பாடியவர் : தன்யஸ்ரீ
ஆக்கியோன் : துரை நாகராஜன்
இசை : கண்மணிராஜா
ஒளிப்பதிவு : கோபி
ஒலிப்பதிவு : விஜயகுமார்
ஒலிப்பதிவுக் கூடம் : மெட்டா
ஒருங்கிணைப்பு : சுப்பிரமணியம்
தலைமை நிர்வாகம் : விஜயஜெயந்தி
காப்பு
ஆனை முகனே அன்னையே
பாகம் பகிர்ந்து கொடுத்தோனே
அடி தொழுது கந்தன் கவசம்
பாடுகின்றேன் ஏறுமயில் வேலவா
அல்லல் கொடுநோய் ஊழ்வினை
அணுகாமல் அருள்வாய் காப்பு!
கவசம்
சரவணபவ என்னும் மந்திரம் சொல்லி
சண்முக வேலனை மனதில் வேண்டி
தொடங்கிடும் காரியம் அனைத்திலும் வெற்றி
கிடைத்திட முருகா அருள்வாய் போற்றி
அழகிய காலை நண்பகல் இரவு
கந்தனின் அருளை பெறுவோம் தினமே
அன்பெனும் மலரால் அவனடி போற்றி
அறிவென்னும் சுடரினை பெறுவாய் மனமே
சந்திரன் இந்திரன் சகலரும் போற்றும்
சந்தன மார்பன் எங்கள் வேலன்
சக்கர மெனவே சுற்றிடும் வாழ்வில்
சங்கடம் தீர்ப்பான் சகலமும் தருவான் 12
செந்தில் நாதா சிங்கார வேலா
கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்
சரவணப் பொய்கை தாமரை மலரில்
சங்கரன் நெற்றி நெருப்பென விழுந்தான்
கார்த்திகை பெண்கள் கண்ணென வளர்ந்தான்
கையில் வேலுடன் சூரனை வென்றான்
கடலெனப் பொங்கும் பெருஞ்சினம் அழித்து
உடல் பொருள் ஆவி உள்ளத்தை காப்பான்
கடன்சுமை நீங்கி களிப்புடன் வாழ
கந்தன் முருகன் கடம்பன் அருள்வான்
ஆறு முகமும் அழகிய சிரிப்பும்
அஞ்சன விழியில் பொங்கிடும் அருளும்
ஐம்புலன் காத்து ஆறுதல் தருமே
வேலும் மயிலும் துணையாய் வருமே 24
செந்தில் நாதா சிங்கார வேலா
கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்
திருப்பரங் குன்றத்தில் ஒருமுகம் அருளும்
விருப்பங்கள் யாவும் விரைந்தே நடக்கும்
திருச்செந்தூரில் ஒருமுகம் அருளும்
சூழ்ந்திடும் பகையை வேருடன் அறுக்கும்
பழனி மலையில் ஒருமுகம் அருளும்
பக்தர்கள் வாழ்வில் அதிசயம் நிகழும்
சுவாமி மலையில் ஒருமுகம் அருளும்
சுடரென இருளைப் போக்கித் துலங்கும்
தணிகை மலையில் ஒருமுகம் அருளும்
தரணியின் இன்பம் அனைத்தையும் கொடுக்கும்
பழமுதிர் சோலையில் ஒருமுகம் அருளும்
நறுமண மலரென அறிவினை விரிக்கும் 36
செந்தில் நாதா சிங்கார வேலா
கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்
அறுபடை வீட்டில் அருள்கின்ற முகங்கள்
அமுத மழையினை பொழியும் முகில்கள்
தொழுது பணிந்தால் துயரங்கள் விலகும்
பழுதுகள் நீங்கி வாழ்க்கை துலங்கும்
நெற்றியில் நீறும் புத்தியில் வேலும்
தரித்தவர் வாழ்வில் பெருத்திடும் யோகம்
நெஞ்சினில் கந்தன் நினைப்பை வளர்த்திட
அருகினில் வரவே அஞ்சிடும் பேய்கள்
அலையும் மனது அடங்கிட வேண்டும்
தீரா மோகம் தீர்ந்திட வேண்டும்
தீந்தமிழ் தந்த திருவே முருகா
திருவருள் தந்து காத்திட வேண்டும் 48
செந்தில் நாதா சிங்கார வேலா
கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்
உச்சி பாதம் உந்தி உதிரம்
உள்ளும் புறமும் உறுப்புகள் யாவும்
