- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ,
திருநெல்வேலி.
கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் பெண்களும் தமிழகத்தில் இருந்தனர் என்பதை அவ்வையார் வரலாறு மூலம் அறியலாம்.
மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை ஒற்றை வரியில் ஆத்திச் சூடியில் நெற்றி பொட்டில் அடித்தார் போல உரைத்தவர் அவ்வையார், அவருக்கு ஈடு அவரே. வாழ்க்கைக்கு வழிகாட்ட ஆத்திச் சூடியும், திருக்குறளும் போதுமானது.
“சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்”
என்று ஒளவையின் தொடர்ச்சியாகப் பாடுகிறார் பாரதியார் ..
“சாதி இரண்டொழிய வேறில்லை” என்பது ஒளவையார் கூறிய வாசகம். அதையே பாரதி "தமிழ் மகள் சொல்லிய சொல்” என்று அவ்வையை தமிழ் மகள் என்று கூறுகிறார்.
அவ்வையின் சொல்லை அமிழ்தம் என்று கூறி, நேர்மையானவர்கள் மேலோர், மற்றவர்கள் எல்லாம் கீழோர் என்று ஒளவையின் வழியில் உண்மையை உணர்த்துகிறார்.
அவ்வையின் சிறப்பியல்புகளை கூறிக் கொண்டே போகலாம். பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர், சிவபரத்துவம் தெளிந்தவர், கவித்துவம் வாய்க்கப்பெற்றவர். உள்ளம்,உண்மை,மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் புரிந்தவர்.
தமிழ் நாடு முழுதும் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் வெகுநாட்கள் வாழ்ந்தவர். பலரை பற்றி கவிபாடிப் பரிசு பெற்றவர். சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரை பெரியோராய் மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பாராமுகம் காட்டியவரையும், பாடலருமை அறியா மூடரையும் வெறுத்துப் பாடியவர்.
மேற்கூறிய சிறப்பியல்புகள் அனைத்து ஔவைகளிலும் ஒருமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் வேறு அவ்வை வேறு என்று பிரித்து அறிய முடியாது.
அவ்வையாரின் நூல்களில் 7 மட்டுமே கிடைத்துள்ளன .அவை :
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நல்வழி
மூதுரை
ஞானக்குறள்
விநாயகர் அகவல்
நாலு கோடிப் பாடல்கள்
கொன்றை வேந்தன்-
போன்ற பழமையான அந்தப் பாடல்களை மட்டும் இல்லாமல் மேலும் பல பாடல்களையும் நூல்களையும் பாடியுள்ளார் அவ்வையார்.
திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் தங்களுடைய தேடல் அறிவினால் சொல்கிறார்கள்.
ஆனால் இந்த நாட்டில் தோன்றிய பல சித்தர்கள் மரணத்தை வென்று சிரஞ்சீவியாக வாழ்ந்தவர்கள் தமிழுக்கு நிறைய அறிவியல், மருத்துவ, ஆன்மிக, வாழ்வியல் நூல்களை அருளி சென்றனர். அதே போல பெண்களில் தோன்றிய சித்தர் ஒளவையார் பல நூற்றாண்டுகள் வாழ்ந்துள்ளார் ..
பல சித்தர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்ததுண்டு, ஏன் திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த துண்டு. அது போல அவ்வையாரும் காலங்களை வென்று வாழ்ந்த பெண் சித்தர்.
தமிழ் நாட்டின் பல பகுதிகளில் அவ்வையாரை தெய்வமாக வழிபடுவதே இதற்க்கு சான்று. முப்பந்தல் இசக்கியம்மன் ஆலயத்திலும், பாளையங்கோட்டை திரிபுராந்தகஈஸ்வரன் சிவாலயத்திலும் அவ்வையார் சன்னதியை காணலாம்.
பல காலகட்டங்களில் அவ்வையார் வாழ்ந்ததை வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், இவர் தந்தையார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும், அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு காணப்படுகிறது.
ஆயினும் இவரின் படைப்புகளின் காலக்கட்டங்களை இன்ன பிற புலவர்களின் காலக்கட்டங்களோடு ஒப்பிட்டு நோக்குங்கால், ஒளவை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க முடிகிறது. இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒளவைக்கு ஈந்த மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனி கதையும் கூறப்படுகின்றது. இக்கதையினை நாம் பிரிதொரு பதிவில் காண்போம்.
ஒளவை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்த வரலாறுகள் உண்டு.
ஒளவை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் வாழ்ந்த வரலாறு உண்டு.
கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்துள்ளார்.
இவையன்றி 2, 10, 14 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டமாகும். அவ்வையார் வாழ்ந்த வரலாறு பல நூற்றாண்டுகள் உண்டு, இறுதி வரலாறு விநாயகர் அகவல் பாடி கைலாயம் அடைந்த ஓன்று தான். அதை பார்ப்போம்.
சங்ககாலத்தில் அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'
என்று திருக்குறளை சிறப்பித்து பாடினார். இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர்.
அங்கவை - சங்கவை காலவரலாற்றில் அவ்வையார் :
வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை கபிலரோடு இணைந்து பாதுகாப்பு அளித்துள்ளார்.
சோழர் கால வரலாற்றில் அவ்வையார் 12ஆம் நூற்றாண்டில் கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியுள்ளார்.
விநாயகர் அகவல் படிய வரலாறு :
திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர் ஒருவர் உண்டு, அவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு நெருங்கிய சிநேகிதர் ஆவார். ஒருசமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் துறந்து, கைலாயம் செல்ல திருவுளம் கொன்டு சிவபெருமானைப் போற்றிப் பாடித் துதித்தார். அவர் பிரார்த்தனையால் அகமகிழ்ந்த சிவ பெருமான் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல திருவுளம் கொன்டு ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் சுந்தர மூர்த்தி சுவாமிகளை அழைத்துவர அனுப்பினார்.
சுந்தர மூர்த்தி சுவாமிகளும் யானை மீதேறி புறப்பட்டார். அச்சமயம் வெளியில் சென்று திரும்பிய சேரமான் பெருமாள், வானில் இந்த அற்புதத்தை கண்டார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய விருப்பமில்லை. ஆகவே, தன் புரவியில் ஏறி அதன் செவியில் "சிவாயநம' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கி மின்னலெனப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் சேனைத் தலைவர்கள் அவரைப் பிரிய விருப்பமின்றி அனைவரும் தற்கொலை புரிந்து கொன்டனர். அவர்களது ஆத்மாக்களும் கைலாயத்தை நோக்கிப் புறப்பட்டன. இவ்வாறாக கைலாயம் நோக்கிச் சென்றுகொன்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும்,
கீழேபார்க்க , அந்த இடத்தில் ஔவை பிராட்டியார் விநாயகர் பூஜையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி' என்று கூப்பிட்டனர். பூஜையை முடித்து வருகிறேன் என ஔவையும் பதில் கூறினாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என வினவினார். "நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விரும்பினால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் ஓளவை.
"ஔவையே! குழந்தைகளுக்காக எவ்வளவோ பாடிய நீ. தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றார், உடனே ஒளவை "சீதக்களப' என ஆரம்பிக்கும் விநாயகர் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் அகமகிழ்ந்து ஒளவையை தன் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்றடைவதற்கு முன்னரே கொண்டு சேர்த்து விட்டார்.
கைலாயத்தை அடைந்த பின்னர் ஔவையைக் கண்டு சுந்தரரும், சேரமான் பெருமாளும் வியந்து நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முழுமுதற்கடவுள். அவரை துதிப்போர் எல்லாவற்றிலும் முதன்மையாகத்தான் இருப்பார்கள் என்று பதிலளித்தார் ஒளவை. "விநாயகர் அகவல்" ஆன்மிகமும் , யோக சூட்சும ரகசியங்களும், பிரபஞ்ச ரகசியங்களும் மிக அற்புதமாக உள்ள தமிழ் பாடலாகும். தமிழுக்கு ஒளவை தந்த அருட் கொடை "விநாயகர் அகவல்" ஆகும்.
காலத்திற்கும் பொருந்தும் அவ்வையாரின் முதுமொழிகள் :
“மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்”
“உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்”
“கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்”
“கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்”
------------------------------------------------
கருத்துரையிடுக