வசந்தகால கோலங்கள்

நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரை-4

வசந்தகால கோலங்கள்

நாள்தோறும் தங்கள் வீட்டின்முன்பு பெண்கள் கோலம்போட்டு அழகுப் பார்ப்பார்கள். அழகான கோலத்திற்கு மெருகூட்டுவதற்காக விதவிதமான வண்ணங்களில் பொடிகளை உபயோகித்து அழகுக்கு அழகு சேர்ப்பார்கள். அந்தக் கோலத்திற்கு மேலும் மெருகூட்டுவதற்காக பூக்கள், வண்ணக் கற்கள், மயில் இறகுகள் போன்றவற்றைக்கூட சேர்த்துக்கொண்டு கோலம் சிறப்பாக மாற செயல்களில் ஈடுபடுவார்கள்.

இந்த வண்ணக் கோலங்களைப்போலதான் நமது வாழ்க்கை கோலங்களும் அமைகின்றன. கோலத்திற்கு புள்ளிகள் சரியாக வைக்காவிட்டால் அந்தக்கோலம் அலங்கோலமாகிவிடும். அதைப்போலவே - வாழ்க்கை சிறப்பதற்கு பள்ளிப்படிப்பு ஒழுங்காக அமையாவிட்டால் அது புள்ளி தவறிய கோலம்போல் அழகை இழந்துவிடும். எனவே - பள்ளியில் படிக்கும்போது மாணவ-மாணவிகள் தாங்கள் படிக்கும் பாடங்களில் மிகுந்த அக்கறையோடு படிக்க வேண்டும். 

உயர்கல்வி (Higher Education) என்பது - “இளைய வயதினரின் (Youth) வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது” என்று கல்வி வல்லுனர்கள் குறிப்பிடுவார்கள். இதனால்தான் உயர் கல்வி என்பது “3பி என்பதன் வளர்ச்சி” (3H Development) என்று குறிப்பிடுவார்கள். அதாவது Head, Heart, மற்றும் Hand ஆகிய மூன்றின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான் உயர்கல்வி என்பதை கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இளைய வயதினரின் அறிவு வளர்ச்சிக்கும் (Head), நல்லுணர்வு வளர்ச்சிக்கும் (Heart), செயல்பாடுகளின் வளர்ச்சிக்கும் (Hand) அடிப்படை ஆதாரமாக உயர்கல்வி அமைய வேண்டும் என்பதே அறிஞர்களின் கருத்தாகும். 

இதனால்தான் - “கல்லூரி என்பது ஒரு நகைப்பெட்டிப்போல இருக்க வேண்டும். அதனைத் திறந்தால் வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நீலம், புட்பராகம், பவளம், முத்து, கோமேதகம் என்று ஒளி வீச வேண்டும்” - என்று ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

“இளைய உள்ளங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒரு கல்வி நிறுவனம் அமைய வேண்டும்” என்பதுதான் தமிழர் தந்தையின் கருத்தாகும். 

ஆனால் - இன்று நடப்பது என்ன? 

அன்று -

மதுரையில் என்னை ஒரு நண்பர் சந்தித்தார். 

“என் மகள் பிளஸ்2 முடித்திருக்கிறாள். மார்க் கொஞ்சம் குறைவுதான். சென்னையிலுள்ள ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்க்கலாம் என நினைத்தேன். அங்குபோய் பார்த்தால் 5 இலட்ச ரூபாயைக் கொடு. 6 இலட்சத்தைக் கொடு என்று பேரம்பேசி நன்கொடை வசூலிக்கிறார்கள். எங்கள் ஜாதிக்காரர்தான் கல்லூரி நடத்துகிறார் என்பதால்தான் நேரில் போய் பார்த்தோம் ஐந்து பைசாகூட டொனேனில் குறைக்க முடியாது என்று கண்டிப்பாகப் பேசிவிட்டார் அந்தக்கல்லூரி நிறுவனம்” - என சோக கதையை மெதுவாக சொன்னார்.

“அப்புறம் என்ன ஆச்சுது?” ஆவலாய்க் கேட்டேன். 

அவர் சோக உணர்வுகளை சொல்ல ஆரம்பித்தார்.

