"அந்த சிவகாமி மகனிடம்......"இனிய பாடல் விளக்கங்களுடன்..

"அந்த சிவகாமி மகனிடம்......"
இனிய பாடல்
 விளக்கங்களுடன்


நாயகனின் முன்னால், பொது சபையில் அமர்ந்து பாடுகிறாள் நாயகி.

பாடல் சிவகாமியின் (பார்வதி தேவி)புதல்வனான முருகனுக்கு வள்ளி பாடும் பக்திப் பாடல். ஏன் தேவயானியாக இருக்கக் கூடாது?

“மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்” என்ற வரிகள் மூலம் மலையில் பிறந்த வள்ளிதான் இவள் என்ற முடிவுக்கு வந்தேன்.

அதே பாடலில் தன்னை மணமுடிக்க நாள் குறிக்கும்படி தோழியிடம் கூறுவதுபோல் மறைமுகமாக தலைவனுக்கு கோரிக்கை வைக்கிறாள் தலைவி.

இவை இரண்டிற்கும் இடையில் இந்தப் பாடல் மூலம் கவியரசும் தன் தனிப்பட்ட தூதை வரைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்தாலும் கர்ம வீரர் காமராஜரிடத்தில் பெரும் மரியாதை வைத்திருந்தவர் கவியரசர். எனவே அவரை காண்பது எப்போது என்ற தன் அன்பின் ஆதங்கத்தையும் வெளிப் படுத்துகிறார் என்று சொல்கிறார்கள். (காமராஜரின் அன்னையின் பெயர் சிவகாமியாகும்.)

வண்ணங்கள் மிளிரும் தன் தோகையை, மயில் தன் இறைவன் வேலவன் முன்பு விரித்து ஆடிக் களிப்புறும். அதே போலத் தன் தலைவனின் முன்னால் மட்டுமே தன் அழகு மலரும் என்கிறாள்.

கண்கள் அவன் சூடிடும் மாலை. அவற்றை ஏந்தி நிற்கும் கன்னங்களோ அவன் ஆடிடும் சோலை. மலையில் பிறந்த சந்தனம் மனிதரின் மார்பின் தஞ்சமடைவது போல மங்கையின் இதயம் காளையின் சொந்தமாம்.

இடையிசையில் வயலின்கள் சுழற்காற்றாக காதலர் இருவரையும் கற்பனையில் மேலெழுப்பி நகரத்தை கடந்து அருவிகள் பாயும் மலையடிவாரத்தில் இறக்கிவிடும்.

அங்கே டி.எம்.எஸ்ஸின் குரலில் ஒரு ஆனந்த ஆலாபனையோடு பாடல் கனவு டூயட்டாக மாற காலம் மாறினாலும் தன் காதல் மாறாது என்று இறைவன் மீது ஆணையிட்டு காதலன் சொல்ல, இருவரும் குழலின் இன்ப நாதத்தில் இணைந்தாட கடைசியில் மீண்டும் நினைவுலகத்திற்கு வருகிறாள் நாயகி.

காதல் இலக்கியத்தின் இன்பத்தை எளிய தமிழில் பருகத் தந்த கவியே நீ சிரஞ்சீவி!

காலம் மாறினால் காதலும் மாறுமோ?

மாறாது! மாறாது இறைவன்

ஆணை

உண்மைக் காதலுக்கு இறைவன் மேல் ஆணையிட்டு கவியரசு தந்த

சான்றிதழ் இவை.

————————–

படம் : பட்டணத்தில் பூதம் (1967)

இசை : எம்.எஸ்.வி.

குரல் : டி.எம்.எஸ்., சுசீலா

பாடல் : கண்ணதாசன்

—————————–

பாடல் வரிகள்:

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்

சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்

இல்லாமல் தோகை ஏதடி

(அந்த)

கண்கள் சரவணன் சூடிடும் மாலை

கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே

வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே

நிழலாடும் விழியோடும் ஆடினானே – அன்று

நிழலாடும் விழியோடும் ஆடினானே – என்றும்

கண்ணில் நின்றாடச் சொல்லடி


மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்

மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ

நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ

காலம் மாறினால் காதலும் மாறுமோ

மாறாது மாறாது இறைவன் ஆணை – என்றும்

மாறாது மாறாது இறைவன் ஆணை


இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி – இன்னும்

சேரும் நாள் பார்ப்பதென்னடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – தோகை

இல்லாமல் வேலன் ஏதடி…

ஆ……ஆ……ஆஆஆஆ

அந்த சிவகாமி மகனிடம்…

அந்த சிவகாமி மகனிடம்…

அந்த சிவகாமி மகனிடம்…

சேதி சொல்லடி… என்னைச்

சேரும் நாள் பார்க்கச் சொல்லடி….

நன்றி: ஜெயசீலன் பிளாக்.


Post a Comment

புதியது பழையவை