மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-7


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
 சித்திரை திருவிழா-7

ஏழாம்  நாள் திருவிழா.............

புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்




   அன்னையின் பிரம்மோத்ஸவ திருநாள் 12 நாட்கள் நடைபெறும் எனக் கூறினேன்.
  அற்புதமாக 6 நாட்களைக் கடந்து 7 ஆம் நாள் உற்சவம் தொடங்க இருக்கிறது.கடந்த 6 நாட்கள் வரை நாம் கண்ட அற்புதங்களைவிட இனிவரும் நாட்களில் இத்திருவிழாவின் சிறப்பு, கூறிக்கொண்டே செல்லும் வகையில் அமைவதைக் காண இருக்கிறோம். 
     7 ஆம் நாள் காலை சுமார் எட்டுமணி அளவில் தெய்வங்கள்  புறப்பாடாகும். கங்காள நாதர் மட்டும் நான்கு  மாசி வீதிகள் சுற்றி ஆலயத்தை வந்தடைவார். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனார், "வஜ்ர தண்டம்"  எடுத்து,வாமனனை மார்பில் அடித்துக் கொன்று, அவனது தோலை ஆடையாக அணிந்து கொண்டார். அவனது முதுகெலும்பைப்  பிடுங்கி தண்டாக கையில் வைத்துக் கொண்டார்.இதுவே "கங்காளமூர்த்தி" எனப்படும் சிவ மூர்த்தி.கங்காள நாதர் 63 சிவ திருமேனிகளில் ஒன்று. கோவிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டகப்படிக்கு சுவாமியும் அம்மனும் நண்பகல் 12 மணி சுமாருக்கு எழுந்தருளிஅருள்பாலிப்பர்.
                 மாலை சுமார் 7  மணிக்கு சுவாமியும்,அம்மனும் அலங்காரமாக ஆலயத்தில் பக்தர்களுக்குக்  காட்சி கொடுத்தபின்  தீபாராதனை நடத்தப்படும்.
                இதன்பிறகு  அம்மையப்பர் நான்கு மாசி வீதிகளையும் சுற்றி வரும்போது சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும்,அம்பிகை யாளி வாகனத்திலும் உலா வருவர். இனி இந்த வாகனங்கள் பற்றி அறிவோம். நந்திகேசுவரர் வாகனம் அப்பனுக்குரியது.இவரை அதிகார நந்தி என்றும் அழைப்பர்.இதை விருத்திக்கிரம சங்காரக் கோலம் என்பர்.
            அதிகார நந்தி மான், மழு, சதுர்புஜம்,முக்கண் முதலிய குறிகளோடு சாரூப்பிய (கடவுளைப் போல உருப்பெறுதல்) பதவியைப் பெற்றவர்.இவர்  விஞ்ஞான கலர்(ஞான வடிவ நிலை) என்னும் ஆன்மாக்களுள் சிறந்தவராவார்.கைலையில் சிவ சந்நிதானத்தில் அதிகாரம் செலுத்துபவர்.இவரின் அனுமதியின்றி ஈசனைக் காண இயலாது.ஆதலால் இவர் "அதிகார நந்தி" என அழைக்கப்படுகின்றார்.
"வந்துஇறை அடியில்  தாழும் 
       வானவர் மகுட கோடி 
பந்தியின்  மணிகள் சிந்த,
        வேத்திரப்  படையால் தாக்கி"  ....... என்றதிருவிளையாடற்புராணம்  விளக்குகின்றது.
            அம்பிகையின் வாகனமோ யாளி. இஃது புதுவிதமான உருவம் கொண்டது.யானையும், சிங்கமும் இணைந்த உருவமாக இது காணப்படுகின்றது.சிங்கமுகமும்,யானையின் துதிக்கை தந்தத்துடன்  கூடிய சிற்பங்களை  வைணவக் கோவில்களிலும் காணமுடியும். விலங்குகளில் வேகம்,விவேகம்,செயல்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும்  விலங்குகளாக இந்த இரு விலங்குகளும் உள்ளன. இதன்மீது அம்பிகை ஆரோகணித்து நகர்வலம் வருவது எத்தகைய உயர் நிலையைக் காட்டுகிறது.
"கிரிஎட்டும் என,மழையைக் 
           கிழித்து       எட்டும்
         புழைக்கை, மதிக் 
             கீற்றுக்  கோட்டு"---
                                      -என பரஞ்சோதியாரின் பாடல் அற்புதமாக விளக்குகின்றது.
         இனி ஏழாம் நாள் திருநாளின் தத்துவத்தைப் பார்ப்போம்.
    எழுவகைப்பிறப்பு, கலையாதிகள் ஏழு,மாயா குணம் ஏழு என்னும் இவற்றை தவிர்த்தற்  பொருட்டுஇந்த ஏழாம்நாள்  திருநாள் அமைகிறது. அன்றுகாலையில் பிச்சாடனர் திருக்கோலத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.
       ஆணவம்மிகுந்து ,தன்னிச்சையாகச்  செயல்பட்ட தாருகாவனத்து ரிஷிகள், ரிஷிபத்தினிகளின் கர்வம் அடக்க ஈசனார்  முடிவு கொண்டு, விஷ்ணுவுடன் தாருகா வனம் சென்றார்.ஈசனார் பிச்சாடனராக  ரிஷி பத்தினிகள் முன்பும்,விஷ்ணு மோகினி ரூபத்தில் ரிஷிகளின் முன்பும் செல்ல அவர்கள் இருவருடைய ரூபங்களைக்கண்டு அவர்களின் அழகில் ஈடுபட்டனர்.இவ்விதசெயல்களால் ரிஷிகளும்,அவர்களின் பத்தினிகளும் பரதந்திரர்களே என அவர்களை உணரச்செய்து இறைவன் மறைந்தான். பராக்கிரம கோலமே  பிச்சாடனர் கோலமாகும். 
             இவ்வாறு ஏழாம் திருநாள் நான்கு மாசிவீதிகள்  சுற்றிவந்து, அட்டசத்தி  மண்டபத்தில்  நடத்தப்படும் புஷ்ப  சிங்கார திருக்கண்ணில் இரட்டை சோடசோபசார தீபாராதனை ஆனபின்  கோவிலுக்குள் எழுந்தருளுவர்.
    இந்த நிகழ்வைக்காண  கோவிலில் பக்தர்கள் இரவாக இருந்தாலும் காத்திருந்து கண்டு மகிழ்வர்.இந்த அற்புதக் காட்சியை  மனக்கண்களில் நாமும் கண்டு மகிழ்ந்து மறுநாளுக்குத் தயாராவோம்.   
    
திருவிழா தொடரும்....

நெஞ்சம் நிறைந்த நிகழ்வு-7
மதுரை சித்திரைத் திருவிழா 
7ம்நாள் நிகழ்ச்சி.(2018)






2 கருத்துகள்

  1. கங்காள நாதர் கோலம் வேறு. பிட்சாடனர் திருக்கோலம் வேறு. இரண்டையும் குழப்ப வேண்டாம்.இறைவன் நிகழ்த்திய 63 திருவிளையாடல்களில் இந்த நிகழ்வு எங்கே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. 64 திருவிளையாடல்களில் இது வராது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை