மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
சித்திரை திருவிழா-12
சித்திரைத் திருவிழா தத்துவங்கள்
-திருமிகு.மதுரை .சண்முக திருக்குமரன் அவர்கள்
பன்னிரெண்டாம் நாள்.
தீர்த்தவாரி,இந்திரன் பூஜை.............
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்.
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்.
.
அற்புதமாக சித்திரைப் பெருவிழா என்னும் பிரம்மோத்சவம் 12 ஆம் நாள் நிகழ்வுடன் முடிவடைகின்றது. இதுபற்றிய தத்துவத்தையும்,பலனையும் இங்கு காணலாம்.
12 ஆம் நாள் காலையில் அம்மையப்பர் வைகையாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். மாலையில் இந்திரபூஜை நடைபெறும்.தீர்த்தவாரி என்பது திருவிழா முடிவில் தெய்வங்களுக்கு நடைபெறக்கூடிய நீராட்டு உற்சவம்.இந்தப் புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர். ஆலயங்களில் நீராட்டு நடைபெற்றால் அபிஷேக நீர் விழும் இடத்தில் நீரைத் சேகரித்து பக்தர்கள் மீது தெளிப்பர்.இந்த பாத்திரத்திற்கு "தீர்த்தவேதி" என்று பெயர்.சில ஆலயங்களில் புஷ்கரணி ,ஆறு போன்ற இடங்களில் இஃது நடை பெறும்.நீராட்டு நடந்த அந்த நதியில் நீராடினால் பாவம் தொலைந்து,புண்ணியம் கிட்டும் என்பர்.திருப்பதி,சபரிமலை,கும்பகோணம் மகாமகக் குளம்,திருச்சி காவேரி போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில் தீர்த்தவாரி நடக்கும் போது நீராடுவதைக்காணலாம்
மதுரையில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவில் தேவேந்திர பூஜை நடைபெறும்.இந்திரனின் சாபம் போக்கிய இடம் மதுரை.இந்த பிரம்மோத்ஸவத்தை இங்கு ஆரம்பித்தவன் இந்திரன் என்பதால் இன்று வரையிலும் இந்தவிழா கொண்டாடப்பட்டு இந்திரனுக்கும் பூஜை செய்யப்படுகின்றது. மேலும் இந்த நிகழ்வுகள் எல்லாம் ஆலயத்தின் உள்ளேயே நடத்தப்படுகின்றது. இந்த நிகழ்வுக்கு மதுரை வாழ் மக்கள் தாமரை மலர்களைக் கொண்டுவந்து ஆலயத்தில் சேர்ப்பர்.
இனி இதன் தத்துவம் மற்றும் பலனை இங்கு காண்போம். தீர்த்தவாரிவிழா, சிவானந்தமாகிய பேரின்பக்கடலில் ஆன்மா திளைப்பதைக் குறிக்கின்றது. பூரணத்துவத்தின் மொத்த உருவாக விளங்கும் இறையின்ப வெளியில் ஆன்மாக்கள் முற்றும் ஆழ்ந்து ஆனந்தம் அடைவதை தீர்த்தவாரி குறிக்கின்றது. இந்த தீர்த்தவாரியை மஹா ருத்ர பாத( ருத்ரனான சிவனின் பாத ) தீர்த்தம் என்பர்.
காலையில் பூஜைகள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.உச்சிக்காலத்தில் பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தம் ,தேவேந்திர பூஜை நடை பெறும்.
இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மையப்பர் நான்கு மாசி வீதிகளில் வலம் வரும் காட்சி அற்புதம். இந்த ரிஷப வாகனத்தின் சிறப்பு ஆறாம் திருநாளில் கூறப்பட்டிருக்கின்றது. மாசற்ற அறவடிவான ஆன்மாக்களிடம் இறைவன் வந்து அமர்வதால் இஃதை அனுக்கிரஹக் கோலம் என்பர்.
எல்லா நாட்களிலும் பிரியாவிடையுடன் ஈசன் தனியாகவும் , அன்னை தனியாகவும் வலம்வருவர்.பதினோராம் நாள் சப்தாவர்ணத்தில், திருமண மண்டபத்தில் இருந்த நிலைபோல் ஏக ஆசனத்தில் அமர்ந்து சப்பரத்தில் வருவர்.இந்த ஒருநாள் மட்டுமே இந்த அற்புத நிகழ்ச்சியைக் காணலாம்.இந்த ஆனந்தக் காட்சியானது பாவம் தீர்க்கும் என்பதால் மதுரை வாழ் மக்கள் இதை எவ்வாறேனும் கண்டுவிட வேண்டுமென பதினோராம்நாள் இரவு மாசி வீதி நோக்கிச் செல்வர்.இதன்பின் மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும்.
12ஆம் நாள் இரவு 9 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானும்,பவளக்கனிவாய்ப் பெருமாளும்
16 கால் மண்டபத்தில் விடைபெற்று திரும்பும் நிகழ்வு நடைபெறும்.மாசி வீதி சுற்றி மக்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வங்கள் ஆலயத்தை அடைய,அவர்களுக்கு தீபாராதனை காட்டி, ஆனந்தம் கொள்வர்.இவ்வாறு சிறப்பாக அம்மையப்பரின் 12 நாள் பிரம்மோத்ஸவத் திருவிழா இனிதே முடிவடையும்.கருணையின் இருப்பிடமாகத் திகழும் அம்மையப்பனை வீட்டில் இருந்தபடி,வணங்கி,துன்பம் அகன்றபின் ஆலயம் வந்து ,அவர்களின் ஆசியைப் பெறுங்கள்......
வாழ்த்துக்கள் ..நன்றி..
கருத்துரையிடுக