நினைவலைகள்!
க.முத்துநாயகம்,
லாலாக்குடியிருப்பு.
நிலையான புகழோடு சிலையாகத் திகழும் சின்னையா அவர்களுக்கு மகுடம் சூடும் வகையில், தமிழக அரசு மணிமண்டபம் எழுப்பி இருக்கிறது!
இத்தருணத்தில் ஒரு மாமலையோடு ஒரு மடுவிற்கு ஏற்பட்ட நூலிழைத் தொடர்பை இங்கே விளக்க விழைகிறேன்!
மேற்குத்தொடர்ச்சி மலையின் மடியில் தவழும் ஒரு குக்கிராமம், எமது ஊர்.
தென்றல் வீசும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திற்குள் அடங்கி இருக்கும் அதன் பெயர்தான், லாலாக் குடியிருப்பு.
1969 ஆம் ஆண்டுயென நினைக்கிறேன்! அய்யா சி.பா.ஆதித்தனார் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த நேரம். இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக எமது ஊரில் முகாமிட்டு இருந்தார்கள்.
அப்போது எங்கள் கிராமத்தில் ஒரு முன்னூறு தலைக்கட்டுகள் இருக்கும். பள்ளிக்கூடம் இல்லை. குழந்தைகள் படிக்க வேண்டுமென்றால் அண்டை ஊர்களுக்குத்தான் செல்ல வேண்டும். ஒரு ஊருக்குச் செல்ல ரெயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டும்! இன்னொரு ஊருக்குச் செல்லவோ கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்!
இதனால் எங்கள் குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று அய்யா ஆதித்தனார் அவர்களிடம், எங்கள் கிராமப் பெரியவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர்களும் அதற்கு செவிமடுத்தார்கள்! அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். தற்காலிகமாக ஊர்க் கட்டிடம் ஒன்றில் அது செயல்படத் தொடங்கியது. அவர்களைப் போற்றும் விதமாக "சி. பா. ஆதித்தனார் தொடக்கப்பள்ளி" என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது.
வருடங்கள் உருண்டன!
1982-ஆம் ஆண்டு பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
1983 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை கண்காணிப்பதற்காக உயர்மட்ட குழு ஒன்றை அவர் நியமித்தார். அதில் சின்னையா பா. சிவந்தி ஆதித்தனாரும் இடம் பெற்று இருந்தார்கள்.
உயர்மட்டக் குழு உறுப்பினர் என்ற முறையில் சத்துணவுக் கூடங்களை சின்னையா அவர்கள் பார்வையிட்டு வந்தார்கள்.
அப்போது, தந்தையார் சி.பா. ஆதித்தனார் பெயரில் ஒரு பள்ளிக் கூடம் செயல்பட்டு வரும் தகவலை அறிந்து, எங்கள் கிராமத்திற்கு வந்தார்கள்.
அன்றுதான் முதன்முதலாகச் சின்னையாவைப் பார்த்தேன்.
ஐம்பது வயதுக்குள் இருக்கும்! முப்பது வயது இளைஞரைப் போன்று மலைப்பு தரும் தோற்றம்!
சபாரிசூட் அணிந்து இருந்தார்கள். ஒரு கையை பாக்கெட்டுகள் நுழைத்தபடி, அவர்கள் தோரணையாக நடந்துவந்தது, இன்னமும் எனது மனதில் நிழலாடுகிறது!
தந்தையிடம் பள்ளிக்கூடம் கேட்டுப் பெற்ற எங்கள் ஊர் பெரியவர்கள், தனையனிடம் பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடம் கேட்டனர்.
வள்ளல்களுக்கு 'இல்லை' என்ற சொல் தெரியாது அல்லவா?
கேட்டபடி புதிய கட்டிடம் கட்டித் தருவதாகச் சொன்னார்கள்; சொன்னபடியும் செய்தார்கள்!
21-8-1983 ஆம் நாள் புதிய பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சின்னையா அவர்களே வந்து இருந்தார்கள்.
அவர்கள் எங்கள் கிராமத்திற்கு வருகைதர முக்கிய காரணமாக இருந்தவர், செங்கோட்டையைச் சேர்ந்த தம்பிதுரை அண்ணாச்சி அவர்கள்.
