ஆனந்தம் தரும் அணுகுமுறைகள்

நெல்லைகவிநேசன் தன்னம்பிக்கை கட்டுரைகள்-9

ஆனந்தம் தரும் அணுகுமுறைகள்

உலகம் மிக வேகமாக மாறிகொண்டிருக்கிறது. 

தாத்தாவுக்கு பிடித்த தியாகராஜ பாகவதர் பாடிய “கிருஷ்ணா... முகுந்தா... முராரே...” என்ற பாடல் அப்பாவுக்கு போர் அடிக்கிறது. அப்பாவுக்கு பிடித்த “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற பாடல் மகனுக்கு எரிச்சலாக வருகிறது. “இளைய நிலா பொழிகிறதே” என்னும் இனிய பாடல்கூட இளசுகளுக்கு இனிமை சேர்ப்பதில்லை. 

“அரிமா... அரிமா...” என்று சொன்னால் அத்தனை சின்னஞ்சிறுசுகளும் அழகாய் சிரிக்கிறது. இதிலிருந்து ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். 

தாத்தா காலத்து திரை இசைப்பாடல்கள் பேரன்காலத்தில் எடுபடவில்லை. இதற்கு காரணம் என்ன? தலைமுறை இடைவெளிதான் (Generation Gap) இதற்கு காரணம் என உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். 

ஒரு தலைமுறையினரின் பழக்கவழக்கங்களை இன்னொரு தலைமுறையினர் ஏளனமாகப் பார்த்து சிரிக்கின்றனர். கால மாற்றம் பலவித மன மாற்றங்களை உருவாக்கிவருகிறது.     

ஒரு காலகட்டத்தில் “சரியான முடிவு” என தீர்மானிக்கப்பட்ட ஒரு செயல் இன்னொரு காலகட்டத்தில் “தவறு” என நிரூபிக்கப்படுகிறது. எனவே, அந்தந்த கால சூழலுக்குஏற்ப வாழப் பழகிக்கொள்வதன்மூலம் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வாழ்க்கையில் வலம் வரலாம். 

அவசர அவசரமாக அன்று வீட்டுக்கு வந்தான் சுரேஷ். அவனது முகத்தில் கோபம் கொப்பளித்தது. பதற்றத்தோடுகூடிய எரிச்சல் அவனிடம் முழுமையாய் காணப்பட்டது. நேராக தனது அப்பாவிடம் வந்து கத்தினான். 

“அப்பா எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் ஒரே டென்னாய் இருக்கிறது. சயின்ஸ் பாடம் நடத்தும் டீச்சரைக் கண்டாலே எரிச்சலாக வருகிறது. அவர் எப்போது பார்த்தாலும் என்னை திட்டுகிறார். இனி ஸ்கூலுக்கு போகவேமாட்டேன்” என 8ம் வகுப்பு படிக்கும் சுரேஷ் உரத்த குரலில் எரிச்சலோடு சொன்னான். 

பொதுவாக இப்படி ஒரு முடிவை எடுத்து 6ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சொன்னால் அதற்கு, பெற்றோர்கள் வெவ்வேறுவிதமாக பதில் சொல்ல வாய்ப்புள்ளது.   

“நீ ஸ்கூலுக்கு போகவில்லையென்றால் உன்னை ஒரு மளிகைக் கடையில்தான் சேர்க்கணும்” என  கிண்டல் செய்து பெற்றோர்கள் அவனது முடிவை எதிர்க்கலாம். 

“நீ இப்படியெல்லாம் கோபப்பட்டு முடிவெடுத்தால் உனக்கு சாப்பாடு தரமாட்டேன். வீட்டைவிட்டு விரட்டி அடிப்பேன்” என பயமுறுத்தி அவனது முடிவை மாற்ற பெற்றோர் முயற்சி செய்யலாம். 

“நீ நல்ல பையன். சிறந்த அறிவாளி. எல்லா விஷயமும் உனக்குத் தெரியும். நீயே இப்படி பேச ஆரம்பித்தால் நன்றாகவா இருக்கிறது? அறிவாளிகளெல்லாம் இப்படி கோபப்படமாட்டார்கள்” என்று புகழ்ந்து பேசி அவனது கோபத்தை குறைக்கலாம். 

“படிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். நீ இங்கே வா. நாம் டிபன் சாப்பிடுவோம். டிபன் சாப்பிட்டப்பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று அன்புக்கட்டளை மூலம் அவனை அமைதிப்படுத்தலாம்”. 

“டீச்சர்ஸ் எப்போதுமே சரியாகத்தான் இருப்பாங்க. நீதான் ஏதாவது வம்பு பண்ணியிருப்பாய். அதற்குத்தான் தண்டனை கொடுத்திருப்பார்கள்” என தனது மகனை நம்பாமல் குற்றச்சாட்டுகளை அவன்மீது அள்ளித் தெளிக்கவும் வாய்ப்பு உள்ளது.        

“எந்த டீச்சர்ஸ¨ம் ஒரு மாணவனை பழிவாங்க வேண்டும் என நினைப்பதில்லை. உன் நன்மையை கருதிதான் ஏதேனும் சொல்லியிருப்பார்கள். ஆனால் நீ இப்படி கோபப்பட்டு பேசுவது சரியில்லை” என்று அறிவுப்பூர்வமான ஆலோசனைகள்சொல்லி அவனை திருத்த முயற்சி செய்யலாம். 

இப்படி “பள்ளிக்குப் போகமாட்டேன்” என்னும் பிரச்சனைக்கு முடிவுகாண எத்தனையோ வழிகள் உள்ளன. அதாவது - கிண்டல் செய்வது, பயமுறுத்துவது, புகழ்ந்து பேசுவது, கட்டளையிடுவது, குற்றஞ்சாட்டுவது, ஆலோசனைகள் வழங்குவது ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு அணுகுமுறைகளாக (Approaches) உள்ளன. இதுவே பலவித பதில்களாகவும் மாறுகின்றன. இந்த அணுகுமுறைகளில் எந்த அணுகுமுறை சரியானது? என்பதில் பல பெற்றோர்களுக்கு இன்னும் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.   

ஏனென்றால் காலம் மிக வேகமாக ஓடுகிறது. சூழல்கள் அதிக வேகத்தில் மாறிவருகின்றன. மனிதர்களும் மாறத் தொடங்கிவிட்டார்கள். 

“நான் அந்தக்காலத்தில் இப்படித்தான் செய்தேன்”.

“என் அப்பா என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்வேன். ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசியது கிடையாது” - என்றெல்லாம் பழங்கதைப் பேசி முன்னால் நிகழ்வுகளை அசைபோட்டு, அதன் அடிப்படையில் இந்தக் காலத்தில் தனது மகனைபற்றியோ, மகளைபற்றியோ பெற்றோர் முடிவெடுத்தால் பல நேரங்களில் குடும்பத்தில் பிரச்சினைகள்தான் வரும். 

தங்கள் பிள்ளைகளிடம் எப்படி அணுகுமுறைகளை வைத்துக்கொள்ள வேண்டும்? என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். 

“எனக்கு நேரமில்லை”. 

“எங்கள் ஆபீஸில் டென்ஷன் அதிகம்”. 

“என் மனைவியும் வேலைக்குச் செல்கிறாள். பிள்ளையைக் கவனிக்க ஆளில்லை” – என்று ஏதாவது இதுபோன்ற காரணங்களை முன்நிறுத்தி தன் பிள்ளைகளை கவனிக்க மறுத்த சில பெற்றோர்கள் பின்னாளில் வருந்துவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

“தங்கள் பிள்ளைகளின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் பெற்றோர்கள் மதிப்புத்தர வேண்டும். அவர்களிடம் ஓரளவு திறமை இருந்தால்கூட அதனை சிறப்பு திறமையாககருதி அதற்கு மதிப்பு வழங்கவேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசவேண்டும்” என்பது உளவியல் அறிஞர்களின் கருத்து ஆகும்.  

இதனை சில பெற்றோர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். 

“நீ ஒரு மக்கு”

“அவள் நல்லாதான் படிக்கிறாள் ஆனால் அவளுக்குதான் படித்தது ஒன்றும் ஞாபகத்தில் இருக்காது”. 

“எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்தால் போதுமா? மார்க் வரவேண்டாமா?”. 

“வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் பள்ளியில் நீ படிப்பதற்காக உனக்கு பீஸ் கட்டுறேன். பணம் என்ன மரத்திலேயே காய்க்குது?” 

“முழிக்கிற முழியப்பாரு நல்லா சாப்பிட மட்டும் தெரியுது. படிக்கத் தெரியுதா?” 

