*என் அம்மா* ( சிறுகதை)

 

*என் அம்மா* ( சிறுகதை)

_ த.ஜான்சிபால்ராஜ்.

திருநெல்வேலி



.

       "டேய்...விக்கி....நான் சொல்றது உண்மைடா".என்றான் தினேஷ்.

  "இல்ல...இருக்கவே முடியாது.என் அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியும்.நீ பேசாமல் போய்டு"என்ற விக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

   "இரண்டுநாளுக்கு முன்னால கூட,  உங்க அம்மாவை அவரோட சிவாஜிநகர் லைப்ரரில் பார்த்தேன். நான்தான் நீ வந்ததும், வராததுமா இதைக் கேள்விபட்டா வருத்தப் படுவேன்னு உங்கிட்ட சொல்லல.நீ லாஸ்ட் இயர் இங்க வந்துட்டுப் போன பிறகு இந்த நான்கைந்து மாதமா ஒவ்வொரு முறையும் உன்னோடு போனில் பேசும்போதெல்லாம்  இதை உங்கிட்ட சொல்லணும் போலவே இருக்கும்.ஆனா.. ஏதோ ஒன்னு என்னைத் தடுத்திடும். நீ வந்த பிறகு சொல்லிக்கலாமுன்னு இருந்திடுவேன்"என்ற  தினேஷ் சற்றுத் தயக்கத்தோடு  விக்கியைப் பார்த்தான்.

     "நோ..... ஐ கான்ட் பிலிவ்...!"என்றபடி மீண்டும் திரும்பி நின்று கொண்டான் விக்கி.எரிச்சலில் முகம் சுருங்கியிருந்தது.

     "சரி சரி,விடு. நீயே தெரிஞ்சுக்குவ".

"இப்ப நான் போறேன்டா. லதா ஒரே போனா...அடிக்கிறா..இன்னும் லேட்டானா கொன்னுடுவா.பட்... யூ பி ஹப்பி..ஓகே? தோளைத் தட்டியபடி வண்டியில் ஏறி கிளம்பினான் தினேஷ்...அது மெல்ல நகர்ந்தது.

     நின்று கொண்டிருந்த அந்தப் பூங்காவில் எங்கோ ஒரு திசையில் எந்த உணர்வுமின்றி பார்வையை  வெறுமையாய்ச் செலுத்தினான்,விக்கி.

  சில வினாடிகளில் அவனது  நெற்றியைச் சுருக்கி  நிலைக்குத்தி நிற்க வைத்தன. அவனது கண்கள்.உதடுகள் தானாய்ப் பிளந்து கொண்டன...!

   தொலைவில் தெரி்ந்த அந்தச் சிமெண்ட் இருக்கையில் அவர்கள் இருவரும் ஓரடி இடைவெளியில் அமர்ந்திருந்தனர்.

  தினேஷ் சொன்ன அத்தனை அடையாளங்களும் அப்படியே இருந்தது அந்த மனிதருக்கு..!

    ஆனால், அவன் சொன்னபோது மனத்தில் படிந்த அந்தக் கற்பனை உருவத்தைவிட  அதிகமாகவே அழகு அவரது நிஜ தோற்றத்தில் தொற்றிக்கொண்டிருந்ததாய் உணர்ந்தான்.

  "அதுசரி,என் அம்மாவா அவர் அருகில் இருப்பது!?" புதிதாகப் பார்ப்பதைப் போல் அவளைப் பார்த்தான்.

 ஐம்பத்தைந்தைத் தாண்டியவள் என்று வேறு எவராலும் கூறிவிட முடியாது. எப்போதும் இருப்பதைவிட ஒருபடி அதிக வனப்பும் அமைதியும் அவள்  முகத்தில் அப்போது தெரிந்தது அவனுக்கு.!

    சற்று நகர்ந்து  தன்னை அவர்கள் பார்த்துவிடக் கூடாதென்று அருகிலிருந்த பசுஞ்செடிகளின் மறைவில் நின்று கொண்டான். இப்போது அவர்கள் இருவரது உருவமும் தெளிவாகத் தெரிந்தது .அவர் ஏதோ பேசினார். அம்மா புன்னகைத் தவழ, அதற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தாள். அந்தப் புன்னகையில் அம்மாவின் இளம்பருவத்தின் சாயல் பளிச்சிட்டதைப் பார்த்தான்.