சின்னையாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். எழுத்தாளர். சேரன்மகாதேவி காகித ஆலைக்கு மூங்கில்கள் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அவர், விழா ஏற்பாடுகளை எங்கள் ஊர் பெரியவர்களுடன் இணைந்து செய்திருந்தார். விழாக் குழுவில் நானும் இடம் பெற்று இருந்தேன்.
அப்போது 'இளைஞர் எழுச்சி மன்றம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி நாங்கள் நாடகங்கள் நடத்தி வந்தோம். எங்களுடைய இளைஞர்கள் எழுச்சியோடு விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.
விழா நிகழ்ச்சி நிரலில் நன்றி சொல்லும் பணி எனக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. கவிதை நடையில் நன்றி நவிலும் உரையை எழுதிவைத்து இருந்தேன்.
விழா தொடங்கியது. சிறப்புப் பேச்சாளர்கள் சின்னையாவின் வள்ளல் மனதை வாழ்த்திப் பேசினார்கள். சின்னையா ஏற்புரை வழங்கினார்கள். அவர்கள் பேசி முடிக்கவும், கூட்டத்தினர் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர். மேடையில் இருந்தவர்களும் கீழே இறங்கிவிட்டனர். நான் மட்டும் தனியாக நின்றேன். கவிதை மட்டுமே என் கையில் துணையாக இருந்தது.
கவலைப்பட்டேன்!
நன்றி சொல்லும் வாய்ப்பு நழுவிப் போனதற்காக மட்டும் அல்ல; இராப்பகலாய் எழுதிய கவிதையை அரங்கேற்ற முடியாமல் போய்விட்டதே என்பதற்காக!
மறுநாள் செங்கோட்டையில் இருந்து தம்பிதுரை அண்ணாச்சி வந்து இருந்தார். விழாவை சிறப்பாக நடத்தியற்காக ஊர் பெரியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
"முத்துநாயகத்திற்கு மட்டும் நன்றி சொல்லும் வாய்ப்பு நழுவிப்போனது. பரவாயில்லை. திறப்பு விழாவில் நீங்கள்தான் முதலில் பேசுகிறீர்கள்!" என்று எனக்கு ஆறுதல் கூறினார்.
அவர்மேல் எனக்கு தனி மரியாதை உண்டு. அவர் என்னுடைய தந்தையார் மீது பாசம் கொண்டவர்.
மாதங்கள் வளர்ந்தன!
சின்னையாவின் கொடையால் பள்ளிக்கூடக் கட்டிடமும் வளர்ந்தது!
27-10-1985 ஆம் நாள் அன்று திறப்பு விழா. சின்னையா அவர்களே புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைக்க ஏற்பாடு!
வழிநெடுகிலும் வளைவுகள். தோரணங்கள். மின் விளக்குங்கள் என்று இராப்பகலாய் எங்கள் இளைஞர்கள் அலங்கார வேலை செய்தனர்.
ஊர் எல்லையில் வந்ததும் மேள தாளம் முழங்க, அய்யா அவர்களை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார்கள்.
விழா நடைபெறும் இடத்தை நோக்கி எங்கள் கிரமமே நடந்து வந்தது!
இந்த முறையும் ஒரு கவிதை எழுதி இருந்தேன்.
சின்னையா அவர்களைப் பற்றி அப்போது நான் அறிந்தவற்றையும், தினத்தந்தி வாயிலாகத் தெரிந்தவற்றையும், இயன்றவரைக் கவிதையாக்கி இருந்தேன்!
இந்த விழாவில் சொன்னபடியே எனக்கு வரவேற்புரை. நான் கவிதை எழுதிய காகிதங்களை ஒருங்கிணைத்து, ஒரு டைரியில் வைத்துக் கொண்டு விழா மேடையை நோக்கி வேகமாக நடந்தேன். முதலில் பேச இருந்ததால், சின்னையா வருவற்கு முன்பாக மேடை அருகே சென்றுவிட வேண்டி, கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு முன்சென்றேன். அங்கு சென்றதும் அதிர்ந்து போனேன்!
