கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்

 


 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து காட்டிய கவிஞர் 

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.



 - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்

திருநெல்வேலி.

 

சுதந்திரப் போராட்டத்தில் மிதவாதத்தைப் பெரிதும் ஆதரித்த கவிஞர்  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை .  

காந்தி, பாரதி, போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் குறித்து கவிதைகள் புனைந்தவர்,  ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல், வாழ்வியல், குழந்தைகளுக்கு நல்லவை அறிவுறுத்துதல், இயற்கை, இறை வழிபாடு என பல துறைகளில் பாடல்கள் புனைந்தவர் ,  பெண்ணடிமைத் தனத்தை எதிர்தவர்,

 தாழ்த்தப் பட்டவர்கள் மேம்பட தன் சிந்தனைகளை கவிதைகளாக பாடியவர், தமிழ்த் திரைத்துறையில் இவரது பாடல்கள் ஒலித்தது.  தேச விடுதலைக்காகவும் , சமூக மலர்சிக்ககவும்  இவரது கவிதைகள் முக்கிய பங்காற்றின.

அறிவியல் கண்ணோட்டம் நிறைந்த இவர் அதனோடு கூட வரலாற்று நிகழ்வுகளின்மீது ஆர்வம் அதிகமுள்ளவராக இருந்ததாலும், மரபு வழிச் சிந்தனைகளுடன் நவீன சிந்தனைகளும் ஒருங்கே இணையப் பெற்றவராக இருந்தார்.

கவிமணி அவர்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகருக்கு அருகிலுள்ள தேரூர் எனும் சிற்றூரில் சிவதாணுபிள்ளை ஆதிலெட்சுமி ஆகியோருக்கு 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி பிறந்தார்.

ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் வாழ்ந்த பகுதி கேரள மாநிலத்தைச் சேர்ந்திருந்ததால் அவரின் பள்ளிப்படிப்பு முழுவதும் மலையாள மொழியிலேயே அமைந்திருந்தது,  திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

பின்னர் கோட்டாறு அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் முதுகலைப் பட்டமும் (எம். ஏ) பெற்றவர் கவிமணி.

திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார்.

இளமைப் பருவத்தில் கோவில் ஒன்றில் கொடை காணச் சென்றார் அந்த இளம் புலவர் தேவி. அங்கே ஆட்டினைப் பலி கொடுக்கும் காட்சியைக் கண்ட தேவிக்கு நெஞ்சம் உருகியது. அந்த உருக்கத்தில் அவர் பாடிய கவிதை மொழிகள், கொல்லாமையை போதித்தன. 1901 ஆம் ஆண்டும் இருபத்தி நான்கு வயதில் புத்தேரி ஊரில் உமையம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது வாழ்வில் குழந்தைப் பேறு இல்லை.

ஆரம்பத்தில் கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலப் புலமையும் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் அவரைக் கல்லூரி ஆசிரியராகப் பணி உயர்வுக்குக் கொண்டு சேர்த்தன. திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.  முப்பத்தி ஆறு வருட கண்ணியமான ஆசிரியப் பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.

ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லை என்பதை அறிந்த இவர்  பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் பாடல்கள் எழுதினார். குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்கள் தமிழில் பல உண்டு, என்றாலும்  குழந்தைகளே பொருள் புரிந்து பாடும் பாடல்களை இயற்றினார்.

இவரது படைப்புகளான  அப்பம் திருடின எலி”, “பசுவும் கன்றும்”, “பொம்மைக் கலியாணம்போன்றவை குழந்தைகளுக்கு மகிழ்வைத் தருவதோடு உலக நடைமுறையும் கற்று கொடுத்து, நல்வழியில் குழந்தைகள் செல்ல உதவின.    

சொல் அமுதாய் இனிக்கும் எளிமையும் இனிமையும் நிறைந்த “மலரும் மாலையும்” என்ற இவரது  கவிதைத் தொகுப்பை பலரும் போற்றினார்கள் .  நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

 சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் விடுதலைக் கவிஞர் எனவும் போற்றப்பட்டார். சமுதாயத்தை மேல்நிலைக்கு கொண்டு சேர்க்கும் ஆர்வலரான கவிமணி, கள் உண்ணாமை, அகிம்சை ஆகிய காந்திய வழி அறநெறிகளைக் கவிதை வழி உணர்த்தினார்.

1922 ஆம் ஆண்டு மனோன்மணியம் மறுபிறப்பு என்ற பெயரில் அவரெழுதிய திறனாய்வுக் கட்டுரை மிகவும் பிரபலமானது.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணி புரிந்தார். மேலும், கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.

