நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள்-12
உனக்குள்ளே உலகம்
சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு நடந்து முடிந்தது. இந்தத் தேர்வுகளில் மாணவ- மாணவிகள் நன்றாக தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக பெற்றோர்களும், ஆசிரியர்களும் பலவித முயற்சிகளை மேற்கொண்டார்கள். தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காக காலையில் எழுந்து அவர்களுக்கு வேண்டிய உணவு, மற்றும் வசதிகளை பெற்றோர்கள் செய்துகொடுத்தார்கள். ஆசிரியர்களும் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் நலனுக்காக உழைத்தார்கள். மாணவ-மாணவிகளும் அதிகமாய் முயற்சி செய்து படித்தார்கள். இருந்தபோதும் சில “எதிர்பாராத நிகழ்வுகள்” பிளஸ் 2 தேர்வு நேரத்தில் நிகழ்ந்துவிட்டது.
பிளஸ் 2 அரசுத் தேர்வுகளை நடத்திய பொறுப்பாளர்கள் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் பிரபல நாளிதழ்களில் வெளியானது. ஒரேநாளில் உயிரியல், தாவரவியல், வரலாறு ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. “தேர்வு நடந்த அந்த ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரலாற்றுத் தேர்வில் 2 மாணவர்களும், திருவாரூர் மாவட்டத்தில் வரலாற்றுத் தேர்வில் 3 மாணவர்களும் ‘காப்பி’ அடித்ததால் பிடிப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் உயிரியல் தேர்வில் 4 மாணவர்களும், வரலாற்றுத் தேர்வில் 4 மாணவர்களும் பிடிப்பட்டார்கள். திருச்சி மாவட்டத்தில் உயிரியல் தேர்வில் 3 பேரும், தாவரவியல் தேர்வில் 2 பேரும், வரலாற்;றுத் தேர்வில் ஒருவரும் காப்பி அடித்துப் பிடிப்பட்டார்கள். மொத்தம் 19 பேர் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் நடந்த தேர்வில் பிடிபட்டிருக்கிறார்கள்” - என நாளிதழ்கள் புள்ளி விவரங்களை வெளியிட்டன.
மேலும், பத்தாம் வகுப்பு, மெட்ரிக்குலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்தத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுப்பதற்காக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தலைமையில் பறக்கும் படைகள் அனுப்பப்பட்டிருந்தன. இருந்தபோதும் முதல் தேர்வான மொழித் தாள் தேர்வில்கூட காப்பி அடித்த மாணவர்களை “பறக்கும் படை”யினர் பிடித்திருக்கிறார்கள்.
படிப்பதற்கு நேரம் ஒதுக்காமல், படிப்பதற்கு முயற்சி செய்யாமல் மாணவ, மாணவிகள் - “மதிப்பெண்கள் மட்டும் தனக்கு அதிகம் வேண்டும்” - என்ற உணர்வோடு சில இளைய உள்ளங்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதன் விளைவுதான் எதிர்பாராத நிலையில் ‘கையும் களவுமாக’ பிடிபட்டு காப்பி அடித்தவர்கள் பட்டியலில் தங்களையும் இணைத்துக் கொள்கிறார்கள்.
இப்படி-பள்ளிகளில் பயிலும்போதே பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உருவாக்கிவருகிறது
படித்த பாடங்களை மனதில் நிறுத்தி அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து தேர்வு எழுதுவதற்கு அடிப்படையாக அமையும் நினைவாற்றல் சக்தி (Memory Power) மாணவர்களிடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்காகவே தேர்வு (Examination) நடத்தப்படுகிறது. குறிப்பாக - பள்ளிகளில் படிக்கும்போதே தாங்கள் படிக்கும் பாடத்தை எந்த அளவுக்கு மாணவர்கள் புரிந்து படித்திருக்கிறார்கள்? படித்த பாடங்களை அவர்களால் எந்த அளவுக்கு எளிதில் நினைவுக்கு கொண்டுவர முடிகிறது? என்பதைப்பற்றி அறிந்துகொள்ளும் வகையில் தேர்வு நேரத்தில் கேள்வித்தாளில் கேள்விகளை அமைத்திருப்பார்கள். சில கேள்விகள் மாணவர்களின் பகுத்தாய்வு செய்யும் திறனை (Analytical Skill) பரிசோதிக்கும் வகையில் இடம்பெறும்.
பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகளெல்லாம் “மாணவர்களின் நினைவாற்றல் திறனை” அளவிடுவதற்காகத்தான் நடத்தப்படுகிறது என்பதை மாணவ - மாணவிகள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படை உண்மையை புரியாத மாணவ - மாணவிகள் தேர்வில் ‘காப்பி’ அடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். “தேர்வு விடைத்தாளில் (Answer Paper) விடைகள் எழுதப்பட்டிருந்தால் மதிப்பெண் வழங்கி விடுவார்கள். எனவே கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடையை பக்கத்தில் பார்த்து எழுதியோ, துண்டுப்பேப்பரை மறைத்து வைத்துக்கொண்டு எழுதியோ, காப்பி அடித்து தேர்வை எழுதிவிட வேண்டும்” என்ற எண்ணத்தை சில இளைய உள்ளங்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் விளைவுதான் அவர்கள் ‘காப்பி’ அடிப்பதற்கு அடிப்படை காரணமாக மாறிவிடுகிறது.
“மதிப்பெண்கள் அதிகமாக பெற்றுவிட்டால் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். என்னை சிறந்த அறிவாளி என்று சமுதாயம் நினைக்கும் எனக்கு மேற்படிப்பில் எளிதில் இடம் கிடைக்கும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்” என்ற எண்ணத்தில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற விரும்புகிறார்கள். தேர்வை ஒழுங்காக எழுத இயலாது என்ற நிலை உருவாகிவிட்டால், “எப்படியாவது நல்ல மதிப்பெண்களை பெறவேண்டும்” என்று நினைத்து குறுக்கு வழிகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
“சமுதாயத்தில் பணம் இருந்தால்தான் வாழ முடியும். பண இல்லையென்றால் பிணம்.” பணம் இல்லாதவர்களை ஒருவரும் மதிக்கமாட்டார்கள். பணம் இருந்தால் நினைத்தப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். சொத்துக்கள் சேர்க்கலாம். நிம்மதியாக வாழலாம்” - என்ற எண்ணத்தால் பலர் அதிகமாக உழைத்து சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். இங்கு பணம் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் தானாக வந்துவிடுகிறது. இதனால் பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி, கொள்ளையடிப்பதையும், கொலை செய்வதையும், ஏமாற்றுவதையும், பித்தலாட்டம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தால் பணம் சம்பாதித்துவிடலாம். ஆனால் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும் அல்லவா?
ஒரு தொழுநோயாளி வெள்ளை ஆடை உடுத்தி, வெளிப்பார்வைக்கு தனது தோற்றத்தை அழகாக பிறருக்கு காட்டலாம். ஆனால் உடலில் அழுகிய நிலையிலுள்ள உறுப்புகள் அவரை அணுஅணுவாக சித்ரவதை செய்வது அவருக்குத்தான் தெரியும். இதைப்போலத்தான் குறுக்கு வழியில் நேர்மைதவறி பணம் சம்பாதிப்பவர்கள் பெரிய மனிதர்கள்போல பிறரது பார்வையில் தோன்றலாம். ஆனால், அவர் நிம்மதி இழந்து துடிதுடித்து செத்துக்கொண்டே வாழ்வது அவரின் உயிருக்கு மட்டும்தான் தெரியும்.
இந்த தொழுநோயாளியைப்போலவே குறுக்கு வழியில் மதிப்பெண் பெற விரும்புபவர்கள் தவறானப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கேள்வித்தாள் ‘அவுட்’ ஆகுமா? என்று எதிர்பார்க்கிறார்கள். துண்டுத்தாளில் எழுதி அதனை கைக்குட்டைக்குள் வைத்து தேர்வு நடக்கும் இடத்திற்கு கொண்டுச்செல்ல திட்டமிடுகிறார்கள். கைகளில்கூட சில விடைகளை எழுதிவைத்துக்கொள்கிறார்கள். ‘காப்பி’ அடிப்பதற்கு எத்தனையோ வழிகளை கடைபிடிக்கிறார்கள். இப்படி குறுக்கு வழியில் தேர்வு எழுதி, உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சில வேளைகளில் வேலைகூட கிடைக்கலாம். ஆனால் அந்த வேலையில் அவர்களால் நிம்மதியாக இருக்கமுடியாது. அப்படி நிம்மதியாக இருந்தாலும் பதவிஉயர்வு (Promotion) அவர்களுக்குக் கிடைப்பது இயலாத காரியமாகிவிடும். பதவி உயர்வு பெற்றாலும் அந்தப் பதவியில் அவர்கள் பிரச்சினைகளையே சந்திக்கவேண்டிய நிலை வந்துவிடும். வாழ்நாள் முழுவதும் அவர்களது மனசாட்சியே அவர்களை மாறிமாறி கேள்வி கேட்கும். கொடுமையாய் வதைக்கும்.
அது ஒரு காலை நேரம்.
“ஹோட்டலுக்குப் போனார் ஒருவர். மேஜை அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்ததும் “சார் உங்களுக்கு என்ன வேண்டும்?” என சர்வர் கேட்டார்.
