டாக்டர் மா.பா.குருசாமி அவர்களுக்கு இதய அஞ்சலி
பேராசிரியர் டாக்டர்.மா.பா.குருசாமி அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர். இலக்கியவாதி.காந்திய சிந்தனைகளை எல்லோரிடமும் புகுத்திய காந்தியவாதி. அன்புக்கும், பண்புக்கும் இலக்கணமாய் திகழ்ந்த எனது குருவாய் விளங்கிய பேராசிரியர் அவர்கள் 26.12.2019 அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களுக்கு இதய அஞ்சலியாக எனது குரு வணக்கம்.
"குரு வணக்கம்"
ஏற்றம்தரும் எழுத்துக்களை வழங்கும் எழுத்துச்சித்தராக, ஆக்கம்தரும் ஆற்றல்மிக்க உரைளைத்தரும் பேச்சுக் கலைஞராக, கன்னல் சுவைக் கவிதைகளை வழங்கும் கவிஞராக, காந்திய சிந்தனைகளை அனைவரது நெஞ்சிலும் விதைக்கும் காந்தியவாதியாக, பொருளியலின் தந்தையாக, பட்டிமன்ற நடுவராக, எளிமையின் சின்னமாக விளங்குபவர் பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள். அற்புதமான கருத்துக்களாலும், அன்பான பண்புகளாலும் அனைவர் நெஞ்சிலும் நீங்காத இடம்பிடித்த இனிய பண்பாளர். சுமார் 35 ஆண்டுகளாக இந்த சிறப்புமிக்க பேராசிரியரோடு பழகிய அனுபவங்கள் என்னை செதுக்கி, ஒரு எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், கல்லூரி ஆசிரியராகவும் மாற்றியது. பேராசிரியருக்குள் இருக்கும் மகத்தான மந்திர சக்தியினை உங்களுக்கு விளக்கவும், எனது குருவின் சிறப்புகளை சீடனாக நின்று வெளிப்படுத்தவும், இதனை களமாகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.
பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் சிறப்பான தகுதிகளையும், மதிப்புமிக்க திறமைகளையும் கொண்டவர்கள். பொருளாதார பேராசிரியராக பணியாற்றினாலும், தனது தமிழ் பற்றினால் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் தமிழில் எழுதியிருப்பது அவரது தமிழ் தொண்டுக்கு சான்றாக அமைகிறது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும்போது தமிழக அரசு இவருக்கு நல்லாசிரியர் விருதை வழங்கியது. பேராசிரியர் அவர்கள் கல்லூரி முதல்வராக பணியாற்றியபோது சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருதையும் தமிழக அரசு வழங்கியது. இவரது இதழியல் பற்றிய நூலுக்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு வழங்கப்பட்டது. இவரின் கவிதை நாடக நூலுக்கும், பொருளியல் நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசுகளை வழங்கியது. இதைப்போல, பல்வேறு விருதுகளை வழங்கி பல அமைப்புகளும், தமிழக அரசும் பேராசிரியர் அவர்களை சிறப்பு செய்திருப்பதன்மூலம், பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் பல்துறை வித்தகர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
எனக்கும், பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்களுக்கும் உள்ள உறவு “குரு- சிஷ்யன் உறவு” என்பதால் அந்த உறவுதரும் உணர்வுகளை உங்களோடு பரிந்துகொள்ள விரும்புகிறேன். இது வெறும் உணர்வுகள் அல்ல. உயிரில் கலந்த குரு வணக்கம்.
குனிந்ததும், நிமிர்ந்ததும்
1980ஆம் ஆண்டு.
அப்போது நான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படிக்கும் மாணவன். தமிழ் பாட வகுப்புகள் பி.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு அப்போது கிடையாது. இதனால் என்னவோ தமிழில் பேசுபவர்களிடமும், தமிழில் எழுதுகிறவர்களிடமும் அதிக ஆர்வத்தோடு பழகி வந்தேன்.
அன்று - வெள்ளிக்கிழமை.
ஆதித்தனார் கல்லூரி விடுதியிலிருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நண்பர்களோடு நடந்து சென்றேன். சன்னதி தெருவில் நடந்து வந்தபோது திடீரென எனது நண்பன் என்னை நிறுத்தினான். வலது புறமாகக் கையை நீட்டி “அதோ பார் அந்த வீட்டினுள் ஒருவர் படித்துக்கொண்டிருப்பது தெரிகிறதா?” என்று கேட்டான்.
