எது வேண்டும் நமக்கு?!

 எது வேண்டும் நமக்கு?!



-Dr.Fajila Azad, International Lifecoach

நீங்கள் அறிவீர்களா.. நம் ஒவ்வொருவர் மனதிலுமே ‘Auto Correction’ செயலி இருக்கிறது. அது, நம்மை அறியாமல் ஏதாவது தவறாக நடந்து விட்டால், தானாகவே" அப்படி சொல்லி இருக்கக் கூடாது, இப்படி செய்திருக்கக் கூடாது" என மனதில் தோன்றி, தான் செய்த தவறுக்கு வருந்தி அதை சரி செய்து கொள்ள முயலும்.




எனவே, யாராவது ஏதாவது தவறிழைத்து விட்டால் அவரது Auto Correction அவரை திருத்துவதற்கு சற்று அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிறது வாழ்வியல்.

பொதுவாக," இப்போது இவர்கள் சொல்வதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் ,இது தொடர்ந்து விடக் கூடும் "என  எண்ணுகின்ற உங்கள் மனம் "நீ இப்படி சொன்னாய் .இது என்னை வருத்துகிறது " என்று அவர்களிடம் 'பாய்ண்ட்' பண்ணி சொல்லிக் காட்டத் தூண்டும்.

அப்படிச் சொல்லிக் காட்டினால்தானே, அவர்கள் தவறை உணர்ந்து நம்மிடம் அதற்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் எழும். 

ஆனால் அப்படி பாய்ண்ட் பண்ணும் போது தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கிறார்கள் என்று தான் அவர்களுக்கு தோன்றும்.

தவிர, இப்போது எடுத்து சொல்லுமளவுக்கு அப்படி என்ன தவறு செய்து விட்டேன். இது போல் நீ ஒன்றுமே செய்ததில்லையா? என்று உங்களிடமிருக்கும் ஏதாவது ஒரு தவறை அவர்களும் எடுத்து சொல்ல முற்படுவார்கள்.

அதாவது, இயல்பாக அவர்களே மாற்றி இருக்கக் கூடிய ஒன்றை, தவறு என்று கருதிய ஒன்றை, நீங்கள் சுட்டிக் காட்டுவதால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை என்று அவர்களது ஈகோ மாற்றி எண்ண வைத்து விடும்.

அல்லது, நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக அப்போதைக்கு வருத்தம் தெரிவித்தாலும் ,தான் மாற்றிக் கொள்வதாக முன் வந்து சொன்னாலும், அவர்கள் மனதில் இந்த சம்பவம் பதிந்து விடும். அதனால், அது அவர்களை முன்பு போல் இயல்பாக இருக்க விடாது. 

தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாத தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடும். அதனால் இருவருக்குமிடையே சகஜ நிலை இல்லாத இறுக்கம் ஏற்பட்டு விடக் கூடும்.




பொதுவாக, கோபமோ, வருத்தமோ, சங்கடமோ எழும் போது வயிற்றுக்குள் என்னவோ சுழன்று நெருப்பு கங்காக வார்த்தைகள் கிளர்ந்து எழத் துடிக்கும் போது, அப்படியே மூச்சை ‘ஹா..” என்ற சத்தத்தோடு வெளியே விடுங்கள். பின் மெல்ல அப்படியே மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு உங்களை நிதானப் படுத்துங்கள்.

அல்லது இந்த மாதிரி சூழலில் மனம், அன்றும் இப்படித்தான் செய்தார்கள் என விறுவிறுவென கடந்த காலத்திற்குள் இறங்கி, என்றோ நடந்த விஷயங்களைக் கிளறி எடுத்து, முந்தைய file லை புரட்ட ஆரம்பித்து விடும். அதற்கு இடம் கொடுக்காமல் அலைபாயத்துடிக்கும் மனதை அப்படியே அந்தக் கணத்தில் நிறுத்துங்கள்.

அது போல் இதை தட்டிக் கேட்காமல் விட்டால் , நாளை இது இப்படி நடக்கக் கூடும் என சிறு விஷயத்தையும் பூதாகரமாக்கும் எண்ணங்களையும் தடுத்து நிறுத்துங்கள்.

"எதற்காக இதை பெரிதாக எடுத்து மனம் வருத்தப் படுகிறது, இவர்களின் செயலுக்கு நான் பதிலடி கொடுப்பது இவரின் அன்பை விட எனக்கு முக்கியமானதா?! "-என்னுடைய நிம்மதியை விட, மகிழ்ச்சியை விட இது எனக்கு அவசியமானது தானா? என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களின் பதிலில் உங்கள் ‘Auto Correction’ செயலியில் உங்களுக்கான தீர்வு இருக்கிறது.

எது வேண்டும் நமக்கு?!

                                                     ---------------------------------------------

Post a Comment

புதியது பழையவை