நேரம்தான் இல்லையே!

நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரை-


நேரம்தான் இல்லையே!

பள்ளியில் படிக்கின்ற இரு மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். 

“ராஜேஷ் நீ ஏன் வீட்டுப் பாடத்தை செய்யவில்லை? எனக் கேட்டான் ஒரு மாணவன். 

“எனக்கு நேரமே இல்லை” - என்றான் ராஜேஷ். 

பள்ளியில்தான் இப்படியென்றால் வீட்டிலும் இப்படித்தான் சூழ்நிலையால் பதில் கிடைக்கிறது.  

வீட்டில் நன்றாக சமைத்து வைத்திருந்தாள் அம்மா. விடுமுறை நாள் என்பதால் பிரியாணி, மட்டன், சிக்கன் வகைகள் சாப்பாட்டில் இணைந்திருந்தது. பரபரப்பில் காணப்பட்ட மகன் சாப்பிட்டுவிட்டு பாதியில் வேகமாக எழுந்துவிட்டான்.

காரணம் கேட்டால் “அம்மா எனக்கு சாப்பிடுவதற்கு நேரமில்லை. மணி இப்போதே ஒன்றரை ஆகிறது. பிரண்ட்ஸ்களோட சினிமாவுக்கு டிக்கெட் எடுத்திருக்கேன் இப்போது எனக்கு நேரமில்லை வருகிறேன்” - என்று பதிலுக்கு காத்திராமல் மகன் சிட்டாகப் பறந்துவிட்டான். 

வீட்டிலும்தான் இப்படியென்றால் திருமண விழாக்களிலும் இப்படித்தான். 

“நீங்கள் போனவாரத்தில் நடந்த திருமணத்திற்கு ஏன் வரவில்லை? என்று கேட்டால்கூட “எனக்கு நேரமில்லை” என்றுதான் சிலரிடமிருந்து பதில் வருகிறது.  

வணிக நிறுவனங்கள் அல்லது அலுவலகங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால்கூட “நேரம் இல்லை. அதனால்தான் அதைச் செய்யவில்லை” என்று சொல்லி தப்பித்துக்கொள்வதும் உண்டு. “தாங்கள் சரியானவர்கள்தான். ஆனால் நேரம்தான் தவறு செய்கிறது” என்று நேரத்தின்மீது பழிபோடுபவர்கள் இப்போது அதிகமாகிவிட்டார்கள். 

நேரத்தின்மீது பழிபோடுகிறவர்களிடம் “நீங்கள் செய்வது தவறு” என அழுத்தமாகச் சொன்னால் “எனக்கு நேரமே சரியில்லை” என்கிறார்கள். 

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை “எனக்கு டைம் (Time) இல்லை” என்று சொல்வது இன்று வாடிக்கையாகிவிட்டது. இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் “நேரமில்லை” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதற்குக் காரணம் பள்ளிகளில் படிக்கும்போதே சில தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்தி வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும் படிப்புக்கு அதிக கவனம் செலுத்த தவறியதுதான். 

சிறுவயதில் ஆரம்பித்த “நேரம் இல்லையே” என்னும் சமாளிப்பு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் தொடர்ந்துகொண்டே வருகிறது. 

புகழ்பெற்ற ஒரு கல்வி வல்லுனரிடம் ஒருமுறை பள்ளி மாணவர்களின், கல்வி நிலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். 

“இப்போதுள்ள மாணவ, மாணவிகளுக்கு படிப்பதற்கே நேரமில்லை பிறகு எப்படி அவர்களால் பாடத்தில் கவனம் செலுத்த முடியும்? தேர்வில் அவர்களால் வெற்றிபெற முடியும்?” என்று என்னிடம் அவர் கேள்வி கேட்டார். 

நான் அவரை சற்று ஆச்சரியமாகப் பார்த்தேன். 

“சார் கல்வியாளரான நீங்களே மாணவர்களுக்கு படிப்பதற்கு நேரமில்லை என்று சொன்னால், மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?” என்று மெதுவாக கேட்டேன். 

“கவிநேசன்..... உண்மையிலேயே பெரும்பாலான மாணவர்களுக்கு படிப்பதற்கு நேரமில்லை, வேண்டுமென்றால் நான் சொல்வதை குறித்து வாருங்கள். பிறகு நீங்களே தெரிந்து கொள்வீர்கள்” என்றார். 