என் கையில் டைரி மட்டுமே இருந்தது; கவிதை எழுதிய காகிதங்களைக் காணவில்லை!
எனக்கு தூக்கி வாரிப் போட்டது!
நான் பெரிய பேச்சாளன் அல்ல! குறிப்போ, உரையோ இல்லாமல் பேசுவது சாத்தியம் இல்லை!
என்ன செய்வது?
கவிதை எழுதிய காகிதங்கள், வரும் வழியில் தவறி கீழே விழுந்து இருக்க வேண்டும்! அந்த வழியில் மீண்டும் சென்று பார்ப்பதுயென முடிவு செய்து நடந்தேன். நினைத்தபடியே சிறிது தூரத்தில் அந்தக் காகிதங்கள் சிதறிக்கிடந்தன!
கால்களில் மிதிபட்டு அவை கசங்கி இருந்ததோடு அதில் எழுத்துகளும் அழிந்திருந்தன!
அவை எழுத்துக்கள் அல்ல; என் எதிர்காலம் என்பது, அன்று எனக்கே தெரியாதபோது, அதை மிதித்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை!
கீழே கிடந்தவற்றை அவசர, அவசரமாகப் பொறுக்கிக் கொண்டு ஓடோடி, மேடை நோக்கி வந்தேன். நான் மேடை வந்து சேரவும் விழா தொடங்கவும் சரியாக இருந்தது.
என் இதயம் வேகமாகத் துடித்தது!
ஒரே பதற்றம்!
அதை மேடைப் பயம் என்பதைவிட, கடைசி நேரத்தில் காணாமற்போன கவிதைக் காகிதங்கள் கையிற்கு கிடைத்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி கலந்த அச்சம் என்றுகூடக் கூறலாம்!
முதலில் சிறப்புப் பேச்சாளர்களாய் வாழ்த்திப்பேச வந்தவர்களை ஓரிரு கவிதை வரிகளில் வரவேற்றபடி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்!
அடுத்தது, விழா நாயகரான சின்னையா அவர்களை வரவேற்க அடியெடுத்து வைத்தேன்...
"மல்லிகைப் பூமணக்கும்
சொல்லித் தெரிவதில்லை!-இது
எல்லோரும் அறிந்த உண்மை!
சிவந்தி வள்ளலென்று
சொல்லத் தேவையில்லை!-இந்த ஊரே அறியும் உம்மை!"
இவ்வாறு நான் கூறியவுடன் மேடைக்கு முன்பிருந்த எங்கள் ஊரே உற்சாகத்துடன் கைதட்டியது!
அந்த கைதட்டலும், கவிதை அடிகளும் சின்னையா அவர்களின் கடைக்கண் பார்வையை கொஞ்சம் என் பக்கம் திருப்பின!
அதன் பிறகு விழா முடியும்வரை அவர்களின் பார்வையை வேறு ஒரு பக்கமும் சிதறாதவாறு, எனது கவிதை அடிகள் கவனமாகப் பார்த்துக் கொண்டன!
அது ஒரு நீண்ட கவிதை!
இப்படிப் பின்னால் பயன்படும் என்பதை, நான் முன்னால் அறியவில்லை!
அதனால் பத்திரப்படுத்தாமல் விட்டுவிட்டேன்!
சில நெருங்கிய நண்பர்களோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம், மனதில் மிச்சம் இருப்பதை சப்தமாகக் கூறி சந்தோஷப் பட்டது உண்டு!
முகநூல் நண்பர்களுக்கும் உள் மனதில் பதிந்திருக்கும், அதில் ஓரிரு அடிகளைத்தந்து உள்ளூற மகிழலாமென நினைக்கிறேன்!
சின்னையா அவர்களின் கொடை உள்ளத்தைச் சுட்டிக்காட்ட....
"கடன் வாங்கித் தான்பொழியும்
நிலவுகூட ஒளியை!
நீலக் கடலிடத்து கடன்பெற்றே
வான் பொழியும் மழையை!
இயற்கைகூட இரவல் பெற்றே இயம்புகின்றன ஈகை!-நீ
ஈகின்ற பொருள் யாவும்
உந்தன் சொந்த உடைமை!"
