வெற்றிப் படிக்கட்டுகள் - தொடர்-11 - “டீன் ஏஜ்” பிரச்சினைகள்...

வெற்றிப் படிக்கட்டுகள்
தொடர்-11

11. “டீன் ஏஜ்” பிரச்சினைகள்...

மனித வாழ்க்கையில் 13 வயதுமுதல் 19 வயதுவரை உள்ள பருவத்தை ‘பதின்ம பருவம்’ என்று அழைப்பார்கள். இதனை, ஆங்கிலத்தில் ‘டீன் ஏஜ்’ (Teen Age) என்று குறிப்பிடுவார்கள். இந்தப் பருவத்தில் வளரும் பெரும்பாலான சிறுவர் அல்லது சிறுமிகள் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். பல்வேறு சூழல்களில் வாழுகின்ற நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. 

குறிப்பாக - நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்க்காரர்கள் - என பல்வேறு நபர்களோடு பழக வேண்டிய சூழல் உருவாகிறது. மேலும், வீட்டுச்சூழலில் வாழ்ந்த இவர்கள், பள்ளிக்குச் செல்லும்போது பல்வேறு சூழலில் வாழ்ந்தவர்களோடு உறவாடுகின்ற நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. 

“சில சூழல்களை தவிர்க்க வேண்டும்” என இவர்கள் விரும்பினாலும்கூட இவர்களால் அந்தச்சூழல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. எனவேதான், இந்த “டீன் ஏஜ்” பருவத்து இளைய உள்ளங்கள் தங்களது படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. 

“டீன் ஏஜ்” பருவத்தினரை தாக்கும் பலம்வாய்ந்த ஆயுதமாக விளங்குவது “மன அழுத்தம்” என்று சொல்லப்படுகின்ற “ஸ்ட்ரெஸ்” (Stress) ஆகும். இளம்வயதினர் மனதில் ஏற்படுகின்ற ஆழமான அழுத்தத்தை இது குறிக்கிறது. 

உடல் சக்தியிலும், மன சக்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அதிக மன அழுத்தம், பல்வேறு எதிர் விளைவுகளையும் “டீன் ஏஜ்” பருவத்தினரிடம் உருவாக்கிவிடுகிறது. 

“எனக்கு மன அழுத்தம் இல்லை” என்று சொல்பவர்கள்கூட, அதிக மன அழுத்தத்தோடு இருப்பதை உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

மன அழுத்தம் ஒருவரிடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டுபிடிப்பதற்கு சில எளிய முறைகளையும் அவர்கள் விளக்குகிறார்கள். 

“டீன் ஏஜ்” பருவத்தினர் தங்களது மன அழுத்தத்தை சில அறிகுறிகள்மூலம் (Symptoms) தெரிந்துகொள்ளலாம். 
  • “படித்ததெல்லாம் மறந்துபோய்விடுகிறது. எனது நினைவில் நிற்கவில்லை”என்று வருந்துகின்ற நினைவாற்றல் பிரச்சினையுள்ளவர்கள், மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளலாம். 
  • “என்னதான் அறிவுரை சொன்னாலும் என் மகன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கிறான்” என்று கவலைப்படும் பெற்றோர்கள் தங்கள் மகன் கூர்ந்து கவனிக்க இயலாதநிலைக்கு தள்ளப்பட்டிருக்க காரணம் அவனது மன அழுத்தம்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 
  • எப்போது பார்த்தாலும் எதிர்மறையாகப் பேசுபவர்களும், தீராத கவலையோடு உலா வருபவர்களும் மன அழுத்தத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கிறார்கள் என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். 
  • பலநேரங்களில், “என்ன முடிவை எடுக்க வேண்டும்?” என முடிவுகளை எடுக்க இயலாமல் குழம்பித் தவிப்பவர்களும், எப்போதும் தனிமையில் இருக்க விரும்புபவர்களும், எரிச்சல்கொண்ட மனநிலையோடு உலா வருபவர்களும், மன அழுத்தம் தாங்காமல்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 
  • நேரத்திற்குநேரம் அடிக்கடி தனது மனநிலையை தேவையில்லாமல் மாற்றிக்கொண்டு முன்னுக்குப்பின் முரணாகப் பேசுபவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
  • மனச்சோர்வோடு காணப்படுபவர்களும், குழப்பத்தை உருவாக்கும் சூழலை அடிக்கடி ஏற்படுத்துபவர்களும், காரணம் ஏதும் இன்றி ஓய்வே இல்லாமல் ஓயாது அலைந்து திரிபவர்களும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். 
  • “இரவு நேரங்களில் எனக்கு தூக்கமே வரவில்லை” என்று வேதனைப் படுபவர்களும், அடிக்கடி தலைவலிக்கிறது. உடலில் வலி ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு வந்துவிடுகிறது. தொடர்ந்து வாந்தி எடுக்கும் சூழலும் உருவாகிறது. நாள்தோறும் சளித்தொல்லை இருக்கிறது - என்றெல்லாம் உடல் பிரச்சினைகளால் வேதனைப்படுபவர்கள் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
  • பொதுவாகவே - மன அழுத்தம் உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சிலநேரங்களில் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று எண்ணி மிக அதிகமாக சாப்பிடுவார்கள். மற்றவர்களைவிட அதிகநேரம் தூங்கவும் ஆசைப்படுவார்கள். எந்த வேலையைக் கொடுத்தாலும் “என்னால் முடியாது” என்றுசொல்லி தட்டிக் கழிப்பார்கள். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள மிகவும் தயங்குவார்கள். இன்று செய்ய வேண்டிய வேலையை “நாளைப் பார்த்துக்கொள்ளலாம்” என்றுசொல்லி நாசூக்காக நழுவிவிடுவார்கள். 
  • சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், நகம் கடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

