் கேரள மாநில அரசிடமிருந்து முதற்கட்ட அனுமதியைப் (இன்றியமையாச்சான்றிதழ்) பெற்றிருந்த நிலையில், அவருடன் எங்கள் கல்லூரியின் செயலாளர்டாக்டர் உ. கண்ணப்பன் பங்குதாரராக இணைந்தார். மருத்துவக் கல்லூரியின்கட்டுமானப் பணிகளுக்காக, அவர் கேரள மாநிலம், வாளையார் சென்ற நிலையில்,தேனியிலுள்ள பொறியியல் கல்லூரியின் செயலாளர் பொறுப்பு எனக்குக் கூடுதலாகஅளிக்கப்பட்டது. எந்தவொரு பணியையும் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கும்என்னுடைய திறன்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக, கல்லூரி நிர்வாகத்தால்வழங்கப்பெற்ற இந்தச் செயலாளர் பொறுப்பிலும் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச்செய்தேன். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குஎண்ணும் மையாமாகக் கல்லூரி தேர்வு செய்யப்பெற்றது. அதற்கான பணிகளையும்சிறப்பாகச் செய்து கொடுத்தேன். அதற்காக, அப்போதைய தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ் லக்கானி என்னைப் பாராட்டினார்.

டாக்டர் உ. கண்ணப்பனது அரசியல் பணிகள் மற்றும் அவரது கல்லூரிப் பணிகளில்நான் முக்கியமான பங்கு வகித்ததால், தேனி மாவட்டத்தின் அரசியல்பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் என்று எனக்கான நட்பு வட்டமும்விரிவானது.  இதனால், எனக்கு அரசியல், அரசு அலுவலர்கள் என்று பல புதியநண்பர்கள் கிடைத்தனர் என்பதையும் இங்கு மறக்க இயலாது.


முத்துக்கமலம் மின்னிதழ்

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது, நிலாச்சாரல், தமிழோவியம், பதிவுகள், திண்ணை எனும் பெயர்களிலான சில இணைய இதழ்களைக் கண்டேன். அந்த இதழ்களைப் போன்று, நாமும் ஒரு இணைய இதழைத் தொடங்கினால் என்ன? என்கிற எண்ணம் எனக்குள் தோன்றியது. அந்த இதழ்களின் தொடர்பு முகவரிகளைப் பார்த்தேன். அவையனைத்தும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் உருவாக்கப்பட்டதாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து தமிழ் சினிமா என்றொரு இணைய இதழ் மட்டும் வந்து கொண்டிருந்தது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றேன். என் முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. 

இவ்வேளையில், முழுக்க முழுக்க சமையல் செய்முறைக் குறிப்புகளைக் கொண்டு அறுசுவை.காம் எனும் பெயரில் ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இணையப் பயன்பாடு குறைந்த அந்தக் காலத்திலும், அதிகமான வாசகர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த அந்தத் தளத்தைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரக்கணக்கான பக்கங்களில் விதவிதமான சமையல் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.   

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாபு என்பவர் அந்த இணையதளத்தை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய தொடர்பு எண்ணைக் கண்டறிந்து, அவரிடம் எனது இணைய இதழ் தொடங்கும் விருப்பம் குறித்துப் பேசினேன். அவர் கொடுத்த சில ஆலோசனைகளைக் அடிப்படையாகக் கொண்டு, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒய்யாத்தேவன் என்கிற மாணவரின் உதவியுடன் இணைய இதழை வடிவமைக்கத் தொடங்கினேன். என் தந்தை பெயரான முத்துசாமி எனும் பெயரின் முன்பகுதி, என் தாயின் பெயரான கமலம் என்பதைச் சேர்த்து என் மகளுக்கு வைத்திருந்த முத்துக்கமலம் எனும் பெயரிலேயே அந்த இதழைத் தொடங்குவதென்று முடிவு செய்தேன். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் தனித் திரளப்பெயர் (Domain Name), இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழங்கியில் இட வசதி போன்றவைகளுக்குப் பணத்தைச் செலுத்தி, 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாளில் மாதமிருமுறை எனும் கால அளவில் புதுப்பிக்கப்படும் இதழாக முத்துக்கமலம் இணைய இதழ் வெளியானது. 

