இதைவிட என் மகள் எங்களுக்கு என்ன‍ தர வேண்டும்?-- முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்

 


"வித்யா மாதிரி வராது என்று அந்த வீட்டில் அனைவராலும் என் மகள் பாராட்டப்படுகிறாள். இதைவிட என் மகள் எங்களுக்கு என்ன‍ தர வேண்டும்?"



- முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்


ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாகக் கூட இருப்பார்கள். ஆனால் ஒத்த‍ கருத்துடன் இருக்க மாட்டார்கள்.  ஆனால் எக்காலமும் அன்புடனும் பாசத்துடனும் இருக்கின்ற ஒரே உறவு, தகப்பன் மகள் உறவுதான்.

ம‌கள் பிறந்து வளர்ந்து மகளுக்குத் திருமணமாகி அவளுக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்குத் திருமணமாகி இப்ப‍டி வாழ்நாள் முழுவதும் ஒரு தந்தைக்கு மகள் மேல் உள்ள‍ பாசம் நிலையானது. நெகிழ்வானது யாரும் மாற்ற முடியாதது.

இதற்கும் காரணம் உண்டு. ம‌கன் எப்ப‍வும் கூடவே (அருகில்) இருக்கிறான். அதனால் ஒட்டுதல், உரசல்கள், நிகழ்வதுவாடிக்கை (சகஜம்) ஆனால் மகள் அப்படி அல்ல திருமணத்திற்கு பிறகு பிறந்த வீட்டுடன் இருக்க முடியாது. மகள் திருமண‌மாகி தன் வீடு துறந்து, புகுந்த வீடு போகும்போது தாய் வடிக்கும் கண்ணீரை விட தந்தை வடிக்கும் கண்ணீரே அதிகம்.

என் மகள், திருமணமாகி புகுந்த வீடு புறப்படும்போது

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதான்

(சந்தனம்) என் செய்யும்?

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான்

(முத்து) என் செய்யும்?

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதான்

(இசை) என் செய்யும்.

- எனும் கலித்தொகை பாடல் ஞாபகத்திற்கு வந்தாலும் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தவன் நான்தான். என் மனைவியும் பாசத்திலும் பரிவிலும் குறைந்தவள் அல்ல‍.



இருந்தாலும் என் மகள், பால வித்யா பிறந்தது முதலே ஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி என்னை ஆட்கொண்டு விட்ட‍து. இவள்தான் கடைக்குட்டி படுசுட்டி நல்ல‍ அறிவுக்கூர்மை.

அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எனது நண்பர், திரு. டி. ஹரிஹர புத்திரன் சில முக்கியமான பெயிண்ட் வியாபாரிகளின் பிள்ளைகளை மட்டும், விமானம் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் சென்று வந்தார்.

வந்த பிறகு அத்த‍னை பிள்ளைகளையும் ஒரு பயணக்கட்டுரை எழுதித் தரும்படி கேட்டார். எழுதிக் கொடுத்தனர். எல்லா கட்டுரைகளையும் நண்பர் ஹரிஹரபுத்திரன் ஒரு தொகுப்பாக வெளியிட்டார்.

அதற்கு என் மகள், பாலவித்யா , "நான் கம்ப்யூட்ட‍ர் இன்ஜினியர் படிக்க‍ப்போறேன். படிச்சி எங்கப்பா பிசினசை கம்ப்பயூட்ட‍ரில் ஏற்றி, கிளரிக்க‍ல் ஒர்க்கை எளிமையாக்குவேன். அது எங்கப்பா வியாபாரத்துக்கு உறுதுணையாயிருக்கும். எங்க கடையை விரிவு படுத்துவேன்."_ என்று அவள் சொன்ன‍போது என் கண்களில் கண்ணீர் துளிர்த்தன• என் மனைவியின் கண்களிலும்தான்.

நினைத்த‍ மாதரியே அவள், பி.ஈ. கம்ப்யூட்ட‍ர் படித்து முடித்தாள். இரண்டு ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். படித்தாள். அந்த பயிற்சி நிறுவனம் தடைபட்ட‍தால் இவளது ஐ.ஏ.எஸ். கனவும் தடைபட்ட‍து.

படித்து முடித்து எங்கள் வியாபாரத்திற்கு ஒத்தாசையாக இருந்தாள். டெரக்கோட்டா மண் பொம்மைகளில் அருமையாக வண்ண‍ம் தீட்டி வரவேற்பறையில் வைப்பாள்.

கைவண்ண‍ வேலைப்பாடுடன் கூடிய, கலையம்சம் பொருந்திய உருவங்களை உருவாக்கி பிரேம் போட்டு சுவர்களிலேயே மாட்டி வைப்பாள்.

அவள் செய்த அத்த‍னை, கலையம்சம் கூடிய கை வண்ண‍ங்களும் இன்றளவும் எங்கள் வீட்டில் இடம் பெற்றிருக்கின்றன• என்பது எங்களுக்குப் பெருமை வருகிறவர்களுக்கு வியப்பு

என் பிள்ளைகளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்று என் மனைவிக்குப் பெருங்கவலை

அதுமட்டுமல்ல‍. எனது மூத்த‍ மகன், பாலமுருகனுக்கு பெண் வீட்டார் வந்து வருகிற முகூர்த்த‍தில் திருமணம் செய்ய‍லாம் என்று அழுத்த‍ம் கொடுத்த‍னர்.