 "இருவருமே ஒருவரையொருவர் முகம்பார்த்துப் பேசிக்கொண்டதைப் போல் தெரியவில்லை.

 "பார்ப்பவர்கள்   சந்தேகித்துவிடக் கூடாதென்ற அவர்களது முதிர்ந்த எண்ணங்களாக இருக்கலாம்" என்றது அவனது மனம்!

     அம்மாவோடு இருந்த அந்த மனிதர் நல்ல அடர்ந்த கருப்பு. தலைமுடி இன்னும் அடர்த்திக் குறையாமல் முக்கால்வாசி வெள்ளையாய் காற்றில் மெல்ல அவ்வப்போது அசைந்தபடி இருந்தது.இடதுபுறம் உச்சி வகுந்து நேர்த்தியாய்ச் சீவியிருந்தார்.

   வயது அறுபதை தாண்டியிருக்கும் அவருக்கு.அந்த இருக்கையில் இரண்டு பக்கமும் கைகளை ஊன்றியபடி நிமிர்ந்து அமர்ந்திருந்தார்.பேசும் போதெல்லாம் அடிக்கடித் தலையைக் கீழே கவிழ்த்துத் தரையைப் பார்த்துக் கொண்டார்.

     தொலைவிலிருந்து பார்க்கும்போதும் அவரது பற்களின் வெண்மையை மட்டும் முகத்தில் மிகத்தெளிவாகப் பார்க்க முடிந்தது. 

   நல்ல உயரம் , அளவான பருமன். மீசைமுடிகளும் தலைமுடிகளோடு போட்டியிட்டு நரைத்து விறைத்து நின்றன.ஆனாலும் ஒருவிதமான அழகிய ஆளுமை அவரது உடல்மொழியில் தெரிந்தது. 

"அம்மாவை இதுதான் கவர்ந்து விட்டதோ...!?சேச்சே... இருக்காது நல்ல நண்பர்களாக இருக்கலாம்."-ஏற்கமறுத்த அவனது  ஆழ்மனம்  பெருமூச்சொன்றை வேகமாய் வெளியேற்றியது.

  அப்பா திடீரென இறக்கும் போது, எனக்குப் பதிமூன்று வயது. எனக்குத் தெரிந்து அம்மாவை மறுமணம் செய்ய விரும்பியவர்கள் நான்கைந்துபேர் இருந்தனர். 

    அப்போதெல்லாம் 'இனி எனக்கு எதுவும் தேவையில்லை. என் மகனுக்காக மட்டுமே வாழ விரும்புகிறேன்' என்ற பதிலையே எனது மாமன்மார்களிடம் கூறி திருமணத்தை நிராகரித்தவள்.

 "பிறகு இந்த வயதிலேயா....இப்படி?! நம்ப முடியாமல் குழம்பினான்.

    சிந்தனையை உதறிவிட்டு மீண்டும் அவர்களைத் தேடினான்...

    இருவரும் எழுந்து விட்டனர்.

     அம்மா முன்னால் நடக்க, பின் தொடர்ந்தார் அவர்.இருவரும் பூங்காவின் வெளிவாசலுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டே செல்வதும் தெரிந்தது.

 நடையிலும்,பேச்சிலும் நிதானம். மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தனர். பிரிவு யாருக்குத்தான் பிடிக்கும்? அந்நிலையிலும் அவனது ஆரம்பக் காலக் காதல் நினவுகள் வந்து போனது அவனுக்குள்.!

  இருந்தாலும் .... அவனால் அம்மாவின் இந்த மாற்றத்தை சீரணிக்கவே முடியவில்லை .

  அவர்கள் அமர்ந்திருந்த அதே இருக்கையருகில் வந்து பூங்காவின் வெளியே அவர்கள் வெளியே செல்லும்வரை உன்னித்துக் கவனித்தான். அவர் வாசலருகே வந்த ஆட்டோவைக் கையசைத்து நிறுத்துவது தெரிந்தது. அம்மா ஒருமுறை அவரைப் பார்த்துவிட்டு உள்ளே ஏறினாள். அவர் சற்றுக் குனிந்துக் கையசைத்து அனுப்பி வைத்தார். ஆட்டோ மறையும்வரை நின்று பார்த்த அவர்...பின்னர் சாலையைக் கடந்து தனது வண்டி நின்ற பக்கமாக நடந்து சென்று ஏறுவதையும் கவனித்தான்.