என்று கைதட்டலுக்கு இடையே குறிப்பிட்டேன்!
இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மொட்டைக் கோபுரமாய் இருந்த, தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் கோபுரத்தை, சின்னையா அவர்கள் ஒன்பதாம் நிலைக்கு, உயர்த்திக் கொண்டிருந்தார்கள்!
அந்தக் கோவில் வரலாறு கொண்டது! கோவில் முன்மண்டபத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் கலை நுட்பங்கள் கொண்டவை!
"தென்காசி காசிவிசுவநாதர் கோவில் சிற்பங்கள் தவிர்த்தே, வேறு சிற்பங்களை செதுக்கி தருவோம்" என்று அக்கால சிற்பிகள், புதிய கோவில்களை கட்ட முற்படும்போது மன்னர்களிடம் பணிந்து சொல்வது வழக்கம் என்று, எங்கள் பகுதியிலே ஒரு சொல் வழக்கு உண்டு!
அத்தகைய சிற்பச் சிறப்பு மிகுந்த அக்கோவிலுக்கு பழுது ஏதேனும் வரும் என்றால், அதை சீர் செய்வோரின் பாதங்களில், தான் பணிந்ததற்கு சமானம் என்று பராக்கிரம பாண்டியனே எழுதிவைத்த கல்வெட்டு ஒன்று, கோபுர வாயில் அருகே இடம்பெற்றிருக்கிறது.
அந்த கல்வெட்டுக்கு உயிர் கொடுத்து, தன்னை இரண்டாம் பராக்கிரமனாக உயர்த்திக் கொண்டதோடு, எங்கள் பகுதி மக்களின் இதயங்களிலும் இடம் பிடித்துக்கொண்ட, சின்னையா அவர்களை எனது கவிதை அடிகளுக்குள் இடம் பிடிக்கச் செய்யவேண்டி சில வரிகளை சேர்த்திருந்தேன்!
இதோ அந்த அடிகள்....
"வானத்தை முட்டுகின்ற
கோபுரம் கட்டி!
கலைஞானத்தைக் காட்டபல
சிற்பம் தட்டி!
ஞாலத்தில் கலைமிக்க
கோவிலை நாட்டி!
முக்காலத்தால் அழியாத
பெயரை ஈட்டி!-சென்ற
பராக்கிரம பாண்டியனின்
மணி முடிதன்னை;
நின்பொற்பாதம் தன்னிலேப்
பணியச் செய்தாய்!
இலட்சத்து பதினைந்து
ஆயிரம் தந்து;
கல்வி சுவிட்சத்தை
பெற எமக்கோர்
கட்டிடம் தந்தாய்!"....
.............................. .
"கோவில்கள் எழுந்திடவே-அன்னை
கோவிந்த அம்மாவின்
வயிறு உதித்தாய்!
ஆதித்த வழியினிலே-நீ
உதித்திட்டு வந்ததுவே
அழிந்துவரும் ஆலயத்தை
புதுப்பித்து தந்திடவே!"
.......................
இவ்வாறு சின்னையாவின் ஆன்மிகப் பணியை சொல்லிக்கொண்டு நீளும்....கவிதை, தினத்தந்தியின் பெருமையையும் பேசும்...
"பல்லுலகில் நடைபெறுகின்ற
சங்கதியைப் படத்துடனே;
தமிழ்ப்பண்டிதர் மட்டுமல்ல
பாமரரும் படித்திடவே!
இனியதமிழை எளியநடையில்
இயம்புகின்ற 'தினத்தந்தி'-நல்
எழில்மிக்க தீந்தமிழை
சுமந்துவரும் தினமுந்தி!"
...................
இவ்வாறாய் கவிதை அடிகள் மேலும் நீளும்......
விழா நிகழ்வுகள் நிறைவடைந்தன. விழா பந்தலுக்கு வெளியே சின்னையா அவர்களின் கார் நின்றது. அவர்களை வழியனுப்பு வதற்காக காரைச் சுற்றிலும் கூட்டம் நிரம்பி இருந்தது. நானும் அவர்களில் ஒருவனாக நின்றேன்.