கவிமணி எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவை மிகவும் பிரபலமானவை;

அழகம்மை ஆசிரிய விருத்தம்,

 ஆசிய ஜோதி , (1941),

 மலரும் மாலையும், (1938),

 மருமக்கள்வழி மான்மியம், (1942),

 கதர் பிறந்த கதை, (1947),

 உமார் கய்யாம் பாடல்கள், (1945),

தேவியின் கீர்த்தனங்கள்,

குழந்தைச்செல்வம்,

கவிமணியின் உரைமணிகள்,

மருமக்கள்வழி மான்மியம்

                   உள்ளிட்ட இவரது படைப்புகள் சமூகத்தின் மீது அக்கறையும், மேன்மையடைய வழிகளையும் காட்டியது.  மறுமலர்ச்சியை  குறிப்பிடத்தக்கவை. கவிமணி எழுதிய மருமக்கள் வழி மான்மியம் சமுதாய விழிப்புணர்வு கவிதை நூல்.

புத்தரின் அன்பும், போதனைகளும் கவிமணியிடம் ஆசிய சோதியாகப் பிறந்தது

வள்ளுவரின் வாழ்வியல் அறக் கருத்துக்களை போற்றிய அவர் தன் படைப்புகளில் அதை வலியுறுத்தினார்.

இவரது தேவியின் கீர்த்தனங்கள் என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.

இவரது சொற்பொழிவுகள் கவிமணியின் உரை மணிகள்என்ற நூலாக வெளிவந்தது.

குழந்தைகளுக்காக பல எளிமையான, இனிமையான கவிதைகளைப் படைத்தவர் கவிமணி. குழந்தைகளுக்காக அவர் இயற்றிய பாடல்களில் பல தமிழகப் பாடப் புத்தகங்களில் பாடங்களாக இடம் பெற்றுள்ளன.

           “தோட்டத்தில் மேயுது  வெள்ளைப்பசு அங்கே

துள்ளிக் குதிக்குது  கன்றுக்குட்டி

அம்மா என்றது  வெள்ளைப்பசு உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி”

எளிமையும், இனிமையும் கொண்ட இந்த பாடல் குழந்தைகளுக்கு பிற உயிர்களின் உணர்வுகளையும், அன்பையும் எளிதாக விளக்கும்.

 

சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் எட்வின் ஆர்னால்டின் தி லைட் ஆஃப் ஏஷியாஎன்ற படைப்பைத் தழுவி ஆசிய ஜோதிஎன தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.மனோன்மணியம் மறுபிறப்புஎன்ற திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.

காந்தி வழியை போற்றிய இவர்  ஆங்கிலேயர்களைத் தேசம் விட்டுப் போகுமாறு

“கள்ளரக்கா குலத்தோடு நீ

         கப்பலேறத் தாமதமேன்

          வள்ளல் எங்கள் காந்தி மகான்

                   வாக்கு முற்றும் பலித்ததினி ”

                                                    என்று பாடிய கவிதை வரிகள்  பிரபலமானவை.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மக்கள் காந்திய வழியில் எப்படி வாழ வேண்டும் என சுதந்திர இந்தியாவில் பாடியவர்

“உண்ணும் உணவுக் கேங்காமல்

                    உடுக்கும் ஆடைக் கலையாமல்

                பண்ணும் தொழில்கள் பலகாண்போம்

                    பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்

அண்ணல் காந்திவழி பற்றி

                                அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்”

                                    என்று மக்களின் வாழ்வியலை போற்றி பாடியது சிறப்பு.

சமுதாயத்தில் சாதிய ஏற்ற தாழ்வுகளை கண்டு நொந்தவர் கவிமணி.

மனிதர் யாவரும் சரி நிகர் என்பதே என்பதே அவரது கொள்கை.

கீரியும் பாம்புமாய்ச்

சண்டையிட்டுச் -சாதி

கீழென்றும் மேலொன்றும்

நாட்டி விட்டுப்

பாரதத்தாய் பெற்ற மக்களென்று நிதம்

பல்லவி பாடிப்

பயனெதுவோ??

 

என்று மேடையில் ஓன்று பேசி, வாழ்கையில் வேறுவிதமாய் வாழும் போலிகளை  கண்டித்து பாடினார். 

சமூக விழிப்புணர்ச்சிப் பாடல்களாகப் பல எழுதியுள்ள கவிமணி,

“கண்ணப்பன் பூசை கொளும்

கடவுளர் திருக்கோவிலிலே

நண்ணக் கூடாதோ, நாங்கள்

நடையில் வரல் ஆகாதோ”

என்ற பாடலின் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற வழக்கத்தை கடுமையாக சாடினார்.

மேலும் சாதிப் பிரிவினைக் காட்டுவதைக் கடுமையாகச் சாடி,

“மன்னுயிர்க்காக உழைப்பவரே இந்த

மாநிலத் தோங்கும் குலத்தினராம்

தன்னுயிர் போற்றித் திரிபவரே என்றும்

தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா.” சாதிக்கான வரையரையாக இவ்வாறு பாடினார்.

மொழிவழி மாநில அமைப்பை முன்மொழிந்த பண்டித நேரு. பிரதமாராக அதிகாரத்திற்கு வந்த பிறகு அதற்கு எதிர் முகங்காட்டினார். இதனை சாடிய கவிமணி, பண்டித நேரு மருமகளாய் நின்று உரிமைக்கு போராடினார். இன்று மாமியாராய் நின்று அதிகாரஞ் செலுத்துகின்றார்” என்று இடித்துரைத்தார்.

இவராகத் திரைக்கு நேரடியாகப் பாடல் எழுதாவிட்டாலும், இவர் எழுதிய கவிதைகளை  திரைகதைகளுக்கு ஏற்ற  களங்களில் பொருந்தி வரும் கருத்துக்களுக்கு ஏற்ப சேர்த்தனர்.

இவர் தனிக் கவிதையாக எழுதிய சில பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1947 ஆம் ஆண்டு வெளிவந்த பைத்தியக்காரன்என்ற படத்தில் இவரின் பாடல் பயன்படுத்தப்பட்டது, அதனையடுத்து 1951 ஆம் ஆண்டு வெளியான மணமகள்’” என்ற படத்திலும், ”தாயுள்ளம்என்ற படத்திலும் இவரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன

அதைத் தொடர்ந்து, “வேலைக்காரன்” (1952ல் வெளியானது), கள்வனின் காதலி, கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை எனப் பல திரைப்படங்களில் இவரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.

மனித நேயமும், சமூக அக்கறையும் கொண்டு  தமிழ்ச் சமுதாயம் உயர்வதற்கு பாடிய புலவர் கவிமணிக்கு,  நாட்டுக்கோட்டை நகரத்தார் அண்ணாமலைச் செட்டியார் தலைமையில் செட்டிநாட்டில் பெரும் வரவேற்போடு பாராட்டு விழாவையும் நடத்தினார்கள். அந்த விழாவில் பொன்னையும் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தனர்.

பொன்னையும் பொருளையும் நாடாத பொதுநலவாழ்வு கொண்ட அவர்அப்பரிசுகளைத் தனக்கென்று வைத்துக்கொள்ள வில்லை, திருவனந்தபுரத்தில் தமிழ் வளர அதை கொடுத்துவிட்டார்.

இருபதாம் நூற்றாண்டில் கவிஞராகவும் ஆராய்ச்சியாளராகவும் வாழ்ந்து காட்டிய அவருக்கு  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெரும் பேராசிரியர் பதவிக்கு அவரை அழைத்தது. அதற்கு நான் ஏற்புடையவன் அல்லன் என தன்னடக்கத்தோடு மறுத்து விட்டார்.

நாகர்கோவிலுக்கு வந்த ராஜாஜி கவிமணியைக் காண விரும்பினார். அவருடன் வந்தவர்கள் அவரது விருப்பத்தை அறிந்து கவிமணியை அழைத்து வரப்புறப்பட்டனர். ஆனால் ராஜாஜி,  அப்புலவரை அழைக்க வேண்டாம்,  நேரில் சென்று காண்பதே அவருக்கு செய்யும்  மரியாதை, அதுவே நன்முறை எனக் கூறிப் புத்தேரிக்கு சென்று கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையை சந்தித்தார்.

அவரது சிறப்புகளை உணர்ந்த இராஜாஜி  கவிமணியை அரசவைப் புலவராக அமர்த்தி அழகு பார்க்க நினைத்தார். திருவிதாங்கூர் வேற்று மாநிலமாக அன்று இருந்தது. அதனால்  சட்டச்சிக்கல் எழுந்தது. அதையும் தாண்டி அவரை அப்பணியில் ஈடுபட சென்னை மாகாண அரசு வழி வகுத்தது

அப்படி அந்த பதவியைப் பெற மறுத்த கவிமணி, “அரசவைப் புலவராய் அமர தன்னிலும் நாமக்கல் கவிஞரே ஏற்றவர்” எனப் பரிந்துரை செய்தார்.

 

‘’உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

             அமிழ்தம் இயைவதாயினும் இனிது

எனத் தமியர் உண்டலும் இலரே

முனிவு இலர் துஞ்சலும் இலர்

பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்

பழியெனின்உலகொடு பெறினும்

கொள்ளலர் அயர்வு இலர்

அன்ன மாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’

என்று பாடிய தமிழ் சமூகத்தில் அதன் மரபு வழிவந்த மாண்புறு புலவர்களில் இவரும் ஒருவர்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இலக்கணத்திற்குச் சற்றும் பிறழாமல் கவிதை புனைந்து, நேர்மையுடனும் பெருமையுடனும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.

கவியின் மணிமொழிகளாக இவரது கவிதையில்  கருத்தும், நயமும் ஒலித்ததால் தமிழறிஞர்கள் குழு அவருக்கு கவிமணி என்ற பட்டத்தை பரிந்துரை செய்தது. 1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு கவிமணிபட்டம் வழங்கினார்.

தேசிய விநாயகத்தின்      கவிப்பெருமையை தினமும் கேட்பது என் செவிப்பெருமைஎன நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார்.

 1954-ம் ஆண்டு, கவிமணி தனது எழுபத்தி எட்டாவது வயதில் தனது மனைவியின் ஊராகிய புத்தேரி என்கிற ஊரில் செப்டம்பர் 26 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

தமிழ் உலகம் என்றும் அவரது தொண்டுள்ளத்தை போற்றும். இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.

                                                            -------------------------------------

 

 

 

 

 

 

Post a Comment

புதியது பழையவை