கி.ஆ.பெ.விஸ்வநாதம் .
- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்
திருநெல்வேலி.
தமிழ் மொழியை வளர்க்க உழைத்த ஏராளமான அறிஞர்களுள் முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்படுவர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை ஆவார். எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், தமிழறிஞர், அரசியலர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர், ‘சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த மாமனிதர்’ என பல சிறப்புகளைக் கொண்டு தமிழுக்கும், தமிழர்க்கும் அவர் செய்த பணிகள் மிக மிக போற்றத்தக்கது. நவம்பர் 29-ஆம் தேதி அவரது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
நீதிக் கட்சியை ‘திராவிடர் கழகம்’ என்று பெரியாரும், அண்ணாவும் பெயர் மாற்றம் செய்ய விரும்பியபோது, அதனை எதிர்த்து “தமிழர் கழகம்” எனும் பெயரில் தனி இயக்கம் கண்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆவார். திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.
தமிழ் இலக்கியங்களை வெறும் பாடப்புத்தகமாக மட்டும் பார்க்காமல், அவை எப்படியெல்லாம் தினசரி வாழ்க்கைக்குப் பாடமாகவும் பாலமாகவும் இருக்கிறது என்பதைச் சொல்வதற்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். முத்தமிழின் காவலனாக விளங்கியவர், தமிழறிஞர் அவரின் வாழ்க்கையும் பணிகளையும் காண்போம்.
1893-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பெரியண்ண பிள்ளை - சுப்புலட்சுமி அம்மையார் அவர்களுக்கு புதல்வனாய் பிறந்தார். இவர் தந்தையார் சிவத்தொண்டில் ஈடுபட்டக் காரணத்தால் சிவனைக் குறிக்கும் வகையில் இவருக்கு விசுவநாதம் என்று பெயரிட்டார்.
தமிழ் இலக்கண கடலான இவர் பள்ளிக்கு சென்றதில்லை. ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு. வி. க, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.
இவரின் தந்தையார் பெரியண்ணன் அவர்கள் தமது மூத்த சகோதரர் கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தததோடு கூட்டாகப் புகையிலைத் தொழிலையும் நடத்தி வந்தார். மூவரின் முதலெழுத்தைக் குறிக் கும் வகையில் ‘கி.ஆ.பெ.’ (K.A.P) எனும் பெயரினைத் தொழிலுக்குப் பயன்படுத்தியதால் இந்தப் பெயரே காலப்போக்கில் நிலைத்து விட்டது.
வாலையானந்த சுவாமிகள் மூலம் சைவப்பற்றையும், மறைமலையடிகள் மூலம் தமிழ்ப்பற்றையும் வளர்த்துக் கொண்டார். ஆயினும் சைவத்தின் பெயரால் சாதி ஏற்றத்தாழ்வு பாராட்டினால் அதை ஏற்க மறுத்தார் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை.
1920ஆம் ஆண்டில் 21 அகவை நிரம்பிய கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை நீதிக்கட்சியில் இணைந்து பார்ப்பனரல்லாத தமிழர்களுக்குப் பாடுபட்டதோடு, பெரியார் தொடங் கியசுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சாதிக்கொரு நீதி சொல்லும் ஆரிய மனுதர்மக் கோட்பாட்டின்படி ஒடுக்கப்பட்ட மக்களும், கணவனை இழந்த பெண்களும் கொடுமைகளுக்கு உள்ளான போது கொதிப்படைந்தார். 1927ஆம் ஆண்டு மே மாதம் சுமார் 100 தாழ்த்தப்பட்டோரை அழைத்துக் கொண்டு முதன்முதலில் ஆலய நுழைவை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை, திருவானைக் காவல் கோயில்களிலும் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளையின் தலைமையில் ஆலய நுழைவு மேற்கொள்ளப் பட்டது.