   வெறுமையைச் சுமந்து விரிந்து கிடந்த அந்தச் சிமெண்ட் இருக்கையை மீண்டும் ஒருமுறைத் திரும்பி பார்த்தவன்... மௌனமாகத்  தனது வண்டியை நோக்கி நடந்தான்.இதயம் ஏனோ படபடத்து அமைதியடைய மறுத்துத் துடித்துக்கொண்டிருந்தது.

    அப்போது......

  சட்டைப்பையில் அலைப்பேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான், மனைவி லினோலியா. பதிலளிக்க விரும்பமின்றி அதை அணைத்து வைத்தான்.

      விக்கி மனைவி குழந்தைகளோடு அமெரிக்காவில் குடும்பமாக வாழ்கின்றனர்.ஆண்டிற்கு ஒருமுறை  இந்தியாவிற்கு வந்து அம்மாவோடு இருந்துவிட்டு செல்வது வழக்கம் . ஆனால் இந்தமுறை இவன் மட்டும்தான் வரவேண்டிய கட்டாயச் சூழலாகி விட்டது. 

    எந்தக் கவனமும் செலுத்தப்படாமலே அவனின் உடல் வண்டியை இயக்கி பதினைந்தே நிமிடத்தில் வீட்டில் கொண்டுவந்து நிறுத்தியது.

        வீட்டு வாசலில் ஒரு பைக் நின்றிருந்தது .கதவு திறந்திருந்தது. குழம்பிய பார்வையோடு உள்ளே சென்றவன். ஹாலில் இருந்த சோபாவில் அதே நபர் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தார். தூக்கிவாரிப் போட்டது விக்கிக்கு. படபடத்த இதயத்தை வெளிக்காட்டாமல் ...அவரை ஏறிட்டுப்பார்த்தான். அதற்குள் அம்மா காப்பி டம்ளரோடு...

    "இப்ப வந்திடுவான்"என்றவாறே கிச்சனிலிருந்து வந்தாள். 

விக்கியைப் பார்த்தவள்..."விக்கி உனக்காகத் தான் காத்திருக்கிறோம்" என்று அவளே முந்தி கொண்டு ....

     "இவர் ஜெயசேகர்",என்றாள்.

  அவன் அவரை அப்போதுதான் பார்ப்பதைப் போல்..ஹலோ என்று கைநீட்டினான். குதூகலப் புன்னகையோடு எழுந்து நின்று கைக்குலுக்கினார்...அவர். 

"விக்கி உங்களை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்"என்றார்,

புன்னகைத் தவழ..!

    "என்னையா...!?"

 "ம்....ஆமா.மொபைலில் தான்... போட்டோஸ்"என்றார் சுருக்கமான பதிலில்.

      "ஓ".......சிரித்துக் கொண்டான் லேசாக...விக்கி.

   "உட்கார்...விக்கி" என்றவள் இருவரின் அருகிலும் அமராமல் தனியாக மற்றொரு சோபாவில் சென்று அமர்ந்தாள்.

 அவர் , "தம்பி...!"என்றவர் சற்று குரல் மாற அதை மறைக்கமுயன்றார்.

    "சொல்லுங்க சார்" என்றான்...அவரை ஏறிட்டுப் பார்த்தவாறே.

   "நாங்க இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்; சேர்ந்துவாழ விரும்புகிறோம்". என்ற ஜெயசேகர்,அம்மாவைப் பார்த்தார். 

 அவளும் ஆமோதிப்பதைப் போல.. எந்தவிதச் சலனமும் காட்டாமல் லேசானப் புன்னகையோடு விக்கியைப் பார்த்தாள். 

   அந்தப் பார்வையில்... 'நீ அதை சந்தோசமாக ஏற்றுக் கொள்வாய் என்று அறிவேன்' என்ற நம்பிக்கை வேறூன்றி இருந்தது.

