நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரை-7
எது விளையாட்டு?
“இளம் பருவத்திலேயே உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சியும் விளையாட்டும் மிகவும் அவசியம்” என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.
“சிறந்த விளையாட்டு மூலமே நோயில்லாத வாழ்க்கையை வாழமுடியும்” - என்பதும் எல்லோரும் அறிந்த செய்திதான். இப்படி தெரிந்து வைத்திருக்கின்ற தகவல்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும்போதுதான் பல நேரங்களில் சிக்கல்கள் உருவாகிறது.
இதனால்தான் நமது உடலை கம்ப்யூட்டர் “ஹார்டுவேர்”க்கு (Hardware) ஒப்பிடுவார்கள். மூளையை “சாப்ட்வேர்” (Software) என்பார்கள். நமது மூளை என்னும் “சாப்ட்வேர்” நன்றாக செயல்பட வேண்டுமென்றால் நமது உடல் என்னும் “ஹார்ட்வேர்” நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
பள்ளிகளில் பயிலும்போதே விளையாடுவதற்கென்றே தனியாக பாட நேரத்தில் நேரம் ஒதுக்கியிருப்பார்கள். விளையாட்டு ஆசிரியர் (Physical Education Teacher) என்று தனியாக ஒரு ஆசிரியரை நியமித்து, பள்ளியில் மாணவ, மாணவிகளின் உடல்நலன் காக்க பள்ளி நிர்வாகம் பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் போன்ற பயிற்சிகளும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.
மகாகவி பாரதியார் -
“காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா”
-என்று பாப்பாவுக்குப் பாடல் பாடிவைத்து, விளையாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாலை நேரங்களில் கண்டிப்பாக விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பது பாரதியாரின் கருத்தாகும்.
ஆனால் - இன்று நடப்பது என்ன? “விளையாட்டு” என்ற பெயரில் எத்தனையோ வித்தியாசமான நிகழ்வுகள் அந்த நவீன விளையாட்டுகளில் சில -
- ‘குறும்பு’ விளையாட்டு
- ‘வேடிக்கை’ விளையாட்டு
- ‘காப்பி’ விளையாட்டு
- ‘கமிஷன்’ விளையாட்டு
-என எத்தனையோ பல வகையான விளையாட்டுகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் ஒரு பெற்றோர் ஆலோசனைக்காக என்னிடத்தில் வந்தார்கள். அவர்கள் முகத்தில் சோகம் நிரம்பியிருந்தது. ஏதோ பறிகொடுத்தவர்கள்போல பதட்டத்தில் காணப்பட்டார்கள்.
“சார்... என் மகள் நன்றாக படிப்பாள். பிளஸ் - 2 முடித்தவுடன் அந்தக் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன். முதலாம் ஆண்டு தேர்விலும் 80 சதவீதத்திற்கு மேல் நன்றாக மதிப்பெண் பெற்றாள். கல்லூரி நன்றாக இருக்கிறது. விடுதியும் நன்றாக இருக்கிறது என்று போனில் சொல்வாள். ஆனால் கடந்த மூன்று மாதமாக நாங்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறோம்” என்று அந்த மாணவியின் அம்மா சொன்னார்கள்.
தொடர்ந்து அந்த மாணவியின் தந்தை சில தகவல்களையும் சொன்னார்.
“ஒரே மகள் என்பதால் நன்றாக படிக்க வைக்க ஆசைப்பட்டேன். சென்னை பக்கம்தான் இடம் கிடைத்தது. ஹாஸ்டலில்தான் தங்கி இருக்கிறாள். செலவைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மூன்று மாதத்திற்கு முன்பு அவளோடு படிக்கும் மாணவன் அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தான். என் மகள் நன்றாக படிப்பதைக் கண்டு பொறாமைப்பட்ட மாணவன் அவனுடன் சில மாணவர்களை சேர்த்துக்கொண்டு இவள் போகும்போது “ஆஹா... ஓஹோ...” என கிண்டல் செய்திருக்கிறான். அவளை அவமானப்படுத்துவதுபோல நடந்திருக்கிறான். அவள் கல்லூரி பேராசிரியர்களிடம் சொல்லியிருக்கிறாள். பேராசிரியர்கள் அந்த மாணவனை அழைத்து அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.
அதன்பின்பு அவன் என் மகளை கிண்டல் செய்வதைவிட்டு விட்டுவிட்டான். ஆனால் அடிக்கடி முறைத்துப் பார்க்கிறான். நூலகத்திற்கு செல்லும்போது கரி உமிழ்கிறான்.
ஒரே வகுப்பில் அந்த மாணவனும் படிப்பதால் இவளால் அந்த சூழலை தவிர்த்துக்கொள்ளவும் முடியவில்லை, நாங்கள் என்ன செய்வது? சார் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் நீர் கோர்த்தது. அருகிலிருந்த மாணவியின் அம்மா அழ தயாராகிவிட்டார்.