அன்றைய தெருக்கூத்து நாடகங் களில் “வண்ணான் பாட்டு” எனும் பெயரில் சலவைத் தொழில் செய்திடும் மக்கள் இழிவு செய்யப் பட்டனர். “வண்ணான் வந்தானே . ...வண்ணாத்தியும் வந்தாளே...” என்று தொடங்கும் ஓடியன் கிராமப் போன் இசைத்தட்டுப் பாடல் ஒலிபரப்பிற்கு எதிராக தென்னிந்திய வண்ணார் குல மகாஜனக் கூட்டம் 3.11.1933இல் திருச்சிராப்பள்ளியில் கூடியது. இக்கூட்டத்திற்கு கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை தலைமை தாங்கிக் கண்டனம் செய்தார்.
1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் இராஜாஜி பள்ளிகளில் கட்டாய இந்தியைப் புகுத்தியபோது இதற்கு எதிராகத் தமிழறிஞர்கள் போர்க் குரல் எழுப்பினர். மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகிய மூன்று தமிழறிஞர்களின் பங்களிப்பு தமிழக வரலாற்றில் மிக முக்கியமானவை. இதில் கி.ஆ.பெ.விசுவநாதம்பிள்ளையின் பங்கு முக்கியமானது.
26.12.1937 அன்று திருச்சிராப் பள்ளியில் முதன்முதலில் கி.ஆ.பெ.விசுவநாதம்பிள்ளை “சென்னை மாநிலத் தமிழர் மாநாடு” என்ற பெயரில் இந்தி எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டினார். அன்று நடந்த பேரணியில் பத்தாயிரம் பேர் பங்கேற்றனர். அதில் கி.ஆ.பெ.வின் முழக்கம் அனைவரையும் ஈர்த்தது :
“தமிழனுடைய நாடு படை யெடுப்பால் அழிக்கப்பட்டது.
தமிழனுடைய நூல் கடல் நீரால் அழிக்கப்பட்டது.
தமிழனுடைய கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது.
தமிழனுடைய அறிவு புராணங்களால் மழுங்கப்பட்டது.
தமிழனுடைய பொருள் புரோகிதத்தால் பிடுங்கப்பட்டது.
தமிழனுடைய கட்சி உபாயத்தால் ஒடுக்கப்பட்டது.
தமிழனுடைய பதவி வஞ்சனையால் கவரப்பட்டது.
தமிழனுடைய வீரம் உபதேசத்தால் அடக்கப்பட்டது.”
கி.ஆ.பெவின் இந்த அறிக்கை அனைத்துத் தமிழர்களையும் போராட்டத்தில் ஈர்த்தது.
தமிழறிஞர் க. சுப்பிரமணிய பிள்ளை சிறப்புரை செய்த இந்த மாநாட்டில் கட்டாய இந்தித் திணிப்பைக் கண்டித்தும், தமிழ் மாகாணத்தை தனி மாகாணமாகப் பிரிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இராஜாஜி இந்தியை ஆதரித்துப் பேசிய போதெல்லாம் கி.ஆ.பெ.வி. தனது வாதத் திறமையால் அதை வென்று காட்டினார். இராஜாஜி “தமிழ் இட்டலி” போன்றது. “இந்தி சட்னி” போன்றது என்பார். இவரோ சட்னி இன்றி இட்டலியை உண்ண முடியும். இட்டலியின்றி சட்னியை உண்ண முடியுமா? என்று பதிலுரைத்தார். உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம், இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ள இந்தி என இந்தி மொழி ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்புவர். இவரோ “பெரிய பூனைக்கு என்று ஒரு துளை செய்த பிறகு குட்டி பூனைக்காக ஒரு சிறு துளை செய்வது முட்டாள்தனம்” என்று பதில் சொன்னார் .
1938இல் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக் கப்பட்டது. இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும் செயலாளராக கி.ஆ.பெ.வவிஸ்வநாதமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் தமிழக மெங்கும் போராட்டங்கள் வெடித்தன.
இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு கி.ஆ.பெ.வி. தூத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும் சென்றபோது அவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நெல்லை மேலை வீதியில் கற்கள் வீசப்பட்டதில் நெற்றி உடைந்து இரத்தம் வழிந் தோடிய போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. அப்போது அவர் “நான் வீட்டிலிருந்து புறப்படும் போது திரும்ப வருவதாகச் சொல்லிப் புறப்படவில்லை. நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப் பதைவிட என் புதைகுழியே அதிக மாக வளர்க்கும்!” என்றார்.