      அவர் மேலும்  தொடர்ந்தார்."ஒரு இரண்டு ஆண்டுகளாக நாங்க நண்பர்களாகப் பழகினோம். இப்போது ஒரு ஆறுமாதமாகத்தான் இந்த முடிவிற்கு வந்தோம்" என்றதில் தெளிவும் உறுதியும் மிளிர்ந்து நின்றன.

    "ஆமாம்" என்றாள் அம்மா. 

     அவர் தொடர்ந்து "என் மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு கேன்சரில் இறந்திட்டா" என்று கூறிக் கொண்டிருக்க..

   எதையோ எண்ணி பதிலேதும் பேசாமல் வினாடி நேரத்தில் இருவரையும் ஒருமுறை பார்த்தவன்... சட்டென தரையைப் பார்த்தபடி குனிந்துஅமர்ந்திருந்தான்.

அதுவரை அவனுக்குள் இருந்த அம்மா என்ற அந்த மொத்த ஆளுமையின் சாரமும் ஏதோ ஒன்றால் திரிந்து நின்றதைப்போன்று உணர்ந்தான்.

  "விக்கி... என்னாச்சுடா?" அருகில் வந்து அமர்ந்து, அவன் கையைப் பிடித்தவளின் குரலில் லேசான தடுமாற்றம்.

      "நிமிர்ந்து அம்மாவைப்பார்ரா... நீ இதை ஏற்றுக்குவன்னுதான் நான் நினைச்சிட்டேன்.இதில் உனக்கு விருப்பம் இல்லைன்னா நாங்க நண்பர்களாகவே இருக்கோம். உன் விருப்பம் இல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன்.ஏய் விக்கி, இங்க அம்மாவ பாரு.. பாரு ...பேசு..." என்றாள் அவனது தலைமுடியை வருடியபடி,அவள் குரலில் வலியும் வேதனையும் தொனித்தன.

 அவன் இதயம் கனத்து சோகம் மேலிட...முகம் விரக்தியில் தொங்குவதை மட்டும் உணர்ந்து கொண்டாள். 

 "விக்கி...நீ நினைப்பது எனக்கு புரியுதுடா...இந்த ஊரு..உலகம் என்ன நெனைக்குமுன்னுதானே...? நீ என்னோடு எனக்கென்று இருக்கும்வரை எதுவும் தெரியல.நீ அமெரிக்காபோன பிறகு முழுசா வாசிப்பு, கற்பனை, எழுத்துன்னு நேரத்தைப் போக்கினேன்.எதேச்சையாய் நம்ம ஊர் லைப்ரரியில் எங்களுக்குள்  ஏற்பட்ட இந்த நட்பு பிறகு அன்புத் தேடலாக மாறிடிச்சு.ஆனா...ஏன்னே தெரியலடா  இவரது மீதான நட்பை முழுமையாக எனக்கானதாக்க நான் நினைத்தது தவறுன்னு உனக்கு தோணுச்சுன்னா... நான் நிச்சயமா என் முடிவை மாத்திக்கிறேன்" 

    ஓரிரு வினாடிகள் இடைவெளியில் "ஆனா...ஆனா..விக்கி"என்று எதையோ சொல்ல வந்த அவளது மெல்லியக் குரலைத் துக்கம் அடைத்தது

 *நாங்க நட்பாகவும் இருக்க கூடாதுன்னு மட்டும் நினைச்சுடாதேடா.அம்மாவுக்கு இனி அது கஸ்டம்பா..."என்றவள், துக்கம் நிறைந்த விழிகளோடு ஜெயசேகரை பார்த்தாள். 

  வேகவேகமாக வடிந்தோடத் ததும்பிய கண்ணீரை அவசர அவசரமாய் விழுங்க முயன்றும் தோற்றுக்கொண்டிருந்தது அவரது கண்கள்.! 

   "அ...அ...அதெல்லாம் இல்லமா...நான் ...நீங்க..."என்று வார்த்தைகள் பொருளின்றி  புலம்ப... நிமிர்ந்து அமர்ந்தபடி அவளது முகத்தை உற்றுப் பார்த்தான் விக்கி. 

     சற்று நேரத்திற்கு முன்பிருந்த அவளது  முகக்களை அடியோடு பொலிவிழந்து போயிருந்தது.

அதிலிருந்த நம்பிக்கை வேர்கள் நலிவடைந்து அவனிடம் மன்னிப்புக் கோரி நின்றன.