“உங்கள் ஹோட்டலில் என்ன இருக்கிறது?” என்று வந்தவர் விசாரித்தார். “இட்லி, வடை, பொங்கல், பூரி” என ஒருசில உணவு வகைகளின் பெயரைச்சொன்னார் சர்வர். அதற்குமேல் அந்த சர்வரால் உணவு வகைகளின் பெயரை சொல்ல முடியவில்லை.
“வேறு என்னப்பா இருக்கிறது?” - வந்தவர் கேட்டார். அந்த சர்வர் திகைத்தார்.
அது ஒரு நடுத்தர ஹோட்டல் என்பதால் அங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அங்கே இருந்தது. அத்தனை உணவு வகைகளின் பெயர்களையும் சர்வரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
“தம்பி சர்வர் வேலைக்கு வந்தாச்சு. என்னென்ன அயிட்டங்கள் ஹோட்டல்ல இருக்கிறது என்று உன்னால் சொன்னால் முடியவில்லையே! நீ என்ன படித்திருக்கிறாய்?” என சாப்பிட வந்தவர் கேட்டார். கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தாலும் “பிளஸ் 2 படித்திருக்கிறேன்” என பதில் தந்தார்.
வந்தவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
பிளஸ் 2 முடித்தபின்னும் தான் செய்யும் வேலைக்கு ஏற்ற நினைவாற்றலை வளர்க்க இயலாத அந்த சர்வர் அங்கு அவமானப்பட்டார். ஒரு சர்வர் வேலைக்குக்கூட “நினைவாற்றல்” நிறையத் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட மேஜையின் அருகில் நின்று, சாப்பிட வந்தவர்களிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்டு, தகவல் அறிந்து, அவர்களுக்கு ஏற்ற உணவை சரியான நேரத்தில் கொண்டுவந்து, சரியாக பறிமரிவிட்டு அவர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை உள்ளடக்கிய ‘பில்’ தயார்செய்து கொடுப்பது சர்வருடைய பணியாக இருக்கிறது. இந்தப்பணியில் ஒரு சிறிய நினைவுப் பிழை ஏற்பட்டால்கூட பணத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும். அப்படி பண நஷ்டம் ஏற்பட்டால் சர்வர் வேலைக்கு ஆபத்து வந்துவிடும்.
எந்தவொரு வேலையில் ஈடுபட்டாலும் ‘நினைவாற்றல் சக்தி’ (Memory Power) என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. இதனால்தான் சின்னஞ்சிறு வயதிலிருந்தே குழந்தைகளையும், சிறுவர்களையும் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளிகளிலும் நினைவாற்றலை வளர்ப்பதற்கான பயிற்சிதான் அதிகமாக வழங்கப்படுகிறது. ஒருவருடைய நினைவாற்றல் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்றவாறு சரியான முறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? என்பதை அறிந்துகொள்வதற்காகவே தேர்வுகளை நடத்துகிறார்கள். ஆனால் தேர்வு காலம் என்றாலே நிம்மதியைக் சீர்கெடுக்க வருகின்ற காலம் என நினைத்து சில இளைய உள்ளங்கள் பயப்படுகின்றனர்.
தேர்வு நேரத்தில் சில மாணவ-மாணவிகளுக்கு தேவையில்லாத பயம் வந்துவிடுகிறது. தேவையில்லாத பயம் உருவாக பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக -
- பாடங்களைப்பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்துகொள்ள இயலாமல் இருப்பது
- படிக்கும் பாடத்தின்மீது ஆர்வம் இல்லாமல் இருப்பது
- வாரந்தோறும் நடத்தப்படும் தேர்வுகளிலும், மாதத் தேர்வுகளிலும் முறையாக படிக்காமல் தேர்வு எழுதுவது.
- தேர்வை எதிர்நோக்க உதவும் பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது
- உடல் நிலையைப் பாதுகாப்பதில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது.
- நினைவுக்கலையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது.
- வகுப்பில் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிக்காமல் இருப்பது.
- ஆசிரியர் பாடம்நடத்தும்போதே வேண்டிய குறிப்புகளை நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்ளாமல் இருப்பது.
- பாடம் தொடர்பான வேறுசில புத்தகங்களையும் படித்து குறிப்புகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது
-ஆகியவை தேர்வு நேரத்தில் பயத்தை (Fear) உருவாக்கும் காரணிகளாக (Factors) அமைந்துவிடுகின்றன.
தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளில் பாடங்களைப் படித்து, அடுத்தநாள் தேர்வு எழுதி அதற்கு அடுத்த நாள் படித்த பாடத்தை மறந்துவிடுகின்ற “புதிய கலாச்சாரம்”இப்போது உருவாகத் தொடங்கிவிட்டது. இதனால்தான் தேர்வுநேரத்தில் “நன்றாகத் தேர்வு எழுத வேண்டும்”என்ற சிந்தனையில் தேர்வு எழுதுவதற்குப்பதில் தேவையில்லாத செயல்களில் சில மாணவ - மாணவிகள் ஈடுபடுகிறார்கள்.