“நீ ஒரு யூஸ்லெஸ். நானும் படிச்சு படிச்சிதான் சொல்றேன் நீ படிக்க மாட்டேங்கிறே!”

“வரவர உனக்கு கொழுப்பு அதிகம்” 

“கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கிறதா?” 

 -என்று எத்தனையோ விதமான “குத்தூசி” வார்த்தைகளால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை “அர்ச்சனை” செய்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகம் வழங்குவதற்காக இப்படிப் பேசுவதாக நினைத்துவிட்டு, பிள்ளைகளின் நம்பிக்கை வேரில் வெந்நீர் ஊற்றுவதுபோல் பெற்றோர்கள் நடந்து கொள்ளலாமா? 

தங்கள் பிள்ளைகளிடம் இப்படிப் பேசுவதால் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள்மீது பாசமே இல்லைஎன்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது. ஏனென்றால் 10 மாதம் சுமந்த குழந்தையை திட்டுவதற்கு வார்த்தை ஈட்டிகளை தீட்டி வைத்துக்கொண்டா பெற்றோர்கள் இருக்கிறார்கள்? பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்த பிள்ளைகளை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துவதற்காகவா பெற்றோர்கள் செயல்படுகிறார்கள்? பிள்ளைக்கு கண்ணில் தூசி விழுந்தால்கூட இதயத்தில் இடி விழுந்ததுபோல வருந்தும் பெற்றோர்கள் இந்த பிள்ளைகளை திட்டுவதற்கு காரணம் என்ன?       

“தங்கள் பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும்” என்ற எதிர்பார்ப்புதான் ஒவ்வொரு பெற்றோரின் நெஞ்சிலும் நிழலாடுகிறது. அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் கொஞ்சம் தடை ஏற்பட்டால்கூட அந்தப் பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்கள் பிள்ளைகளைப்பற்றிய எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் நிலை தடுமாறுகிறார்கள். 

“என்னைவிட பெரிய நிலைக்கு உயர்ந்து, நம் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என் குல கொழுந்து நீதான்” என எண்ணி தங்கள் பிள்ளைகள் பற்றிய ஏராளமான எதிர்பார்ப்புகளை தங்கள் உள்ளத்தின் பள்ளத்தில் பல பெற்றோர்கள் வைத்திருக்கிறார்கள். இதனால்தான் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் அவர்கள் கோபப்படுகிறார்கள். எரிச்சல் அடைகிறார்கள். பதட்டம் அடைந்து பரிதாபநிலை ஏற்பட்டதுபோல உணருகிறார்கள். இந்த உணர்வுகள்தான் வார்த்தைகளாக வெடிக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாத பிள்ளைகள் வார்த்தைகளுக்கு பின்னால் நிற்கும் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் பெற்றோர்களை எதிரியாக நினைக்கிறார்கள். 

“அன்றைக்கு ஒரு வார்த்தை சொன்னார் எங்க அப்பா. அதிலிருந்து அவர்கிட்ட பேசவே மாட்டேன்”.

“எங்க அம்மா எப்பப் பார்த்தாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்கும். இப்படி எனது அம்மா நடந்துகொண்டால் என்னால் எப்படி படிக்கமுடியும்?” 

“எனக்கு எங்கள் வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எரிச்சலாக இருக்கிறது”.

        -என்று வீட்டின்மீது வெறுப்பையும், பெற்றோர்கள்மீது எரிச்சலையும் காட்டிவருகின்ற இளைய உள்ளங்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். ஒரு மகன் அல்லது மகளிடம் எப்படி பழகவேண்டும்? என்ற அடிப்படை அணுகுமுறையைத் தெரியாத பெற்றோர்கள் எளிதில் எரிச்சலடைகிறார்கள். 

இதைப்போலவே - நெஞ்சம் நிறைய அன்பு வைத்திருக்கும் பெற்றோரைப் புரிந்துகொள்ளவும் சில இளைய உள்ளங்கள் தவறிவிடுகின்றன. 

இதனால்தான் பெற்றோர் - பிள்ளைகள் உறவில் அவ்வப்போது விரிசல் ஏற்பட்டு விடுகின்றன. 