பந்தலுக்கு வெளியே மின் விளக்கின் வெளிச்சம் குறைவாக இருந்தது. சின்னையா காரை நோக்கி நடந்து வந்தார்கள். காரின் அருகே வந்ததும் கூடி நின்றவர்களைப் பார்த்து வணங்கினார்கள். பதிலுக்கு நாங்களும் வணங்கினோம்.
அப்போது என்னை நோக்கி கைநீட்டி, "உங்கள் கவிதை நல்லா இருந்தது!" என்றார்கள்.
அதுதான் என் கவிதைக்கு முதல்முறையாக கிடைத்த மிகப்பெரிய பாராட்டு!
நான் ஆச்சரியப்பட்டேன்! அந்தக் கூட்டத்தில், அரைகுறை வெளிச்சத்தில், அவர்கள் என்னை அடையாளம் கண்டது, கவுரவமாக மட்டுமல்ல கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது.
எனது பெயரைக் கேட்டார்கள். வயதைக் கேட்டார்கள். படிப்பைக் கேட்டார்கள்.
அப்போது அருகில் நின்ற பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் வள்ளிநாயகம், சில தகவல்களைச் சொல்ல, அதைக் கேட்டபடியே, சின்னையா, காரில் ஏறி புறப்பட்டு விட்டார்கள்!
விழா வெற்றிகரமாக நடந்தது பற்றி, தம்பிதுரை அண்ணாச்சியோடு பேசிக்கொண்டு இருந்தோம்.
"உங்கள் கவிதையை சின்னையா ரசித்தார்கள். உங்களையும் வெளிப்படையாக விசாரித்து விட்டார்கள்! சின்னையாவை நேரில் சந்தித்தால், உங்களுக்கு வேலை கேட்கலாம்!" என்று ஒரு யோசனையை தெரிவித்தார்.
அதுவரை அப்படி ஓர் எண்ணம் என் மனதில் இருந்தது இல்லை! ஒருவகையில் அவரது யோசனை எனக்கு சரியாகவும் பட்டது!
"சன் பேப்பர் மில்லுக்கு சின்னையா வரும்போது சொல்லி அனுப்புகிறேன். வாருங்கள்!" என்றார்.
நானும்" சரி !"என்றேன். சொன்னபடி ஒரு நாள், தகவல் அனுப்பி இருந்தார்.
நானும் ஆதித்தனார் பள்ளிக்கூட தாளாளர் ராமசாமி நாடாரும், அவர்தான் பள்ளிக்கூடம் கட்ட இடத்தை நன்கொடையாகக் கொடுத்தவர். எனக்கும் உறவினர். இருவரும் செங்கோட்டை சென்று அவரைச் சந்தித்தோம்.
ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மூன்று பேரும் புறப்பட்டோம்!
"சின்னையாவை சந்திக்க வெறுங்கையோடு போகக் கூடாது. ஒரு மாலை வாங்கிக் கொள்வோம்!" என்று தம்பித்துரை அண்ணாச்சி சொன்னார்.
உடனே ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கிக் கொண்டோம்!
எங்கள் கார் சன் பேப்பர் மில் அருகே நெருங்கி விட்டது. நுழைவுவாசல் அருகே சென்றதும், பாதுகாப்பிற்கு நின்ற வாட்ச்மேன் காரை நிறுத்தி விசாரித்தார்.
"சின்னையாவை பார்க்க வந்திருக்கிறோம்!" என்றோம்.
தம்பித்துரை அண்ணாச்சி அடிக்கடி அங்கு வந்து செல்வதால், அவரை அடையாளம் கண்டுகொண்ட அவர், "சின்னையா இப்போதுதான் கோயமுத்தூர் புறப்பட்டுச் சென்றார்கள்" என்ற தகவலைச் சொன்னார்.
"அப்படியா?" என்ற அவர், "சரி, பரவாயில்லை! முத்துநாயகம் அடுத்த முறை உறுதியாக சின்னையாவை பார்க்கிறோம்!" என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.
ஒரு சிறிய ஏமாற்றத்துடன், எங்கள் கார் ஊர் நோக்கிப் புறப்பட்டது!