எட்டய புரத்தில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கி.ஆ.பெ.வி. பேசும் போது கல்லெறிதல் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது கி.ஆ. பெ.வி. யின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. உடனடியாக கூட்டம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நடந்த முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போரில் மட்டும் 12 மாவட்டங்களில் 314 ஊர்களில் 480 நாட்கள் 617 சொற்பொழிவுகளை கி.ஆ.பெ.வி. நிகழ்த்தினார்.
இந்தி எதிர்ப்புப் போரின் போது கி.ஆ.பெ.வி. மகன் இராசரத்தினம் மறைந்தார். அது பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. மகன் இறந்த அன்றும், மறுநாளும் தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது நீதிக்கட்சி நடத்திய ‘விடுதலை’ ஏடு தனது தலையங்கத்தில் “வங்க நாட்டு பாபு சுரேந்திரநாத் பானர்ஜி தம் மகன் இறந்த போது அவரின் மனத் திண்மை மாறாது தொடர்ந்து பணியாற்றியதைப் போல் கி.ஆ. பெ.வி. தம் மகன் இறந்தபோதும் கலங்காது இந்தி எதிர்ப்புப் போரில் போராடி வருகிறார்” என்று பாராட்டி எழுதியது குறிபிடத்தக்கது.
1938இல் சுயமரியாதை இயக்கத் தலைவராக விளங்கியவர் பெரியார். அவர் தமிழறிஞர்களோடு இணைந்து “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழக்கமிட்ட போது, தமிழ்த் தேசியச் சிந்தனையாளரான கி.ஆ.பெ.வவிஸ்வநாதம் மகிழ்ச்சி அடைந்தார்.
இராசாசி அரசால் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அந்தச் சிறையிலிருந்தபடியே நீதிக்கட்சிக்குத் தலைவரானார். சிறை மீண்டு வெளியே வந்த பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கத்தைத் திடீரென்று “திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாற்றினார். எழுச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய உணர்ச்சியானது இதனால் திசை திருப்பப் பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனோடு பெரியார் நீதிக் கட்சியை சர்வாதிகாரப் போக்கோடு நடத்தி வருவதாகக் கருதினார். அவரின் செயல்பாடுகள் கட்சியைப் பலப்படுத்துவதற்கு உதவவில்லை என்பதாகக் கூறி 25 குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பி லிருந்து விலகினார்.
நீதிக் கட்சியை ‘திராவிடர் கழகம்’ என்று பெரியாரும், அண்ணாவும் பெயர் மாற்றம் செய்ய விரும்பியபோது, அதனை எதிர்த்து “தமிழர் கழகம்” எனும் பெயரில் தனி இயக்கம் கண்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆவார்.
ஆரிய ஆதிக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கப் போராடிவரும் மறைமலையடிகள், உமாமகேசுவரனார் உள்ளிட்ட தமிழ்ப் புலவர்களை ஆரிய அடிமைகள், ஆரியக் கூலிகள் என்று பெரியார் கூறியதை கி.ஆ.பெ.விஸ்வநாதம் தமது குற்றச் சாட்டுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
15.01.1942 இல் ஜஸ்டிஸ் இளைஞர் மாநாட்டிற்கு கி.ஆ.பெ.வவிஸ்வநாதம் தலைமை தாங்கும்படி அண்ணா கடிதம் ஒன்றின் மூல மாக கேட்டுக் கொண்டார். கி.ஆ. பெ.வி.யின் கொள்கை நிலை பாட்டை உணர்த்தும் அண்ணாவின் கடித வரிகள் பின்வருமாறு.
“திருவாரூர் மாநாட்டில் திராவிட நாடு பற்றிய தீர்மானம் நிறைவேறியிருப்பதால் அதனை எதிர்ப்பது முறையல்ல. திராவிட நாடுப் பிரிவினை என்பது “தமிழ் நாடு தமிழருக்கே” என்பதற்கு முரண் அல்ல. இக்கருத்தில் தங்களுக்கு விருப்பமில்லாவிடில், தமிழ் நாடு தனி மாகாணம் ஆவதன் அவசியம் பற்றி தலைமை உரையில் விளக்குங்கள்”
12.08.1944இல் டபிள்யூ.பி. சவுந்திர பாண்டியனார் அவர்க ளுக்கு எழுதிய மற்றொரு கடிதத் தில் கி.ஆ.பெ.வி.யை சந்தித்து வரக்கூடிய சேலம் மாநாட்டில் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளும்படி அண்ணா கடிதம் ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார். அது பின்வருமாறு.