வேதனையில் வெளியேறிய சுவாசம் வழிமாறி அவள் வாய்வழியே வெளியேறிக் கொண்டிருந்தது.

  எனக்காகவே வாழ்ந்தவள். எங்கோ பிறந்து வளர்ந்த ஒருத்தியைக் காட்டி... 'இவளை தான் விரும்புகிறேன்' என்று நான் சொன்னதும்.. எதுவும் கேட்காமல் திருமணத்தை முடித்து வைத்து பார்த்துப் பார்த்து இரசித்தவள். அவன் நினைவுகள் அவனைமீறி எங்கெங்கோ சென்று எதையெதையோ நினைத்து நினைத்துத் திரும்பியது. 

    "என் மகிழ்ச்சியையே தன் வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்த உனது இந்த மகிழ்ச்சியை நான் அழிக்க மாட்டேன்மா" ,என்று மனத்திற்குள்சொல்லிக்கொண்டான்.. .ஒரு முடிவுக்கு வந்தான்.. அதை சொல்ல வாயெடுத்தவன்,

       "அம்மா..."என்றதோடு  அவளது தோளில் முகத்தைப் புதைத்து விம்மினான். அவனைத் தேற்றியபடி...கண்ணீர் மல்க ஜெயசேகரையும் விழிகளால் ஆற்றுப்படுத்தினாள்.

 அவனது அலைப்பேசி மீண்டும் அழைக்க ,எடுத்துப் பார்த்தான்...தினேஷ்! அவன்முகம் லேசாக வெளிரியது. அணைத்து வைத்தான்.

    "அழாதம்மா... எனக்கு புரியுது"..என்றவன் அவளது முகத்தில் வடிந்திருந்த ஈரத்தைத் துடைத்தான்.மீண்டும் அலைபேசி அழைக்க.... இந்தமுறை அதை எடுத்து காதில் வைத்தான்.

     " தினேஷ்..."

"சொல்லுடா விக்கி, வீட்டுக்குப் போய்ட்டியா, இன்னும் பார்க்கிலேயே தான் நிற்கியா?"

     "வீட்டுக்கு வந்துட்டேன்டா ,உங்கிட்ட ஒன்னு பேசணும் வீட்டுக்கு வாயேன்"

    "என்ன பேசனும்டா...அவசரமா, நாளைக்கு வாறேனே..?

    "இல்ல ,உடனே வா ,முக்கியமான விசயம் உடனே பேசணும்"

    "என்ன விசயமுன்னு சொல்லுடா"

    *கல்யாண விசயமா தான் தினேஷ்

      "என்னது கல்யாணமா ,யாருக்குடா விக்கி!?

   "என் அம்மாவுக்குதான்டா" என்றவன் புன்முறுவலோடு சட்டென அதை அணைத்து வைத்தான்.அவனது முகத்தில் அடர்ந்திருந்த அதிர்ப்தியின் கீறல்கள் அகன்று கொண்டிருந்தன.

    விக்கியின் அந்தப் பதிலில் இருவரும் ஸ்தம்பித்து நிற்க..விக்கி எழுந்தான், எழுந்து ஜெயசேகர் அமர்ந்திருந்த இருக்கையருகில் சென்று தனது கையை நீட்டினான், அவர் எழுந்து நின்று  அவனையும் அவளையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவனது முகத்தில் மிகுந்திருந்த முழு மகிழ்ச்சியின் நிறைவை பார்த்தபடி....சொல்வதறியாமல்  கைக்கூப்பினார்....அவன் நெருங்கிச் சென்று அவரது தோளை வருட...இருவரும் அணைத்துக் கொண்டானர்.

 அந்த அணைப்பில் இதுவரை அனுபவியாத அன்பின் ஸ்பரிசம்....மறந்தேபோன தன் தகப்பனின் அரவணைப்பும், கண்ணியமும்...  அமைதியடைய செய்துக் கொண்டிருக்க...

    கண்ணீரைத் துடைத்தபடி அதீத மகிழ்வோடு இருவரையும் பார்த்தபடி எழுந்து நின்றிருந்தாள்..... அம்மா...!!


                              ----------------------------------------------------






Post a Comment

புதியது பழையவை