எனவே, டீன் ஏஜ் பருவத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களின் பாதைத் தவறி சில பிரச்சினைகளில் சிக்குகின்ற சூழலும் ஏற்பட்டுவிடுகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் இளைய வயதினரிடம் இந்த டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படுவதால், பல்வேறு விளைவுகள் அவர்களை அறியாமலேயே நிகழ்ந்துவிடுகிறது. 

இந்தச்சூழலில், “ஸ்ட்ரெஸ்" எனப்படும் "மன அழுத்தம்" உருவாக்கும் பயங்கரமான விளைவுகளை டீன் ஏஜ் பருவத்தினர் கண்டிப்பாக முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். இந்த மன அழுத்தம் முதலில், ஒருவரின் முன்னேற்றத்தை கெடுக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தனது முன்னேற்றம் மட்டுமல்லாமல், குடும்பத்தின் முன்னேற்றத்தையும் இந்த :மன அழுத்தம்: தடுக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தை மட்டுமல்லாமல் இந்த மன அழுத்தம் ஒரு ஊரின் முன்னேற்றத்திற்கும் தடையாய் அமைகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். 

தனிமனித முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்துகொள்ளும் இளைஞர்கள் "டீன் ஏஜ்" பருவத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இந்தச்சூழலில், டீன் ஏஜ் பருவ சிக்கல்களுக்கு காரணமான சில காரணிகளை இனம்கண்டுகொள்வது நல்லது. 

