அங்கோர் வாட் கோயில் சிற்பங்கள் மனிதச் சாதனையா? மாயாஜாலமா?

 

அங்கோர் வாட் கோயில் சிற்பங்கள்

மனிதச் சாதனையா? மாயாஜாலமா?

--- அமுதன் ---




தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட், உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியது என்ற சாதனைக்குச் சொந்தக்கார கோயில்.

சென்னையில் இருந்து நேர் கிழக்கே, 2,600 கிலோ மீட்டர் தொலைவில், குட்டி நாடான கம்போடியா இருக்கிறது என்பதே இப்போது தமிழகத்தில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், 1,500 ஆண்டுகளுக்கு முந்திய நமது முன்னோர்களுக்கு அந்த நாடு, அடிக்கடி போய் வந்து செல்லும் நாடாகவே இருந்தது.

முதல் நூற்றாண்டில், தமிழர் ஒருவர்தான் அங்கே சென்று  ஆட்சியை உருவாக்கினார் என்பதும், அங்கோர் வாட் உள்பட பிரமாண்டமான பல கோயில்கள் எழுப்பப்பட்டதற்குத் தமிழர்களே மூல காரணமாக இருந்தனர் என்பதும் கடந்த கால வரலாறு.

(அந்த அபார சாதனை வரலாற்றை அமுதன் எழுதி தந்தி பதிப்பகம் வெளியிட்ட "கல்லிலே கலைவண்ணம் அதிசய கோயில் அங்கோர் வாட்" என்ற புத்தகத்தில் விரிவாகக் காணலாம்).


அந்த அங்கோர் வாட் கோயில், நம்புவதற்குச் சிரமமான பல அதிசயங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறது.

அவற்றில் ஒன்று அங்குள்ள சிற்பங்கள்.

சிற்பங்களில் அப்படி என்ன அதிசயம்? அவை எல்லா கோயில்களிலும் இருப்பது தானே என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.

20 அல்லது 30 ஏக்கர் அளவிலான நிலத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். 

அந்த நிலப்பரப்பு முழுவதும், ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் மிகச்சிறிய சிற்பங்கள் - ஒன்றுபோல் மற்றது அல்லாமல் - கோடிக்கணக்கில் செதுக்கப்பட்டு இருப்பதாக நினைத்துப் பாருங்கள்.

அந்தப் பிரமாண்டம் கற்பனைக்கே அடங்கவில்லை அல்லவா?

ஆனால், அந்த அதிசயத்தை அங்கோர் வாட் கோயிலில் பார்க்கலாம்.

ஆம்! உலகில் எங்குமே நிகழ்த்தப்படாத அந்த அரிய சாதனை, அங்கோர் வாட் கோயிலில் மட்டும் செய்து காட்டப்பட்டு இருக்கிறது.

அங்கோர் வாட் கோயில், 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருக்கிறது. 



இதில், பொதுவான இடங்கள் தவிர, கட்டிட சுவர்கள் மற்றும் அங்கே உள்ள 1,532 தூண்கள் ஆகியவற்றின் பரப்பளவை மட்டும் கணக்கிட்டால், அவை ஏறக்குறைய 20 அல்லது 30 ஏக்கர் அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுவர் முழுவதிலும், ஓர் அங்குலம் கூட இடைவெளி இல்லாமல் மிகச் சிறிய சிற்பங்கள், கணக்கில் அடங்காத எண்ணிக்கையில் செதுக்கப்பட்டு இருக்கின்றன.

நடைபாதைகள், படிக்கட்டுகள், வராந்தாக்களின் மேல் கூரைப் பகுதி ஆகிய ஒரு சில இடங்கள் நீங்கலாக, கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும், ஓர் அங்குலத்தைக் கூட காலி இடமாக விட்டுவிடாமல் சிற்பங்களைச் செதுக்கி இருக்கின்றனர்.ஓர் அடி அகல தூண் ஒன்றில் காணப்படும் சிற்பம்.

அங்கோர் வாட் கோயிலுக்குச் செல்பவர்கள், அந்தக் கோயிலின் பிரமாண்டத்தைக் கண்டு மயங்கிப் போய், ஓர் அங்குலம், அல்லது ஒன்றரை அங்குலம் அளவிலான, எண்ணிக்கையில் அடங்காத சிற்பங்களைப் பார்க்காமல் வந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், அந்தக் கால சிற்பிகள், அதனைப் பற்றிக்  கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு சதுர அங்குல இடத்திலும், வளைவான கோடுகள், வட்டங்கள், வட்டங்களுக்குள் வேலைப்பாடுகள், மலர்கள், பறவைகள், விலங்குகள் என்று பல வகையான சிற்பங்களை, கோயிலின் சுவர் முழுவதும் செதுக்கி இருக்கின்றனர்.

தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும் கோயிலின் அடிப்புறக் கட்டுமான கற்களைப் பொதுவாக எவரும் பார்ப்பது இல்லை. ஆனால், அந்தக் கட்டுமானத்திலும் இடைவெளி இல்லாமல் சிற்பத் தொகுதிகள் செதுக்கப்பட்டு இருப்பது வியப்படைய வைக்கிறது.

ஒவ்வொரு சிற்பமும், மிகச் சிறியவை என்றாலும், அந்தச் சிற்பங்களில் உயிரோட்டத்தைப் பார்க்க முடிகிறது.

இரண்டு பறவைகள் சண்டை போடுவது போல ஒரு சிற்பம், ஒன்றரை சதுர அங்குலத்திற்குள் செதுக்கப்பட்டு இருக்கிறது. அதில் அந்தப் பறவைகளின் இறக்கை, கொண்டை, கால்கள், வால் பகுதி, கண்கள் ஆகியவையும் மிக நுண்ணிய அளவில் நேர்த்தியாக வடிக்கப்பட்டு இருக்கின்றன.




பறவைகள் சண்டை போடும் இந்தப் படம், இங்கே பெரிது படுத்திக் காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், ஒரு தூணில் உள்ள ஆயிரக்கணக்கான சிற்பங்களில் இது ஒன்று. இதன் அகலம் ஒன்றரை சதுர அங்குலம் மட்டுமே.

கோயில் முழுவதும் காணப்படும் இதுபோன்ற சிற்பங்களில் ஓர் அதிசயம் என்னவென்றால், ஓர் இடத்தில் இருப்பது போன்ற சிற்பம் வேறு எங்குமே அமைக்கப்படாதது தான்.

அங்கோர் வாட் கோயில் முழுவதும் இதுபோல உள்ள அனைத்துச் சிற்பங்களையும் ஒருவர் பார்க்க விரும்பினால், அதற்கு அவரது ஆயுள் காலம் போதாது.

அதிசயமான இந்த சிற்பத் தொகுதிகள், மனிதச் சாதனையால் உருவானதா? அல்லது மாயாஜாலத்தால் ஏற்பட்டதா? என்று பார்ப்பவர்களை  திகைப்படையச் செய்யும்.

---------O-------

கட்டுரையாளர்:

 அமுதன்

 (மு. தனசேகரன்), 

தலைமை செய்தி ஆசிரியர் - பணி நிறைவு, 

தினத்தந்தி, சென்னை.), 

மின்னஞ்சல்: dtdhanasekaran@gmail.com, 

தொலைபேசி: 9841268344

------------


Post a Comment

புதியது பழையவை