கல்வியாளர் சொன்னதை ஒரு தாளில் குறிக்க ஆரம்பித்தேன். அவர் சொன்னது இதுதான்.

பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கு நேரமில்லை. ஏனென்றால்-

  1. வருடத்தில் மொத்தம் 365 நாட்கள் உள்ளது. அதில் 52 ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஓய்வு நேரம்தான். அது உங்களுக்குத் தெரியும். இனி மீதி 313 நாட்கள்தான் உள்ளது. 
  2. கோடை விடுமுறைக்கு 50 நாட்கள் ஒதுக்கிவிடலாம். ஏனென்றால் அதிகமான வெயில் காலங்களில் மாணவர்களால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிக்க முடியாதல்லவா?
  3. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். அப்படி கணக்குப் பார்த்தால் தூக்கத்திற்கு 130 நாட்கள் ஒதுக்க வேண்டும். மீதி 141 நாட்கள்தான் உள்ளது.
  4. அடுத்து - விளையாட்டு, மற்றும் உடற்பயிற்சிக்கு என ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒதுக்க வேண்டும். கணக்குப்பார்த்தால் வருடத்தில் 15 நாட்கள் போய்விடும். மீதி 126 நாட்கள்தான் இருக்கிறது. 
  5. காபி, டீ, டிபன் சாப்பாடு - என கணக்குப்பார்த்தால் தினமும் 2 மணி நேரம் செலவாகிவிடும். ஆக வருடத்தில் 30 நாட்கள் சாப்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும். மீதி இருப்பதோ 96 நாட்கள். 
  6. மனிதனுக்கு பேசாமல் இருக்க முடியாது. பேசிப்பேசியே நேரம் போய்விடும். பேசுவதற்கு குறைந்தபட்சம் தினமும் 1மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் அல்லவா? கணக்குப் பார்த்தால் வருடத்திற்கு 15 நாட்கள் பேசுவதிலேயே போய்விடும். மீதி இருப்பதோ 81 நாட்கள்தான். 
  7. பள்ளிகளில் விதவிதமான தேர்வுகள் நடைபெறும். அதாவது - தினத்தேர்வு, வாரத்தேர்வு, வார இறுதித்தேர்வு, மாதத் தேர்வு, திருப்புதல் தேர்வு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் என தேர்வு எழுதும் நேரத்தை கணக்குப்பார்த்தால் ஆண்டுக்கு 35 நாட்கள் தேர்வு எழுதுவதற்கு செலவிட வேண்டியுள்ளது. மீதி 41 நாட்கள்தான் உள்ளது. 
  8. காலாண்டுத் தேர்வு விடுமுறை, அரையாண்டுத்தேர்வு விடுமுறை என சில நாட்கள் கழிந்துவிடும். இதுதவிர ஆங்கில புத்தாண்டு, போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், குடியரசு தினம், மிலாடி நபி, தெலுங்கு வருடப் பிறப்பு, புனித வெள்ளி, தமிழ் வருடப்பிறப்பு, சுதந்திர தினம், ரம்சான் பண்டிகை, காந்தி ஜெயந்தி, விஜய தசமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, பக்ரித் பண்டிகை, மொஹரம், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் கால விடுமுறைகளை கணக்குப் பார்த்தால் மொத்தம் வருடத்தில் சுமார் 40 நாட்கள் போய்விடும். இனி மீதம் இருப்பதோ 6 நாட்கள்தான். 
  9. காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நலக் குறைவு நாட்களில் சுத்தமாகப் படிக்க முடியாது. இப்படி வருடத்திற்கு 3 நாட்கள் போய்விடும். மீதி 3 நாட்கள் உள்ளன.
  10. கோவில் திருவிழா, சினிமா, உறவினர் வீட்டுக்கு செல்லுதல் என கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 2 நாட்கள் ஆகிவிடும். இனி இருப்பது 1 நாள்தான். 
  11. “மாணவர்களுக்கு வருடத்தில் இனி ஒரு நாளாவது நேரம் இருக்கிறதே என கவிநேசன் நீங்கள் சந்தோ‘ப்படுகிறீர்களா?” - என என்னிடம் கேள்வி கேட்டார் கல்வியாளர். 

நான் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தேன். 