டீன் ஏஜ் பருவத்தில் உருவாகும் இந்த மன அழுத்தம் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை (Causes) உளவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 
  • இளம்வயதில் டீன் ஏஜ் பருவத்தினரிடம் காரணம் இல்லாமல் உருவாகும் ‘பயம்’ இவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக - பணப் பிரச்சினையினால் ஏற்படும் பயம், சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளால் உருவாகும் பயம், உடலில் ஏற்பட்டுள்ள நோயினால் ஏற்படும் பயம் போன்றவைகள் இவர்களைத் தாக்கும் முக்கிய காரணிகளாக விளங்குகிறது. 
  • குடும்பத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. வீட்டில் ஏற்படும் மரணம், பெற்றோர்களின் நோய், சகோதர-சகோதரிகளின் திருமணம், உறவுக்காரர்களுடன் உருவாகும் பிரச்சினைகள் போன்றவைகள் மிகப்பெரிய குழப்பங்களை குடும்பத்தில் உருவாக்கிவிடும். இந்தக் குழப்பங்கள் அறிந்தோ, அறியாமலோ இளம்வயதினரின் மனதில் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. 
  • தேவையற்ற விவாதங்களைக் கேட்பது, அந்த விவாதங்களில் தலையிட்டு தேவையற்ற கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது, அதனால் எழும் பிரச்சினைகளை மனதில்போட்டு குழப்புவது போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கும் செயல்களாக மாறிவிடுகிறது. 
  • திருட்டு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நிகழ்வதைக் கேட்பது, பார்ப்பது அல்லது அந்த சம்பவங்களில் ஈடுபடுவது போன்றவைகள் மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்கி நிம்மதியைக் கெடுத்துவிடுகிறது. 
  • பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் பிரச்சினைகளும் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடுகின்றன. ஆசிரியர்கள், பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர், உடன் படிக்கும் மாணவ-மாணவிகள் போன்றவர்களாலும் மன அழுத்தம் ஏற்படும் சூழல்கள் ஏற்பட்டுவிடுகின்றன. 
  • தகவல்தொடர்பை முறையாக கையாளத் தெரியாத நிலையிலும், வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாத சூழலிலும், காலதாமதமாக கல்வி நிலையங்களுக்குச் செல்வதாலும் எழும் பிரச்சினைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 

இப்படி பல்வேறு சூழல்கள் மன அழுத்தத்தை உருவாக்கினாலும், “மன அழுத்தம் எதனால் எனக்கு ஏற்படுகிறது?” என்று அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக சிந்தித்து செயல்பட வேண்டும். 

ஒரு கார் டயரில் அடைக்கப்பட்டுள்ள காற்று தேவையான அளவு இருக்கும்போது, கார் ஓடுவதற்கு அந்த டயர் உதவுகிறது. மிகக்குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, அந்த டயர் காரின் வேகத்தை கட்டுப்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மிக அதிக காற்றழுத்தம் டயரில் இருந்தால், கார் ஓடும்போதே டயர் வெடித்து விபத்தை ஏற்படுத்துகிறது. 

இந்தக் கற்றழுத்தத்தைப்போலதான், ஒரு மனிதருக்கு மன அழுத்தம் தேவையான அளவுக்கு வேண்டியதாகிறது. ஆனால், மன அழுத்தம் அதிகமாகின்றபோது அது மரணத்தைக்கூட உருவாக்கிவிடுகிறது. 

அதிக மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்பபடுத்துவது எப்படி? என்று உளவியல் வல்லுநர்கள் வழிகாட்டுகிறார்கள். அவற்றுள் சில - 
  1. உங்களால் முடியாத செயல்களைச் செய்வதற்கு வாக்குக் கொடுத்துவிடாதீர்கள். நாசூக்காக ‘இயலாது’ அல்லது ‘முடியாது’ என்று சொல்லி மறுத்துவிடுங்கள்.
  2. எப்போதும் நேர்மறை எண்ணத்தை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுங்கள்.
  3. சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது உங்கள் சிந்தனையை சீராக்கும் செயலாக அமைந்துவிடும்.
  4. தேவையான அளவு தூங்குங்கள். 
  5. உடலுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதை பழமாக்கிக் கொள்ளுங்கள்.
  6. உங்களுக்கு மன அழுத்தம் தந்த உணர்வுகளை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். 
  7. “இன்று செய்ய வேண்டிய செயலை நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று எண்ணி தள்ளிப்போடும் பழக்கத்தை முற்றிலுமாக நீக்கிவிடுங்கள்.
  8. இசை கேட்பது, கலைத்துறையில் ஆர்வம் செலுத்துவது போன்ற பொழுதுபோக்கும் நிகழ்வுகளில் அவ்வப்போது ஈடுபடுங்கள்.
  9. உடலை உறுதி செய்யவும், மனதை சீராக்கவும் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.
  10. முக்கியமான செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, அதிக மன அழுத்தத்தை குறைக்கலாம். எப்போதும் பதற்றத்துடனும், பரபரப்புடனும் இயங்கும் நிலையை மாற்றி, இந்த “மன அழுத்த மேலாண்மை” (Stress Management) வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்தால், டீன் ஏஜ் பிரச்சினைகளையும், சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து, எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழலாம். 

Post a Comment

புதியது பழையவை