“அதை ஏன் கேட்கிறீங்க? நேரே கோயம்புத்தூருக்கு வந்தேன். அங்கேயும் இரண்டு இலட்சத்துக்குமேல கேட்கிறாங்க. சேலத்துக்கு போய் அங்குள்ள பொறியியல் கல்லூரியிலும் விசாரித்தேன். நிலவரம் அங்கேயும் சரியில்லை. திருச்சிக்கு வந்து விசாரித்து பார்த்தால் ஒரு லட்சம்வரை டொனேசன் கேட்கிறாங்க. மதுரைதான் பரவாயில்லை என நினைக்கிறேன். வருத்துக்கு எழுபத்தையாயிரம் ரூபாய்வரை செலவாகும்போலத் தெரிகிறது” - என்று சொல்லிவிட்டு பேச்சை நிறுத்தினார். 

நானும் அமைதியாக நின்றேன். 

“சார் உங்களுக்கு தெரிந்த டொனேசன் வாங்காம படிப்பை நடத்துகிற காலேஜ் ஏதாவது இருந்தால் சொல்லுங்க. என் புள்ளையைக் கொண்டுபோய் சேர்த்திடுறேன்” - என அப்பாவியாக சொன்னார். 
      
எனக்கு வேதனையாக இருந்தது.        

ஒரு தரமிக்க கல்லூரியில் தனது மகளைச்சேர்த்து, அவளை கல்வியில் சிறந்தவளாக்க விரும்புகின்ற பல அப்பாவி அப்பாக்கள் படும் துயரங்களை சிந்திக்கும்போது கண்ணில் நீர் வரத்தான் செய்யும். 

தனது பிள்ளைகளை தரம் வாய்ந்த கல்லூரிகளில் சேர்ப்பதற்கு பதில் “டொனேஷன்” குறைந்த அளவில் வசூலிக்கிற கல்லூரிகளைத் தேடி வீதிவீதியாக அலையும் பெற்றோர்கள் சிலர் இருக்கிறார்கள். 

பிளஸ்2 தேர்வில் எதிர்பாராத காரணத்தினால் மதிப்பெண்கள் குறைந்தாலும்கூட எப்படியாவது முயற்சி செய்து ஏதாவது ஒரு கல்லூரியில், ஏதாவது ஒரு பாடப்பிரிவில் சேர்த்து விட வேண்டும் என்ற உணர்வோடு சில மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். சில வேளைகளில் வேண்டுகோள் பிடிவாதமாகவும் மாறுகிறது. 

“பக்கத்து வீட்டு பத்மா அக்கா பாஸ் பண்ணினவுடனே அவங்க அப்பா அந்த அக்காவை ஒரு இன்ஜினியரிங் காலேஜில் சேர்த்தாங்க நான் 855 மார்க் எடுத்திருக்கிறேன். என்னை இன்ஜினியரிங் காலேஜ் சேர்க்க திராணியில்லையே” என்று சில இளைய உள்ளங்கள் பெற்றோரிடம் தகராறு செய்கிறார்கள். தனது நிலையை உணர்ந்து வெட்கப்படுவதற்குப் பதில் தரக்குறைவான கேள்விகளை பெற்றோர்களிடம் கேட்கின்ற இளைய வயதினரும் உண்டு”.

“நான் தான் அந்தக் காலத்துல படிக்காம போயிட்டேன். என் தலையை அடகு வைத்தாவது என் பிள்ளைகளை படிக்க வைப்பேன்” - என பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வீராப்பாய் சொன்ன பெற்றோர்களை பார்த்து சில இளைஞர்கள் இப்படியும் கேட்பதுண்டு. 

“உங்கள் தலையை அடகு வச்சி என்னை படிக்க வைக்க சொல்லல. நம்ம வீட்ட அடகு வைச்சாவது என்னை படிக்க வைப்பதுதான் நல்லது. ஒரு என்ஜினியருக்கு அப்பான்னு உங்களை ஊர்காரங்க பாராட்ட வேண்டாமா?” என்று அறிவுரை சொல்லி சில அப்பாக்களை அவதிப்பட வைக்கும் பிள்ளைகளும் உண்டு. 

தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட பெரியியல் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மொத்தம் ஆண்டுதோறும் சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்தையாயிரம் பேர் பெரியியல் படிப்பை படிப்பதற்கு வசதிகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டுமுதல் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட பெரியியல் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. 

“அந்தக் கல்லூரியில் படித்தால்தான் நல்லது. இந்தக் கல்லூரியில் படித்தால்தான் சிறந்தது” என எண்ணி குழம்பி தவிப்பதற்கு பதில் பள்ளியில் படிக்கும்போதே மாணவ, மாணவிகள் மிக கவனத்தோடு படிக்க வேண்டியது அவசியமாகும். பள்ளியில் படிக்கும்போது மதிப்பெண்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மற்ற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் படிக்கும்போது கீழ்க்கண்ட முக்கிய காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். 

1. பாடத்தில் மதிப்பெண்கள் (Academic Records)
2. அனுபவ அறிவு (Practical Knowledge) 
3. இதர செயல்பாடுகள் (Extra Curricular Activities)
4. விளையாட்டு மற்றும் தேசிய மாணவர்படை (Sports and NCC)
5. நாட்டு நலப்பணித்திட்டம் (NSS and Social Service)
6. நூலகம் மற்றும் படிக்கும் பழக்கம் (Library and Reading Habits)
7. சோதனைக்கூடத்தைப் பயன்படுத்துதல் (Laboratory and Utilisation)
8. தகவல் தொடர்புத் திறன் (Communication Skill)
9. புத்தாக்க சிந்தனைகள் (Creative Thoughts)
10. புதிய கண்டுபிடிப்புகள் (Innovations)

-இந்த காரணிகளெல்லாம் பள்ளியில் மாணவ, மாணவிகள் முழுமையான வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமாக அமைகின்றன. 

பள்ளி, கல்லூரியில் படிக்கின்ற காலங்களில் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்று மாணவ, மாணவிகள் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் இந்த மதிப்பெண்கள்தான் ஒருவர் எந்த அளவுக்கு தனது இளமைக் காலத்தில் தனது படிப்பில் கவனமாக இருந்திருக்கிறார்? என்பதை அறிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். 

சில வருடங்களுக்குமுன்பு சென்னையில் புகழ்பெற்று விளங்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அதிகாரி தங்கள் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் உயர்ந்த பதவியில் இருப்பவர். “உங்கள் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது எதனை அடிப்படையாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர் இப்படித்தான் பதில் தந்தார். 

“ஒருவர் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்துத்தான் நாங்கள் பணியாளர்களை எங்கள் நிறுவனத்திற்கு அதிக அளவில் தேர்வு செய்கிறோம். குறிப்பாக & எஸ்.எஸ்.எல்.சி., படிப்பில் 70 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதைப்போலவே பிளஸ் 2 தேர்விலும் 75 சதவிகிதத்திற்குமேல் கண்டிப்பாக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இப்படி குறைந்த பட்சம் 70 சதவிகித மதிப்பெண்களாவது பெற்றிருந்தால்தான் எங்களால் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியும்” என குறிப்பிட்டார்.       

“எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 படிப்பவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கிராமத்தில் வசிப்பவர்கள் சூழ்நிலை காரணமாக படிக்கும் பாடங்களில் இவர்களால் அதிகமாக கவனம் செலுத்த இயலாது. எனவே - எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் இவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது. 70 சதவிகித மதிப்பெண்களை தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்பில் இவர்களால் பெற இயலாது. எனவே - கிராமப்புறத்தில் இருந்து படித்து முன்னேறிய இளைஞர்களுக்கு உங்கள் நிறுவனம் வேலை கொடுக்காதா? மதிப்பெண்களை காரணங்காட்டி வேலை தராமல் விட்டுவிடுவீர்களா?” என என்னுடன் இருந்த பேராசிரியர் ஒருவர் கேட்டார்.

