கல்லூரிக் கனவுகள்

நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரை-

கல்லூரிக் கனவுகள்

பள்ளியில் படிக்கும் எல்லா மாணவ-மாணவிகளுக்கும் எதிர்காலத்தில் எப்படி தங்கள் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். அந்தக் கனவுகளை நோக்கியே எல்லா இளைய  உள்ளங்களின் செயல்பாடும் அமைந்திருக்கும். ஆனால் இடையிடையே வருகிற “இடையூறுகள்” அவர்களது குறிக்கோளை அடையவிடாமல் திசைமாறச் செய்து விடலாம். 

இதனால்தான் பள்ளியில் படிக்கும்போதே - என்ன பாடப்பிரிவு எடுத்து படிக்க வேண்டும்? எந்த கல்லூரியில் படிக்க வேண்டும்? எந்தக் கல்லூரியில் படித்தால் பட்டப்படிப்பை ஒழுங்காக படிக்க முடியும்? எந்த கல்லூரியில் படித்தால் ஒழுக்கத்தோடும், மனநிறைவோடும் வாழ முடியும்? - போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்று -

அருள் மோசஸ் என்ற ஒரு கல்லூரி மாணவரை சந்தித்தேன். 

அவர் தமிழகத்திலுள்ள ஒரு கிராமப்புற பெரியியல் கல்லூரியில் பி.இ. படித்துக்கொண்டிருப்பவர். அடிக்கடி விளம்பரங்களில் வந்துபோகும் அந்தக் கல்லூரி பற்றி அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. 

“இது நியாயமா சார்? நீங்களே கொஞ்சம் கேளுங்கள்” - என்ற கேள்வி எழுப்பி என்னை திணற வைத்தார், மாணவர் அருள் மோசஸ். 

“சார்... தமிழகத்திலேயே தலைசிறந்த கல்லூரிகளுள் ஒன்று எங்கள் கல்லூரி. இங்கே படித்தால் உனது எதிர்காலம் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று என்னிடம் சொல்லி இந்த கல்லூரிக்கு எங்க அப்பா என்னை அழைத்து வந்தார்கள். 

பிளஸ் 2 தேர்வில் நல்ல மார்க் எடுத்ததினால் உன்னை இந்த கல்லூரியில் சேர்ப்பது நல்லது என்று சொல்லி என்னை சேர்க்க வந்தபோது இங்கு நன்கொடை கேட்டார்கள். முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது இந்தப் பிரபல கல்லூரியில் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? எனக்கு இந்த கல்லூரி வேண்டாம் என்றேன். 

எனது அப்பா விடவில்லை ஒரு சாதாரண மில் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்த எனது அப்பா என்னை பெரியியல் வல்லுனராக மாற்ற வேண்டும் என்ற கனவோடு என்னை வளர்த்ததால் அவர் இலட்சங்கள் கொடுக்க தயங்கவில்லை. 

நன்றாக படித்து அதன்மூலமே பெரியியல் கல்லூரியில் சேரவேண்டுமென்ற எனது இலட்சியம் அப்பா கொடுத்த இலட்சங்களால் கலைந்துபோனது. நான் மனதுக்குள் அழுதேன்”. 

மாணவர் அருள் மோசஸின் முகத்தில் மெதுவாக கவலை ரேகைகள் படர்ந்தது. ஒரு சொல்ல முடியாத சோகத்தை அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் காது கொடுத்து கேட்க ஆரம்பிக்கவும் உள்ளத்தின் பள்ளத்தில் இருந்துவந்த எண்ணத்தை அவர் வார்த்தைகளாக்கினார். 

“சார் சின்ன வயதிலேயே என்னுடைய கடின உழைப்பால்தான் நான் முன்னேற வேண்டும் என நினைத்திருந்தேன். இருந்தாலும் எனது அப்பாவின் விருப்பப்படி நன்கொடை கொடுத்து அந்த கல்லூரியில் சேர்ந்தேன்.      கல்லூரியில் புதிய சூழல். சில மாணவர்கள் கல்லூரிக்கு நன்கொடை கொடுத்தே வந்தவர்கள். “வேறுசில மாணவர்கள் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.      இன்னும்சிலர் நான்கு வருட ஜாலிக்காக கல்லூரிக்கு வந்தவர்கள். பி.இ., பட்டம் மட்டும் இருந்தால்போதும் கல்யாண மார்க்கெட்டில் எங்கள் ஜாதி மாப்பிள்ளைகளுக்கு நல்ல கிராக்கி என்று வெளிப்படையாகவே சொல்லி மகிழும் மாணவர்களும் உண்டு. ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு சூழல்களில் வந்தவர்கள் அவர்களை புரிந்து கொள்ளவே எனக்கு கஷ்டமாக இருந்தது. 

கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். அங்கும் எனக்கு திருப்தி இல்லை. முதலாமாண்டு படிக்கும்போதே விடுதியைவிட்டு வெளியேவந்து தங்க முடிவு செய்தேன். நீங்கள் விடுதியில் தங்கினாலும் தங்காவிட்டாலும் அடுத்த மூன்று வருடங்களுக்கு சேர்த்து 1 இலட்சம் ரூபாய் பீஸ் கட்டிவிட்டு போகலாம் என்றார்கள். என் படிப்புக்காக எனது அப்பா கடன் வாங்கி பணத்தை கட்டினார் வெளியில் தங்கியிருந்து கல்லூரிக்கு போனேன். ஏராளமான செலவு பணப்பிரச்சினை இவை எங்கள் வீட்டில் பல பிரச்சினையை உருவாக்கிவிட்டது.. 

இந்த நேரத்தில் நான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எனது அக்காவுக்கு திருமணம் நடந்தது. நான் நான்கு நாட்களுக்கு விடுமுறை எடுத்தேன். ஆயிரக்கணக்கில் அபராதம் போட்டார்கள். கட்டவில்லையென்றால் கல்லூரியைவிட்டு போ! என்றார்கள். நாங்கள் பயந்து போனோம். அபராத தொகையை கட்டிவிட்டோம். 

மாணவன் அருள் மோசஸ் கண்களில் மெதுவாக கண்ணீர் எட்டிப்பார்த்தது. அழுகைக்கு அணைபோட முடியாமல் தோற்றான். நான் அவனை சமாதானப்படுத்தினேன். 

“சார் செய்யாத குற்றத்திற்கு தண்டனை தந்தால் எப்படி சார் நிம்மதியாக இருக்க முடியும்?” என்று கேட்டான். 

நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே என் சிந்தனையைக் கலைத்தான்.

“சார்... இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்தே எங்கள் கல்லூரியை நீங்கள் புரிந்து கொள்ளலாம். போன வாரம் எங்கள் வகுப்பிலுள்ள கரும்பலகையை மாணவர்களில் சிலர் உடைத்து விட்டார்கள். எங்கள் வகுப்பில் மொத்தம் 60 பேர் இருக்கிறோம். எங்கள் 60 பேர்களிடமும் வகுப்பு பொறுப்பாசிரியர் வந்து விசாரித்தார். யார் அதை உடைத்தது என்ற விவரத்தை கண்டுபிடிக்க முடியாததால் அடுத்தநாள் வகுப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் அபராதம் போட்டார்கள். ஒரு வாரத்திற்குள் அபராதத்தை கட்டவில்லையென்றால் கல்லூரியை விட்டு அனுப்பிவிடுவோம் என்றார்கள். அந்த கரும்பலகை 2000 ரூபாய்கூட இருக்காது. ஆனால் கரும்பலகை கல்லூரிக்கு 1,20,000 ரூபாயை சம்பாதித்து கொடுத்தது. 

நான் செய்யாத தவறுக்கு எனக்கு தண்டனை கொடுத்தார்கள். இது எனக்கு தந்த தண்டனை அல்ல. ஒரு பாவமும் செய்யாத என் அப்பாவுக்கு கொடுத்த தண்டனை” - என அழ ஆரம்பித்தான். 

மாணவர் அருள் மோசஸைபோல எத்தனையோ பெரியியல் கல்லூரி மாணவர்கள் இன்றும் சிரமப்படத்தான் செய்கிறார்கள். தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை விளம்பரங்களை பார்த்துவிட்டு, சாதாரண கல்லூரியைவிட இந்தக் கல்லூரிதான் தரம் வாய்ந்த கல்லூரி என்று பல்வேறு மாணவ-மாணவிகள் நினைத்துக் கொள்கிறார்கள். 

