உழைப்பால் உயர்ந்த உத்தமர்------- டாக்டர். அமுதா பாலகிருஷ்ணன்

 

உழைப்பால் உயர்ந்த உத்தமர்

டாக்டர். அமுதா பாலகிருஷ்ணன்



தாங்கள் பிறந்த ஊர் எது? தங்கள் தாய் தந்தை பற்றி? 

நான் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரமாணிக்கம் கிராமம். பிறந்த நாள் 28.09.1950. என் தந்தை திரு. கி. பக்கிள் நாடார். தாயார் திருமதி. ப. ஜெகஜோதி. திருச்செந்தூர் வட்டம், செம்மறிக்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு தற்போது 88 வயதாகிறது. நலமாக இருக்கிறார். 

என் தந்தை தீய பழக்கங்கள் ஏதுமில்லாத நேர்மையானவர். தனது 76-வது வயதில் 10.9.1999 அன்று இறைவனடி சேர்ந்தார். 

தங்கள் கல்வி குறித்து!

எங்கள் ஊர் வீரமாணிக்கம் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையும்; காயல்பட்டினம், ஆறுமுகநேரி உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரையும் படித்தேன். 

பின்னர், திருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரியில் படித்து பி.எஸ்.ஸி (கணிதம்) பட்டம் பெற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் (59-வது வயதில்) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் தமிழ் எம்.ஏ. முதுகலைப் பட்டமும், அடுத்து,எம்.பி.ஏ. முதுநிலைப்பட்டமும் பெற்றேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ. (பொது நிர்வாகம்) முதுகலைப் பட்டம் பெற்றேன். 

மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (சமூகவியல்) முதுகலைப் பட்டம் பெற்றேன். 

நான் வளர்ந்து, உயர்ந்து வரும் நிலையில், எனக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்க சில அமைப்புகள் முன்வந்தன. அதற்கு அவர்கள் வைத்த நிபந்தனைகளை என்னால் ஏற்க இயலவில்லை. அது மட்டுமல்ல, தகுதியின் அடிப்படையிலேதான் பட்டம் பெற வேண்டுமே தவிர, வேறு வகையில் பட்டம் வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை! எனவே, படித்தே முனைவர் பட்டம் பெற விரும்பினேன்.

அதற்காகவே... பச்சையப்பன் கல்லூரியில்; ஆய்வு மேற்கொண்டு,’20-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 30.10.2015 (65-வயது வயதில்) முனைவர் பட்டம் பெற்றேன்.



தங்கள் இளமைக் காலம் குறித்துக் குறிப்பிட முடியுமா? 

இளமையிலிருந்தே உழைப்பை ரசித்தவன் நான். உழைப்பின் சுகத்தை ருசித்தவன் நான். படிக்கின்றபோதே என் அப்பாவுக்குத் துணையாக விவசாய வேலை பார்த்தேன். பி.எஸ்.ஸி. படித்து முடித்ததும், ஒரு பக்கம் வேலை தேடிக்கொண்டே -

ஏர் உழுதேன், உரம் சுமந்தேன், நாற்று சுமந்தேன், நாற்று நட்டேன், வரப்பு வெட்டினேன், விவசாய வேலைகள் அனைத்தும் செய்தேன். 

தங்கள் கல்லூரி நாட்கள் பற்றி? 

நான் கல்லூரியில் படிக்கும் போது மாணவர் மன்றச் செயலாளராக இருந்தேன். டேபிள் டென்னிஸ் கேப்டனாக இருந்தேன், கேரம் விளையாட்டில் சேம்பியன், செஸ் விளையாட்டில் சேம்பியன். 

கல்லூரியின் திட்டமிடும் அமைப்பின் செயலாளராகப் பணியாற்றினேன். கூட்டங்களை ஒழுங்குபடுத்தும் வாலண்டியராக இருந்தேன். ஆண்டு விழா நாடகங்களிலும் நடித்துள்ளேன். .இதற்கெல்லாம் ஏராளமான சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன்.