நாங்கள் வயசுக்கு வந்த பொண்ணை வச்சிக்கிட்டு பையனுக்குக் கல்யாணம் பண்றது சரியில்லை என்று சொன்னோம்.

அந்தக் கணமே எங்கள்மகள், "அப்பா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, நல்ல‍ இடம், நல்ல‍ பொண்ணு, விரும்பி வர்றாங்க அண்ண‍னுக்கு முதல்ல முடியட்டும் எனக்கு எப்ப முடியுதோ அப்ப முடியட்டும் இப்ப அண்ண‍ன் கல்யாணம் ஆயிடுச்சுன்னா நான் விருந்தாளியாகத்தான் வந்து போக முடியும். இப்ப‍ன்னா நான் இந்த நிமிஷத்துல இருந்தே கல்யாண வேலையை ஆரம்பிச்சுவேன்ல "என்று அவள் சொல்லச் சொல்ல, அந்த பெண் விட்டார் கண்களில் கண்ணீர்.

அந்த பெண்ணின் தாயார், என் மகளை அப்ப‍டியே கட்டிப்பிடித்துக் கொண்டார். "யம்மா எனக்கு  கல்யாண வயசுல மகன் இருந்தா இப்ப‍வே இரண்டு கல்யாணத்திற்கும் நிச்ச‍யம் பண்ணிருவேன். எம் பையனுக்கு பதினாலு வயுசுதான் "என்று குரல் தழுதழுக்க‍ச் சொன்னார்.  என் மனைவிக்கும் எனக்கும் பெருமை பிடிபடவில்லை. ஆனந்த கண்ணீர் தளும்பியது.

அண்ண‍னுக்குத் திருமணம், அத்த‍னை அலங்காரங்களையும் சீர்வரிசை தட்டுக்களையும் இன்னும் என்னென்ன‍ உண்டோ அத்தனையையும் அவள் ஆர்வத்துடன் செய்தாள்.

அத்தனையையும் பார்த்துவிட்டு அத்தனை பேரும் வியந்தனர். அவளைப் பாராட்டாத ஆளே இல்லை.

மூத்த‍ மருமகள் வந்த வேளை - இவளுக்கு விரைவிலேயே திருமணம் கை கூடியது.

சின்ன‍ வயதிலிருந்தே எல்லா குழந்தைகளையும் ஒருங்கிணைத்து விளையாடுவது, கலகலப்பாயிரபது அவளுக்கு மிகவும் பிடிக்கும். என்னைப் போல் என் மகளும் தனிமையை விரும்ப மாட்டாள்.அதனால்தான் என்னைப் போலவே அவளும் கூட்டுக் குடும்பத்தை விரும்பினாள். இனிதே திருமணம் ஆனது.

கூட்டுக்குடும்பம் என்றாலே பல சிக்க‍ல்கள் பிரச்சினைகள் வரத்தானே செய்யும்

வந்தது வந்தது.. இவள் சிரமப் பட்டாள் வேதனைப்பட்டாள். சூழ்நிலையை பார்த்தேன்.



என் மகளிடம் தனியாக பேசினேன் ...

"எந்தப் பிரச்சினை வந்தாலும் நீ அமைதியாக இரு, கணவரிடம் விட்டுக் கொடு .மாமனார் மாமியார், மச்சான், ஓரகத்தி, என்று யார் சொன்னாலும் திருப்பிப் பேசாதே .இந்தக் காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடு. அனுசரித்துப்போ. வாதம் பண்ணாதே, பண்ண‍ வேண்டிய சூழ்நிலை வந்தாலும் வாதத்தில் ஜெயிக்காதே. தோற்பது நீயாக இரு.குடும்ப உறவில் தோற்பவர்தான் வெற்றி பெறுவர். இத்தனை பேரிலும் வித்யாதான் எங்களுக்கு ஏற்ற பெண் என்று பெயர் எடு. அதுதான் நீ எங்களுக்குக் கொடுக்கிற பரிசு, பெருமை "என்று சொன்னேன்

என் மகள், சீக்கிரமே அந்த பெருமைகளை பெற்றுத் தந்து விட்டாள். இன்னமும் தந்து கொண்டிருக்கிறாள்.

வித்யா மாதிரி வராது என்று அந்த வீட்டில் அனைவராலும் என் மகள் பாராட்ட‍ப்படுகிறாள். இதைவிட என் மகள் எங்களுக்கு என்ன தரவேண்டும்

எங்கள் குடும்பத்திலும் சரி, அந்தக் குடும்பத்திலும் சரி அவள்தான் சமையல் கலையில் வல்ல‍வள். ப‌லவித வண்ண‍ங்களில் பலவித வடிவங்களில் யாருமே இதுவரை செய்யாத மாடல்க‌ளில் கேக் செய்வதில் அவளுக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்ல‌லாம் அந்த அளவிற்கு திறமைசாலி

எப்ப‍வாவது நான் சோர்வாய் இருந்தால் எனக்கு ஆறுதல் அளிப்ப‍தில் என் மனைவிக்கு அடுத்த‍படியாக என் மகள்தான். அலைபேசியில் அவளது குரலைக் கேட்டாலே எனக்கு ஒரு தெம்பும், உற்சாகமும் வந்துவிடும்.

இங்கிவளை யான் பெறவே

என்ன தவஞ் செய்து விட்டேன்.

என்று என் மகளைப் பற்றி எண்ணும்போது, என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் கசியும் அது ஆனந்த கண்ணீர்.


                                          --------------------------------------------------


Post a Comment

புதியது பழையவை