கல்லூரி பக்கமே செல்லாத நடிகர், நடிகைகளை கொண்டு இதுதான் பெஸ்ட் கல்லூரி என்று சில கல்லூரி நிர்வாகத்தினர் சொல்ல வைக்கிறார்கள். “நடிகர், நடிகைகள் சொன்னால் இது உண்மையாகத்தான் இருக்கும்” என்று சில மாணவ-மாணவிகள் எண்ணி, அதை அப்படியே நம்பி கல்லூரியில் சேர்ந்து பிறகு கஷ்டப்படுகிறார்கள். 

ஒரு கல்லூரியில் சேருவதற்கு முன்பே அந்தக் கல்லூரிபற்றி சில தகவல்களை மாணவ - மாணவிகள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவை -
  1. அந்தக் கல்லூரியை நடத்துபவர் யார்?
  2. அந்தக் கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் யார்? யார்?
  3. கல்லூரி நிர்வாகத்தினர் எந்த நோக்கத்திற்காக கல்லூரியை நடத்துகிறார்கள்?
  4. கல்லூரி நிர்வாகத்தினரின் செயல்பாடு எப்படி அமைந்திருக்கிறது?
  5. கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறதா?
  6. உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறைகளில் கல்லூரியில் போதிய கவனம் செலுத்தப்படுகிறதா?
  7. மாணவ, மாணவர்களின் பெற்றோர்களை கல்லூரி நிர்வாகத்தினர் எந்த அளவுக்கு மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்துகிறார்கள்?
  8. கல்லூரியில் ஆசிரியர் மாணவர்களின் உறவு எப்படி அமைந்துள்ளது?
  9. பெற்றோர் ஆசிரியர் கழகம் அங்கு உள்ளதா? அந்த சங்கத்தின் செயல்பாடு எப்படி உள்ளது? 
  10. கல்லூரியில் நூலக வசதி போதிய அளவு உள்ளதா?
  11. கல்லூரியில் வேலைவாய்ப்பு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதா?
  12. கல்லூரியில் பயின்றோர் கழகம் (Alumni Association) உள்ளதா? பயின்றோர் கழகத்தின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?
  13. மாணவ-மாணவிகளின் திறனை வளர்ப்பதற்கு மன்றங்கள் (Associations), குழுக்கள் (Clubs) போன்ற அமைப்புகள் செயல்படுகிறதா?
  14. கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதுதானா?
  15. கல்லூரி முறைப்படி அங்கீகாரம் பெற்றதுதானா? அங்கு நடத்தப்படும் எல்லாப் பாடப்பிரிவுகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதா? 
  16. தகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்களா?
  17. அந்தக் கல்லூரியில் அடிக்கடி ஆசிரியர்கள் மாற்றப்படாமல் உள்ளார்களா?
  18. கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒழுங்காக நடத்துகிறார்களா?
  19. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கமுடன் நடந்து கொள்கிறார்களா?
  20. மாணவர்களுக்கு வளாகத் தேர்வுமூலம் (Campus Placement) நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா? 

- இதுபோன்ற பல கேள்விகளை மனதில் எழுப்பி அதற்கான சரியான விடையை கண்டுபிடித்து அதற்கு பின்னரே தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்க்க வேண்டும்.

மாணவ-மாணவிகளும் பள்ளியில் படிக்கும்போதே தரம் வாய்ந்த கல்லூரிகளை அடையாளம்கண்டு அந்த கல்லூரிகள் தங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர வேண்டும் என்ற உணர்வோடு படிக்க வேண்டியது அவசியமாகும். 

கோயம்புத்தூரிலுள்ள ஒரு புகழ்மிக்க பெரியியல் கல்லூரியில் சுமார் 30 வருடங்களுக்குமுன்பு படித்த எனது உறவினர் ஒருவர் கடந்த மாதம் சென்னையில் சந்தித்தேன். அவர் ஒரு பிரபல தொழிலதிபர். 

இன்று அவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் சொந்தமாக தொழிற்சாலையை நிர்வகித்து வருகிறார். அவரிடம் பேசும்போது ஒரு கல்லூரிசூழல் ஒரு மாணவனை உருவாக்க எந்த அளவுக்கு அடித்தளமாக அமைகிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். 

