மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-10


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.

 சித்திரை திருவிழா-10(2019)




பத்தாம் நாள் திருவிழா........திருக்கல்யாணம்...
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்.

 ஒன்பது நாட்களைக் கடந்து பத்தாம் நாள் அம்மையப்பனின் திருக்கல்யாண வைபவத்தைக் காண இன்று வந்திருக்கிறோம். பத்தாம் நாள் நடக்கும் அம்மையப்பனின் திருக்கல்யாணமும், பதினோராவது நாள் நடைபெற இருக்கும்தேரோட்டமும்,மிக முக்கியமான விழாவாகக் கொண்டாடப் படுகின்றது.
          கொரோனாவினால் அன்னையின் திருமணம் ஆலயத்திலுள்ள 4 சிவாச்சாரியார்களைக் கொண்டு தக்க பாதுகாப்பு  நெறி முறைகளுடன்  வருகிற மே4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் நடக்க இருக்கின்றது.  சாதாரண நிலையில் நடந்தால் எவ்வாறு நடக்கும் என்பதை சற்று விளக்கமாக.......ஒன்பதாம் நாள் திக்கு விஜயம்முடித்து தெய்வங்கள் ஆலயத்தை வந்து அடைந்தபின்  அன்னையை தம் இல்லத்தின் பெண்ணாகவே பாவித்து மதுரை மக்கள் சீர்வரிசையைக் கொடுக்கின்றனர்........
         இத்திருக்கல்யாண நிகழ்வைக்காண அதிகாலையிலேயே ஆலயத்தில் மக்கள் திரள ஆரம்பபிக்கின்றனர்.முன்பு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வந்தது. காலப்போக்கில் திருமண நிகழ்ச்சி ஆடி வீதிக்கு  மாற்றப்பட்டு எல்லா இடங்களில் இருந்தும்  திருமண நிகழ்ச்சியைக்காண தொலைக் காட்சி வழியாக காண்பதற்கு வழி செய்யப்பட்டிருக்கிறது. இறைவன் இறைவியின் திருமணக் கோலம் இறைவன் போகவடிவில்  வாழாமல் போனால் உலக உயிர்கள் போகநிலை பெற இயலாது.எனவேதான் தெய்வங்களின் திருமணங்கள் ஆலங்களில் நடத்தப்படுகின்றன. திருக்கல்யாணத்தன்று அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து , நான்கு சித்திரை வீதிகளை வலம்வந்து , அம்மையப்பன் இருவரும் திருமண மண்டபத்தை வந்தடைகின்றனர். 
 திருமணத்திற்குமுன் அம்பிகையை புனித நீரால் அபிஷேகம் செய்து,பட்டாடைகளுடன் நவரத்தின ஆபரணங்கள் அணிவித்து, இருபக்கம் வாணி,லெட்சுமி,இருவரும்வர, ரம்பா,ஊர்வசி,திலோத்தமை ஆகியோர் பூத்தட்டுஆலவட்டம் ,கண்ணாடி ஏந்தி வர,ஊர்வலம்வருகின்றது.
             குபேரன்ஈசனுக்கு அலங்காரங்கள் செய்து,இருபுறம் பிரம்மா ,விஷ்ணு வர,வேதியர் பொற்குட  நீர் தெளித்துவர ஊர்வலம் மண்டபம் வந்தடைகின்றது.இஃதுஐதீகம் .
        மண்டபத்திற்கு வருமுன் இவர்கள் காலை 4 மணிக்கு  அழகர் சாமி நாயுடு,சூறாவளி சுப்பையர் , கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளை ஏற்று நான்கு சித்திரை வீதிகளை  வலம் வருகின்றனர்.பின் முத்துராமலிங்க  மண்டபத்தில் கன்னிஊஞ்சல்ஆடி,காட்சி தருகின்றனர்.இந்த வைபவம் முடிந்து கல்யாண மண்டபம் வந்தடைகின்றனர்.திருக்கல்யாணத்தைக்காண குன்றத்து முருகனும்,அருள்மிகு பவழக்கனிவாய்  பெருமாளும்  மண்டபம் வந்துசேர, அவ்விடம் முழுவதும் புணுகு,ஜவ்வாது,கஸ்தூரி போன்ற நறுமணம் பொருட்களால் மணமூட்டப்படுகின்றது. மண்டபம் முழுவதும் மக்கள் நிரம்பி இருக்க,அக்கினி வளர்த்து,திருமண நடத்த சிவாச்சிரியார்கள் தயாராக இருக்கின்றனர்.சுமங்கலிப் பெண்கள் பாலிகை  தெளிக்க ,திருமணம் குறித்த நேரத்தில் பாவனையாக சிவாச் சாரியார்களால் புத்தாடை அணிந்து,கங்கணம்கட்டி,மாலைமாற்றி,  திருமாங்கல்ய தாரணம் கட்டப்படுகின்றது. இஃது அம்பிகை,மற்றும் பிரியாவிடைக்கு,தனித்தனியாக அணிவிக்கப்படுகின்றது.இவ்வாறு திருமணம் இனிதே முடிவடைகின்றது......
