தமிழர்கள் பயன்படுத்திய
“நானோ தொழில்நுட்பம்”
------- அமுதன் ---------
கீழடி தொடர்பான ஆய்வுகள் வியப்புக்கு மேல் வியப்பைத் தந்து கொண்டு இருக்கின்றன.
மதுரை அருகே உள்ள கீழடியில், கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தொல்பொருள் ஆய்வுகள் தொடங்கியதில் இருந்து, அங்கே தோண்டத்தோண்ட பல ஆச்சரியமான செய்திகள் வெளிக்கிளம்பிய வண்ணம் உள்ளன.
கீழடியில் தமிழக மக்கள் நாகரிகத்துடன் வாழ்ந்த காலம், கி.மு.600-ம் ஆண்டுக்கும் முந்தியது என்பது ஏற்கனவே விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தக்காலத்திலேயே, அதாவது 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களைக் கட்டி, தொழிற்கூடங்களையும் அமைத்து நாகரிகத்துடன் வாழ்ந்து இருந்தனர் என்பது, உலகை அதிசயத்தில் மூழ்க வைத்து இருக்கிறது.
இப்போது, கீழடி தொடர்பாக மேலும் ஒரு வியப்பான செய்தி கிடைத்து இருக்கிறது.
நவீனமயமான இந்தக்காலத்தில் கொண்டாடப்படும் “நானோ” என்ற தொழில்நுட்பத்தை, கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி இருந்தனர் என்பது தான் அந்தச் செய்தி.
ஒரு மீட்டர் நீளத்தை நூறு கோடி துண்டுகளாக்கினால், அதில் ஒரு பாகம் தான் “நானோ” என்ற மிகச் சிறிய அளவு.
அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடியைக் கொண்டு மட்டுமே அதனைக் காண முடியும்.
சில அணுக்களின் மூலக்கூறுகளை “நானோ” அளவில் சிறியதாக்கி பயன்படுத்தும்போது அதன் ஆற்றல் அளவிட முடியாதபடி மிகுந்து விடுகிறது.
இதன் காரணமாக தற்போது, மின்னணு கருவிகள், மருத்துவம், ராணுவ கருவிகள் போன்ற பலவற்றில் “நானோ” தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
கார்பன் மூலக்கூறுகளால் உருவான “நானோ குழல்”களைக் கொண்ட திரவம், ஏதாவது ஒரு பொருளின் மீது பூசப்படுவதால் அந்தப் பொருள், அதிக பளபளப்பும் உறுதியும் பெறுகிறது என்பது 1991-ம் ஆண்டு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் சுமியோ லிஜியா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
“கார்பன் நானோ குழல்” என்பது இரும்பின் அடர்த்தியில் 6-ல் ஒரு பங்கு ஆகும். அது எடை குறைவாக இருக்கும். ஆனால் இரும்பை விட 400 மடங்கு வலிமையானது.
வைரத்தை விட அதிக அளவு வெப்பத்தைக் கடத்தும் திறன் கொண்டது.
கார்பன் நானோ குழல் திரவம் பூசப்பட்ட பொருளில் அரிப்போ, ரசாயன மாற்றமோ ஏற்படாது.
இத்தகைய அரிய வகையான “கார்பன் நானோ குழல்” என்பது, 19-ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும், “கார்பன் நானோ குழல்கள்” பழங்காலத்திலேயே பயன்பாட்டில் இருந்தது என்பது தொல்பொருள் ஆய்வுகள் மூலம் தெரிய வந்து இருக்கிறது.
கார்பன் நானோ குழல் இயற்கையாகவும் உருவாகும். மிக அதிக வெப்பம் மூலம் அதனை செயற்கையாகவும் உருவாக்க முடியும்.
சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் கிடைத்த 15-ம் நூற்றாண்டு பட்டாக்கத்தி மீது “கார்பன் நானோ குழல்” பூச்சு இருந்தது தெரிய வந்தது. (இந்த பட்டாக்கத்தியும் இந்தியாவில் இருந்து சென்றது என்பது ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு ஆகும்).
ஆனால், இதற்கும் முன்னதாக, அதாவது 2,600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் செய்யப்பட்ட மண்பாண்டங்களில் “கார்பன் நானோ குழல்” பூச்சு இருந்தது என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள், பல்வேறு இடங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், மணிவண்ணன் கோகர்நேசுவரன், பிரகாஷ் செல்வராஜ், தென்னரசன் அசோகன், சுரேஷ் பெருமாள், பதிகுமார் செல்லப்பன், கந்தசாமி துரைமுருகன், சிவானந்தம் ராமலிங்கம், நாகபூபதி மோகன், மற்றும் விஜயானந் சந்திரசேகரன் ஆகியோர் ஆவார்கள்.
கீழடியில் கிடைத்த மண்பாண்ட ஓட்டின் உள்பகுதியில் கருப்பு நிறம் பூசப்பட்டு இருந்தது.
மண்பாண்டத்தின் வெளிப்பகுதியில் கருப்பு அல்லது சிவப்பு நிறம் பூசப்பட்டு இருந்தால், அது அழகுக்கானது என்று அறிந்து கொள்ளலாம்.
ஆனால், கீழடி மண்பாண்டத்தின் உள்பகுதியில் கருப்பு நிறம் பூசப்பட்டு இருந்தது ஆய்வாளர்களைச் சிந்திக்க வைத்தது.
அந்தக் கருப்பு நிற பூச்சை, ஆபரேஷனுக்குப் பயன்படுத்தப்படும் கத்தி மூலம் சுரண்டி எடுத்து, அதனை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தபோது, அவை “கார்பன் நானோ குழல்” பூச்சு என்பது தெரிய வந்தது.
அந்த மண்பாண்டத்தின் உள்பகுதியில் “கார்பன் நானோ குழல்” பூச்சு இருந்ததால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மண்பாண்டம் உறுதியாகவும், பளபளப்பு குறையாமலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக்கால தமிழர்கள், “கார்பன் நானோ குழல்” பூச்சு குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும், இத்தகைய பூச்சு, ஒரு பொருளுக்கு உறுதியையும், பளபளப்பையும் கொடுக்கும் என்பதையும் அந்தப்பொருள் அரிப்பால் சேதம் அடையாது என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்து இருந்தது வியப்பளிக்கிறது.
இப்போதைய கண்டுபிடிப்பு மூலம், “கார்பன் நானோ குழல்” பூச்சு, உலகிலேயே கீழடியில்தான் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது என்பது உறுதியாகி இருக்கிறது.
“கார்பன் நானோ குழல்” பயன்பாட்டை, 26 நூற்றாண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் அறிந்து அதனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற ஆச்சரியமான தகவல், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் “நேச்சர்” என்ற விஞ்ஞான வாரப் பத்திரிகையில் சமீபத்தில் வெளியாகி, உலகை ஆச்சரியத்தில் மூழ்க வைத்து இருக்கிறது.
கீழடி ஆய்வுகள், இதுபோல இன்னும் என்னென்ன ஆச்சரியங்களைத் தரப் போகிறதோ - காத்து இருப்போம்.
----------------------------------------------------
கட்டுரையாளர்: அமுதன், “ஆதிச்சநல்லூர் - கீழடி, மண்மூடிய மகத்தான நாகரிகம்” நூலின் ஆசிரியர்.)
இயற்பெயர்: மு. தனசேகரன்,
தலைமை செய்தி ஆசிரியர் (பணிநிறைவு),
தினத்தந்தி,
சென்னை.
தொடர்புக்கு: மின்னஞ்சல்: dtdhanasekaran@gmail.com,
செல்-வாட்ஸ் அப்: 9841268344
கருத்துரையிடுக