இதைக்கேட்ட அந்த கம்ப்யு+ட்டர் நிறுவன உயர் அதிகாரி, “நாங்கள் பள்ளி, கல்லூரி மதிப்பெண்களில் மிகவும் கவனம் செலுத்துவதற்கு காரணம் இந்த மதிப்பெண்கள்தான் ஒரு இளைஞனின் மனநிலையைக் காட்டுகின்ற கண்ணாடியாக அமைகிறது. பள்ளிகளில் படிக்கின்ற பெரும்பாலான மாணவ, மாணவிகள் “குமாரப் பருவம் எனப்படும் “டீன் ஏஜ்” (Teen Age) பருவத்தில் இருப்பார்கள். அதாவது  இவர் 13 வயதிலிருந்து 16 வயதுவரை பள்ளியில் படிப்பார்கள். 17 வயதிலிருந்து 19 வயது வரை கல்லூரியில் இருப்பார்கள். 19 வது வயது டீன் ஏஜ் பருவத்தில் மிக முக்கியமான பருவமாகும். 13 வயது முதல் 19 வயது வரை டீன் - ஏஜ் பருவத்தில் மாணவ, மாணவிகளுக்கு பலவிதமான பிரச்சினைகள் மனதில் தோன்றும். 

“சிலருக்கு நல்லதெல்லாம் கெட்டதாக தோன்றும். தனக்கு முதல் எதிரியாக தனது அப்பாவைக்கூட கருதும் இளைஞர்களும் உண்டு. பார்க்கின்ற பொருளையெல்லாம் வாங்க வேண்டும். நினைத்ததெல்லாம் பெற வேண்டும்” என்று மனம் அலைபாயும். இல்லாதவற்றையெல்லாம் ஏதேதோ எண்ணி மனது பயப்படும். இல்லாத பிரச்சினைகளையெல்லாம் இருப்பதாக நினைத்து இளம் வயதினர் நிலை தடுமாறுவார்கள். 

இந்தச் சூழலில் ஒரு மாணவன் அல்லது மாணவி படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்தியிருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்வதற்காகவே முதற்கட்டமாக நாங்கள் மதிப்பெண்களை பார்க்கிறோம். “நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கண்டறிவதற்காக அவர் டீன் - ஏஜ் பிரச்சினைகளால் கவனம் சிதறாமல் இருக்கிறார்களா? என்று கூர்ந்து பார்ப்போம். அதன்பின்னரே முடிவு செய்வோம்” - என்று அந்த உயர் அதிகாரி சற்று விரிவாக விளக்கினார். 

“சார் பள்ளி மதிப்பெண்ணுக்கும் நீங்கள் கொடுக்கும் கம்ப்யூட்டர் வேலைக்கும் என்ன தொடர்பிருக்கிறது?” என்று எனது நண்பர் மீண்டும் கேட்டார். 

அந்தக் கம்ப்யூட்டர் அதிகாரி பொறுமையாக பதில் தந்தார். 

“சார் நீங்கள் சரியான கேள்வி கேட்டீங்க. கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை கொடுக்கும்போது பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியநிலை வரும். “அலுவலகத்திற்கு செல்வதில் பிரச்சினை. பலமொழி பேசும் இளைஞர்களோடு பேசுவதில் பிரச்சினை. இரவு நேரங்களில் பணி செய்ய வேண்டி இருப்பதால் வேலை நேர பிரச்சினை. பலவிதமான மத, இன இளைஞர்களோடு பழகும்போது பண்பாட்டு பிரச்சினை - என கம்ப்யூட்டர் பணியோடு நேரடியாக தொடர்பில்லாத பலவகை பிரச்சினைகள் இருக்கிறது. இந்த பிரச்சினைகளால் மனம் குழப்பாமல், கவனம் சிதறாமல், தான் ஏற்றுக்கொண்ட பணியை எந்த அளவுக்கு ஒருவரால் செய்ய முடியும்? என்பதை அவர்களுக்கு பணி வழங்குவதற்கு முன்பே நாங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மிக உதவியாக இருப்பது அவர்கள் பெற்ற மதிப்பெண்கள்தான் என்றார்” அந்த கம்ப்யூட்டர் உயர் அதிகாரி. 

பள்ளி மதிப்பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மிக முக்கியம் என்பதால் பலரும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். கல்லூரி கனவுகள் நிறைவேற அதிக மதிப்பெண்கள் அவசியம் தேவைதான் - என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது நல்லது.

Post a Comment

புதியது பழையவை