“அன்புடைய தலைவருக்கு, வணக்கம், தங்கள் கடிதம் கண் டேன். மகிழ்ந்தேன். ரிகிறி அவர்கள் வருவது பற்றி மிக்க சந்தோஷமே. மாநாட்டுக்கு முன்பு அவரை வரவழைத்துத் தாங்கள் கட்சியின் இன்றைய நிலையைக் கூறுதல் அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில், அவருடைய முன்னைய குற்றச்சாட்டுகளுக்கும், இன்றுள்ள கட்சியின் பிரச்சனைக்கும் இடையே பலப்பல மாறுதல்கள் உண்டாகி விட்டன. எனவே, பழயதைக் கிள றிக் கொண்டு எதிர்காலத் திட் டத்தை இடருடையதாக்கிக் கொள் ளக் கூடாது என்று கருதுகிறேன்.
குறிப்பாக, அவர் 1) கட்சிக்காக தரப்பட்ட நிதி, 2) கட்சியின் பத்திரிக்கை, 3) கட்சித் தலைவரின் ஏகபோக உரிமை, 4) அமைப்புமுறை இல்லாமை என்பவைகளையே வற்புறுத்துபவர் 5) தமிழ்நாடு தனி நாடாதல் வேண்டும். திராவிட நாடு அல்ல என்று கூறுவார்.. நண்பர் KAP தவிர மற்றவர்கள் திராவிட நாடு என்ற குறிக்கோளோ, வரலாறு, இனப்பண்பு முதலியவைக்கு ஏற்றது என்பதையும் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.
நிற்க. நண்பர் ரிகிறி அவர்கள் இந்தப் படியே விஷயங்களை யோசிப்பதைவிட இன்றும் இனியும் செய்ய வேண்டியதை யோசிக்க வேண்டும்”.
கி.ஆ.பெ.வி. கொள்கை முரண் பாடு இல்லாதவராக இருந்திருப் பின், அண்ணா மேற்படி கடிதத் தில் தெரிவித்திருக்கும் ‘திராவிட நாடு’ கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திராவிடர் கழகத்திலே இருந்திருக்க முடியும். தான் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கொள் கையில் உறுதியாக நின்ற காரணத் தால்தான் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை தோற்றுவித்தார். தமிழர்களிடம் கொள்கை முழக்கம் பரப்பிட அதன் துணையாக ‘தமிழர் நாடு’ இதழைத் தொடங்கினார்.
திராவிடர் கழகத்திலிருந்து ஏன் விலகினீர்கள்? என்ற கேள்விக்கு அவ்வேட்டில் தெளிவாகவே கி.ஆ. பெ.விஸ்வநாதம் பதில் கூறினார். “நான் திராவிடர் கழகத்தில் இருக்கவு மில்லை, விலகவுமில்லை. அவர்கள் தான் ‘தமிழ் வாழ்க’ என்பதிலிருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதிலி ருந்து. ‘தமிழ்க்கொடி’ தூக்குவதி லிருந்து விலகிப் போனவர்கள்” என்று தெளிவாக தன் நிலைப்பாட்டை கூறினார்.
கி.ஆ.பெ.வி. தமிழர் கழகம் பெயரிலும், ம.பொ.சிவஞானம் தமிழரசுக் கழகம் என்ற பெயரிலும் இயக்கம் தோற்றுவித்து செயல் பட்டு வந்ததை பெரியார் எதிர்த் தார்.
சென்னை - கோகலே மண்ட பத்தில் திரு. சி.டி.டி. அரசு தலைமை யில் நடைபெற்றக் கூட்டத்தில், "தமிழர் என்பதும் தமிழர் கழகம் என்பதும் தமிழரசுக் கட்சி என்ப தும் தமிழர் ராஜ்யம் என்பதும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்” என்று பெரியார் பேசிய தோடு நிறுத்திக் கொள்ளாது பிற இடங்களில் தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்கா லிகள் என்றும் கடுஞ்சொற்களை பயன்படுத்தி எழுதியும் பேசியும் வந்தார்.
