ஆனந்தம் தரும் ஆத்திசூடி-6
புலவர். டாக்டர். வை.சங்கர லிங்கம்.
'எண்ணுவது உயர்வு'
வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஏதோதோ அர்த்தம் கற்பித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
நாம் நினைப்பதுதான் சரி, நம் எண்ணம்தான் முக்கியம் என்ற இரண்டும்தான் நம்மை விலங்கிட்டு வைத்து இருக்கின்றன. அவற்றை முதலில் களையவேண்டும்..
நல்லவன், கெட்டவன் என்று யாரைப் பற்றியும் தீர விசாரிக்காமல் நாமாகவே தீர்ப்பு எழுதி மற்றவர்களின் வாழ்க்கையை கொச்சைப் படுத்தக் கூடாது . எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி ஒரு தாழ்வான எண்ணம் நம் மனதுக்குள் தவழ்ந்து கொண்டே இருக்கிறது.
ஆயிரம் கருத்துக்கள் சொல்லத் தெரிந்துவிட்டதாலே எல்லாம் தெரிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடக் கூடாது.
ஒருவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு குதிரைப் பந்தயத்தில் பத்து லட்சம் கிடைத்தது. அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.
மறுநாள் பணத்தைக் காணவில்லை, காலடித் தடங்களை வைத்து பணத்தைப் பின் வீட்டிலிருந்த அந்த வெளியூர்பேர்வழிதான் எடுத்து இருப்பான் என்று அவர் நினைத்தார்.
அவனுக்கு தமிழ் தெரியாது .அவன் பேசியது அவருக்கு புரியவில்லை. கோபத்தில் துப்பாக்கியை எடுத்து விட்டார்.
இதைக் கவனித்து விட்டு இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்தார். "அவசரப்படாதீர்கள்நான் விசாரிக்கிறேன்" என்றார்.
துப்பாக்கியால் மிரட்டப்பட்டதுமே அந்த வெளியூர் ஆசாமி மிகவும் பயந்து, பணத்தை பூமிக்கு அடியில் புதைத்து வைத்து இருப்பதாக கூறினான்.
பூமிக்கடியில்' என்பதை சைகையிலும் காண்பித்தான்.
பணத்தை திருட்டு கொடுத்தவருக்கு ஒன்றும் புரிய வில்லை,
பக்கத்து வீட்டுக்காரரை நோக்கி,"என்ன,தன்னை உயிரோடு புதைத்தாலும், பணத்தைத் திருப்பித்தர முடியாது என்கிறானா?"என்று கேட்டார்,பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கும் அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை.
ஆனாலும் அவர்ஆமாம்' அப்படி த்தான் சொல்கிறான் என்றார்.
அந்த பக்கத்து வீட்டுக்காராரைப் போலத்தான் நாமும்.யார் என்ன சொன்னாலும் உண்மை அறியாமல் மற்றவர்கள் மீது தவறான எண்ணம் கொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் நாமாகவே ஏதோ கற்பனை செய்து கொள்கிறோம். நாம் எண்ணுவதுதான் உண்மை என்று சொல்லி சாதிக்கின்றோம்.
உங்கள் பழுதான கண்ணாடி வழியே பார்க்காமல், தெளிவாகப் பார்க்கத் தயாராக இருந்தால்தான், வாழ்க்கைப் பயணம் எந்தக் காயமும் இல்லாமல் நிகழும்.
உங்கள் மனதின் படபடப்புகளை நிறுத்தினால் தான், எதனுடனும் சிக்கிக் கொள்ளாமல், வாழ்க்கையின் உண்மையான பக்குவம் கிடைக்கும்.
அப்பொது தான் நீங்கள் என்றென்றும் ஆனந்தாமாக வாழலாம். அடுத்தவரைப் பற்றி சந்தேகப்பட்டு வாழ்வதை விட்டுவிட்டு ஒவ்வொருவரைப் பற்றியும் உயர்வான எண்ணம் கொண்டு வாழ வேண்டும்.
இதைத் தான் பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் (எண் 7) "எண்ணுவது உயர்வு" என்கிறார்.
மீண்டும் அடுத்த புதன்கிழமை சந்திப்போம்
>>>>>>>>>>>>>>>
கருத்துரையிடுக