பல்சுவை இதழாக இணையத்தில் இடம் பெற்றிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழில் அரசியல், திரைப்படம் தவிர்த்து, பல்வேறு தலைப்புகளில் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இணைய இதழ்கள் குறித்து முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்ட சிலர் தங்களது ஆய்விற்கு முத்துக்கமலம் இணைய இதழையும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் தமிழ்த்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி த. சுதந்திராதேவி (மதுரை மாவட்டக் காவல்துறையில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்) (பதிவு எண்: A4C 6060007) "முத்துக்கமலம் இணையவழிச் சிறுகதைகள் - மதிப்பீடு" எனும் தலைப்பிலும், திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற திருச்சிராப்பள்ளி, பிசப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி ஏ+)யில் தமிழ்த் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்ற மாணவி பெ. கீதா (பதிவு எண் 7TM124102) என்பவர் "முத்துக்கமலம் இணைய இதழ் உள்ளடக்கப் பகுப்பாய்வு” எனும் தலைப்பிலும் ஆய்வு மேற்கொண்டு, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். 

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாட நூல்களில், பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் "பண்பாடு - விருந்து போற்றுதும்" என்ற பாடத்தின் பின்பகுதியில் (69 ஆம் பக்கத்தில்) ‘இணையத்தில் காண்க’ எனும் தலைப்பின் கீழ் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான, சிவகாசி, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மா. பத்மபிரியா அவர்கள் எழுதிய, ‘தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்’ எனும் கட்டுரைக்கான இணையப் பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p113.html கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

முத்துக்கமலம் இணைய இதழ் பன்னாட்டுத் தரக் குறியீட்டெண் (ISSN: 2454-1990) பெற்ற இதழ் என்பதுடன், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவால் தமிழ் மொழிக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் ஒன்றாகவும் (Journal No: 64227) சில ஆண்டுகள் இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.    



ஆய்வியல் நிறைஞர் படிப்பு

பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த எனக்கு, இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலை பட்டயப்படிப்பு படித்திருந்ததால், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வழியாக இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு (M.Phil) படித்திடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கான எழுத்துத் தேர்வுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்ற பின்பு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் தலைப்பு, ஆய்வுக்கு வழிகாட்டியாகச் செயல்படவிருக்கும் ஆய்வு நெறியாளர் போன்றவற்றுடன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு ஒப்புதல் பெற்றிட வேண்டும். 

இந்த வேளையில், முத்துக்கமலம் இதழில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த அமெரிக்காவில் வசிக்கும் ஆல்பர்ட் பெர்னாண்டோ என்பவர், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் தமிழ்த்துறை, இணைப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களது அலைபேசி எண்ணைக் கொடுத்து, அவரை வழிகாட்டியாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி சொன்னார். நானும் அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் என்ன தலைப்பில் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். நான் முத்துக்கமலம் இணைய இதழினை நடத்திக் கொண்டிருந்ததால், அது தொடர்புடைய ஆய்வாக அமையட்டுமென்று ‘தமிழ் இணையச் சிற்றிதழ்கள்’ என்று தலைப்பு தேர்வு செய்து வைத்திருக்கிறேன் என்றேன். அறிவியல் தமிழ் தொடர்பான, குறிப்பாக, இன்றைய காலத்திற்கேற்ற கணினி மற்றும் இணையம் தொடர்பான புதிய தலைப்பு, நல்ல தேர்வு என்று சொல்லி என்னைப் பாராட்டினார்.        