          திருமண நடக்கும் நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் தங்களின் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்கின்றனர். பின் அம்மி மிதித்து,அக்னியை வலம்வந்து, தீபாராதனை காட்டப்படுகின்றது. திருமணம் முடிந்தபின்  வெளியில் இருக்கும் மக்கள் மணக்கோலத்திலிருக்கும் தெய்வங்களைக்கண்டு மகிழ்கின்றனர். திருமணத்தின் பின் குண்டோதரனுக்கு உணவு படைக்கப்படுகின்றது.மக்களுக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளி மற்றும் பல இடங்களில் மாலை வரை உணவு வழங்கப்படுகின்றது...
               இரவு அம்மையப்பன் திரு.ஏ.சொக்கலிங்கம் பிள்ளை டிரஸ்டிலிருந்து அலங்காரம் செய்யப்பட்ட, அனந்தராயர் பூப்பல்லக்கு,மற்றும் யானைவாகனத்தில் மாசி வீதிகளில் வலம் வருகின்றனர்.பத்தாம் நாள் திருவிழா,மக்கள் புணர்வுறு போகம் மூழ்கி,இறைவன் புருடன் ,பெண்ணுமாகி மணம்கொண்டு ஆற்றுப்படுதலைக் குறிப்பதாகும். இறைவனின் திருமணமாதலால்  இஃது திருக்கல்யாணம் எனப்படும்.போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தை புரிகின்றான். அவன் இந்த வடிவில் வாழாமல் போனால் உலக உயிர்கள் போகியாய் வாழ இயலாது. யானை வாகனத்தில் இலயக்கிரம சிருஷ்டிக் கோலத்தில் இறைவன் வருகின்றார்.அதாவது ஒடுங்கும் முறை.உலக உயிர்கள் எல்லாம் இறைவனிடம்  ஒடுங்கி ஒரே பிண்டமான யானையின் உடம்பு போல் பருமனாய்க் கிடந்து ஒடுங்குதலாகும். அதிலிருந்து திரும்பவும் தோன்றுவது  இலயத்தின் பின் சிருஷ்டி  தொடங்குவதைக் குறிக்கும்.யானையின் 4 பாதங்கள் பிண்டாகார உற்பவஜடத்வம்,சுவாசசூக்குமம், வாஜிஜீவத்வம்,பிராணாயாமம் இவைகளைக் குறிக்கின்றது. இவை யானைபோல  ஆத்மஞானத்தில் தோன்றி,துதிக்கையை ஒத்த கஷும்னையில் நிலைநிற்கும். யானையின் மேல் வைக்கும் அம்பாரி முதலியன வெளித்தோற்ற அண்டாகாரமாகும்.உற்பவ, சூக்கும, ஜீவா, மாயாஞானங்கள் ஆத்ம ஞானத்திலும், அவை ஈசுவர சைதன்யத்தும்,ஈசுவர சைதன்யம்,பிரம சைதன்யத்திலும்  இலயிக்கிறது என்பதைக்  குறிக்கின்றது.........
   பூவார் மலர்கொண்டு அடியார்  தொழுவார்.............................
    என்னுடல் காட்டுவித்தான் 
    நொடித்தான் மலை  உத்தமனே........
என்று  சுந்தரர் தேவாரப்பாடல்  விளக்குகின்றது.....

இவ்வாறாக இரவு வீதிஉலா நான்கு மாசிவீதிகள் சுற்றி ஆலயம் அடைய அங்கு  அவர்களுக்கு சோடச உபசாரங்கள் நடைபெற ,பத்தாம்நாள்  திருக்கல்யாணத் திருவிழா  இனிதே முடிவடைகின்றது.
விழாவின் சிறப்பு தொடரும்.



மதுரை சித்திரைத் திருவிழா தத்துவங்கள் 

திருமிகு.மதுரை .சண்முக திருக்குமரன் அவர்கள்.


Post a Comment

புதியது பழையவை