எண்ணமும், எழுத்தும் - பிரபல எழுத்துரு,
ஓவிய வல்லுநர் நாணா
எழுதும் தொடர்
அந்த படம் - ஒரு மறக்கமுடியாத தருணம்
திருமயம் பக்கத்தில் இராங்கியம் எனும் சிறுகிராமத்தில், என்னுடைய பள்ளி நாட்களில் - தினமணிக்கதிரில் வெளிவந்த 'சொர்க்கத் தீவு' தொடர்கதை மூலம் 'சுஜாதா' என்ற பெயருடன் ஒரு 'அமானுஷ்ய' ஈர்ப்பு ஆரம்பமானது.
அது டெவலப் ஆகி..கல்லூரி நாட்களில் விகடனின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' சமயத்தில் அவருடைய தாக்கம் கொஞ்சம் ஓவராகி..லெண்டிங் லைப்ரரியை ஆரம்பிச்சு...(அப்புறம் அதை நடத்தமுடியாமல் நொந்ந்ந்து நூலானது - ஒரு கிளைக் கதை)
பிறகு, அந்த சலவைக்காரி, கணேஷ்-வசந்த்..போன்ற வார்த்தைகளால் எல்லாருக்கும் என்ன பாதிப்பு வந்ததோ..அதே மாதிரி பாதிப்புடன்...அவருடன் கதைகளில் இணைந்து மிரட்டிய ஜெயராஜின் 'லோ ஹிப்'களில் மனதைப் பறிகொடுத்து.. அப்படியே ஆர்ட்டடிஸ்ட் ஆனவன்..நான்..
மேற்படி அனுபவங்கள் கொண்ட எனக்கு அவரது நேரடி அருகாமை கிடைத்தது ஒரு அற்புதம்.
அவரது ஓலைப் பட்டாசு, நைலான் கயிறு.போன்ற புத்தகங்களின் மறுபதிப்புகளுக்கு அட்டை வடிவமைப்பு பற்றிய - என் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரிடம் பாராட்டையும் பெற்றுத் தொடர்ந்த நட்பு....
அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் முன் எழுதிய 'வாரம் ஒரு பாசுரம்' அட்டைப்படம் வரை தொடர்ந்தது...
அப்போது நான் 'இந்தியா டுடே' பத்திரிகையின் - தமிழ், தெலுங்கு, மலையாளப் பதிப்புகளின் - Chief Visualiser.
என்னுடைய புதுமனை புகுவிழாவுக்கு அவர் குடும்ப சகிதம் வந்து வாழ்த்தியது..எனக்கும், என் உறவினர்களுக்கும் - வீடு வாங்கியதை விட பெரிய இன்ப அதிர்ச்சி.
சில ஆண்டுகள் முன் ஒரு டிசம்பர் மாதத்தில் நானும் அவரும் திருச்சி சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ( கடைசி நேரத்தில் திருமதி சுஜாதா அவர்களால் வர இயலவில்லை) அந்த இரண்டு நாட்களில் அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசித் தீர்த்தோம். அப்போது இறந்துபோன யாரோ ஒரு நடிகையின் தற்கொலை மேட்டரில் ஆரம்பித்து உயிர், மறுபிறப்பு, இறப்பு பற்றி பேசும் போது அவர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
'இறப்பு என்பது யாருக்குமே திடீர்ன்னுதான் வரும்..அந்த நேரத்தில் யாரும் போட்டோ எடுத்துக்கொண்டு சாவதில்லை. அதனால இன்னும் பல வீடுகள்ல பத்தாம் நாளுக்கே படத்தைத் தேடுவாங்க...என்றார்.
ஆனா...'காதலா காதலா' படத்தில் வர்ற கமல் இறந்தவரின் படத்தை உடனடியாக வரைஞ்சு.. அதை அந்த வீட்டில் சேர்ப்பதைச் சோக நிகழ்வுக்கிடையில் காமெடியாக செய்திருப்பார்.. என்பதை சிலாகித்தார்.
என் சோகம்...நானே எடுத்த அவரது படத்தை அவர் மறைந்த இரவே போட்டோஷாப்பில் உண்மையாக்க் கண்ணீருடன் சரி செய்து.... அவர் இறந்தும் அவர் உடல் வீடு வந்துசேராத நிலையில் அவரது படத்தை பெற்றுக்கொண்ட திருமதி சுஜாதா அவர்கள் அழுது கலங்கியது.. என்னையும் சுற்றியிருந்தோரையும் அழவைத்தது.. மிக மிக நெகிழ்வான ஒரு மறக்கமுடியாத தருணம்..
மறுநாள் காலை அவரது வீட்டிற்கு அவரது உடல் வரும் வரை அவருக்காகப் பூத்த மலர் மாலைகளுடன் வந்தவர்கள் அவரது அந்தப் படத்திற்கு அணிவித்த நிலையில்...சுஜாதா சார் சிரித்த முகத்துடன் நானே எடுத்த அந்தப் புகைப்படம் வீற்றிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு மட்டும் உள்ளுக்குள் அதிகமாக வலித்தது மனசு.
கலக்கத்துடன்
நாணா
தொடரும்.
முதலில் எழுத்தாளராக உருமாறிய உங்களுக்கு எனதன்பான வாழ்த்துகள்!... அருமையான பல்கலை கலைஞன் தாங்கள் என்பதில் ஐயமில்லை!... இந்த தகவல்களை தாங்கள் எங்களுக்கு ஏற்கனவே முகப்புத்தகத்தில் சொல்லியிருந்தாலும் மீண்டும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இடைவிடாது படிக்கத்தூண்டுகிறது!... மேலும் பல சுவாராஸ்யங்கள் காத்திருக்கிறது... அதில் நிச்சயம் திருச்சி இருக்கும்!... எதிர்பார்ப்புகளுடன்!.... அன்புடன் என்றும் உங்களின் அன்பிற்கினிய துரை பாஸ்கர்.
பதிலளிநீக்குநிச்சயமாக...என்றும் அன்புக்கும் நட்புக்கும் மகிழ்வுடன்
நீக்குகருத்துரையிடுக