படிப்பு முடிந்தவடன் வேலை கிடைத்ததா? 

இத்தனை சான்றிதழ்கள் இருந்தும் வேலை கிடைக்கவில்லை. என் தாய் மாமா எனக்கு ஒரு ஆலோசனை சொன்னார். ‘இங்கிருந்து கஷ்டப்படாதே, பம்பாய் (மும்பை) போனால் உனக்கு வேலை கிடைக்கும்” என்றார். சரியென பம்பாய் சென்றேன். 

மும்பையில் வேலை கிடைத்ததா? 

வேலை கிடைக்கும் என்ற கனவுடன்தான் பம்பாய் சென்றேன். ஆனால் அங்கு வேலை கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்தேன். வெறுங்கையோடு ஊருக்குத் திரும்பவும் மனசில்லை. எனவே, பம்பாய் வீதியில், நடைமேடையில் சாக்கு (கோணி) விரித்து, காய்கறி வியாபாரம் செய்தேன். பல மாதங்கள் ஓடின. வேறு வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. அச்சமயம் எங்கள் ஊரில் அம்மன் கொடை திருவிழா நடைபெற இருந்தது. அதை முன்னிட்டு பம்பாயிலிருந்து ஊர் திரும்பினேன். 

ஊருக்கு திரும்பி என்ன செய்தீர்கள்? 

ஊரில் திருவிழா முடிந்தது. சும்மா இருக்க முடியுமா? அப்பாவுடன் இணைந்து மீண்டும் விவசாய வேலைகளில் ஈடுபட்டேன். அப்பா பட்ட கடன் அதிகம் இருந்தது.

அதை அடைக்க விவசாய வருமானம் போதவில்லை. எனவே, வேறு வேலை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யோசித்தேன். வந்தாரை வாழவைக்கும் மெட்ராஸ் என்கிறார்களே! மெட்ராசுக்கு போவோமே - என்று மெட்ராசுக்கு புறப்பட்டேன். 

என்னிடம் இருந்தது 68 ரூபாய்தான். அதில் திருச்செந்தூர் - எக்மோர் (எழும்பூர்) ரயில் கட்டணம் ரூ.18.50 பைசா. மீதி ரூ.49.50 பைசாவில் எக்மோர் வந்து இறங்கினேன். 

சென்னை வாழ்க்கை எப்படி அமைந்தது?

அன்று மெட்ராஸ் - இன்று சென்னை!

சென்னையில் எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் தெரிய வாய்ப்பில்லை. என்னை நம்பியே சென்னைக்கு வந்தேன். இங்கு தங்குவதற்கு இடமில்லை. சாப்பிடுவதற்கு வழியில்லை. பல இடங்களில் வேலை தேடினேன். ‘வேலை காலியில்லை” என்ற வசனமே காதில் ஒலித்தது. கையில் இருந்த காசும் கரைந்துகொண்டே வந்தது. 

ஆனால், முயற்சியை மட்டும் கைவிடவில்லை. ஒரு நாள் பலன் கிடைத்தது. 

ஒரு நாள்... உறவினர் ஒருவர் முனைவர். திரு. பொன்லட்சுமணன் அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர் தயவால்... அமைந்தகரைiயில், ளு.மு. ராஜபாண்டியன் ரூ பிரதர்ஸ் - அவர்களது ஹார்டுவேர் பெயிண்ட் கடையில் வேலை கிடைத்தது. தங்க இடமும், சாப்பாடும் அங்கே கிடைத்தது. ‘சொக்கம் என்பார்களே” அது இதுதானோ என்று மகிழ்ச்சி-யடைந்தேன். உற்சாகமாக உழைத்தேன். 

எவ்வளவு காலம் அங்கு உழைத்தீர்கள்? 

அந்தக் கடையில், எனக்குச் சாப்பாடு போக மாதம் ரூ.50 சம்பளம் கொடுத்தார்கள். அடுத்த ஆண்டு 60, அதற்கடுத்த ஆண்டு 70 கொடுத்தார்கள். இரண்டே முக்கால் ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். சிக்கனமாக இருந்து சம்பளத்தைச் சேமித்தேன். கையில் ரூ.1640.50 பைசா இருந்தது. 

அடுத்து என்ன செய்தீர்கள்? 

இந்த ரூபாயைக் கொண்டு சென்னை அண்ணாநகரில் ‘அமுதா ஹார்டுவேர்ஸ்” என்ற சிறிய கடையை ஆரம்பித்தேன். 11.02.1974 அன்று திறந்த அந்த கடை, அம்மா அப்பா ஆசிர்வாதத்தாலும், இறையருளாலும் மெல்ல, மெல்ல வளர்ந்தது. அந்தக் கடையின் பெயரே என்னுடன் இணைந்து அமுதா பாலகிருஷ்ணன் என்று அழைக்கப்படலானேன்.



தங்கள் திருமணம் பற்றிக் கூற முடியுமா?

அது ஒரு பெருங்கதை. எங்கள் அருகாமையில் உள்ள ஊரில், எனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறார்கள். ‘மாப்பிள்ளை மெட்ராசில் இருக்கிறார். அவரைப்பற்றி விசாரித்துச் சொல்லு” - என்று பெண் வீட்டார், பெண்ணின் அண்ணனிடம் (வில்லிவாக்கத்தில் வியாபாரம்) சொல்லியிருக்கிறார்கள். நான் அப்போது ஹார்டுவேர் கடையில் வேலை செய்து கொண்டிருந்த காலம். 

ஒரு நாள் காலை, நான் வழக்கம் போல் முண்டா பனியன் கைலியோடு, நான் வேலை செய்த கடையின் வாசலில் பெருக்கி, தண்ணீர் தெளித்து ஒழுங்குபடுத்த ஆயத்தமானேன். அப்போது ஒருவர் அங்கு வந்தார். 

‘தம்பி! இங்கு பாலகிருஷ்ணன் என்று ஒருவர் வேலை செய்கிறாரே!அவர் இருக்கிறாரா?” என்றார். 

நான் என்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல், ‘எதற்குக் கேட்கிறீர்கள்” என்றேன். 

‘இல்லை! அவருக்கு என் தங்கையை பெண் பார்த்திருக்கிறார்கள்! அதனால் அவரைப் பார்த்து, பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றார். 

‘அவருக்கா பெண் கொடுக்கிறீர்கள்? குறைந்த சம்பளம், நிரந்தரம் இல்லாத வேலை! வேறு நல்ல இடம் கிடைக்கலியா...?” - என்றேன். 

‘எங்கப்பாதான், மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு லட்டர் போடுன்னு, தபால் போட்டுருந்தாங்க. எது எப்படியோ! அவரைக் கூப்பிடுங்கள் பார்த்துவிட்டு போகிறேன்” என்றார். 

அந்த நேரம், உடன் வேலை பார்க்கும் பையன், ‘பாலகிருஷ்ணன் அண்ணே சைக்கிள் சாவியைப் பாத்தியளா...?” - என்று கேட்க, இவர் முழிக்க... 

‘நீங்களா...?” - என்று புருவம் உயர,

‘நான்தான்” - என்றேன். அவர் ஆச்சர்யப்படடு, சிரித்து விட்டு நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு போய் விட்டார். 

பின் என்ன நடந்தது?

ஊருக்குப் போன் செய்து அவர் நடந்ததைக் கூறியுள்ளார். ‘பெண் கொடுப்பதற்கு விசாரிக்க வந்துள்ளேன் என்று தெரிந்தும், தன்னைப்பற்றி நேர்மையாக உண்மையைக் கூறிய இவர்தான் மாப்பிள்ளையாக வரவேண்டும்” - என்று கூறியுள்ளார். 

அப்புறம்... ஒரு வருஷம் கழித்து கடை திறந்தேன்!