“என் மகள் தினமும் 9 மணிக்கு மேல் செல்போனில் கூப்பிட்டு, நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். வீட்டுக்கு வந்துவிடவா எனக்கு கல்லூரியை மாற்றித் தாருங்கள். எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்கிறாள். நான் திரும்பவும் ‘கல்லூரி முதல்வரிடம் சொல்’ என்றேன்.
முதல்வர் கூப்பிட்டு அந்த கல்லூரி மாணவனிடம் கேட்டபோது ‘சார் நான் விளையாட்டுக்குத்தான் செய்தேன்’ என்று சொல்லியிருக்கிறான். இப்படி ஒரு பெண்பிள்ளையின் படிப்பை கெடுப்பதா சார்... விளையாட்டு அவள் என்ன செய்வாளோ? ஏது செய்வாளோ? என மூன்று மாதமாக துடிதுடித்துக் கொண்டிருக்கிறோம்? என்று சொல்லும்போதே அந்த அம்மா அழ ஆரம்பித்துவிட்டாள்.
கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வுகாண்பது எப்படி? என்று அவர்களுக்கு விளக்கமாக சொல்லிவிட்டேன் அந்த வழிமுறைகளைப் பின்பற்றிய அவர்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள். அந்தப் பெற்றோர்களுக்கு நான் ஆலோசனை சொன்னாலும் அந்த மாணவனின் செயல்பாட்டை நினைக்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
அந்த மாணவியின் அம்மா என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது - “எது விளையாட்டு சார்? என்ற கேள்வியை கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு சரியான விடை தெரியாமல் இன்று பல இளைஞர் இருப்பது வேதனைக்குரியது ஆகும். இந்த “குறும்பு விளையாட்டு” சிந்தனையிலிருந்து விடுபடுவதற்குள், இன்னொரு விளையாட்டை விளையாடிய பிரதீப் சந்தர் போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த “வேடிக்கை விளையாட்டு” அவருக்கு விபரிதத்தைத் தந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரதீப் சந்தர் கல்லூரி மாணவர். பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். போலீஸ் வேலைக்கு தீவிரமாக முயற்சி செய்தார். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வில் தோல்வியடைந்தார். தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தார். வேலை தர மறுத்த காவல் துறையை பழிவாங்க துடித்தார்.
மதுரையில் கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக ஒரு கூரியர் நிறுவனத்தில் பணியாற்றியதால் அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். கோயம்புத்தூருக்கு அடிக்கடி வந்து அங்குள்ள இடங்களைத் தெரிந்து கொண்டார். காவல்துறையோடு தொடர்புகொண்டு கோயம்புத்தூரில் உள்ள முக்கிய நகரங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போன்மூலம் தகவல் தெரிவித்தார். அவர் கூறிய இடங்களில் தீவிரமாக தேடிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வெடிகுண்டை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் அவர் வேறு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக பூகம்பத்தை கிளப்பினார்.
இப்படி 3 மாதங்களாக மதுரை, சிவகாசி, திருப்பூர், கோயம்புத்தூர் உள்பட தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் வெடிகுண்டு புரளியை விளையாட்டாக பரப்பினார். “108 ஆம்புலன்ஸ்”க்கு போன்செய்து என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள் என கூறிவிட்டு அவர்களையும் அலறவிட்டார். “முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்” என்று போலீசாலிடமும் சவால் விட்டார்.
கல்லூரி வாசல் மற்றும் பொது இடங்களில் விற்கப்படும் “சிம்” கார்டுகளை போலி முகவரி ஆவணங்கள் கொடுத்து வாங்கி வந்தார். ஒருமுறை பேசிய எண்ணில் மறுமுறை பேசாமல் எச்சரிக்கையாக செயல்பட்டார். முடிவில் கையும், களவுமாக போலீசார் அந்த விளையாட்டு மாணவனை விசாரித்துப் பிடித்தார்கள்.
“நவீன தொழில்நுட்ப கருவி உதவியுடன் நான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதைத் தெரிந்து போலீசார் கைது செய்துவிட்டனர். விளையாட்டுக்காகவும், போலீசை பழிவாங்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டேன் இப்போது மாட்டிக்கொண்டேன்” - என காவல் துறைக்கு கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார், விளையாட்டுக்காக புரளி கிளப்பிய மாணவர் பிரதீப் சந்தர்.
“எது விளையாட்டு” என்று தெரியாமல் விளையாட்டுத்தனமாய் வாழ்ந்த ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கை நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சி பலருக்கு அவமானத்தைத் தந்திருக்கிறது. நிம்மதியையும் கெடுத்திருக்கிறது.