வேதம் நான்கையும் விளம்பிடும் முருகா
நன்றாய் இயங்க நல்லருள் செய்வாய்
கொல்லும் கொடுநோய் பஞ்சம் பட்டினி
இயல்பை மாற்றும் இயற்கை சீற்றம்
காத்து கருப்பு அண்டா வண்ணம்
காக்கும் காக்கும் கந்தவேல் காக்கும்
காசம் காய்ச்சல் கரப்பான் அம்மை
வாதம் பித்தம் கபநோய் தீர்த்து
உடலெனும் சோலையில் உயிரென்னும் மலரை
வாழ்விக்கும் மருந்தே வடிவேல் முருகா 60
செந்தில் நாதா சிங்கார வேலா
கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்
சூழும் பகையினை சுடர்வேல் தடுக்கும்
வாழும் வழியினை வடிவேல் கொடுக்கும்
பன்னிரு கரங்கள் பாய்ந்தென்னை காக்கும்
பண்ணிய பாவத்தை பொடிப்பொடி யாக்கும்
உயிரால் உணர்ந்து அறியா தவையும்
உணர்வால் விளங்க முடியா தவையும்
உணர்ந்திடச் செய்யும் அறிவின் சுடரே
ஆறு முகனே அருட்பெரும் வடிவே
மாய மனதில் தெளிவினை தருவாய்
மர்மங்கள் யாவும் புரிந்திடச் செய்வாய்
உள்ளொளி தந்து நல்வழி காட்டி
அபயம் அளித்து ஆட்கொள்ளும் அரசே 72
செந்தில் நாதா சிங்கார வேலா
கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்
சக்தியின் மகனே சண்முக வேலா
என்னால் இயல்வது எதுவும் இல்லை
நிற்பதும் நடப்பதும் நிகழ்வதும் நீயே
நிம்மதி தந்தென்னை காப்பதும் நீயே
எல்லாம் நீயே எனக்குள் நீயே
இயக்கமும் விளக்கமும் இன்பமும் நீயே
ஆக்கல் அழித்தல் காத்தல் நீயே
அருளல் மறைத்தல் அனைத்தும் நீயே
சிக்கலும் நீயே தீர்வும் நீயே
கர்ம வினைப்படி விதிப்பதும் நீயே
நீயே கதியென நின்றவர் விதியை
மாற்றிடும் வல்லமை கொண்டஎன் குமரா 84
செந்தில் நாதா சிங்கார வேலா
கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்
திருமணத் தடைகள் நீங்கிட வேண்டும்
குழந்தை பேறு வாய்த்திட வேண்டும்
விரும்பிய கல்வி வேலை வாய்ப்பு
பொன்பொருள் யோகம் வசப்பட வேண்டும்
உலகியல் இன்பம் பெரிதென எண்ணும்
உள்ளத்தில் மாற்றம் நிகழ்ந்திட வேண்டும்
எல்லை யில்லா ஆனந்தம் தருவது
நின் திருவடி என்பதை உணர்ந்திட வேண்டும்
வழங்கிடும் வானம் பொய்த்திடும் போதும்
வாடிய பயிர்களை காத்திட வேண்டும்
வடிவேல் முருகன் நாமம் சொன்னால்
வரமாய் சாபமும் மாறிட வேண்டும் 96
செந்தில் நாதா சிங்கார வேலா
கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்
ஏழரை சனியின் தாக்கத்தை போக்கி
எழிலுடன் வாழ வைப்பாய் சரணம்
ராகு கேது பாம்பின் பிடியில்
தீது இன்றி காப்பாய் சரணம்
வியாதிகள் தருகின்ற வஞ்சித தோஷம்
துரோகத்தால் விளையும் கல்பித தோஷம்
இன்னும் இருக்கின்ற தோஷங்கள் யாவும்
யோகங்கள் ஆகிட அருள்வாய் சரணம்
விதிவழி வினைதரும் அல்லல்கள் நீங்க
இனியொரு பிறவி இல்லா நிலையும்
பிறந்தால் உன்னை மறவா நிலையும்
தந்தருள் செய்வாய் கந்தா சரணம் 108
Kovil Dharisanam Instagram link :
https://www.instagram.com/tv/Cb8EQn0h...
Kovil Dharisanam Facebook link :
https://fb.watch/ctl4TbGuvr/
கருத்துரையிடுக