இன்று பண்பாடு எனப்படும் கலாசாரம் அதிதீவிரமாக மரிவருகிறது. அந்தக் காலத்தில் கோயில் திருவிழா நேரங்களில் இலவசமாக காட்டப்படும் திரைப்படத்தை பார்ப்பதற்கே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தடைவிதித்தார்கள். ஆனால் இன்று சினிமா தியேட்டருக்குபோய் படம் பார்ப்பதற்குப் பதில் ஒவ்வொருவரின் வீடும் சினிமா தியேட்டராக காட்சியளிக்கிறது. ஹோம் தியேட்டர் என்னும் வசதி பலர் வீட்டில் உள்ளதை இன்று காணலாம்.  

ஒரு சினிமா தியேட்டரில் ஒரு நேரத்தில் ஒரு திரைப்படத்தைதான் பார்க்க முடியும். ஆனால் வீட்டிலோ 10, 15 திரைப்படங்களை டி.வி.மூலம் பல்வேறு சேனல்களில் தினமும் பார்க்க முடியும். திரைவிமர்சனம், காமெடி, சிரிப்பு வெடிகள், நடிகர் பேட்டி, விரும்பி கேட்ட பாடல் - என்று துண்டு துண்டாக திரைப்படத் துண்டுகள் டி.வி.மூலம்வந்து வீட்டின் அறைகளை திரையரங்குகளாக்கிவிட்டன. 

“அப்பா ஒரு அறையில் இருக்கிறார்கள்” என்றால் மரியாதை காரணமாக அந்த அறைக்குள் போக மறுத்த பிள்ளைகள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். இந்தக் காலத்தில் “சிறுவன் கார்ட்டூன் பார்க்கிறான். அவனை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று பயந்து நடக்கும் பெற்றோர்கள் அதிகமாகிவிட்டார்கள். 

சிரிப்பு கதைகளை அதிகம் பார்த்த சின்னஞ்சிறுசுகளில் சிலர் காமெடி நடிகர்களாகவே நிஜ வாழ்க்கையில் உலவி வருவது வேடிக்கையாக இருக்கிறதல்லவா! டி.வி.யை வீட்டிற்குள் வாங்கி வைத்து பெற்றோர்கள் அந்த டி.வி.யை எதற்கு? எப்போது? எப்படி? பயன்படுத்த வேண்டும்? என்கின்ற  ஒழுங்குமுறையை முறையாக தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர மறந்து விட்டார்கள். இதன் விளைவாக “பண்பாட்டு பிழைகள்” அதிகமாகிவிட்டன. 

“நமது அப்பாதானே கோபப்பட்டுவிட்டார். என் நன்மைக்குத்தானே அவர் இப்படி பேசுகிறார்”. 

“அம்மா கோபப்பட்டால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்னை வளர்ப்பதற்கு எனது அம்மா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள்”. 

-என்று கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்த்தால் பெற்றோர்கள் மேலே உள்ள வெறுப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதற்கு மாறாக சின்னசின்ன வி‘யங்களையெல்லாம் பெரிதாக்கி நன்றி மறந்து கண்டபடி பெற்றோரைத் திட்டிதீர்ப்பது அநாகரிகமான அசிங்கம் அல்லவா!

“நீர் எனக்கு அப்பாவே இல்லை” என வந்தவழி தெரியாமல் வாயில் வந்தபடி பேசுவது சில நொந்த உள்ளங்களுக்கு வேண்டுமென்றால் வாடிக்கையாயிருக்கலாம் ஆனால் இதனை கேட்பவர்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். 

“அடித்தாலும் உதைத்தாலும் நான் உந்தன் பிள்ளை” என்று பாசப்பெருக்கால் அன்பு பாராட்டி பிள்ளைகள் நல்ல உறவுடன் பெற்றோரிடம் பழக வேண்டும். யாரிடம், எப்படி, எந்த சூழலில், எதைப் பேச வேண்டும்? என்பதை தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொண்டவர்கள் பெற்றோர்களிடம் அன்பாக நடந்து கொள்கிறார்கள்.  

சிறந்த அணுகுமுறைகளோடு பெற்றோர்களையும், மற்றவர்களையும், உற்றவர்களையும் சந்திக்கிறபொழுது வாழ்வில் நன்மைகள் மட்டுமே மேலோங்கி நிற்கும். மனம் நிம்மதி நிறைந்து காணப்படும். 

ஆனந்தம் தரும் அணுகுமுறைகள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்றுத்தரும். 

Post a Comment

புதியது பழையவை