“அர்ப்பணிப்போடு செயல்பட்டால் வெற்றியுடன் உயர்வான இடத்தை பிடிக்கலாம்” பேராசிரியர் நெல்லை கவிநேசன் பேச்சு
“அர்ப்பணிப்போடு செயல்பட்டால் வெற்றியுடன் உயர்வான இடத்தை பிடிக்கலாம்” என்று மதுரையில் நடந்த புத்தக திருவிழாவில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் பேசினார்.
மதுரை, தமுக்கம் மைதானத்தில் கடந்த 2018ம், ஆண்டு 13–வது புத்தக திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்ற இப்புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 09.09.2018 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட கல்வி அலுவலர் திரு.அமுதா தலைமை தாங்கினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க இணைசெயலாளர் திரு.குமரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் கலந்து கொண்டு ‘வெற்றியின் ரகசியங்கள்‘ என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது – “நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு நாள்தோறும் செயல்பட்டு வருகிறோம். ஆனால் வெற்றிக்கான சூட்சுமத்தை ஒரு சிலர் மட்டுமே தெரிந்துகொண்டு, அதைப்பின்பற்றி வெற்றி பெறுகிறார்கள். தினமும் நம்முடைய இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்ற பலத்த துடிப்புடன் செயல்பட்டால் வெற்றி தானாக கிடைத்துவிடும். பிரச்சினைகள் வரும்போது அதை எளிதாக தீர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன், சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு செயல்பட்டோம் என்றால் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெற முடியும். 4 மந்திரச் சொற்களை நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்தாலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளலாம். அவை தயவு செய்து, பொறுத்துக்கொள், வருத்தப்படுகிறேன், நன்றி என்பவைதான். அதேபோல வெற்றிக்கு அறிவு, மனப்பான்மை, திறமை, பழக்கவழக்கம் இவைகளை கடைபிடித்தலும் அவசியம். இவைகள் வெற்றிக்கு வித்திட்டாலும், நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயலில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி அடைந்து உயர்வான இடத்தை பிடிக்க முடியும்” இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில், பபாசியின் செயற்குழு உறுப்பினர் திரு.ராம.மெய்யப்பன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முனைவர். புலவர்.வை.சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தக கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட மாணவ–மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துரையிடுக