அழகர் மலையின் சிறப்பு.....


அழகர் மலையின் சிறப்பு.....
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்



            திருமாலிருஞ் சோலை என்னும் அழகர் மலை நாயகன் சுந்தர ராஜப்பெருமாள் வைகையாற்றில் சித்ரா பவுர்ணமியன்று இறங்கி மக்களுக்கு அருளாசி கொடுத்து ஆனந்தத்தில் ஆழ்த்துவார். இவ்வாறு அழகர் திருநாள் எனச் சிறப்பாக வர்ணிக்கப்படும் இந்தத்திருவிழாவும் கொரோனா தொற்றின் காரணமாக குறிப்பிட்ட சிவாச்சாரியார்கள் மற்றும் உதவியாளர்கள் சிலரை வைத்து ஆலயத்திற்குள் வருகின்ற 8 ஆம் தேதி சில குறிப்பிட்ட சம்ரதாய நிகழ்வுகளுடன் நடக்க இருக்கிறது. அஃதினைப் பட்டியலிடுமுன் அழகர்திருநாள் எவ்வாறு இயல்பான காலங்களில் கொண்டாடப்படும் என்பதை சுருக்கமாகக் காண்போம் . 
            காளையின் வடிவங்கொண்ட ரிஷபாத்திரி என அழைக்கப்படும் மலை அழகர்மலையாகும். எமதர்மனின் வைண்டுகோளின்படி இங்கு குடி கொண்டுள்ள அழகர்,அதிரூப சுந்தரராக விளங்குவதால் இவர் சுந்தர ராஜப்பெருமாள் என அழைக்கப்படுகின்றார். சுவாமி பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி,பூதேவியுடன் கையில் பிரயோகச் சக்கரத்துடன் காட்சி கொடுக்கின்றார். இங்குள்ள உற்சவர் அபரஞ்சி எனக்கூறப்படும் உலோகத்தால் உருவாக்கப்பட்டவர்.இங்கு மூலவரைவிட உற்சவருக்குத்தான் சிறப்பு அதிகம்.இங்குள்ள நூபுர கங்கை எனப்படும் சிலம்பாற்றிலிருந்துதான் திரு மஞ்சனத்திற்கு நீர் எடுத்து வரப்படும்.வேறுநீரில் அபிஷேகம் செய்தால் இந்த விக்ரஹம் கருத்துவிடும். இந்த ஆலயத்தின் நுழைவாயிலிலுள்ள பதினெட்டுப்படி கருப்பு எனப்படும் தெய்வம் சிறப்பு வாய்ந்தது.
           சுந்தர ராஜப்பெருமானைப் போன்ற தெய்வ உருவம் திருவனந்த புரபத்மநாப சுவாமியின் ஆலயத்தில் இருப்பதால் அழகர் மலைனிலுள்ள உற்சவரைத் திருட  18 தந்திரங்கள் நிறைந்த திருடர்களை அனுப்ப ,அவர்களைக் கொன்றுபுதைத்து காவலுக்கு வந்த கருப்பனை இங்கே 18 படிகளில் நிரநாதரமாக அமரச்செய்ய, அஷ்ட ஜாம பூஜையின் பிரசாதம் இன்றளவும் கருப்பனுக்கே
படைக்கப்படுகின்றது. சித்திரைமாதம் நடை பெறும் மீனாட்சி திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைந்து அழகர் திருவிழாவை நடத்தச் செய்தவர் திருமலை  நாயக்க மன்னராவார்.முற்காலத்தில் அலஙகாநல்லூர் தேனூர் சென்று வைகையில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறும்.தற்பொழுது மதுரையம் பதியிலேயே நடக்கின்றது. இப்படிப்பட்ட அற்புத  திருவிழாவின் சில நிகழ்ச்சிகளை இங்கு காணலாம்.
அழகர் மலையின் சிறப்பு, கள்ளழகர் ஆற்றில் இறங்கல்..தொடர்ச்சி............
           அம்பலகாரர் மண்டகப்படியில் வாண வேடிக்கைபார்க்கவே கூட்டம் அதிகமாகக்கூடும்.
  வேட்டுச் சத்தம் கேட்டவுடன் அம்பலகாரர் மண்டகப்படி நோக்கி மக்கள் சாரை சாரையாகச் செல்வர்.வழி நெடுகிலும் சர்க்கரை ,சுக்கு கலந்த பிரசாதப் பாத்திரத்தின் மேல் சூடம்ஏற்றி, அதை அழகருக்குத் தீப ஆராதனை காட்டுவது வழக்கம். இதற்காக விரதம் இருந்து அவன் வரும்  வழிநோக்கி மக்கள்காத்திருந்து,சூட தீபம் ஏற்றி வழிபட்ட பின் விரதமிடுவர். இவ்வாறு வந்த அழகர்  மண்டகப் படிகளை ஏற்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலை வந்தடைவார்.
      இந்த ஆலயத்திற்கு ஓர் அற்புதமான சிறப்பு உண்டு.இவ்வாலயத்தில்  இவருக்கு திருமஞ்சணம் செய்வித்து அலங்காரம் நடை பெறும்.இங்கு பிரசன்னம் பார்த்து, அவர் உடைத்தும் ஆடையை  எடுக்கின்றனர்.பொதுவாக அழகர் இங்கு பச்சைப் பட்டுடுத்துவதே  அதிகம்.ஏனென்றால்  செழிப்புடன் மக்கள்வாழ இறைவன் வழிவகுப்பான் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு தீப ஆராதனைகள் முடிந்து  முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும் பின் மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளுவார். அங்கிருந்து அழகரைக் கிளப்பி,வைகையை நோக்கிஅழைத்து வருகின்றனர்.இங்குதான் அழகர் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் மாலையினை  ஏற்றுக் கொள்கிறார்.அரங்கனே  அழகனாக வந்து ஆண்டாளை  ஏற்றுக் கொண்டதாக ஐதீகம்.இவ்வாறு அற்புதக் கோலத்துடன் பொன் சப்பரத்தில் அழகர் புறப்பாடு ஆரம்பிக்கின்றது.