“தம்பி நான் 30 வருடத்திற்கு முன்னால் திருநெல்வேலியிலிருந்து கோயம்புத்தூருக்கு வந்ததும் நிறைய வி‘யங்கள்பற்றித் தெரிய ஆரம்பித்தேன். காரணம் எங்க காலேஜ்ல இருந்த சூழல்கள்தான். எங்கள் நிர்வாகம் மாணவர் நலனுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். அங்குள்ள ஆசிரியர்கள் அறிவும், அன்பும், அமைதியும் கொண்ட பண்பாளர்கள். ஒருமுறை லேபரட்டரியில் நாங்கள் சோதனை செய்து கொண்டிருந்தோம். 

ஒரு மாணவன் கண்ணாடி குழாயை உடைத்துவிட்டான். எல்லோரும் பயந்துபோனோம். ஆசிரியர் திட்டப் போகிறார். அபராதம் போடப்போகிறார்கள் என நினைத்தோம். ஆனால் எங்கள் பேராசிரியர் சோதனைக் குழாயை உடைத்த மாணவரின் அருகில் வந்து “சரி பரவாயில்லை” - என்றார் சோதனைக்கூட உதவியாளரை அழைத்து உடைந்துபோன இந்த சோதனை குழாயை வேறு எதற்காகவாவது பயன்படுத்த முடியுமா? என்று மென்மையாக சொன்னார். 

சோதனைக்குழாய் உடைந்தாலும் அதனை உடைத்த மாணவனின் மனம் உடைந்துவிடக்கூடாது என்பதில் எங்கள் பேராசிரியர் மிக கவனமாக இருந்தார். ஆனால், அதேவேளையில் எங்கள் கல்லூரி நிர்வாகம் அப்படி செயல்பட்ட பேராசிரியரை ஊக்கப்படுத்தியது” என்றார் எனது உறவினர் 

ஒரு கல்லூரியில் நிர்வாகம் ஆசிரியர், மாணவர், பெற்றோர் உறவுமுறை நன்றாக இருந்தால்தான் அந்த கல்லூரியின் கலாச்சாரம் (Culture of the College) சிறப்பாக அமையும் - என எனது உறவினர் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

செய்யாத குற்றத்திற்கு தண்டனை ஒருபக்கம். செய்த குற்றத்திற்கு மன்னிப்பு ஒரு பக்கம். எந்தச் சூழலில் மாணவ, மாணவிகள் வளர்க்கப்படுகிறார்களோ அந்த சூழலுக்குத் தகுந்தவர்களாகவே அவர்கள் மாற்றப்படுகிறார்கள். நல்ல தரம்வாய்ந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்த இளைஞர்கள் நல்லவர்களாக மாற்றப்படுகிறார்கள்.    

எனவே, எந்தக் கல்லூரியில் படித்தால் பட்டமும், வேலையும் கிடைக்கும் என்பதையே நினைத்து கல்லூரியில் சேர்வதைவிட, எந்த கல்லூரியில் படித்தால் மன மகிழ்வான வாழ்க்கை வாழ முடியும் என்பதை கருத்தில் கொண்டு கல்லூரியை தேர்ந்தெடுப்பது நல்லது. 

ஒரு மதிய வேளை.  நல்ல பசி, சாப்பிட வேண்டும் 

வயிற்றுக்கு உணவு வேண்டும் நேரத்தில் நகரத்திலுள்ள ஒவ்வொரு ஹோட்டலுக்குச் சென்று என்ன உணவு இருக்கிறது?- என்று விசாரித்துக் கொண்டே இருந்தால் இரவு வந்தாலும் சாப்பிடாமல் விசாரித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். சரியான தகவல்களும் கிடைக்காது. 

இதைப்போலத்தான் பிளஸ்-2 ரிசல்ட் வந்தபிறகும் மேற்படிப்புக்கு உதவும் கல்லூரிகளைப்பற்றி தெரிந்துகொள்ளாமல், விவரங்களை சரியாக சேகரிக்காமல் இருந்துவிட்டால் குழப்பங்கள் ஏற்படும.;. இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு கல்லூரிகளைப் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். நேரம் கிடைத்தால் நேரில் கல்லூரிகளுக்குச் சென்றுகூட விசாரிக்கலாம். 

கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்த கல்வி நிறுவனங்களின் கட்டிங்களைப் பார்த்தும், கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்தும் ஒரு கல்லூரியை சிறந்த கல்லூரி என்று உடனே முடிவு செய்யாமல், தீவிரமாக சிந்தித்து நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து படிப்பதுதான் சிறந்ததாகும். 

Post a Comment

புதியது பழையவை