நடந்தாய் வாழி தாமிரபரணி
பேராசிரியர், டாக்டர்
சௌந்தர மகாதேவன் உரை
தண்பொருனை' என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறதுபொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி.
முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில் என கூறப்படுகிறது. பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள அருவி இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது.
மகாபாரதத்தில்....
பொதிகை மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் இந்த ஆறு 70 மைல் நீளமுடையது. வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்,
குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்
என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. காளிதாசனின் ரகு வம்சத்திலும் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணிந்ததாக ஒரு பாடல் உண்டு.
பிற நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் தாமிரபரணி
இதன் ஒரு துணையாறு சிற்றாறு குற்றால அருவியாக விழுகிறது. "உலகத்திலேயே மிக அருமையானதும், தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது"என்று கால்டுவெல் எழுதுகிறார். தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன. அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை ‘தாம்ரபர்ணே’ என்று குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் திருநெல்வேலி வட்டார வழக்கு போன்றே இருக்கும்.
இராமாயணத்தில் தாமிரபரணி
தாமிரபரணி தமிழகத்தின் ஒரே, வற்றாத ஆண்டு முழுவதும் நீரோடும் ஆறாகும் . இது பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் நற்குணங்களையும் கொண்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தில் கிட் கிந்தா காண்டம் 41 ஆம் சருக்கத்தில் சில சுலோகங்கள் உள்ளன. அதில் ஒன்று
அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்
அதாவது மலை சிகரத்தில் (பொதிகை) அமர்ந்தவர் அகத்திய முனிவர். தாமிரபரணி ஆறு முதலைகள் நிறைந்தது என்று பொருளாகும்.
தாமிரபரணியும் தமிழர் நாகரிகமும்
திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரிகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது. பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை இலக்கியங்கள் வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும். குமரிக்கண்டம் கொடுங்கடல் கொள்ளப்பட்ட பிறகு 'பொருநை'வெளிதான் தமிழர்களின் தாயகமாக இருந்திருக்க வேண்டும்.
கருத்துரையிடுக