பின்னர், அவர் என்னை நேரில் வந்து பார்க்கும்படி அழைத்தார்.  பொருளாதார நெருக்கடியில் இருந்த என்னால், மயிலாடுதுறைக்கு வரமுடியாத சூழலை எடுத்துச் சொன்னேன். அவரும் என் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, “மின்னஞ்சல் வழியாக ஆய்வுப்பகுதி ஒவ்வொன்றாகத் தயாரித்து அனுப்புங்கள், நான் அதைச் சரிபார்த்து, மின்னஞ்சல் வழியாகவே அனுப்பிவிடுகிறேன்” என்றார். எனது ஆய்வு முழுமையும் மின்னஞ்சல் வழியாகவே செய்து முடிக்கப்பட்டது. பின்னர் ஆய்வேடு தயாரித்து, அவரிடம் கையொப்பம் பெறுவதற்காக மட்டுமே மயிலாடுதுறைக்குச் சென்றேன். இதன் மூலம், உலகில் முதன்முதலாக மின்னஞ்சல் வழியாகச் செய்யப்பெற்ற ஆய்வேடு என்ற பெருமையும் எனக்குக் கிடைத்தது. 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்திருந்த நிலையில், சில மாதங்களுக்குப் பின்பு நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. நேர்காணலின் போது, அங்கிருந்த குழுவினர் என்னிடம் கேள்விகள் எதுவும் கேட்காமல், “தங்களது ஆய்வு கணினி, இணையம் தொடர்பாக இருக்கிறது. எங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் ஏதாவதொரு நாளிதழில் வெளியாகும் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்தப் பகுதி தொடர்பாக ஏதாவது ஆய்வு மேற்கொண்டு புதிய ஆய்வேட்டை சமர்ப்பியுங்கள்” என்று சொல்ல, எனக்குக் கடுமையான கோபம் வந்தது. இணையம் பயன்படுத்துவதற்கு அதிகப் பணம் செலுத்த வேண்டிய காலகட்டம் அது. எனது ஆய்வு முழுக்க இணையம் தொடர்புடையது என்பதால், இணையப் பயன்பாட்டிற்கே எனக்கு அதிகப் பணம் செலவாகியிருந்தது. செலவு அதிகமென்பதை விட, புதிய ஆய்வு செய்ய இன்னும் கூடுதல் காலம் தேவைப்படும். அவர்களுக்குத் தெரியாது என்பதற்காக நாம் ஏன் ஆய்வை மாற்றிக் கொள்ள வேண்டும்? என்று நினைத்த நான், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எனக்கு நான்கு வார காலத்திற்குள் பல்கலைக்கழகம் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை வழங்கிட வேண்டுமென்று உத்தரவிட்டது. அதன் பிறகு, பல்கலைக்கழகம் எனக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை வழங்கியது. அதற்குப் பின்பு சில மாதங்களில், எனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வேடு, சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.    


வெளியான நூல்கள் 

சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகத்தின் மூலம் வெளியான ‘தமிழ் இணையச் சிற்றிதழ்கள்’ நூலைத் தொடர்ந்து, அதே மாதத்தில், அதே பதிப்பகத்தில் எனது மற்றொரு நூலான "தமிழ் விக்கிப்பீடியா "எனும் நூலும் வெளியானது. உலகின் பயன்பாட்டில் இருந்து வரும் மொழிகளில், இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா 304 மொழிகளில் இடம் பெற்றிருக்கிறது. இந்த 304 மொழிகளிலும் விக்கிப்பீடியா குறித்து எந்தவொரு நூலும் வெளியாகாத நிலையில், விக்கிப்பீடியா குறித்து முதன் முதலில் தமிழ் மொழியிலான நூலாக, எனது தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் வழியாக சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. இதற்கான பரிசுத்தொகை ரூபாய் முப்பது ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை, 2012 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நாள் விழாவில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் எனக்கு வழங்கிச் சிறப்பித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நூல்களைத் தொடர்ந்து சென்னை, கௌதம் பதிப்பகம் வழியாக, சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள், மகளிருக்கான 100 இணையதளங்கள், அற்புத மகான்கள், இந்திய தேசியப் பூங்காக்கள் எனும் ஐந்து நூல்களும், சென்னை தரணீஷ் பப்ளிகேசன்ஸ் வழியாக, அதிசயங்கள்! உலக அதிசயங்கள்!, கேரளக் கோயில்கள் – தொகுதி 1, கேரளக் கோயில்கள் – தொகுதி 2, தமிழகக் கோயில்கள் – தொகுதி 1 எனும் நான்கு நூல்களும், கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் வழியாக, உலகச் சிறப்பு தினங்கள் எனும் நூலும், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாக, பயனுள்ள 100 இணையதளங்கள் எனும் நூலும் என்று இதுவரை பதின்மூன்று நூல்கள் வெளியாகி இருக்கின்றன.            


விக்கிப்பீடியா பங்களிப்புகள்

தமிழ் மொழியிலான இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 14 முதல் பயனராகப் பதிவு செய்து கொண்டு, பங்களிப்புகளைச் செய்யத் தொடங்கி, பல்வேறு பங்களிப்புகளுக்குப் பின்பு 2011 ஆம் ஆண்டு சூன் 26ல் பயனர் நிர்வாகியாக வாக்கெடுப்பின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் செயல்பட்டேன். தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்விதப் பொருளாதாரப் பயனுமின்றி, தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் நோக்கத்துடன் 1088 கட்டுரைகளைத் தொடங்கியதுடன், 22,997 தொகுப்புகளையும் செய்து இருக்கிறேன். 

தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்புகளைப் பாராட்டி உடன் பங்களிப்பு செய்யும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் நிர்வாகிகள் சிலர் பாராட்டுச் செய்திகளைப் பதக்கங்களாக வழங்கிச் சிறப்பித்திருக்கின்றனர். தினமலர் (மதுரைப் பதிப்பு) நாளிதழில் தேனி மாவட்டத்திற்கான அக்கம் பக்கம் எனும் சிறப்புப் பகுதியில் எனது விக்கிப்பீடியா பங்களிப்புகள் குறித்து “தமிழ் விக்கிப்பீடியாவில் சாதிக்கும் எழுத்தாளர்” எனும் தலைப்பில் செய்தி வெளியிடப் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்ப் பங்களிப்புகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் போன்றவர்களுக்குப் பயிலரங்குகள் வழியாக பயிற்சியளித்து வந்ததுடன், பல்வேறு ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். தமிழ் கம்ப்யூட்டர் இதழில் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க...” எனும் தலைப்பில் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகள் செய்வது தொடர்பான தொடர் கட்டுரை ஒன்றினையும் எழுதி இருக்கிறேன். 


தமிழ் இணைய மாநாட்டுப் பங்களிப்புகள்

தமிழ்நாடு அரசு, 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்புத்தூரில் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்தியது. இதனையொட்டித் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தகுந்த தகவல் பக்கங்களை (கட்டுரைகள்) எழுதும் போட்டி ஒன்று நடத்தப் பெற்றது. இப்போட்டிக்காகத் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையால் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் குழு உறுப்பினராகப் பங்கேற்று செயல்பட்டிருக்கிறேன். 

இந்தத் தமிழ் இணைய மாநாட்டில், “தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள்” எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் “தமிழ் விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம்” எனும் தலைப்பில் கட்டுரை வாசித்தேன். இந்த மாநாட்டில், “கணினி மொழியியல்” எனும் தலைப்பிலான அமர்வில் சென்னை, மென்பொருள் வல்லுநர், கிழக்கு பதிப்பக உரிமையாளர் திரு பத்ரி சேசாத்திரி அவர்களது தலைமையில் நடைபெற்ற “வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல்” நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் பங்கேற்று விக்கிப்பீடியா குறித்துப் பதிலளித்தேன். 

‘உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (கனடா)’ 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவின் டோரண்டோ நகரில் நடத்திய  ‘இணையவழிக் கற்றல் - கற்பித்தலின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ‘பரிசுகள் தேர்வுக் குழு’ உறுப்பினராகப் பங்கேற்றதுடன், இம்மாநாட்டின் நிகழ்வுகளை 28-10-2017 அன்று திருச்சி, பிசப் ஹீபர் கல்லூரியில் இணைய வழியில் ஒருங்கிணைத்து நடத்தியக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினேன். 

OISCA சர்வதேச நிறுவனம் (ஜப்பான்), தமிழ் அநிதம் (அமெரிக்கா), உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா), வல்லமை மற்றும் முத்துக்கமலம் மின்னிதழ்கள், சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் நாகூர் தமிழ்ச் சங்கம் இணைந்து 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய ‘கல்வியியல்’ எனும் பொருண்மையிலான இணையவழிப் பன்னாட்டு மாநாட்டுப் பணிகளில் ஆய்வு வல்லுநர் குழு, பதிப்பகக் குழு மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு ஆகியவற்றில் உறுப்பினராகப் பங்கேற்றிருந்தேன்.

பத்திரிகை பங்களிப்புகள்

தமிழில் வெளியாகும் பல இதழ்களில் எழுதியிருந்தாலும், தினத்தந்தி நாளிதழின் ‘அருள் தரும் ஆன்மிகம்’ இதழில் பல்வேறு ஆன்மிகக் கட்டுரைகளையும், அற்புத மகான்கள், சாப – விமோசனக் கதைகள், நவகைலாயங்கள் எனும் தொடர்களையும் எழுதியிருக்கிறேன். தினகரன் - கல்வி மலர், தமிழ் முரசு - கல்விச் சிறப்பிதழ், குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி போன்ற இதழ்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்புடைய பல கட்டுரைகளையும், தினமணி நாளிதழின் இளைஞர்மணி இதழில் சுயமுன்னேற்றம் மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் கட்டுரைகளையும், தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழில் கணினி மற்றும் இணையம் தொடர்புடைய கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். 