“வருடத்தில் ஒருநாள்தான் வரும் பிறந்தநாள். அந்த ஒரு நாளில் சுதந்திரமாக பிறந்தநாள் கொண்டாட வேண்டாமா? மொத்தத்தில் பார்த்தால் நம் மாணவ, மாணவிகளுக்கு படிப்பதற்கே நேரமில்லை. பிறகு எப்படி சார் படிப்பார்கள்?” என்று கேட்டார் கல்வி வல்லுனர். 

அந்த புகழ்மிக்க கல்வி வல்லுனர் சொன்ன அழுத்தமான கருத்துக்களைப்பற்றி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

புகழ்மிக்க அந்த கல்வி வல்லுனரின் சிந்தனை சற்று வித்தியாசமானதுதான்.

“பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ‘கவனச் சிதறலு’க்கு என்னென்ன காரணங்கள் அடிப்படையாக இருக்கின்றன?” என்பதை அவர் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கல்வி நிலையங்களில் பயிலும் இளைய உள்ளங்கள் அறிந்தோ, அறியாமலோ இந்த ‘கவனம் சிதைக்கும் காரணி’களால் எப்படி சிதைக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களது விளக்கம் அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது.    

“படிப்பதற்குத்தான் நேரம் இல்லையே?” என்று சொல்லிச்சொல்லி காலத்தையும், நேரத்தையும் நகர்த்துவதைவிட, நேரத்தை திட்டமிட்டு செயலாற்ற பழகிக்கொண்டால் வெற்றிகளை எளிதில் குவிக்கலாம். 

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேரம் பற்றிய தெளிவான சிந்தனை அவசியம் தேவை. ஒரு நாளில் 24 மணி நேரம் இருக்கிறது. இந்த 24 மணி நேரத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும்? என்பதுபற்றி ஒரு வாரத்திற்கு முன்பாகவே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். முடிந்தால் நேர அட்டவணை (Time Table) ஒரு வார கால நிகழ்வுகளுக்காக உருவாக்க வேண்டும். 

பள்ளிக்குச் செல்லும் நேரம், வகுப்பு நேரம், சோதனைகூட நேரம், விளையாட்டு நேரம், உணவு நேரம், படிக்கும் நேரம், தூங்கும் நேரம், அரட்டை நேரம், டியூஷன் நேரம் - என தனித்தனியாக நேரத்தை பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது - 24 மணி நேரத்தில் ஒவ்வொரு செயல்களுக்கும் எவ்வளவு நேரம் செலவாகிறது? என்பதைத் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்னர் கீழ்க்கண்டவாறு ஒரு அட்டவணையை தயாரிக்கலாம். 

நேரக் கணக்கு அட்டவணை
சராசரி நேரம் (திட்டங்கள்)
திங்கள்/செவ்வாய்/புதன்/வியாழன்/வெள்ளி/சனி/ஞாயிறு/மொத்தம் 
1. உறங்குதல்
2. உணவு ஃ உடை அழகு செய்தல்
3. குடும்ப வேலைகள்
4.போக்குவரத்து(பள்ளி ஃ கல்லூரி செல்ல)
5.உடற்பயிற்சி ஃ விளையாட்டு
6.அரட்டை,டிவி, கம்ப்யூட்டர் ஃ ஓய்வு
7.கலை ஃ திரைப்படம்
8. வகுப்பு
9. படிப்பு
10. இதர வேலைகள்
மொத்தம்

இந்த நேரக்கணக்கு அட்டவணையை வாரந்தோறும் தயார்செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் படிப்பதற்கு தடையாக இருக்கும் காரணிகளை எளிதில் இனம்கண்டு கொள்ளலாம். மேலும் எந்தச் செயலுக்கு நீங்கள் உங்களை அறியாமல் அதிகநேரம் ஒதுக்குகிறீர்கள்? - என்பதை நீங்கள் அறிந்துகொண்டு அந்த செயல்களை தவிர்த்துவிடலாம் அல்லது நேரத்தை குறைத்துவிடலாம்.  

நான் பணியாற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பல வருடங்களுக்கு முன்பு பி.பி.ஏ., படித்தார் மாணவர் கிருஷ்ணன். அவரது ஊர் திருநெல்வேலி. திருச்செந்தூரிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருநெல்வேலியிலிருந்து தினமும் கல்லூரிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். 