“விளையாட்டு வினையாகிவிடும்” என்று தெரியாமலேயே சில மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது, துண்டுத்தாளில் எழுதிச்செல்வது, அடுத்தவர்களுடைய தேர்வுத்தாளை பார்த்து எழுதுவது புத்தகத்தின் பக்கங்களை கிழித்து தேர்வு அறைக்குக் கொண்டு சென்று மறைவாக வைத்துக்கொண்டு அதனைப் பார்த்து எழுதுவது போன்ற நடவடிக்கைகளைத்தான் “காப்பி அடித்து எழுதுவது என்று கூறினாலும், இன்று நவீன தொழில்நுட்பத்துடன் காப்பி அடித்து எழுதுவதையும் விளையாட்டாக சில மாணவ, மாணவிகள் மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது வேதனைத்தரும் விஷயம் அல்லவா!
இன்றைய கல்லூரி மாணவர்களில் சிலர் விளையாடும் இன்னொரு விளையாட்டு “கமிஷன் விளையாட்டு” ஆகும்.
ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சேர்ந்து விளையாடிய கமிஷன் விளையாட்டு ஒரு பெரியியல் கல்லூரி மாணவரை கொலை செய்யும் அளவுக்கு மரிவிட்ட வேதனை, நெஞ்சைப் பிழிய வைத்த சோக சம்பவம் அல்லவா?
ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் சென்னையிலுள்ள பல கல்லூரிகளில் மேற்படிப்பை தொடருகிறார்கள். அவர்களுள் ஒரு மாணவர் நிர்பே குமார் சிங். இவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகும். சென்னையிலுள்ள ஒரு பெரியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வந்தார்.
நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்னையிலுள்ள அவரது வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, அவரை காரில் வந்து ஒரு ‘கும்பல்’ உருட்டுகட்டையால் தாக்கி, இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்றது. இந்தக் கொலை சம்பந்தமாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சென்னையில் பெரியியல் கல்லூரியில் படிக்கும் 8 மாணவர்களை போலீஸார் கைது செய்தார்கள்.
இந்தக் கொலைக்கு காரணம் என்ன?
சென்னையில் தங்கி இருக்கும் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்லூரியில் புதிய மாணவர்களை சேர்த்து விடுவதற்காக அந்த மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து 10,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை கமிஷன் பெற்றுக்கொள்வது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.
கமிஷன் பெற்றுக்கொள்வதை விளையாட்டாக செய்துவந்த இந்த சில மாணவர்களிடம் அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. கொலை செய்யப்பட்ட மாணவரான நிர்பே குமார் சிங்கிற்கும் வேறு கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. கமிஷன் பணம் கையில் நிறைய விளையாடியதால் இவர்களில் சிலருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. ஒரு நாள் ஏற்பட்ட மோதல் நிர்வே குமார் சிங்கை அடித்து கொலை செய்யுமளவுக்கு தீவிரமாகிவிட்டது.
கமிஷன் விளையாட்டால் ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டதால் இன்று 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட குறும்பு விளையாட்டு, வேடிக்கை விளையாட்டு, காப்பி விளையாட்டு, கமிஷன் விளையாட்டு - என்னும் “வினோத விளையாட்டுகள்” நடைபெறுவதற்கு காரணம் என்ன?
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவன்
நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே
-என்னும் பாடல் வரிகள் ஒரு குழந்தையை வளர்ப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.
ஒரு மாணவனின் குழந்தைப் பருவத்திலேயே அவனுக்குத் தேவையான குணங்களான - உண்மை, நம்பிக்கை, மரியாதை போன்றவற்றை விளக்கி அவர்களுக்குத் தேவையான தன்னம்பிக்கையை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மேலும் குடும்பத்தில் ஒரு பாதுகாப்புச் சூழல் நிலவவும், பாச உணர்வுகள் மலரவும் வாய்ப்புகளை உருவாக்கி குழந்தை நிலையிலிருந்து இளமைப்பருவம் முழுவதும் கண்காணிப்புடன் வளர்க்க வேண்டும்.
“விளையாட்டு” என்றால் அது உடல் நலத்தையும், மன பலத்தையும் உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட களம் என்பதை விளக்கி நல்ல உடற்பயிற்சிகளையும், மன பயிற்சிகளையும் வழங்குவதற்கான சூழல்களையும் மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களும், பள்ளி - கல்லூரி நிர்வாகத்தினரும் ஏற்படுத்திக் கொடுத்து உண்மையான விளையாட்டின் பலனை இளைஞர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.
இளைய உள்ளங்களும் நல்ல விளையாட்டின் நற்பயன்களை அறிந்து நல்விளையாட்டு மூலம் நலம்பெற நாளும் முயற்சி செய்ய வேண்டும். அந்த விளையாட்டுதான் அமைதியையும், ஆனந்தத்தையும் தந்து வெற்றிக்கு அடிப்படையாக அமையும்.
கருத்துரையிடுக