இசைத் தமிழ்க் குறுந்தகடுகள் 

சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் இருந்து வரும் நான், இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையில் சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளை வழியாக “சங்கத் தமிழ்ப் பெண்பாற் புலவர் பாடல்கள்” எனும் தலைப்பில், இசைத் தமிழ் வடிவில் சங்கத்தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் பாடல்கள் மற்றும் அதற்கான விளக்க உரை போன்றவற்றைத் திரை இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கம் செய்து, குறுந்தகடுகளாக வழங்கும் திட்டத்தின் முதல் பகுதியாக ஔவையார் பாடல்களில் 20 பாடல்களை இசைத்தமிழ்க் குறுந்தகடாக உருவாக்கம் செய்யும் குழுப் பணியினையும் செய்திருக்கிறேன்.


தமிழ்ப் பணிகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்டங்கள் தோறும் நடத்தும் பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிக் கருத்தரங்கில் கணினி மற்றும் இணையம் தொடர்பான உரை, தமிழ் வளர்ச்சித் துறையின் வழியாக அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் ஆகியோர்களுக்குக் கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி, தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல் குறித்துப் பயிற்சி போன்றவைகளை வழங்கி இருக்கிறேன். 

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களில் முதல் இரு பரிசுகளைப் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ‘இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’ எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் பயிலரங்கில் இணையத்தமிழ் தொடர்பான பயிற்சியளித்திருக்கிறேன். இதுவரை எட்டு ஆண்டுகள் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில், எனக்கு மட்டுமே எட்டு ஆண்டுகள் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவை தவிர, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி உ. சகாயம் அவர்களது தொடுவானம் எனும் திட்டத்தில் பங்கேற்றுப் பயிற்சியளித்திருக்கிறேன். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இணையம் தொடர்பாகவும், விக்கிப்பீடியாவில் பங்கேற்பது குறித்தும் உரை நிகழ்த்திப் பயிற்சியளித்திருக்கிறேன். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீட்டு நிகழ்வுகள், நூல் விமர்சனக் கூட்டங்கள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் என இருநூற்றுக்கும் அதிகமான இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியிருக்கிறேன். 


தேனித் தமிழ்ச் சங்கம்

தேனித் தமிழ்ச் சங்கம் எனும் பெயரில் தமிழ் அமைப்பு ஒன்றினை நண்பர்களுடன் சேர்ந்து நிறுவி, அச்சங்கத்தினைப் பதிவு செய்து நடத்திக் கொண்டிருக்கிறேன். இச்சங்கத்தின் சார்பில் இரு பெரிய விழாக்கள், கேரளா மாநிலம், மூணாறு வெள்ளப்பாதிப்புப் பகுதியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம், ஐந்து கவியரங்கங்கள் போன்றவை நடத்தப்பட்டிருக்கின்றன. இதே போன்று, தேனி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள், சிறப்பு உரை நிகழ்வுகள் போன்றவையும் நடத்தப்பட்டிருக்கின்றன. 

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பழமை வாய்ந்த கல்லூரியான உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியுடன் தேனித் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் வழியாக, கம்பம் பள்ளத்தாக்கு இலக்கியக் காப்பகம் எனும் பெயரில் தேனி மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கென்று, உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறையில் தனி நூலகம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதுடன், அந்நூலகத்தை மின் நூலகமாக மாற்றி இணைய வழியில் அனைவரும் படித்திடத் தேவையான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, தேனித் தமிழ்ச் சங்கம், திருச்சிராப்பள்ளியிலுள்ள சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்துடன் இணைந்து இணைய வழியில் பல்வேறு தலைப்புகளில் உரைகளை வாரந்தோறும் வழங்கி வருகிறது. இவை தவிர, தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் மற்றும் சிறப்பு உரை நிகழ்வுகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறது. 



பாராட்டுகள் மற்றும் விருதுகள்

தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் தேனி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் வழங்கிய “கலை - இலக்கிய சாதனையாளர்” பாராட்டுச் சான்றிதழ், தமிழ்த்திணை இணைய இதழ் வழங்கிய “தமிழ்த்திணை விருது”, தேனி, தென்தேன் தமிழ்ச்சங்கம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான முப்பது ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆதரவில் மலேசியத் தலைநகர், கோலாலம்பூரில் நடத்திய 6வது இதழியல் பன்னாட்டுக் கருத்தரங்கம் வழியாக வழங்கப்பட்ட “இணையத் தேனீ“ விருது, போடிநாயக்கனூர், ஆவடையம்மாள் அறக்கட்டளை வழங்கிய ரூ 5000/ பரிசுத்தொகையுடனான பாராட்டுச் சான்றிதழ், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய “படைப்பாக்க மேன்மை விருது”, தேனி, முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் வழங்கிய “கணினித் தமிழ்ச் சாதனையாளர் விருது”, தேனி, வையைத் தமிழ்ச்சங்கம் வழங்கிய இணையத் தமிழ்ச் சேவைக்கான “கணினித் தமிழ் விருது”, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை நடத்திய சிறுகதை நூற்றாண்டு விழாவில் சிறந்த படைப்பாளருக்கான சிந்தனைச் சிகரம் விருது, சென்னை, அம்மா தமிழ்ப்பீடம் வழங்கிய “அம்மா குயில் விருது”போன்றவைகளைப் பெற்றிருக்கிறேன். 

 நுகர்வோர் பாதுகாப்புக்குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக்குழு உள்ளிட்ட பல்வேறுறு சமூக அமைப்புகள்  சமூகச்சேவையினைப் பாராட்டிச் சிறப்பித்திருக்கின்றன.


நன்றிக்குரியவர்கள்

என் இலக்கியப் பணிகளை ஊக்கப்படுத்தி வரும் எனது பெற்றோர் சு. முத்துசாமி பிள்ளை – கமலம், என் மனைவி உ. தாமரைச்செல்வி, மகள் மு. சு. முத்துக்கமலம் ஆகியோர், சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் இணைந்து செயல்பட்டு வரும் நண்பர்கள் வி.பி. மணிகண்டன், தேனி எஸ். செந்தில்குமார் மற்றும் என் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்கள் தூத்துக்குடி எஸ்.ஏ. சுகுமாரன், மதுரை வழக்கறிஞர் எஸ். இளங்கோவன், தேனியைச் சேர்ந்த கவிஞர் வி.எஸ்.வெற்றிவேல், நகைச்சுவை எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன், எஸ்.எஸ். பொன்முடி, தேனி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். தாமோதரன், கவிஞர் ம. கவிக்கருப்பையா, கா. அய்யப்பன், வே. கலைவாணன் உள்ளிட்ட எத்தனையோபேர் என் மனதில் நிறைந்திருக்கின்றனர். 

எனது முத்துக்கமலம் இதழினை முன்னிலைப்படுத்தத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை மேனாள் இணைப்பேராசிரியர் முனைவர் தி. நெடுஞ்செழியன், திருச்சி, நவலூர்குட்டப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முனைவர் துரை. மணிகண்டன், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முனைவர் சி. சிதம்பரம், புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. சேதுராமன் மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நெல்லை கவிநேசன் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிப் பேராசிரியர்கள் இதழின் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். 

எனது முத்துக்கமலம் இணைய இதழ், தேனித் தமிழ்ச் சங்க வலைத்தளம் உள்ளிட்டஎனது இணையப் பணிகளுக்குப் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளைச் செய்துவருபவரும், எனது பல நூல்களைப் பதிப்பித்தவரும், சென்னை, கௌதம்பதிப்பகம், தரணீஷ் பப்ளிகேசன் பதிப்பகங்களின் உரிமையாளரும், சென்னைநூலகம்.காம், அட்டவணை.காம், அகல்விளக்கு.காம், சென்னை நெட்ஒர்க்.காம்,தமிழ்அகராதி.காம், தமிழ்த் திரையுலகம்.காம்,  தேவிஸ்கார்னர்.காம்  உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களை நடத்தி வருபவரும், சிறுகதை எழுத்தாளருமான      நண்பர்   கோ. சந்திரசேகரன் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என் மேல் பற்று கொண்டு, என்னுடைய பணி எதுவானாலும், அதற்கு உதவி செய்து என் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் என் இதயப்பூர்வமான நன்றிகளை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


 

*****************








































6 கருத்துகள்

  1. சிறந்த பதிவு
    ஆளுமைகளின் வரலாற்றுப் பக்கம்
    வாசிப்பவர்கள் வழிப்படுத்தும் வார்த்தைகள்
    மகிழ்ச்சி... வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. அருமையாக இருந்தது. தங்களின் பணி சிறப்புக்குரியது பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம். விரிவான நேர்காணல் கணினித் தமிழ் வளரப் பேரூக்கம் தருவதாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி. வெளியிட்ட நெல்லை கவிநேசன் அவர்களுக்கு நன்றி. இன்னும் பல சாதனைகள் புரிய திரு.முத்துக்கமல சுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் அன்பு வணக்கங்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை