கல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்

கல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார்
 - நெல்லை கவிநேசன்




“எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது முதுமொழி.

“தமிழ் சமுதாய மக்கள் அனைவரும் படிப்பறிவு பெறவேண்டும்” – என்ற நல்ல நோக்கத்தோடு மிக எளிய, இனிய தமிழில் பத்திரிக்கைமூலம் எழுத்தறிவைக் கொடுத்து, இன்று இறைவனாகத் திகழ்பவர் அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.

1942 – ஆம் ஆண்டு “தினத்தந்தி” ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழக மக்களில் பலர் கல்வியறிவில் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். அன்றைய சூழலில் ஒவ்வொரு ஊரிலும் ஒருசிலர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். அந்தநிலையில், “அனைவருக்கும் செய்திகள் தெரியவேண்டும், அனைத்துத் தகவல்களையும் தமிழ் மக்கள் பெற வேண்டும்” – என்ற நல்ல எண்ணத்தோடு தினத்தந்தி வெளியிடப்பட்டது. 

“பேச்சுத் தமிழை கொச்சை நீக்கி எழுத வேண்டும்” – என்ற தினத்தந்தியின் பொற்சட்டத்தை உருவாக்கியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்கள். அவரது வழியில்நின்று தினத்தந்தியை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடவைத்த பெருமை அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களைச் சாரும். தினத்தந்தியில், மிக எளிய தமிழில், எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் செய்திகள் அமைந்ததால், கல்வியறிவு பெற வேண்டும் என்ற உணர்வோடு தமிழர்களில் பலர் படிக்க ஆரம்பித்தார்கள்.

எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியாத தமிழனையும் ஏடெடுத்து படிக்கவைத்தப் பெருமை “தினத்தந்தி”யைச் சாரும். “ஒரு பத்திரிக்கைமூலமும் கல்வி அறிவைப் பரப்ப இயலும்” – என்பதை “தினத்தந்தி” நிரூபித்துக் காட்டியது.

தமிழர்கள் அனைவரையும் படிக்கவைத்தப் பெருமை தினத்தந்திக்கு உண்டு. ஒரு சமுதாய மாற்றத்தை சப்தமில்லாமல் செய்துகாட்டிய தினத்தந்தி, மாணவ – மாணவிகளுக்கு இளம்வயதிலேயே படிக்கும் ஆர்வத்தை உருவாக்கத் திட்டமிட்டது. 1962–ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெறுபவர்களுக்கு 1,000/- ரூபாய் பரிசை தினத்தந்தி அறிவித்தது. இதன்மூலம், தினத்தந்தியைப் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற மாணவ – மாணவிகள் முயற்சி செய்தார்கள்.

1992–ஆம் ஆண்டு தினத்தந்தியின் “பொன்விழா” கொண்டாடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் பரிசுத்தொகை அப்போது 5 மடங்காக உயர்த்தப்பட்டது. மேலும், ஆறுதல் பரிசு பெறுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவருக்கு 2,500 ரூபாய் ரொக்கப்பரிசும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறுபவருக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. இதன்மூலம் “தினத்தந்தியின் பரிசைப் பெறவேண்டும்” – என்ற உணர்வோடு மாணவ–மாணவிகள் அதிக ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தனர்.

2005 – ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெறுபவருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. இதேபோல், ஆறுதல் பரிசு 5 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெறுபவருக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், பதக்கமும் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கான பரிசுத்தொகை 10 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுகள் இன்றும் தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. 

மாணவ – மாணவிகள் முயன்று படித்து, வெற்றிபெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு 2003 – ஆம் ஆண்டுமுதல் தமிழகத்தில் மாவட்ட அளவிலும் பரிசுகள் ‘தினத்தந்தி’ சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெறும் மாணவருக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், மூன்றாம் இடம் பெறுபவருக்கு 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள்தோறும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி முதல் மாணவரை உருவாக்கிய பள்ளிக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

கடந்த 54 ஆண்டுகளாக மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசும், பதக்கமும், சான்றிதழும் வழங்கி, கல்வியில் மாணவர்களுக்கு ஆர்வத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்திவந்த தினத்தந்தி, 2015-2016ஆம் கல்வியாண்டுமுதல் 10ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மேற்படிப்புக்கு செல்ல வசதியற்ற நிலையிலுள்ள ஏழை மாணவ&மாணவிகளின் விண்ணப்பங்களைப் பெற்று, அந்த விண்ணப்பங்களின்மீது நேரில்சென்று அவர்களின் பொருளாதார நிலைபற்றி ஆராய்ந்து, ஏழ்மைநிலையில் உள்ள மாணவர்களை மாவட்டத்திற்கு 10 பேர் வீதம், 34 மாவட்டத்திற்கு (புதுச்சேரி, காரைக்கால் உள்பட) 340 பேர் தேர்வு செய்யப்பட்டு, 34 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி, ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது தினத்தந்தி.


கல்வி வளர்ச்சிக்காக அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பல வழிகளில் சேவை செய்துள்ளார்கள். தினத்தந்தியில் 2003–2004 ஆம் கல்வி ஆண்டுமுதல் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக் வினா–விடை புத்தகம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம்முதல் பிப்ரவரி மாதம்வரை புதன்கிழமைதோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தை மாணவர் முன்னேற்றம் கருதி செலவிட்ட வள்ளலாக அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் விளங்கினார்கள்.

மாணவ–மாணவிகள் வளர்ச்சிக்கு வாரந்தோறும் “தினத்தந்தி” உதவி வருகிறது. ஓவ்வொரு வாரமும் திங்கட்கிழமைதோறும் “மாணவர் ஸ்பெஷல்” என்ற 4 பக்க சிறப்புப் பகுதிகள் வெளியிடப்படுகின்றன. இதன் முதல்பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளின் எழுத்து மற்றும் ஓவியத் திறமைகளை வளர்க்கும் வகையில் அவர்களது படைப்புகளை மாணவ–மாணவிகளின் படத்தோடு பிரசுரிக்கிறார்கள். வேலை வாய்ப்பு செய்திகள் என்னும் இரண்டாம் பகுதியில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் என்னென்ன வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? என்ற தகவல்கள் இடம்பெறுகின்றன. கல்விச் செய்திகள் என்னும் பகுதியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர்பதவியை பெறுவதற்கான வழிமுறைகள், “பெர்சனாலிட்டியை வளர்ப்பதற்கான எளிய முறைகள்”, பொதுஅறிவு தகவல்கள், கல்வி நிலையங்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. “கம்ப்யூட்டர் ஜாலம்” என்னும் பகுதியில் புத்தம்புதிய கண்டுபிடிப்புகள், கம்ப்யூட்டர் துறையில் ஏற்படும் தற்கால மாற்றங்கள் ஆகியவை எளிய தமிழில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் இடம்பெறுகிறது. இந்த “மாணவர் ஸ்பெஷல்” பகுதியால் மாணவ–மாணவிகள் தங்கள் தகுதியையும், திறமையையும் வளர்த்துக்கொள்ள சிறப்பான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

தினத்தந்தியின் கல்விச் சேவையைப்போலவே, நேரடியாக மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் திட்டமிட்டார்கள்.

ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின் தலைவராக இருந்து திருச்செந்தூரில் பல கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள். இதனால், ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவ – மாணவிகள், கல்வியில் உயர்ந்து வாழ்க்கையில் சிறந்து விளங்குகிறார்கள். பாட்டாளியையும் படிப்பாளியாக்கியப் பெருமை அய்யா அவர்களைச் சாரும்.

திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின் சார்பில் பல கல்லூரிகள் இயங்குகின்றன. கலை, அறிவியல் பட்டப்படிப்புகளை வழங்கும் விதத்தில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிந்தமாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளும் இயங்குகின்றன. பொறியியல் படிப்பை கிராமப்புற மாணவ – மாணவிகள் எளிதில் கற்கும் வழியில் உலகத்தரம் வாய்ந்த பொறியியல் கல்வியை வழங்க 1995–ஆம் ஆண்டுமுதல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இயங்குகிறது. 

இந்திய விளையாட்டுத் துறையை ஒலிம்பிக் அளவுக்கு உயர்த்தி, பல தங்கப்பதக்கங்களை பெற்றுத்தந்த பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பெயரில் சிறப்புவாய்ந்த உடற்கல்வியியல் கல்லூரி திருச்செந்தூரில் 1993–ஆம் ஆண்டுமுதல் இயங்குகிறது. இங்கு உடற்கல்வியியல் பற்றிய பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் 1995–1996 ஆம் கல்வி ஆண்டுமுதல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியும், 2004 – 2005 ஆம் கல்வி ஆண்டுமுதல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மருத்துவச் சேவை செய்வதற்கு தகுதியானவர்களை உருவாக்கும் விதத்தில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி 2011–ஆம் ஆண்டுமுதல் நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது. இதுதவிர 1992–ஆம் ஆண்டுமுதல் போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ–மாணவிகளுக்கு உதவும் வகையில் “சிவந்தி அகாடமி” என்னும் பயிற்சி நிறுவனமும் திருச்செந்தூரில் செயல்பட்டு வருகிறது.

கல்விச்சேவைமூலம் தமிழக மக்களின் கல்வித்தரம் உயர அரும்பாடுபட்ட அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் 1981–ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் 1984–ஆம் ஆண்டு ஜனவரி மாதம்வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழக “செனட்” உறுப்பினராகி சிறப்பாக பணியாற்றினார்கள். மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் “சிண்டிகேட்” உறுப்பினராக 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்முதல் 1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்வரை பதவி வகித்தார்கள். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் “செனட்” உறுப்பினராக 1984–ஆம் ஆண்டு மார்ச் மாதம்முதல் 1986–ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை கல்விச் சேவை புரிந்தார்கள். 1987–செப்டம்பர் மாதம் முதல் 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்வரை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் “செனட்” உறுப்பினராக பதவி வகித்தார்கள். மீண்டும் இந்தப் பல்கலைக்கழகத்தில் 1998-ஆம் ஆண்டு மார்ச் மாதம்முதல் செனட் உறுப்பினராக மூன்று ஆண்டு பதவி வகித்தார்கள்.

அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் 20.09.1994 முதல் சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக 3 ஆண்டுகள் பதவி வகித்தார்கள். சென்னையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் ஆட்சிக்குழுவின் உறுப்பினராகவும், சென்னை, “நல்லழகு பாலிடெக்னிக்” என்னும் கல்வி நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்கள். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகிலுள்ள “சங்கர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலிடெக்னிக்” என்னும் கல்வி நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராகப் பதவி வகித்தார்கள்.

இவைதவிர – தஞ்சாவூரிலுள்ள மணலி ராமகிருஷ்ணா முதலியார் பாலிடெக்னிக் ஆட்சிமன்றக்குழுவின் தலைவராகவும், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆட்சி மன்றக்குழுவின் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டார்கள்.

திருச்செந்தூரில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, கிராம மக்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு “டாக்டர்” பட்டங்களை பல பல்கலைக்கழகங்கள் வழங்கி பெருமைப் பெற்றுள்ளன.

1994–ஆம் ஆண்டு நவம்பர் 4–ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், 1995–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25–ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 2004–ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31–ஆம் தேதி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2007–ஆம் ஆண்டு நவம்பர் 12–ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகம், 2011–ஆம் ஆண்டு மார்ச் 2–ஆம் தேதி சென்னையிலுள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்கள் அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு “டாக்டர்” பட்டத்தை வழங்கியுள்ளது.

2008–ஆம் ஆண்டு மே மாதம் 5–ஆம் தேதி அய்யா டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு இதழியல் (Journalism), இலக்கியம் (Literature) மற்றும் கல்வி (Education) ஆகிய துறைகளில் அய்யா ஆற்றிய தன்னகரில்லா சேவையையும், பங்களிப்பையும் பாராட்டி, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திருமதி.பிரதீபா பாட்டீல் “பத்மஸ்ரீ” பட்டத்தை வழங்கினார்.
       
விளையாட்டுத் துறையின் சிறந்த சேவைக்காக சீனாவில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் உயரிய விருதான “ஓ.சி.ஏ. அவார்டு ஆஃப் மெரிட்” என்ற விருதை அய்யா பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் வழங்கி சிறப்பித்துள்ளார்.

அய்யா பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் கல்விச் சேவையில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, இன்றும் வழிகாட்டுவதால் கல்வியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து வருகிறார்.

Post a Comment

புதியது பழையவை