அந்த அளவில் எனது திருமணம் 28.08.1974 அன்று திருச்செந்தூர் வட்டம், எள்ளுவிளை என்ற ஊரில் மணமகள் வீட்டில் நடைபெற்றது. நான் அமுதா ஹார்டுவேர்ஸ் என்ற கடையை நடத்திக் கொண்டிருந்த போதுதான் திருமணம் நடைபெற்றது. என் மனைவி திருமதி. ராஜேஸ்வரி மிகவும் நல்லவர். சாந்தமானவர். இல்ல நிர்வாகத்தை செம்மையாக நடத்தும் நற்குணவதி. (ஒரு வருஷம் எனக்காகக் காத்திருந்தவர் - என்றும் சொல்லலாம். காரணம், ஒன்று வேலை கிடைக்க வேண்டும், அல்லது தொழில் தொடங்க வேண்டும்; இல்லையேல் எனக்கு திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தேன். எங்க அப்பாவும் வேற பொண்ண பார்க்கல. அவங்க அப்பாவும், அண்ணனும் வேற மாப்பிள்ளையப் பார்க்கல!)



தங்கள் குடும்ப வாழ்க்கை பற்றி?

திருமணமானவுடன் ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியேறினோம். மாத வாடகை 60 ரூபாய். விறகு அடுப்புதான். காஸ் பெறவில்லை. சிக்கனமாக வாழ்க்கையை வாழ்ந்தோம். முகம் சுளிக்காமல் என் மனைவி இச்சூழலை ஏற்றுக்கொண்டார் என்பதுதான் சிறப்பு. (அவங்க வீட்டில், வசதியாக, செல்லமாக வளர்ந்த பெண்)

. உங்கள் முன்னேற்றம் குறித்து?

பொதுவாக நான் எதைச் செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்வேன். கடினமாக உழைத்தேன். என் லட்சியத்திற்கு எல்லையில்லை என மனதளவில் தீர்மானித்துக் கொண்டேன். அதன் பயனாக அமுதா ஏஜன்சீஸ், அமுதா ரெசிடென்சி,

அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  அமுதா பதிப்பகம், என சில நிறுவனங்களைத் தொடங்குவதற்கு இறைவன் அருள் புரிந்தான். வாழ்க்கை வளம் பெறத்தொடங்கியது. முதலில் கஷ்டமான வாழ்க்கையை இஷ்டப்பட்டு ஏற்ற நாங்கள் இன்று நாலு பேருக்கு உதவுகிற வாழ்க்கை வாழ்கிறோம்... என்பது இறைவன் கொடுத்த வரம். 



உங்களது பன்முகத் தன்மைக்குக் காரணம் என்ன?

நான் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். சில பட்டங்களைப் பெற்றேன். முனைவர் பட்டமும் பெற்றேன். தொழிலில் முன்னேற வேண்டுமென்று நினைத்தேன். முயன்றேன். இறைவன் அருளாலும், தாய் தந்தை ஆசியாலும், சிலர் என்னை - ஒரு தொழில் அதிபர், பதிப்பாசிரியர், கல்வியாளர், பள்ளித் தாளாளர், பேச்சாளர், எழுத்தாளர், நூலாசிரியர், கவிஞர், பண்முகத் தன்மையுள்ளவர் என்று சொல்கிறார்கள். 

தங்கள் கல்விப் பணிகள் பற்றி விளக்குங்களேன்?

பல பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் பற்றி நகைச்சுவையுடன் உரையாற்றி அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கிறேன். 

எங்களது அமுதா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களிடம் நன்கொடை ஏதும் வாங்காமல் 29 ஆண்டுகளாக கல்வி வழங்கி வருகிறோம். 


தாங்கள் எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள்?

பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சுயமுன்னேற்றச் சிந்தனைகள், வரலாறு என்று இதுவரை மொத்தம் 28 நூல்கள் எழுதியுள்ளேன். இது தவிர பல இதழ்களில் கட்டுரை, கதைகள் எழுதியுள்ளேன். எனது எழுத்துப் பணிக்கு ஓய்வு இல்லை. தொடர்கிறேன். 