நான் கூர்ந்து கவனித்தேன். அந்த வீட்டினுள் விளக்கு ஒளியில் நாற்காலியில் உட்கார்ந்து மேஜைமீது எதையோ எழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரது தலை, குனிந்த வண்ணமாக இருந்தது.
“நீ நன்றாகப் பார்த்துக்கொள். இவர்தான் மா.பா.கு. பெரிய எழுத்தாளர். நமது கல்லூரியில் பொருளியல் துறை பேராசிரியர். இவரது புத்தகங்களைப் படித்துத்தான் நமது கிராமத்து மாணவர்கள் பி.ஏ. பொருளாதாரம் பட்டத்தை வாங்கிச் செல்கிறார்கள்” - என்று டாக்டர் மா.பா. குருசாமி அவர்களைப்பற்றி நிறைய தகவல்களைச் சொன்னான் நண்பன். அவன் கடைசியாக சொன்ன தகவல் என்னை சிந்திக்க வைத்தது.
“நான் சவால்விட்டு சொல்கிறேன். இப்போது குனிந்து எதையோ எழுதிக்கொண்டிருக்கும் மா.பா. குருசாமி சார் இரவு பன்னிரெண்டு மணிக்கு வந்தாலும் எதையாவது எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருப்பார். இதுதான் அவரது வெற்றியின் இரகசியம்” - என்றான் நண்பன்.
நாங்கள் மாலை சுமார் 6 மணிக்கு கோயிலுக்குச் சென்றுவிட்டு, இரவு 9 மணிக்கு திரும்பி வரும்போது என்னை அறியாமலேயே எனது பார்வை அவரது வீட்டின் பக்கம் திரும்பியது. எனது நண்பன் சொன்னது உண்மை என்பதை நான் அப்போது உணர்ந்துகொண்டேன்.
ஒரு பேராசிரியராக இருந்தபின்பும் ‘தொடர்ந்து படிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு உழைக்கும் பேராசிரியரைப் பார்த்து நான் வியந்துபோனேன். அதன்பின்னர் தொடர்ந்து 3 வருடங்கள் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் பேராசிரியர் மா.பா.குருசாமி அவர்களது வீட்டருகே நின்று அவரை நான் கவனிப்பது உண்டு. அத்தனை முறையும் அவர் தலைகுனிந்து மேஜைமீது இருந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததையும், எழுதிக் கொண்டிருந்ததையும் என்னால் காண முடிந்தது.
ஒரு பேராசிரியர் தலை கவிழ்ந்து படிப்பதும், எழுதுவதும் எத்தனையோ இளைஞர்களை தலைநிமிர்ந்து வாழ செய்வதற்குத்தான் என்பதை பேராசிரியர் அவர்கள்மூலம் இப்போது உணர்ந்து கொண்டேன்.
பேச்சும், மூச்சும்
பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் மேடையில் பேசுவதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆதித்தனார் கல்லூரியில் அடிக்கடி நடக்கும் கூட்டங்களில் பெரும்பாலும் பேராசிரியர் மேடையை அலங்கரிப்பார். அடிக்கடி அவர்கள் சொல்லும் ‘காந்திய சிந்தனை’ கருத்துக்களும், பாரதியார் பற்றிய பாடல்களும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
“அக்கினி குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
செந்தழலில் இளசென்றும் முப்பென்றும் உண்டோ”
- என்னும் பாரதியாரின் கவிதை வரிகளை அடிக்கடி குறிப்பிட்டு, வீரத்தோடு மாணவ-மாணவிகள் வளர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவார்.
அண்ணல் காந்தியடிகள்மீது தீவிர பற்றுக்கொண்ட பேராசிரியர் அவர்கள், அடிக்கடி காந்திய கருத்துக்களை தனது பேச்சில் குறிப்பிடுவது உண்டு. காந்தியடிகளின் சர்வோதய கருத்துக்களை பல மேடைகளில் எளிமைப்படுத்தி, பல நிகழ்ச்சிகளோடு இணைத்து, அவர் வெளிப்படுத்தும் பாங்கு ‘காந்தியம்’மீது அனைவருக்கும் ஈடுபாடு ஏற்படும் வகையில் அமையும்.
‘சர்வோதயம்’ என்னும் சொல் எப்படி பிறந்தது? என்பதைக் குறிப்பிட்டு, ‘சர்வோதயம்’ என்னும் சொல்லுக்கு ‘எல்லோரும் நலம்’ என்று அர்த்தம்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார். சில வேளைகளில் பட்டிமன்றத்தின் நடுவராகவும் தோன்றி, பலரும் ஆச்சரியப்படும் வகையில் சிகரம் தொடும் சிந்தனைகளை வாரி வழங்குவார். பேராசிரியரின் பேச்சைக்கேட்ட பல மாணவர்கள் பிற்காலத்தில் மேடைப் பேச்சாளராக திகழ்ந்து சிறப்புப் பெற்றிருக்கிறார்கள்.
எளிமையும், இனிமையும்
“சொல் ஒன்று செயல் ஒன்று” என்று மாறுபட்ட சிந்தனைகளாலும், செயல்களாலும் பலர் வாழும் காலத்தில், நல்லவற்றை சிந்திப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர் பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள். காந்தியடிகளின் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்த பேராசிரியர், “எளிமையாக வாழ வேண்டும்” என்ற சிந்தனையை மாணவ - மாணவிகளிடம் அடிக்கடி கூறி வந்தார். அதன்படி தானும் எளிமையான கதர் சட்டை, கதர் பேண்ட் அணிந்து கல்லூரிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சாதாரண மக்களைப்போல சைக்கிளில் கல்லூரிக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். ‘எளிமையான வாழ்க்கைதான் இனிமையான வாழ்க்கை’ என்பதை தனது வாழ்க்கைமூலம் மாணவர்களுக்கு உணர்த்தியவர் பேராசிரியர்.
எழுத்தும், வாழ்த்தும்
பேராசிரியர் மா.பா.குருசாமி அவர்களை 1980ஆம் ஆண்டு நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் அவரது வீட்டிற்குச் செல்ல விரும்பினேன். காரணமில்லாமல் அவரைப்போய் பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. ஒரு சிறுகதையை எழுதிக்கொண்டு அந்தக் கதையைப் பற்றிய கருத்துக் கேட்பதற்காக எனது நண்பன் உதவியோடு அவரது வீட்டிற்குச் சென்றேன்.
அப்போது எங்களை அன்போடு வரவேற்று உட்காரச்சொல்லி விவரம் கேட்டார் பேராசிரியர். நான் உட்கார்ந்தவுடன் அடுத்த அறையிலிருந்த அவரது துணைவியாரை அழைத்தார். துணைவியார் அவர்களிடம் “இவர்கள் எனது மாணவர்கள். இந்த தம்பி கதை எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்” - என்று சொன்னார். அடுத்த 5 நிமிடத்திற்குள் பரபரப்பாக வந்து, எங்களுக்கு தம்ளர் நிறைய பால் கொண்டுவந்தார் பேராசிரியரின் துணைவியார். அவர்கள் கொடுத்த தம்ளரை நானும் பதற்றத்தோடு வாங்க முயற்சி செய்தேன், முடிவில் கை தவறியதால் பால் கீழே கொட்டிவிட்டது.
“அய்யோ.. பால் கொட்டிவிட்டதே. கொஞ்சம் கவனமில்லாமல் இருந்துவிட்டேனே” என்று நான் செய்த தவறுக்காக அந்த அம்மையார் வருந்தினார். அடுத்த 5 நிமிடத்திற்குள் கீழே கொட்டிய பாலை துடைத்துவிட்டு புதியதாய் ஒரு தம்ளரில் பால் கொண்டுவந்தார்.
தம்ளரை ஒழுங்காக வாங்காமல் நான் செய்த தவறுக்கு அவரது துணைவியார் வருத்தப்பட்டது இன்றும் என் நெஞ்சில் வருத்தப் புள்ளிகளாக வலம்வருகிறது.
நான் எழுதிய கதையைப் படித்துவிட்டு, பேராசிரியர் “இந்த சிறுகதைக்கு என்ன தலைப்பு வைக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டார் நான் பதில் சொல்ல தெரியாமல் விழித்தேன்.
“சார் நீங்களே ஒரு தலைப்பை தாருங்களேன்” என்று நான் கேட்டபோது “சிலையாகி நின்றவன்” என்ற ஒரு தலைப்பை சிறுகதைக்குத் தந்தார் பேராசிரியர்.
ஒரு மாணவ நிலையில் நான் இருந்தபோதும் வீட்டில் உபசரித்து எனது எழுத்துக்களை சீராக்கி வழிகாட்டிய பேராசிரியர் அவர்களை இன்று நினைக்கும்போதெல்லாம் நெஞ்சம் வாழ்த்தவும், வணங்கவும் துடிக்கிறது.
மாணவனும், ஆசிரியரும்
1982ஆம் ஆண்டு பி.பி.ஏ. முடித்தப்பின்பு எம்.பி.ஏ. படித்து, சட்டக்கல்லூரியில் நான் சேர்ந்தபோது ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வு வந்தது. நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று உதவிப் பேராசிரியர் பணியில், நான் படித்த பி.பி.ஏ. துறையில் சேர்ந்தபோது என்னைவிட அதிகமாக மகிழ்ந்தவர் பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள். “இப்போது நாராயணராஜன் நம்மோடு வந்துவிட்டார். இனி நாமெல்லாம் இணைந்து இலக்கியப் பணியை இன்னும் சிறப்பாக செய்யலாம்” - என்று என்மீதுகொண்ட நம்பிக்கையை பேராசிரியர்களிடம் பகிர்ந்துகொண்டபோது நான் மகிழ்ச்சியடைந்தேன்.
1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்து மீண்டும் அவரது இல்லத்திற்கு வந்தபோது பேராசிரியரின் துணைவியார் “நான் முன்பு பால் கொண்டுவந்தபோது கீழே கொட்டிவிட்டதே! அந்த மாணவரா இப்போது உங்களோடு ஆசிரியராக இருக்கிறார்” என்று ஆச்சரியப்பட்டார். ஒரு மாணவனைக்கூட மறக்காமல் நினைவில் வைக்கின்ற அம்மையாரின் பெருந்தன்மை என்னை திக்குமுக்காடச் செய்தது.
மாணவராக இருந்தபோதும், ஆசிரியராக இருந்தபோதும் என்னை தனது பிள்ளையைப்போல பார்த்துக்கொண்டார் பேராசிரியர். நான் வணிக நிர்வாக இயல்துறையில் பணியாற்றினாலும் என்னைக் காணும்போதெல்லாம் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் அவர் காட்டிய அன்பும், பாசமும் என்னை எப்போதும் நெகிழ வைக்கும். அன்று அவர் கொடுத்த ஊக்கம்தான் இன்று சுமார் 47 புத்தகங்கள்வரை எழுதுவதற்கு எனக்கு உறுதுணையாக அமைந்தது.
படிப்பும், துடிப்பும்
கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தபின்பு நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தபோது இதழியலில் டிப்ளமோ படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்களை சந்தித்து விவரம் சொன்னபோது “நமது கல்லூரியிலேயே இதழியல் கலையில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் இருக்கிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம். நான்கூட 2 ஆண்டுகளுக்குமுன்பு இதழியல் கலையில் சான்றிதழ் படிப்புக்காக நிறைய புத்தகங்களைப் எடுத்து படித்தேன். அதனால் ‘இதழியல் கலை’ என்னும் புத்தகத்தை என்னால் எழுத முடிந்தது. நீங்களும் நிறைய படியங்கள் நிறைய எழுதலாம்” என்றார்.
பேராசிரியர் தந்த ஊக்கத்தால் இதழியல் படிப்பில் சான்றிதழ் படிப்பை முடித்தேன். இதழியல் கலையில் டிப்ளமோ தேர்வை எழுதும்போது என்னோடு தேர்வு எழுதினார் பேராசிரியர் டாக்டர் மா.பா. குருசாமி அவர்கள்.
‘ஆசிரியப் பணி இருந்தாலும் கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்’ என்பதை பேராசிரியர் அவர்கள் எனக்கு அன்று உணர்த்தினார்கள். ஒரு மாணவனைப்போலத் துடிப்போடு படிப்பதிலும், எழுதுவதிலும் அக்கறை கொண்ட அவர்களால் நூற்றுக்கணக்கான புத்தகத்தை இதனால்தான் எழுத முடிந்தது என்பதை என்னால் இப்போது உணரமுடிகிறது.
ஆராய்ச்சியும், அச்சமும்
1995ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எனது பி.எச்.டி. ஆய்வு பட்டத்திற்காக பதிவுசெய்ய விண்ணப்பித்திருந்தேன். பல காரணங்களுக்காக எனது பதிவு தள்ளிப்போனது. பல்கலைக்கழகத்திடம் பலமுறை முயற்சிசெய்தும் பலனில்லை. 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு வந்த கடிதத்தில் ‘எனது பெயரை பதிவுசெய்ய இயலாது’ என்று பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்டுவிட்டார்கள். நான் பல்வேறு வழிகளில் முயன்றபோதும் எனது ரிஜிஸ்டிரேஷன் தாமதமாகி வந்தது. திடீரென ஒருநாள் பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் அழைத்தார்கள். “உங்கள் பி.எச்.டி. ஆய்வுக்கான ரிஜிஸ்டிரேஷன் தாமதமாகி வருவதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். நீங்கள் நேரடியாக துணைவேந்தர் க.பா.அறவாணன் அவர்களை சந்தியுங்கள். முடிந்தால் உடனே செல்லுங்கள்” என்று என்னிடம் அழுத்தமாகக் கூறினார்கள்.
“சார்.. நான் தனியாகப்போய் துணைவேந்தரை எப்படி பார்ப்பது? நீங்கள் என்னோடு வந்தால் உதவியாக இருக்கும்” என்று சொன்னேன். “நான் நாளைக்கு பல்கலைக்கழகம் செல்கிறேன் நீங்கள் என்னோடு வாருங்கள். துணைவேந்தரிடம் சொல்லிவிடுகிறேன்” என்று கூறினார்.
மறுநாள் என்னை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச்சென்று எனது ரிஜிஸ்டிரேஷன் பிரச்சினையை அன்றே தீர்த்து வைத்தார் பேராசிரியர். சுமார் மூன்று ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ரிஜிஸ்டிரேஷனுக்காக போராடிய எனக்கு, ஒரு நல்ல தீர்வை பேராசிரியர் வழங்கினார் என்பது மறக்க முடியாத நிகழ்வாகும்.
பயிற்சியும், முயற்சியும்
கல்லூரியில் பணியாற்றும்போதே ஒருநாள், ‘கார் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இந்த எண்ணத்தை பேராசிரியர் அவர்களிடம் சொன்னபோது “நானும் கார் ஓட்ட பழக வேண்டும். லைசென்ஸ் எடுக்க வேண்டும்” என்று கூறினார்கள். இருவரும் ஒரு டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து பயிற்சி பெற்றோம்.
அப்போது திருச்செந்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இல்லை. என்னிடமும் சொந்தமாக கார் கிடையாது. பேராசிரியர் அவர்கள் காரில் என்னை தூத்துக்குடிக்கு அழைத்துச்சென்று டிரைவிங் லைசென்ஸ் வாங்க உதவினார்கள். இருவரும் ஒரேநாளில் கார் ஓட்ட லைசென்ஸ் பெற்ற அனுபவம் இன்றும் மனதில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துவிட்டது.
பொருளியலும், அருளியலும்
பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் பொருளாதார மேதையாக திகழ்ந்து பொருளியல் துறை சார்ந்த 46 புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் பணம், வங்கி, பன்னாட்டு வாணிபம், பொதுநிதி - இயல்கள் என்ற நூல் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை”
- என்பதை நன்கு உணர்ந்த பேராசிரியர் அவர்கள் அருள் வழங்கும் கருத்துக்களை உள்ளடக்கிய பல்வேறு துறைசார்ந்த பல நூல்களையும் எழுதியுள்ளார். காந்தியம், இலக்கியம், அறிவியல், வாழ்க்கை வரலாறு, சமுதாயம், சமயம் என பல துறைகளில் அவர்கள் எழுதிய நூல்கள் பலரது சிந்தனைகளை செம்மைப்படுத்தவும், அருள்நிறைந்த மனதோடு வாழவும் வழிவகை செய்கின்றன.
என்னைப் போன்ற ஏராளமான மாணவ - மாணவிகள் வாழ்வில் ஏற்றம் பெற இன்றும் உழைத்துக்கொண்டிருக்கும் எனது பாசத்திற்குரிய பேராசிரியர் டாக்டர் மா.பா. குருசாமி அவர்களுக்கு மீண்டும் என் நன்றி கலந்த “குரு வணக்கம்”.
கருத்துரையிடுக