மாரி என்னும் மழை வெள்ளம்.

 நூல் விமர்சனம்







நூலின் பெயர்:          மாரி என்னும் மழை வெள்ளம்.

நூலாசிரியர்:               காமராசு செல்வன்.

விலை:                                 ரூபாய் 330.

முதல் பதிப்பு:         2025.

வெளியீடு:             பொன் சொர்ணா

                                        6/349, சிவந்திபட்டி ரோடு

                                        செய்துங்கநல்லூர்.

                                        தூத்துக்குடி மாவட்டம்- 628 809

                                        அலைபேசி எண்கள் :87609 70002, 94428   34236.




    "பிரமிப்பு ஊட்டும் இந்த நூல் தமிழர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூலாகும்" என தனது பதிப்புரையில் அற்புதமாக பாராட்டியுள்ளார், பொன் சொர்ணா பதிப்பக படிப்பாசிரியர் அபினேஷ் விக்னேஷ்.

    "மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் ஒரு ரயில் நிலையத்தில் வெள்ளத்தின் போது ரயில் சேவை நிறுத்தப்படுவதும் கூட இயல்பான ஒன்றே ஆனால் 800 பயணிகளுடன் ஒரு ரயில் ஒரு ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட ரெண்டு நாட்களுக்கும் மேலாக வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டது இங்கேதான் திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்பு பணியினர் கூட மீட்க முடியாமல் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கி அவர்களே கயிறு கட்டி கர்ப்பிணி பெண்ணை மீட்ட சம்பவமும் தேசத்தையே உலுக்கிய சம்பவங்கள் அதை அப்படியே காட்சிப்படுத்தி காட்டுகிறார் நூலாசிரியர்"- என மனந்திறந்து பாராட்டுகிறார், நூல் அணிந்துரையில் பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்கள்.

    "இந்த புத்தகத்தை மழை வெள்ளத்தால் ஏற்பட்ட விளைவுகளின் கண்ணாடி எனலாம்" -என உள்ளம் உருகி பாராட்டுகிறார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர் அவர்கள்.

    பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தனது வாழ்த்துரையில் " எனது சிஷ்யன் சில நண்பர்களுடன் செய்துங்கநல்லூரில் இருந்து தண்டவாளம் வழியாக தாதன்குளத்தினை கடந்து சென்றுள்ளார். பல இடங்களில் பிரிந்து கிடந்த ரயில் தண்டவாளம் மீது உயிரை பணயம் வைத்து நடந்து சென்றுள்ளார். அங்கிருந்து தண்டவாளம் வழியாக நடந்து சென்ற மக்களை தாதன் குளத்தில் வைத்து பேட்டி எடுத்து ஊடகங்களின் வழியாக தெரிவித்தார். இந்தப் பயணத்தில் நிறைய பேர் பணிபுரிந்தார்கள் பல ஊடகத்தினர் காத்துக்கிடந்து செய்தியை வெளியிட்டனர் ஆனால் அதை நூலாக்கும் பாக்கியம் எனது சிஷ்யனுக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த நூலில் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களின் பணிகளையும் பதிவு செய்துள்ளார். இதுவே அவனின் நேர்மை நிலைக்கான சான்றுகளாகும்' -என உண்மை நிகழ்வுகளை உரக்கச் சொல்லியுள்ளார்.

    இந்தப் பாராட்டுரைகள் எழுத்தாளர் காமராஜர் செல்வனின் உழைப்பையும், நேர்மையையும் திறமைகளையும் பறை சாற்றுகின்றன.

    மொத்தம் 29 பொருளடக்க தலைப்புகளில் இந்த நூல் வெளிவந்துள்ளது.

    நூலின் முதல் கட்டுரை "தமிழகத்தில் வீசிய புயல் ,மழைகள் பற்றிய விரிவான தகவல்களை எடுத்துரைக்கிறது.

    2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த தொடர் கனமழையையும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும், மக்களின் துயரங்களையும், கவலைகளையும், வெள்ள சேதங்களையும், நிவாரண உதவிகளையும் அப்படியே படம்பிடித்து காட்டுகிறார் காமராசு செல்வன்.

    மழை வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம் பத்மநாப மங்கலம் சாலை அடித்து செல்லப்பட்ட நிகழ்வை காட்சிப்படுத்தி விளக்குகிறார்.

    கட்டுரைகளின் நடுவே நகைச்சுவையையும் அள்ளித் தெளித்திருக்கிறார். ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் போன்ற திரைப் பிரபலங்களையும் இடையிடையே நினைவு கூறுகிறார்.

     தனது குருநாதர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களை நூலில் பல இடங்களில் குறிப்பிட்டு அனுபவங்களை பகிர்கிறார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று தான் கண்ட காட்சிகளை எழுத்தாக மாற்றிய காமராசு செல்வன் தனது உயிரையும் பொருட்படுத்தாது சமூக சேவையில் ஈடுபட்டிருப்பது நூலுக்கு பெருமை சேர்க்கிறது.

    தான் பணி புரியும் ஸ்டூடியோக்கள் மலையனூர் புகுந்த பின்பும் அவரது பணி உற்சாகத்தோடு தொடர்ந்தது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

    மழை வெள்ள நாட்களில் நடந்த நிகழ்வுகளை அப்படியே விளக்கி நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார் எழுத்தாளர் காமராஜர் செல்வன்.

    மாண்புமிகு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தாசில்தார் கோபால கிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜாஃபர் அலி, இயக்குனர் மாரி செல்வராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள்-என பலரின் தன்னலமற்ற சேவையை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி நூலில் பாராட்டியுள்ளார்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாஃபர் அலி வெள்ளத்தின் போது செந்தூர் எக்ஸ்பிரஸ் சுமார் 800 பயணிகளின் உயிரை காப்பாற்றியதற்காக மதிப்புமிக்க ரயில்வே வாரிய விருதான அதிர்ஷ்ட ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வையும் புகைப்படத்தோடு வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

முக்கியமான மழை வெள்ள காட்சிகளை புகைப்படம் ஆகவும் வெளியிட்டுள்ளார்.

சாகித்திய அகாடமி போன்ற எழுத்தாளர்களுக்கான உயர்ந்த பரிசுகள், கற்பனையை விற்பனை செய்யும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், உண்மை நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும் முத்தாலம்குறிச்சி காமராசு அவர்களின் சிஷ்யன் காமராசு செல்வன் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது வாசகர்களின் கருத்து என்பது மறுக்க முடியாத உண்மையாகும்

v                                                               ---நெல்லை கவிநேசன்---

---------------------------------



 


Post a Comment

புதியது பழையவை