அதற்கு பதிலுரையாக பின்வருமாறு தமது ஏட்டிலே கி.ஆ.பெ.வி. எழுதினார். "இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு என்று கூறக் கூடாதென்றும், திராவிடம், திராவிடர், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூற வேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திர, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறு பட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்க வில்லை.
அவ்விதமாயிருந்தாலும் கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள் கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம் தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானது தானா என்பதை பொதுமக்களே கருதிப் பார்க்க வேண்டும்."
மேலும், பெரியார் ஆந்திர, கேரள, கன்னடிய நாடுகளுக்குச் சென்று, ஆந்திரர் என்றும், கேரளர் என்றும், கன்னடியர் என்றும் தம்மைச் சொல்லிக் கொள்பவர்களிடம் போய் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று கூறத் தயாரா என்றும் கேள்வி எழுப்பி னார்.
தமிழர் கழகத்தை நடத்த இயலாமல் சில ஆண்டுகளில் அதனை அவர் கலைத்த போதிலும் தமிழ் மொழி, தமிழர் நலனுக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் அதனை எதிர்ப்பதில் முதல் ஆளாக நின்றார். தமிழ் எழுத்துச் சீர்திருத்த எதிர்ப்பு, இந்தியைத் திணிக்கும் வானொலி நிலைய எதிர்ப்பு, 1965ஆம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புப் போர் ஆகிய வற்றில் பங்கேற்கத் தவறவில்லை.
95 அகவை வரை ஒரு தமிழ்த் தேசியராகவே தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்து வந்த அவர் 19.12.1994 அன்று மறைந்தார். இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த அறிக்கையில் “தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப் பாட மொழியாக்கினால் நான் மனநிறை வோடும், மகிழ்ச்சியோடும் சாவேன்” என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தினார். தனிமனித ஒழுக்கம், நற்பண்புகளைப் பேணுதல், இல்லறத்தைச் செம்மையாக்குதல், தமிழ் மொழியுணர்வை ஊட்டுதல், சமூக ஒற்றுமையுணர்வின் மகத்துவம், தமிழைக் கற்க இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல் போன்ற பணியை கி.ஆ.பெ.விஸ்வநாதம் வாழும் போது செம்மையாக செய்தார், அவர் வலைக்கு பிறகு அந்த பணியை அவர் எழுதிய புத்தகங்கள் செய்கின்றன.
கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் நூல்கள்:
கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவருடைய படைப்புகள் எல்லாமே பாமரருக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கியங்களின் இன்றைய தேவைகள் பள்ளி மாணவர் முதல் அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருக்கின்றன, அவருடைய படைப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
1. அறிவுக்கதைகள் (1984)
2. அறிவுக்கு உணவு (1953)
3. ஆறு செல்வங்கள் (1964)
4. எண்ணக்குவியல் (1954)
5. எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994)
6. எனது நண்பர்கள் (1984)
7. ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950)
8. தமிழ் மருந்துகள் (1953)
9. தமிழ்ச்செல்வம் (1955)
10. தமிழின் சிறப்பு (1969)
11. திருக்குறள் கட்டுரைகள் (1958)
12. திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956)
13. திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974)
14. திருக்குறளில் செயல்திறன் (1984)
15. நபிகள் நாயகம் (1974)
16. நல்வாழ்வுக்கு வழி (1972)
17. நான்மணிகள் (1960)
18. மணமக்களுக்கு (1978)
19. மாணவர்களுக்கு (1988)
20. வள்ளலாரும் அருட்பாவும் (1980)
21. வள்ளுவர் (1945)
22. வள்ளுவரும் குறளும் (1953)
23. வானொலியிலே (1947)
விஸ்வநாதம் எழுதிய நூல்கள் மொத்தம் 36. அதில் 23 நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2007-08-ல் இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு தமிழக அரசு சார்பில் 2000-ம் ஆண்டு முதல் ‘கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.
-------------------------
கருத்துரையிடுக