          அழகருடன் ஆனந்தமாக வைகை வரை மக்கள் கூட்டம் தொடர்கின்றது. வைகையை நெருங்கியவுடன் ஓர் அற்புதம் நிகழ்வதைக் காணலாம்.அம்சமே உருவான தங்கக் குதிரை வாகனத்தில் அழகரை அமர்த்தி "அழகரே கடிவாளத்தைப் பிடியுங்க" எனக் கூறி தங்கக் குதிரையில் அழகரை அமர்த்தி,கடிவாளத்தை அழகரின் கையில் கொடுத்தவுடன்"கோவிந்தா,கோவிந்தா "என்னும் கோஷம் வானமுட்டுமளவு கேட்கும்.மக்கள் ஆனந்தத்தில் உச்சிக்கே
 செல்வர்.
           கடிவாளம் பிடித்தபின் இவரை அங்கு வரவேற்க வீர ராகவப் பெருமாள் வருவதைக் காண முடியும். இங்கு இவரின் வரவேற்பை ஏற்றபின் ,அழகர் வைகையில் இறங்கும் அற்புதம் நிகழ்கின்றது.சுந்தர ராஜன் என்னும் அழகர் பெருமான் வைகையாற்றில் இறங்கும் போது,மக்கள் இவருக்கு முடி கொடுத்து நேர்த்திக்கடன் செய்வோரும், குழந்தைகளுக்குக் காது குத்துவோரும் உண்டு.மக்கள் வைகையில் புனித நீராடுவதும் உண்டு.இந்த நிகழ்வு முடிந்தவுடன் வண்டியூர் சென்று,அங்கு சுற்றியுள்ள மண்டகப்படிகளை அழகர் ஏற்று மகிழ்கின்றார். மேலும் இங்குதான் நீர்பாய்ச்சி ,அழகரைக் குளிர்வித்து,மக்கள் ஆனந்தம் கொள்வதைப் காணமுடியும்.
         இதன்பின் வைகை வழியாக வண்டியூர்  வந்துவிடும் அழகர்,அங்கு தங்கியபின்,சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தை வந்தடைகின்றார்.அங்கு தங்க கருட வாகனத்தில் மாண்டூக முனிவருக்குக் காட்சி கொடுத்து,சாபம் போக்கி மோட்க்ஷம் அருளுகின்றார்.இரவு பகல் என்று பாராது மக்கள் அழகரை வந்து பார்த்து ஆனந்தம் கொள்வர்.அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் .இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இறுதியில் அதிகாலை மோகன அவதாரம் நடைபெறும்.இதுவே இந்த விழாவின் உச்சகட்ட சிறப்பாகும்.இவ்வாறு மக்களை மகிழ்வித்த அழகன் ,அழகர் மலை திரும்ப ஆயத்தமாகின்றான்.பின் ஆனந்த ராயர் பூப்பல்லக்கில் ராஜாங்க சேவையுடன்  புறப்பட்டு,மைசூர் மண்டபத்தில் கள்ளழகர் திருக்கோலத்துடன் "புஷ்பப் பல்லக்கு"சேவை நடைபெறும். ஆனந்தமாக வந்த இவரை,அதே ஆனந்தத்துடன் வழியனுப, பூப்பல்லக்கில் அமர வைத்து,பிரிய மனமில்லாமல் அழகர் மலை  அனுப்பி வைப்பர். "கள்ளழகா ஆண்டு தோறும் நீ இங்கு வந்து ஆனந்தம் தரவேண்டும்" என,இவரை வழியனுப்பும் சிறப்பு அற்புதமானது.மறுநாள் அப்பன் திருப்பதிக்குச் சென்று, பின் திருமலையை அடைவார்.அங்கு அவருக்கு சாத்துமுறைகள் நடக்கும்.
          ஒருமாத காலம் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களும்,ஆனந்தமாகக் கொண்டாடும் இந்தத்திருவிழாவை இந்த ஆண்டு நிகழ்த்த இயலாது போனதும் அவனின் திருவருள்தான் போலும்.இருப்பினும் சில சட்டதிட்ட சம்பிரதாயங்களுடன் குறிப்பிட்ட சில நிகழ்வுகள் ஆலயத்துள் நடக்க இருக்கின்றன.
 8.5.2020.அன்றுஅதிகாலை,
 6மணிக்கு பெருமாள் ஆண்டாள் சன்னிதி முன் எழுந்தருளல்.
8.மணிக்கு எதிர்சேவை,
10 மணிக்கு குதிரை வாகன சேவை.
நண்பகல் 12 மணிக்கு சைத்திய உபசார சேவை.
1.30.மணிக்கு சேஷ வாகனம்.
மாலை4.30--5.30,கருட சேவை,மோட்க்ஷ புராணம்.
மாலை6.30மணிக்கு புஷ்பப் பல்லக்கு.
இரவு 8.மணிக்கு அருள்மிகு பெருமான் ஆஸ்தானம் செல்லுதல்.
          இந்த நாளில் குறிப்பிட்ட சிலருடன் இந்த நிகழ்வுகள் ஆலயத்துள் நடக்க இருக்கின்றன.இறையருளால் அவனை வேண்டி,அடுத்த ஆண்டு அவனை வரவேற்க தயாராவோம். ..நன்றி.


Post a Comment

புதியது பழையவை