ரோஜாப்பூ மாலை, காரில் இருந்தது.
"சின்னையாவிற்கு என்று வாங்கிய மாலையை வீணாக்கக்கூடாது. அவர்களுக்கு முருகக் கடவுளை மிகவும்பிடிக்கும்! போகும் வழியில் குற்றாலம் குமாரகோவில் முருகனுக்கு, மாலையை சாத்தி விட்டுச் செல்வோம்!" என்று தம்பிதுரை அண்ணாச்சி சொன்னார்.
இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அவர் ஒரு இஸ்லாமியர்! தம்பிதுரை என்பது அவரது புனைப்பெயர்!
அவர் சொன்னபடியே வழியில் குற்றாலம் குமார கோவிலுக்கு சென்றோம். ரோஜாப்பூ மாலையை முருகனுக்கு அணிவிக்கச் சொல்லி சின்னையா பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வீடு திரும்பினோம்.
மறு மாதம், அதாவது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள். தேதி நினைவில்லை. சின்னையா சேரன்மகாதேவி வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
மூன்று பேரும் மீண்டும் அங்கு புறப்பட்டுச் சென்றோம்.
தம்பிதுரை அண்ணாச்சி தனிப்பட்ட முறையில் சின்னையாவை பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.
நானும் பள்ளிக்கூட தாளாளர் ராமசாமி நாடார், இன்னும் வேறு சில பிரமுகர்களும் சின்னையாவைக் காண்பதற்காக வரவேற்பறையில் காத்திருந்தோம்!
எங்கள் முறை வந்தது. சின்னையா அறையிலிருந்து தலையை நீட்டிய அய்யா பையன், "அடுத்தது ராமசாமி நாடார் வாருங்கள்!" என்று குரல் கொடுத்தான்.
அவர் எழுந்தார். நானும் உடன் சென்றேன். ஆனால் அறைக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை என்று அய்யா பையன் தடுத்தான்.
"அவரும் என்னோடு சேர்ந்தவர்தான்!" என்றார், தாளாளர்.
"நானும் சின்னையாவை பார்க்க வேண்டும்" என்றேன்.
"ஆயிரம் பேர் வேண்டுமென்றாலும் அய்யாவைப் பாருங்கள். ஆனால் அனுமதி பெற்றுத்தான் பார்க்கவேண்டும். ராமசாமி நாடார் என்ற பெயரை மட்டும்தான் கொடுத்து இருக்கிறீர்கள். உங்களை மட்டும்தான் அனுமதிக்க முடியும்!" என்று கறாராக சொன்னான்.
இவ்வாறு தர்க்கம் நடந்துகொண்டிருக்க, சப்தம் கேட்டு சின்னையா அவர்களே இருக்கையைவிட்டு எழுந்து, வாயில் அருகே வந்து விட்டார்கள்!
அய்யா அருகில் வந்ததும், அய்யா பையன் அமைதியாகிவிட்டான்.
அவர்கள் எங்களை அடையாளம் கண்டு கொண்டார்கள். அறைக்குள் சென்றோம். விசாலமான அறை! ஒரு நாற்காலியைக் காட்டி ஓர் இடத்தில் ராமசாமி நாடாரை உட்காரச் சொன்னார்கள்.
சின்னையா சற்றுத் தொலைவில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்கள். நான் அருகில் சென்று வணங்கினேன்.
"அன்றைக்கு கவிதை வாசித்தது நீங்கள்தானே? நல்லா இருந்தது!" என்றார்கள்.
மீண்டும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
"கதை கவிதைகள் எழுதுவேன். எனக்கு அய்யா நிறுவனத்தில் ஒரு வேலை தரவேண்டும்!" என்று பணிவோடு கேட்டேன்.
"என்ன படிச்சிருக்கீங்க? என்ன வயசு? என்ன செய்றீங்க? என்று சிறுசிறு கேள்விகளை கேட்டார்கள். பதில் சொன்னேன்!
ஒரு நிமிடம் மவுனம். அறைக்குள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை!
