வெற்றிக்கு வழிகள் - Dr. Fajila Azad.

 

வெற்றிக்கு வழிகள்

Dr. Fajila Azad, International Life coach




"உண்மையில் பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை என்பது சாத்தியமில்லை" என்பது ஒருபுறம் இருக்கட்டும். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர்களுக்கும் எதிர்காலத்தை பற்றி ஒரு சிறு பயம் இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதை அறிவீர்களா. 

தாங்கள் விரும்பிய உயரத்தை அடைந்த பின்பும், தாங்கள் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற்ற பின்பும் கூட, இப்போது இருப்பது போல் இனி வரும் காலம் சுகமாக இருக்குமா ?என ஏதாவது ஒரு கேள்வி மனதில் எழுந்து பலரையும் தங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க விடாமல் செய்து கொண்டுதான் இருக்கும். 

இந்த சூழ்நிலையில், ஏதாவது ஒன்று அவர்கள் நினைத்தது போல் நடக்காமல் தவறாகப் போய் விட்டதாக தோன்றினால் உடனே மனம் அந்த தவறுக்காக மட்டும் வருந்தாமல், அந்த தவறால் ஏற்படக் கூடிய விளைவுகளையும் பயத்தோடும் பதற்றத்தோடும் கற்பனை செய்யத் தொடங்கி விடும்.

சிறு புள்ளியாக எழக் கூடிய அந்த எண்ணங்களை விழிப்புணர்ச்சியோடு உடனே சரி செய்யவில்லையென்றால் அது மனமெங்கும் பரவி மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, உண்மையிலேயே அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடும். 

உதாரணத்திற்கு உங்கள் பள்ளிப் பருவத்தின் தேர்வுக் காலங்களை எண்ணிப் பாருங்கள். 



ஏதேனும் ஒரு தேர்வில் சரியாக எழுதவில்லை என்றால் உங்கள் மன ஓட்டம் எப்படி இருந்திருக்கும். சிலர் அதைப் பற்றி கவலைப் படாமல் ஜஸ்ட் லைக் தட் அதனைக் கடந்திருப்பீர்கள். பலர், இந்த தேர்வு சரியாக எழுதவில்லையே இதனால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதே, விரும்பிய படிப்பு படிக்கும் கனவு இனி அவ்வளவு தான். ஏதோ ஒன்றைத்தான் படிக்க வேண்டி இருக்குமோ. சரியான வேலை கிடைக்குமா, எதிர்காலம் என்ன ஆகுமென்று தெரியவில்லையே என்று ஒரு முழு வாழ்க்கையையும் பற்றி அப்போதே யோசித்து பதறி தவித்திருப்பார்கள். 

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நடந்து போன ஒன்றிற்காக அதிகம் கவலைப் படாமல், இலகுவாக எடுத்துக் கொண்டவர்களையும் அந்த எதிர்மறை சிந்தனைக் காரர்கள் விட்டு வைப்பதில்லை. ஏன் இப்படி கவலைப் படாமல் இருக்கிறாய்?, எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது? என கவலைப் பட வேண்டிய விஷயங்களை எல்லாம் அவர்களே பட்டியல் போட்டு மனதில் விதைப்பதுடன் இப்படி எதைப் பற்றியும் நினைக்காமல் பொறுப்பின்றி திரிகிறாயே? என்று கூடுதலாக ஒரு குற்றத்தையும் சுமத்தி அனுப்பி விடுவார்கள். 

கவலைப்படுவதுதான் பொறுப்பான செயல் என்று ஆழ்மனமும் அதை பதிவு செய்து கொண்டு, பின் எதற்கெடுத்தாலும் அது கவலைப்படத் தொடங்கி விடும். அல்லது மற்றவரிடம் தான் கவலைப் படுவதாகக் காட்ட முயற்சி எடுக்கும். 

உண்மையில் ஒரே ஒரு தேர்வில் சரியாக எழுதவில்லை என்பது போன்று ஏதேனும் ஒன்று தவறாகப் போவது அனைவருக்குமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நிகழக் கூடியதுதான். ஆனால், அப்படி ஒரு தவறு நிகழும்போது எழும் எதிர்மறை எண்ணத்திற்கு இடம் கொடுத்தால் அது anxiety யை ஏற்படுத்தி விடும். அதனால் உருவாகும் கற்பனைகள், நீங்கள் செய்த சிறு தவறால், நீங்கள் தவற விட்ட ஒரு சந்தர்ப்பத்தால் உங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய் விடும் எனும் அளவு உங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விடும். 

அதே நேரம்...செய்வதற்கு தகுதியான எந்த ஒரு செயலிலும்  முயற்சி தோல்வி அடைவது பொருந்திக் கொள்ளக் கூடியதே என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் ,ஒன்றை செய்யும் போது அது தவறாகிப் போனால் என்ன செய்வது? என்ற பதட்டம் வராது. மாறாக, அதை ஒரு மைல் கல்லாக எடுத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக செய்வதற்கு நம்பிக்கை எழும். வெற்றிகள் சாத்தியமாகும். 

                                                -------------------------------------------------



Post a Comment

புதியது பழையவை