முதல் வருடத்தைவிட இரண்டாம் வருடத்தில் அவரது மதிப்பெண்கள் குறைந்துகொண்டே வந்தது. வகுப்பு ஆலோசகராக இருந்ததால் மாணவர் கிருஷ்ணனைத் தனியாக அழைத்து, மதிப்பெண்கள் குறைவதற்கான காரணத்தைக் கேட்டேன். 

“சார் நான் தினமும் திருநெல்வேலியிலிருந்து காலேஜூக்கு வருகிறேன். காலையில் 6.15 மணிக்கு திருநெல்வேலியில் புறப்படுகிறேன். திருச்செந்தூரில் கல்லூரிக்கு வருவதற்குள் 9 மணி ஆகிவிடுகிறது. பிறகு கல்லூரி முடிந்தபின் திருநெல்வேலி செல்வதற்குள் இரவு 8 மணி ஆகிவிடும். வீட்டிற்கு 8.30 மணிக்குத்தான் செல்வேன். ரொம்ப களைப்பாகிவிடும். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை” என்றான் கிருஷ்ணன்.      

“தம்பி நீ ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க வேண்டியதுதானே?” என்று கேட்டேன். 

“ஹாஸ்டல் சூழல் எனக்கு பிடிக்கவில்லையென்பதால், இப்போது தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்குவந்து செல்கிறேன்” என்றான் மாணவர் கிருஷ்ணன்.  

“முன்பு உனக்கு ஹாஸ்டலில் இருக்க பிடிக்கவில்லை. இப்போது உனக்கு படிக்க பிடிக்கவில்லை. அப்படித்தானே!” என நேரடியாக கேட்டபோது அவன் தெளிவான பதில் தந்தான். 

“சார்... எனக்குப் படிக்க நேரமில்லை” என்று சோகம் நிறைந்த குரலில் சொன்னான் கிருஷ்ணன்.  

“கிருஷ்ணா நான் சொல்வதையும் சற்று சிந்தித்துப் பார்க்கிறாயா? எனக் கேட்டேன். கிருஷ்ணன் கேட்பதற்கு ஆர்வம் காட்டவே விளக்கம் சொன்னேன். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு வருவதற்கும், போவதற்கும் சுமார் 4 மணி நேரம் ஆகிவிடும். 

கல்லூரிக்கு வந்து செல்லும்  நேரத்தையும் சேர்த்தால் மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 5 மணி நேரம் கல்லூரிக்கு வருவதற்கே நீ செலவு செய்கிறாய். வருடத்திற்கு சுமார் 1000 மணி நேரம் கல்லூரிக்கு வந்து செல்வதிலேயே உனது நேரம் செலவாகிறது. இதற்குப் பதில் நீ கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படிக்க ஆரம்பித்தால், உனக்கு 1000 மணி நேரம் மிச்சமாகும். இதனை நீ படிப்பதற்கு ஏற்ற நேரமாக மாற்றிக் கொள்ளலாம். இதன்மூலம் இனிவரும் காலங்களில் நீ அதிக மதிப்பெண் பெற அதிக வாய்ப்பிருக்கிறது” என ஆலோசனை சொன்னேன். 

அவனது பெற்றோர்களையும் அழைத்துப் பேசினேன். என்னுடைய ஆலோசனையை ஏற்று அந்த மாணவன் உடனே விடுதியில் சேர்ந்தான். பின்னர், சிறந்த மதிப்பெண்கள் பெற்று இன்று வங்கியில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறான் கிருஷ்ணன். 

மாணவர் கிருஷ்ணனைப்போலவே இன்று பல மாணவ, மாணவிகளின் வாழ்க்கை அவர்கள் கல்வி நிலையத்துக்கு பயணம் செய்வதிலேயே பல மணி நேரம் வீணாக சென்றுவிடுகிறது. பஸ்ஸ்டாண்டுக்கு வரும் நேரம், ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் நேரம், பஸ்ஸ்க்காக காத்து நின்று பயணம் செய்யும் நேரம், பஸ் ஸ்டாண்டிலிருந்து பள்ளி அல்லது கல்லூரிக்குச் செல்லும் நேரம் - என வாழ்க்கை பயணத்தில் பல மணி நேரம் செலவழிக்க வேண்டியநிலை உருவாகிறது. மாணவ, மாணவிகளில் சிலர் தங்கள் நேரம் வீணாகப் போவதை அறியாமலேயே நாளையும், பொழுதையும் கழித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் திட்டமிட்டு படிப்பதற்கான செயல்திட்டங்களை மாணவ, மாணவிகள் வகுத்துக்கொள்ள வேண்டும். 

இப்போதெல்லாம் மாணவ, மாணவிகளுக்கு முன்னால் இரண்டு மிகபெரிய சவால்கள் (Challenges)  உள்ளன. அவை -
1.மாணவ, மாணவிகளுடைய தனிப்பட்ட வாழ்க்கை (Personal Life)
2.மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத் தொழில் (Professional Life) 
               -ஆகும். 

இந்த இரண்டு காரணிகளால் உருவாகும் சவால்களையெல்லாம் மனமகிழ்வோடு சந்தித்து, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். 

மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட வாழ்க்கை (Personal Life) பல விதங்களில் பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளது. அந்த பிரச்சினை மன அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறது. தனிமை (Loneliness), மனசோர்வு (Depression), மன அழுத்தம் தொடர்பான நோய்கள் (Stress Related Releases) மற்றும் தற்கொலை மனப்பாங்கு (Suicidal Tendency) ஆகிய பிரச்சினைகளெல்லாம் இன்று மாணவ, மாணவிகளிடம் அதிகமாக காணப்படுகின்றன. இவையெல்லாம் 1990ம் ஆண்டுக்கு பின்னர்தான் மிக அதிகமாக காணப்படுகிறது என ஒரு ஆய்வு தெளிவாகக் குறிப்பிடுகிறது.  

மாறிவருகின்ற சூழலில் தெளிவாக திட்டமிட்டு நேரத்தை செலவழிக்காவிட்டால் இளவயதினரின் தனிப்பட்ட வாழ்க்கை (Personal Life) வீணாகிவிடும். 

இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளிடம் சவாலாக இருக்கும் மற்றொன்று, வாழ்க்கை தொழிலைத் தேர்ந்தெடுத்தல் (Professional Life) ஆகும். அதாவது படித்து முடித்தபின்பு எந்தத் தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் கிடைக்கின்ற வருவாயைக்கொண்டு சிறப்பாக வாழலாம்? என்று முடிவு செய்வதை “வாழ்க்கைத் தொழிலைத் தேர்ந்தெடுத்தல்” என குறிப்பிடலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றபோதே நமக்கு ஏற்ற தொழில் இதுதான் என இளம்வயதினர் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 

நாட்டில் பலவிதமான மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்து வருகின்றன. வணிகம், பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம், பண்பாடு, சமூகம் ஆகியவற்றில் ஏற்படுகின்ற மாற்றங்களால் இளைஞர்கள் வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் உருவாகின்றன. 

எனவே இளம் வயதிலிருந்தே எதிர்வரும் சவால்களை எளிதில் சந்திப்பதற்குத் தெளிவான சிந்தனையும் ஆழ்ந்த அறிவும் பெற வேண்டுமென்றால் படிக்கும்போதே தகுதியையும் திறமையையும் இளைய உள்ளத்தினர் வகுத்துக்கொள்ள வேண்டும். தகுதியையும் திறமையையும் வளர்ப்பதற்கு தெளிவான நேரத்திட்டத்தை ஒவ்வொருவரும் உருவாக்கிக்கொண்டு செயல்படுவது சிறந்ததாகும்.          

நேரத்தை மதித்து வாழ்ந்த பலர் சிறப்புப் பெற்றிருக்கிறார்கள். “இந்தியாவில் நிறைய மக்கள் கடிகாரம் அணிகிறார்கள். விதவிதமான வண்ணங்களில் கடிகாரத்தை வாங்கி உபயோகிக்கிறார்கள். தனது ஆடைக்கு ஏற்ற புத்தம்புதிய கடிகாரத்தைக்கூட பயன்படுத்துகிறார்கள். ஆனால் கடிகாரம் பார்த்து நேரப்படி செயல்பட இன்னும் அவர்கள் பழகிக்கொள்ளவில்லை” - என்பது ஒரு அறிஞரின் கருத்தாகும். இதுபோன்ற கருத்துக்கள் இன்னும் பரவாமல் தடுக்க இளைஞர்கள் உடனடியாக சிறந்த நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. 

Post a Comment

புதியது பழையவை