நெல்லை கவிநேசன் நண்பர் பேராசிரியர் ஜெப மெல்வின் சாதனை
அபூர்வ சேகரிப்பு : 1200 அரிய சிலுவைகள்
போற்றுதலுக்குரிய சிலுவையை எல்லோரும் பார்த்து வியக்கும் பொக்கிஷங்களாக சேகரித்து வைத்திருக்கிறார், பேராசிரியர் சி.எல்.ஜெபா மெல்வின். குமரி மாவட்டம், குழித்துறையை சேர்ந்த இவர் 1200 சிலுவைகளை சேகரித்துள்ளார். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், பிரான்சு, சீனா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற 22 நாடுகளில் இருந்து பெறப்பட்டவை.
சிலுவையில் இத்தனை விதங்களா என்று ஆச்சரியப்படும் விதத்தில் அவை இருக்கின்றன.
இந்த சிலுவை சேகரிப்புப்பற்றி பேராசிரியர் ஜெபா மெல்வினிடம் பேசுவோம்:
கேள்வி: சிலுவைகளை சேகரிக்கும் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?
“12 ஆண்டுகளுக்குமுன்பு எனக்கு இந்த எண்ணம் உருவானது. நான் சேகரிக்க தொடங்கியபோது காவிரி உருவாகும் குடகு, டோர்னலி என்ற பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலய விழாவில் விதவிதமான 60 சிலுவைகள் கிடைத்தன. இது எனக்கு அதிக உத்வேகத்தை கொடுத்தது”.
கேள்வி: சிலுவையை நீங்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?
“நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன். அதற்காக மட்டும் சிலுவையை நேசிக்கவில்லை. சிலுவை என்பது ஏசுபிரான் அறையப்படுவதற்கு முன்புவரை தண்டனையின் அடையாளமாக இருந்தது. ஏசுபிரான் அதை சுமந்ததால் புனித சின்னம் ஆனது. இன்று அன்பின் அடையாளம். மன்னிப்பு, நீதி, பொறுமை, தியாகம், வெற்றி, நன்மதிப்பு ஆகியவற்றின் சின்னம். எனவே, சிலுவை மதத்தின் அடையாளமாக இல்லாமல் உலக மக்கள் போற்றும் மனிதத்தின் அடையாளமாக இருக்கிறது. அதனால்தான் இதனை நான் கண்காட்சியாக வைக்கிறேன். எல்லா தரப்பு மக்களும் இதனைப் பார்த்து வியக்கிறார்கள். பாராட்டுகிறார்கள்”.
கேள்வி: நாட்டுக்கு நாடு சிலுவை மாறுபடுகிறதா?
“இல்லை. உலகம் முழுவதும் சிலுவை என்றால் ஒன்றுதான். ஆனால், கிறிஸ்தவ அமைப்புகளுக்கிடையே சிலுவையில் வித்தியாசம் உண்டு. சீரோ மலபார் சிலுவை, லுத்தரன் சிலுவை என்று தனித்தனி அடையாளங்கள் காணப்படுகிறது. அதைப்போல குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த அருட்கன்னியர்கள், அருட்தந்தையர்கள் பயன்படுத்தும் சிலுவைகளிலும் வித்தியாசங்கள் உள்ளன”.
கேள்வி: உங்களிடம் இருக்கும் வித்தியாசமான சிலுவைகள்?
“1¼ அடி உயரத்திலான, ஏசுவின் சிலுவைப்பாடுகள் சித்தரிக்கப்பட்ட சிலுவை வித்தியாசமானது. சிலுவைப்பாட்டின் 14 நிகழ்வுகளும், அதில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. நடுவில் வித்தியாசமான சிலுவை 1¼ அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதுபோல் நிறைய வித்தியாசமான சிலுவைகள் இருக்கின்றன”.
கேள்வி: சிலுவையில் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறீர்களா?
“சிலுவை சேகரிப்பில் மட்டுமே நான் அக்கறை கொண்டிருக்கிறேன். அவற்றின் பழமை பற்றி இன்னும் ஆராய தொடங்கவில்லை. இருப்பினும் 80 ஆண்டு பழமையமான ஒரு சிலுவை உள்ளது. அதை நாகர்கோவிலைச் சேர்ந்த உறவினர் ஒருவர் தந்தார்”.
கேள்வி : நீங்களாகவே பல இடங்களுக்கும் சென்று வாங்குவீர்களா?
“இல்லை. எனது ஆர்வத்தை அறிந்த நண்பர்கள், உறவினர்கள் அவர்களாகவே தரத் தொடங்கினர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சிலுவைகள் கிடைக்கின்றன. என் மனைவியின் சகோதரி தென் ஆப்பிரிக்காவில் அருட்சகோதரியாக பணியாற்றினார். அவர் பயன்படுத்திய வித்தியாசமான சிலுவையையும் தந்திருக்கிறார். பிஷப் ஒருவர் பயன்படுத்திய சிலுவையும் எனக்குக் கிடைத்தது. குமரி மாவட்ட சி.எஸ்.ஐ.பேராயத்தின் முன்னாள் பிஷப் ஜி.கிறிஸ்துதாஸ் பயன்படுத்திய சிலுவை அது. அதை நான் பெரும் பொக்கிஷமாக கருதுகிறேன்”.
கேள்வி: ஆலயங்களின் சிலுவை, கல்லறைகளின் சிலுவை என்று வேறுபாடு உண்டா?
“அப்படியெல்லாம் இல்லை. எந்தவித சிலுவையானாலும் சரி அதை எங்கும் பயன்படுத்தலாம். சிலர் சிலுவையின் விளிம்பை வித்தியாசமாக அழகுபடுத்தியிருப்பார்கள். சிலர் வித்தியாசமாக வடிவமைத்திருப்பார்கள். அதனால்தான் அதை அன்பின் அடையாளம் என்று சொல்கிறேன்”.
கேள்வி : உங்கள் சேகரிப்பில் எத்தனை விதமான உலோகங்களிலான சிலுவைகள் உள்ளன?
“தங்கம், வெள்ளி, இரும்பு, பித்தளை, அலுமினியம் போன்றவற்றால் செய்யப்பட்ட சிலுவைகள் உள்ளன. மரம், தென்னைநார், பிளாஸ்டிக், பைபர், கண்ணாடி மற்றும் கல்லில் செய்யப்பட்ட சிலுவைகளையும் வைத்திருக்கிறேன். சிரட்டையில் செய்த சிலுவையும் உள்ளது. 22 வகையான பொருட்களில் தயாரிக்கப்பட்ட சிலுவைகள் என்னிடம் உள்ளன. ½ அங்குல சிலுவை முதல் ¼ அடி உயரம்வரை இருக்கிறது”.
கேள்வி : உங்களுக்கு ரொம்பவும் பிடித்த சிலுவை எது?
“குறிப்பிட்டு சொல்வது கடினம். இருப்பினும் படிகக்கல்லில் செய்யப்பட்ட சிலுவை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னிடம் ஒரே மாதிரி சிலுவைகள் ஒன்றுக்கும் மேல் இருந்தால் யார் கேட்டாலும் கொடுத்துவிடுவேன். அது அன்பின் அடையாளம் என்பதால் பகிர்ந்துகொள்வேன்”.
கேள்வி: இந்த சேகரிப்புமூலம் உங்களுக்கு கிடைத்திருக்கும் பெருமை?
“கிறிஸ்தவ சபை மக்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். சிலுவை சேகரிப்பு எனக்கு சிறந்த அங்கீகாரத்தை பெற்று தந்திருக்கிறது”.
ஜெபா மெல்வின் சிலுவை சேகரிப்பு பணிக்கு அவருடைய மனைவி மெட்டில்டா, மகள் அன்சி இவாஞ்சலின், தந்தை செல்லதம்பி, தாயார் லிசி ஆகியோரும் உறுதுணையாக உள்ளனர். மனைவி மெட்டில்டாவும் கல்லூரி பேராசிரியைதான். கணவரும், மனைவியும் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் பணிபுரிகிறார்கள்.
ஜெபா மெல்வினுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது மகள் அன்சி இவாஞ்சலின். அதனால் சிலுவை சேகரிப்பு பணியை மகளிடமே ஒப்படைத்துவிட்டதாக ஜெபா மெல்வின் கூறினார்.
செய்தி : தினத்தந்தி.
புகைபடங்கள்
Thanks a lot dear Sir !!!
பதிலளிநீக்குகருத்துரையிடுக