முதல்நிலைத் தேர்வு
- நெல்லை கவிநேசன்
சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examination) எழுத விரும்புபவர்கள் முதலில் சந்திக்க வேண்டிய தேர்வு முதல்நிலைத்தேர்வு (Preliminary Examination) ஆகும். இந்தத் தேர்வுப் பற்றிய அறிவிப்பு பொதுவாக
மே அல்லது ஜுன் மாதத்தில் வெளியிடப்படும்.
மே அல்லது ஜுன் மாதத்தில் வெளியிடப்படும்.
“முதல்நிலைத் தேர்வில்” வெற்றி பெற்றவர்கள் மட்டுமே “முதன்மைத் தேர்வு” எழுத அனுமதிக்கப்படுவார்கள். எனவே, மிகவும் கவனத்துடன் “முதல்நிலைத் தேர்வு” எழுத வேண்டியது அவசியமாகும்.
முதல்நிலைத் தேர்வில், தாள்-1 (Paper–I) பொதுஅறிவுப் பாடம் (General Studies), தாள்-2 (Paper–II) திறனறியும் தேர்வு (Aptitude Test) ஆகிய இருதாள்களில் மட்டுமே தேர்வு நடத்தப்படும். இதில் பொதுஅறிவுத் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், திறனறியும் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
கேள்விகள் அனைத்தும் “கொள்குறி வினா வகை” அமைப்பில் (Objective Type Questions) இடம்பெறும். அதாவது, ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் தந்து, அதில் மிகச் சரியான ஒரு பதிலைத் தேர்ந்தெடுத்துப் பதில் எழுதும் வகையில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இடம்பெறும். பொது அறிவுப் பாடத்தில் தேர்வு எழுத இரண்டு மணி நேரமும், திறனறியும் தேர்வு எழுத இரண்டு மணி நேரமும் தனித்தனியாக வழங்கப்படும்.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற, குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும், மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தர வரிசைப்படுத்தி, அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரை மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கிறார்கள்.
எனவே, முதல்நிலைத் தேர்வுக்குத் தயார் செய்பவர்கள் “அந்தத் தேர்வில் நான் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் போதுமா? 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமா?” என்றெல்லாம் குழம்ப வேண்டிய அவசியமில்லை.
பட்டப்படிப்பில்(Degree) 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சிவில் சர்வீசஸ் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும்கூட முதன்மைத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்படாதவர்களும் இருக்கிறார்கள். இதனால், முதல்நிலைத் தேர்வை எழுதும்போது மிக அதிகக் கவனத்துடன் தேர்வை எழுத வேண்டும்.
முதல்நிலைத் தேர்வில், பொதுஅறிவுப் பாடத்தில் - தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய நடப்புச் செய்திகள், இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் குறித்த வரலாறு, இந்திய மற்றும் உலக புவியியல் - இந்திய மற்றும் உலக புவியியல் குறித்த இயற்கை அமைப்பு, சமூக, பொருளாதாரத் தகவல்கள், இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஆட்சி அமைப்பு - அரசியலமைப்பு, அரசியல் சட்டம், ஒழுங்கு முறைகள், பஞ்சாயத்து ராஜ், பொதுக் கொள்கைகள், உரிமைகள் மற்றும் கட்டமைப்புகள், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி - ஏழ்மை, சமூக இணைப்பு, மக்கள் பிரிவுகள் மற்றும் சமூக அமைப்புகள், சுற்றுச்சூழல்கள், பருவநிலை மாறுதல்கள், பொது அறிவியல் - ஆகியவைகள் உள்ளன.
தாள்-1 தேர்வில் பொதுஅறிவு பற்றிய பாடங்கள் இடம்பெறுவதால், இதனை “பொதுஅறிவுப் பாடத்தேர்வு” (General Studies) என்றும் அழைப்பார்கள்.
பொதுஅறிவுப் பாடத்தேர்வில் சிறப்பான வெற்றி பெற விரும்புபவர்கள் நாள்தோறும் ஆங்கிலம், தமிழ் செய்தித் தாள்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து படித்து வருவது அசியமாகும்.
மேலும், மனோரமா இயர்புக், நக்கீரன் இயர்புக், சுரா இயர்புக், விகடன் இயர்புக் போன்றவற்றையும் தொடர்ந்து படித்து வருவது நல்லது. பள்ளி நாட்களிலேயே படிக்கும் பாடங்களில் மிகவும் கவனம் செலுத்திப் படிப்பது சிறந்தது ஆகும்.
ஏனென்றால், பெரும்பாலான பொதுஅறிவுப் பாடத்திலுள்ள கேள்விகள் 9, 10, 11, 12ம் வகுப்பிலுள்ள பாடங்களைத் தழுவியே அமைகின்றன. குறிப்பாக, அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்களிலிருந்தே கேள்விகள் அதிகமாக இடம்பெறுகின்றன.
எனவே, பள்ளியில் பயிலும்போதே மாணவர்கள் மிக அதிகக் கவனத்துடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதாகிவிடுகிறது.
இருப்பினும், பட்டப்படிப்பு முடித்தவர்கள், படித்த பாடங்களை நினைவுகூர்ந்து, மேலும் பொது அறிவை வளர்க்க முயற்சி செய்வதன்மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வில் சிறப்பான வெற்றி பெறலாம்.
பொது அறிவுத் தேர்வில் எந்தெந்தப் பகுதியில், எத்தனை மதிப்பெண்களுக்குக் கேள்வி கேட்கப்படும்? என உறுதியாகக் கூற இயலாது. ஆண்டுக்கு ஆண்டு கேள்விகளின் எண்ணிக்கை பகுதிக்குப் பகுதி மாறுபடும்.
இருந்தபோதும் பல ஆண்டுகளாக நடைபெற்ற முதல்நிலைத் தேர்வுகளில் இடம்பெற்ற, பொதுஅறிவுத் தேர்வுகளிலுள்ள கேள்விகளின் அடிப்படையில், எந்தெந்தப் பகுதிகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது? என்பதை ஓரளவு கணக்கிட்டுள்ளார்கள்.
பொது அறிவுப் பாடத்திற்குத் தயாரிப்பு மேற்கொள்வது எப்படி? என்ற விவரம் தெரிந்தால் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
என்.சி.இ.ஆர்.டி. (NCERT) (National Council of Educational Research and Training) என்ற அமைப்பு ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கென தனித்தனியே அறிவியல் மற்றும் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகங்கள், அறிவியல், வரலாறு பற்றிய அடிப்படைச் செய்திகளை அறிந்துகொள்ள உதவியாய் அமையும்.
இந்த அமைப்பு ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள புத்தகங்களும், பொதுஅறிவை வளர்க்க அதிகம் உதவியாய் அமையும். இந்தப் புத்தகங்களைப் பெற -
The Secretary,
Publication Department,
National Council of Educational Research and Training,
Sri Aurobindo Marg,
New Delhi – 110 016
- என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துரையிடுக