தேர்வு நேரத்தில் வரும் பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி?
1. பள்ளி அல்லது கல்லூரி தொடங்கிய முதல் நாளிலிருந்தே கால அட்டவணை (Time Table) ஒன்றை தயாரித்து கொள்ள வேண்டும். கால அட்டவணையில் குறிப்பிட்டபடி குறிப்பிட்டநேரத்தில், குறிப்பிட்ட செயல்களை செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
2. தேர்வு தொடங்கும் நாளுக்கு ஒரு மாதத்திற்குமுன்பே கால அட்டவணைப்படி செயல்படத் தொடங்க வேண்டும். அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை சரியாக பயன்படுத்த முயல வேண்டும்.
3. தனியாக இருந்து படிக்க இயலாவிட்டால் வகுப்பில் உங்களோடு படிக்கும் மாணவர்களோடு குழுவாக இணைந்து “படிப்புக் குழு”வை (Study Groups) ஏற்படுத்தி படிக்கலாம். படிப்புக் குழுவை உருவாக்கிக்கொள்வதன்மூலம் ஒரு மாணவன் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை தயக்கமின்றி மற்ற மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
4. நூலகத்திற்குச்சென்று (Library) பாட தொடர்புடைய புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
5. தேர்வு நேரத்தில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் படிக்கும்போது களைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சுமார் 45 நிமிடத்திற்கு ஒருமுறை ஓய்வு (Relaxation) எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.
6. தேர்வுக காலங்களில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை (Question Papers) வாங்கி எந்தெந்த பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
7. படித்த பாடங்களை திரும்பத் திரும்பப் படித்து சிறு குறிப்புகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் குறிப்புகளை நீங்கள் பஸ் அல்லது புகைவண்டியில் தனியாக பயணம் செய்யும்போதுகூட பையில் வைத்துக்கொள்ளலாம். தனியாக இருக்கும்போது அந்த சிறு குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு பாடங்களை நினைவுக்குக் கொண்டுவரலாம்.
8. தேர்வு நேரங்களில் அதிகநேரம் கண்விழித்துப் படிப்பதை தவிர்க்க வேண்டும்.
9. இந்தப் பாடத்தை நாளைக்கு படித்துக்கொள்ளலாம் என்று நினைத்துப் பாடத்தை படிக்காமல் அடிக்கடி ஒத்திவைப்பதை தவிர்க்கவேண்டும்.
10. தேர்வுநேர டென்ஷன் அதிகமாவதால் சிலர் சரியாக சாப்பிடுவதில்லை. இதனால் டென்ஷன் அதிகமாகும். சரிவர சாப்பிடுவதைத் தவிர்த்தால் அது உடல் சோர்வையும், மனச் சோர்வையும் உண்டாக்கும். தேர்வு நேரத்தில் சரியான முறையில் உணவை உட்கொள்ள வேண்டும்.
11. “தேர்வுக்கு நான் ஒழுங்காக படிக்கவில்லை” என்ற பதட்டத்தில் சிலருக்கு தூக்கம் வருவதில்லை. தேவையான தூக்கம் இருந்தால்தான் படித்தப் பாடங்களெல்லாம் நினைவில் நிற்கும். எனவே, தேர்வு நேரத்தில் தேவையான அளவு உறங்குவதற்கு நேரம் ஒதுக்கவேண்டும்.
பாடங்களை ஒழுங்காக படிக்காதவர்கள் மட்டுமே தேர்வு நேரத்தில் பயப்படுவார்கள். தேவையில்லாமல் கோபப்படுவார்கள். படிப்பதற்கு ஆர்வமில்லாத நிலையை உருவாக்கி ஒருவித மன அழுத்தத்தோடு காணப்படுவார்கள். மன அழுத்தம் (Depression) அதிகமாகும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை அவர்கள் திசைமரிச் செல்ல வைத்துவிடுகிறார்கள்.
இவர்கள் வாழ்க்கை சிறந்ததாக அமையவேண்டுமென்றால் படிக்கும்போது கவனத்தோடு படிக்கவேண்டும் பண்போடு பழக வேண்டும். எதிர்கால சிந்தனையோடு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். உயர்ந்த நெறிகளோடு வாழப் பழக வேண்டும். அப்போது வாழ்க்கை வசந்தமாகும். மகிழ்ச்சி உங்களுக்குச் சொந்தமாகும்.
கருத்துரையிடுக