தங்களுடைய நற்செயல்களுக்குக் கிடைத்த பாராட்டுகள், விருதுகள் பற்றி!

இதுவரை 40-க்கும் மேற்பட்ட விருதுகளையும், பட்டங்களையும் கொடுத்-துள்ளார்கள். அதில், அரசு அங்கீகாரமாக 19.2.2019 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கிய ‘தமிழ்ச் செம்மல்” விருதை பெருமையாகக் கருதுகிறேன்.



தங்களது பொது வாழ்க்கை பற்றி!

அன்றாட வாழ்க்கையுடன் பொது வாழ்விலும் ஈடுபட்டு வருகிறேன். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அவை முனைவர், அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர், அண்ணா நகர் நலச்சங்கத்தின் துணைத் தலைவர், அண்ணாநகர் தமிழ்ச் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர், உரத்த சிந்தனை அமைப்பின் துணைத் தலைவர், அண்ணாநகர் நாடார் சங்கத்தின் கௌரவத் தலைவர், அண்ணாநகர் வியாபாரிகள் சங்கத்தின் கௌரவத் தலைவர், மத்திய சென்னை சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றச் செயலாளர், தமிழ்நாடு சத்திரிய நாடார்கள் சங்க இலக்கிய அணியின் மாநிலத் தலைவர், ஸ்ரீகுரு சிவச்சந்திரன் அன்பாலயத்தின் மாநிலத் தலைவர் என நான் சில பொறுப்புகளை வகிப்பதுடன், அதன் சார்பான கடமைகளையும் நிறைவேற்றி வருகிறேன். 

தாங்கள் வகிக்த வேறு பொறுப்புகள் பற்றி!

அண்ணாநகர் - வசந்தம் லயன்ஸ் கிளப்பின் தலைவராகவும், சவுத் இந்தியன் சானிடரிவேர்ஸ் டீலர்ஸ் அசோசியேஷனின் இணைச் செயலாளராகவும், சென்னை, ஆதித்தனார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவராகவும், எங்கள் ஊர்; வீரமாணிக்கம் பொதுநலச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளேன். 

தங்களது பொது வாழ்க்கையில் முக்கியமாக தாங்கள் கருதும் ஒரு நிகழ்ச்சி குறித்து!

1975-ஆம் ஆண்டு கூவம் ஆற்றில் வெள்ளம் வந்தது. ஒன்றரை வயது குழந்தை ஒன்று வெள்ளத்தில் பரிதவித்தபடி ஒரு திரட்டில் மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் என் உடலில் கயிறைக் கட்டிக்கொண்டு கூவத்தில் குதித்து நீந்திச் சென்று, பரிதவித்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து லாவகமாகக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தேன். அது மட்டுமல்லாமல் வெள்ளத்தில் பரிதவித்த அக்குழந்தையின் தாயையும் காப்பாற்றினேன். இரு உயிர்களைக் காப்பாற்றிய அந்நிகழ்வு என் உள்ளத்தில் பதிந்த ஒன்றாகும்.

தாங்கள் மனிதநேயமிக்கவர் என்று சொல்கிறார்கள். ஏதாவது ஒரு சம்பவம்!

நிறைய நிகழ்வுகள் உண்டு. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். ஒரு நாள் என் வீட்டு முற்றத்தில், அழகான வெள்ளை ஆந்தை ஒன்று பறந்து வந்து விழுந்தது. அதைப் பார்த்த காக்கைக் கூட்டம் அதைக் கொத்தித் தின்பதற்காக ‘கா” ‘கா” என்று கத்திக்கொண்டு வந்தன. ஆந்தை, தத்தி, தத்தி, என் வீட்டு சமயலறைக்குள் வந்து விட்டது.இதைப் பார்த்த நான், அந்த ஆந்தையை, காக்கைகளிடமிருந்து காப்பாற்றி ஒரு மூங்கில் கூடையைப் போட்டு ஆந்தையை மூடினேன். பின் அதற்கு உணவு கொடுத்து, வனத்துறையிடம் ஒப்படைத்தேன். இச்செய்தியை பல நாளிதழ்களில் படத்துடன் செய்தியாக nளியிட்டனர். இந்த நிகழ்ச்சி என் நெஞ்சை விட்டு அகலாதது. 