இருக்கையைவிட்டு எழுந்தார்கள். ஒரு 20 அடி தூரம் இருக்கலாம் என்று நினைக்கிறேன், நடந்து சென்று சுவரில் தொங்கிய மாதாந்திர காலண்டரை சின்னையாவே புரட்டிப் பார்த்தார்கள்! மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தார்கள்.
"வருகிற 18 ஆம் தேதி என்னை சென்னையில் வந்து பாருங்க! கதை கட்டுரை எழுதி வைச்சிருப்பீங்க, அதையும் எடுத்துதிட்டு வாங்க!" என்றார்கள்.
நான் பணிவோடு வணங்கினேன்!
"வரும்போது வேலையில சேர்ர மாதிரி வாங்க!" என்று என்னை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டிச் சொன்னார்கள்.
இப்படித்தான் எனது வேலைக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது!
அவர்கள் சொன்ன தேதியில் சென்னை வந்து, சின்னையாவை சந்தித்தோம். சேலம் அலுவலகத்தில் பிழை திருத்தும் பணியில் சேரும்படி உத்தரவு தந்தார்கள்.
இப்படித்தான் தினத்தந்தியின் கதவுகள் எனக்காகத் திறந்துவிடப்பட்டன!
அய்யா அவர்களின் அற்புதமான ஆளுமையின் கீழ், அளவிட முடியாத அனுபவங்கள்!
அன்பால் முதுகில் தட்டி இருக்கிறார்கள். தலையில் கொட்டியும் இருக்கிறார்கள்!
அப்பேர்ப்பட்ட பேராளுமையை 19-4-2013 ஆம் நாள், காலன் களவாடிச் சென்றான்!
அந்தச் சிங்கத்தை, சொக்கத் தங்கத்தை, கண்ணாடிப் பேழைக்குள் கண்டு எமது கண்கள் கண்ணீர்க் குடங்களாகின!
அதைக் கவிதை வரிகளாக்கினேன்...
..............................
"வெள்ளை உடை;
வேங்கை நடை
ஏறெடுத்துப் பார்த்தால்
எதிர்த்து வருவோரும்
இருகரமெடுத்து
தொழுதிடுவாரே!
பார் புகழும்
அந்தப் பராக்கிரமர்
எங்கே?
.......................
அறிந்தும் அறியாத
எங்களுக்கு,
தெரிந்தும் தெரியாமலும்
அள்ளித்தந்த
சிவந்த-
கரங்கள் எங்கே?
.............................
சின்னையா-
நீங்கள் இல்லையென்பது
இனி இல்லை!
'தினத்தந்தி' இருக்கிறது!
தென்காசி கோபுரம்
உங்கள் சின்னமாக
இருக்கிறது!!
எங்கள் குலத்
தெய்வமே!
தினம்-
அங்கு தொழுவோம்!
எங்கள் வீட்டு
உலைகளில் விழும்
ஒவ்வொரு அரிசியிலும்
உங்கள் பெயரே
இருக்கிறது!
நன்றி மறவோம்!!
............
இது இரங்கல் கவிதையாக 5--5-2013 ஆம் நாள் அன்று ஊழியர்கள் சார்பில் 'தினத்தந்தி'யில் முழுப்பக்க அளவில் அச்சாகியிருந்தது!
ஒருநாள் அய்யாவிற்காக ஊரைக் கூட்டி, மகிழ்ச்சியை மட்டுமே ஊற்றி 'வாழ்த்துப்பா' எழுதிய எனது பேனாவிற்கே, துக்கத்தை அடைத்து 'இரங்கல்பா' எழுதும் உரிமையையும் இயற்கை தந்தது!
இதை யாம்பெற்ற பேறு என்று சொல்வதா?
பெருமையென்று சொல்வதா? அல்லது 'ஒரு பெரும் பொருளை' இழந்துவிட்ட வெறுமை என்று கொள்வதா? என்று குழம்பிக் கொண்டிருந்த வேளையில், இளைய அய்யாவின் அன்புக்கரம் நீள, வெறுமை அல்ல, பெருமையாகப் பெற்ற பேறு என்றே சொல்ல முடிந்தது!
_________________________________________
தம்பிதுரையின் மகனாக நன்றி தெரிவிக்கிறேன்
பதிலளிநீக்குகருத்துரையிடுக