தங்களது மக்கட் செல்வங்கள் பற்றி.

எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். முதல் மகன் பா. பாலமுருகன். பி.இ. (ஊழஅp)இ எம்.எஸ். (ருளுயு) படித்த அவர் அமெரிக்காவில் கணிணிப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். அவரது மனைவி திருமதி. பா. ரத்னபிரபா, பி.ஏ. படித்தவர்; இல்லத்-தரசி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

எனது இரண்டாவது மகன் திரு. பா. பாலகுமாரன்.இலண்டனில் எம்.பி.ஏ. படித்தவர். இவர் எனது நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது மனைவி திருமதி. பா. சங்கீதா, டீ.யுசஉh. பட்டம் பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். 

எனது மகள் பாலவித்யா, பி.இ. (ஊழஅp) படித்தவர். இவரது கணவர் திரு. ஈ.ப.ரா. வைகுந்த் சிங், பி.ஏ. படித்தவர். அய்யா மார்க்கெட்டிங் பிளாஸ்டிக் பர்னிச்சர் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் - தென் தமிழகத்தின் மதுரைக் கிளை மொத்த விற்பனையாளராக உள்ளார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 


நிறைவாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்!

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை இருக்கிறது. தோல்வியையோ, ஏழ்மையையோ கண்டு சோர்வடையாமல், நமக்கும் நல்ல காலம் இருக்கிறது என்று உழைத்துக் கொண்டே இருந்தால், நிச்சயம் எதிர்காலம் இனிமையாகும். 

படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை. 

கிடைத்த வேலையை முழு ஈடுபாட்டுடனும், விசுவாசத்துடனும் முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும், ஒரு ஒட்டுதலோடும், ஒரு உறவோடும் வேலை பார்த்தேன். அந்த விசுவாசமும், அனுபவமும்தான் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

அனுபவம்தான் முதலீடு என்பதனை எனது புத்தகமான ‘வா... வியாபாரி ஆகலாம்” - என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன். 

அந்த நூலுக்கு இலக்கியப்பீடம் விருதும், 10 ஆயிரம் ரூபாய் பணமும் கிடைத்தது. அந்த பணமுடிப்பை, அந்த விழா மேடையிலேயே, விழாவுக்கு வந்திருந்த, எனது தாயார் அவரது கரங்களினால், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர், பிதாமகன், கலைமாமணி, ஐயா திரு. விக்கிரமன் அவர்களிடம் நலிவுற்ற எழுத்தாளர் நல நிதிக்காகக் கொடுத்தார். 

முன்னேறத் துடிக்கும், ஆர்வம் கொண்டவர்களுக்கு ‘வா... வியாபாரி ஆகலாம்” - நூல் ஒரு வரப்பிரசாதம்...!

விடாமுயற்சியும், இறை நம்பிக்கையும், பெற்றவர்களின் ஆசீர்வாதமும் முக்கியம். 

எனது பேட்டியை வெளியிட முன்வந்த ‘ஆளுமைச் சிற்பி” இதழுக்கும், அதன் ஆசிரியர் டாக்டர் மெ. ஞானராஜசேகர் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி. 

என்னை, ‘ஆளுமைச் சிற்பி”க்கு அறிமுகப்படுத்திய மதிப்பிற்குரிய, மனித நேய மாண்பாளர், ‘தமிழ்ச் செம்மல்”, சொல்லருவி, புதுக்கோட்டை முத்து சீனிவாசன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி!

                              

   --------------------------------------------------------


2 கருத்துகள்

  1. எம் பள்ளி தாளாளர் அவர்களின் வாழ்க்கை வரலாறு வரழ்க்கையின் அடித் தட்டில் இருந்து வெற்றி பெற நினைப்ப வர்களுக்கு ரோல் மாடல்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை