சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்



சிலம்புச் செல்வர் 
 ம.பொ.சிவஞானம் 






- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் திருநெல்வேலி.

“தலைநகர் சென்னை” என இன்று நாம் போற்றிக்கொண்டாடும் சென்னை, ஒருநாள் நம்மை விட்டு செல்லும் நிலை வந்தபோது, பெரும்போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக்         கொடுத்த 
பெருமைக்குரிய தலைவர், ம.பொ.சி என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.

தேசியத்தைப் போற்றினார்., தமிழின் பெருமை காக்க பாடுபட்டார். விடுதலைக்குப் பின் இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது தமிழின் தகுதியை தமிழினத்தின் சிறப்பை எடுத்துரைப்பதில் நாட்டம் காட்டினார். அதற்காகவே தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை காங்கிரஸ் கட்சியில் இருந்த ம.பொ.சி 1946 ம் ஆண்டில் ஏற்படுத்தினார். அவருடைய அமைப்புக்கு, திரு.வி.க., காமராஜ், ஜீவானந்தம், பாரதிதாசன், ‘கல்கி’ போன்ற அறிஞர்கள் ஆதரவு காட்டினர்.

தமிழரை காக்க, தமிழர் உரிமைகளை மீட்க தமிழரசுக் கழகம் தொடர்ந்து போராடியது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க கூடிய கால கட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரர்களிடமிருந்து கோரிக்கை வலுத்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் நடை பெற்ற கூட்டங்களில் பேசிய ம.பொ.சியை,   'கிராமணியே திரும்பிப்போ...!' என தாக்குதல் நடத்தி  விரட்டினர் அந்த மக்கள். மேலும் எதிர்ப்பு காட்டும்விதமாக,  "ஆந்திரம் பிரிக்கப்பட்டால் சென்னையையும் நாங்களே பெறுவோம்” என்று  சவாலும்  விட்டனர். பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கு மொழியுணர்வாளர்,  அந்த  கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அவர்  மரணமடைந்தார்.  பிரச்சினை பெரிதாக வெடித்தது. 

அதன் விளைவாக,  ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலத்தை அப்போதைய காங்கிரஸ் உருவாக்கியது. ஆந்திர மக்களுக்கு 1953 அக்டோபரில் ஆந்திரம் தனி மாநிலமாக  உருவானது. மாநிலத்தை பிரித்துக்கொண்ட ஆந்திரமக்களின் அடுத்த இலக்கு சென்னையாக இருந்தது.  


1956 ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன், ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டுப் போராட்டங்கள் மேற்கொண்டனர். 

வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும், தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்ற 'அபாய' கோரிக்கையை முன் வைத்து போராடினர்.  அப்போது சென்னையை காக்க தமிழகத்தில் இருந்து புறப்பட்ட ஒரே தலைவர் ம.பொ.சி அவர்களே.  

'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் எழுப்பிய குரலுக்கு, 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று வீர முழக்கம் எழுப்பியவர் ம.பொ.சி. ஒரு கட்டத்தில் சென்னையை பொது தலைநகரமாக ஆக்கலாம், அல்லது இரண்டாகப் பிரிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது. சென்னை நகரின் மீது தமிழர்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை ம.பொ.சி நடத்தினார். இதன் தாக்கத்தால் மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் சாஸ்திரி உறுதி கூறினார். ம.பொ.சியின் கடும் போராட்டத்தை தாங்க முடியாமல் அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜியே அவரை கைது பண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டது.


எல்லா வழிகளிலும் தனது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டுக்கொடுத்தார் , இறுதியாக ம.பொ.சியின் எண்ணம் போல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.

திருப்பதியும், திருத்தணியும் ஆந்திரர் வசம் செல்ல இருந்த நிலையில், தனது வலுவான போராட்டங்கள் மூலம் அதையும் முடக்கினார். ஆனாலும் திருத்தணியை மட்டுமே நம்மால் தக்கவைக்கமுடிந்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும், செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்தபோதிலும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வாழ்வின் நில வளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை காக்க போராடியத் தலைவர் ம.பொ.சி. சென்னையை காக்க அவரிட்ட முழக்கம், 'தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்' என சென்னையை காக்கும் போரில் இளைஞர்களை எழுச்சியடைச்செய்தவர்.



1956ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாணத்துடன் இருந்த தெலுங்குநாடு ஆந்திரமாகவும்,  கருநாடகம் என்னும் கல்நாடு, கேரளம் என்னும் சேரளம் ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டன. ஆயினும் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம், சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.. எனவே இதனை மாற்றி, தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் எனக் கோரி 1961ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் மூலம் போராட்டம் நடத்தினார் ம.பொ.சி. இதன் ஒரு பகுதியாக, திருவல்லிக்கேணி வெங்கடேசுவரா மாணவர் விடுதியின் வாயிலில் இருந்து நடிகமேதை ஔவை தி.க.சண்முகம் தலைமையில் போராடினார்கள். தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாக போற்றப்பட்டார். 

1967-ம் ஆண்டில் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான ம.பொ.சி. தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கு கோரிக்கையை எழுப்பினார்.  18.7.67-ல் மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த நமது மாநிலம்  அப்போதைய முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களால் ‘தமிழ்நாடு’ ஆனது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் ம.பொ.சி.



அந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னணியாக கடந்த காலபோராட்டங்களில் ம.பொ.சி யின் தியாகமும் அர்பணிப்பும்  அதிகம் இருந்தன. அதை நினைவு கூர்ந்து முதல்வராகிய அண்ணா “தமிழ்நாடு” என பெயரை மாற்றிய போது ம.பொ.சியை வானளாவி பாராட்டி பேசினார். 
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் சாலவன்குப்பத்தில் பொன்னுசாமி-சிவகாமியம்மாள் தம்பதியருக்கு 26.6.1906-ல் பிறந்தவர் ம.பொ.சி. மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம. பொ. சி. என அழைக்க பட்டார்.
ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலில் பிறந்ததால், 3 ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டு நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார். 


1927-ல் 'தமிழ்நாடு ' நாளிதழில் அச்சு கோப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே அவர் அறியநேர்ந்த விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் அவருக்குள் சுதந்திர வேள்வியை எழுப்பின. பலமுறை சிறை சென்றார். 
31 ம் வயதில் திருமணம். காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு,  சிறைவாசம் சென்ற ம.பொ.சி,  அக்காலத்தில் காங்கிரஸின் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். போராட்டங்களின் விளைவாக,  தன் ஆயுட்காலத்தில் எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் கழித்தவர் ம.பொ.சி.
சிறையில் தமிழ் இலக்கியங்களைக் கற்று, தமிழ்ப் புலமையை மேம்படுத்திக் கொண்டார். சங்க இலக்கியத்தில் தேர்ந்தவராக விளங்க களம் அமைத்துக்கொடுத்தது சிறைவாசம்தான். தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களை படிக்க பயன்படுத்திக்கொண்டார். பாரதியின் மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி, அவரைப்பற்றி படைத்த நுால்கள் பல. பாரதியின் எழுத்துக்கள் மூலம் ம. பொ. சி. சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார்.



ம. பொ. சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியை பற்றி ம.பொ.சி. பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்:
வள்ளலாரும் பாரதியும் [1965].
எங்கள் கவி பாரதி [1953].
பாரதியாரும் ஆங்கிலமும் [1961].
பாரதி கண்ட ஒருமைப்பாடு [1962].
உலக மகாகவி பாரதி [1966].
பாரதியார் பாதையிலே [1974].
பாரதியின் போர்க்குரல் [1979].
பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை [1983].
என்னை வளர்த்த பாரதி[2013] ம.பொ.சி. கூறி விக்கிரமன் (எழுத்தாளர்), நாகராஜன் தொகுத்தது.. என பாரதியாரை மையமாக கொண்டு நூல்களை எழுதினார். 



1939 ம் ஆண்டு, காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வ.உ.சிக்கு சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உதவி கேட்டுச் சென்றபோது, கட்சியின் பெரிய மனிதர்கள் நழுவிக்கொண்டது அவருக்கு அதிர்ச்சியளித்தது. எனினும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, அன்றைய ஹாமில்டன் வாராவதி சந்தையில் வசித்த எளிய மனிதர்களிடம் கையேந்தி,  சில தொழிலாளர் சங்கங்களின் உதவியோடு அந்த சிலையை நிறுவினார்.
ஒருகாலத்தில் காங்கிரஸை எதிர்க்கிறவர்கள் யாரையும் தன்னுடைய எதிரியாக வரித்துக்கொண்டு அவர்களை எதிர்த்து நின்றவர் ம.பொ.சி. ஆனால் ஒருகட்டத்தில் காங்கிரசின் பாட்டாளி விரோதப் போக்கினாலும், காந்திய கொள்கைகளை கைகழுவிடும் போக்கினாலும் அதிருப்தியடைந்தார். 



அதன் விளைவாகவும்,,  பல காரணங்களுடன் அவர் காங்கிரசுடன் முரண்டபடநேர்ந்தது. ஆகஸ்ட் 8, 1954 ம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். தமிழரசு கழகம் முன்னைவிட வேகம் பெற்று இயங்கியது. கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி யின் புகழ்பரப்பும் பணியை செய்தவர் ம.பொ.சி.. அவரது வரலாற்றை பற்றி நுால் எழுதி,  வ.உ.சியின் தியாகங்களை உலகறிய செய்தவரும் அவர்தான் . ம.பொ.சி எழுதிய 
கப்பலோட்டிய தமிழன் [1944]
தளபதி சிதம்பரனார் [1950]
கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]
ஆகிய நூல்கள் , வ.உ.சியின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. 

ம.பொ.சி, தான் எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூலை தன் நண்பர் அச்சகத்தில் எழுத்து எழுத்தாகக் கோர்த்து அச்சிட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியும், வீரபாண்டிய கட்டபொம்மனும் ம.பொ.சி-யின் எழுத்து மூலமே தமிழ் சமூகத்துக்கு அறிமுகம் ஆனார்கள். 
ம.பொ.சி. வ.உ.சி. யின் வரலாற்றைப் பற்றி, ம.பொ.சி. எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி., 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலைத் தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார் 

கட்டபொம்மன் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:
வீரபாண்டிய கட்டபொம்மன் [1949]
கயத்தாற்றில் கட்டபொம்மன் [1950]
சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]

திருவள்ளுவர் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள் 
வள்ளுவர் வகுத்த வழி [1952]
திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]
திருக்குறளில் கலை பற்றிக் கூறாததேன்? [1974].

இராமலிங்க அடிகள் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963]
வள்ளலாரும் பாரதியும் [1965]
வள்ளலார் வளர்த்த தமிழ் [1966]
வள்ளலார் வகுத்த வழி [1970]
வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]
வானொலியில் வள்ளலார் [1976]
வள்ளலாரும் காந்தியடிகளும் [1977]
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]

இதில் 1962-ல் ம.பொ.சி எழுதிய 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 
ஆங்கில நூல்கள்
The Great Patriot V.O. Chidambaram Pillai
The First Patriot Veera Pandia Katta Bomman
The Universal Vision of Saint Ramalinga

இப்படி நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.
இவருடைய 'விடுதலைப் போரில் தமிழகம்' என்னும் நூலே இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை எடுத்துரைத்த முதல் நூல்.
1950 ல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும்பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி  அழைத்து விழாவை நடத்தினார் ம.பொ.சி. அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட  தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது. தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவை தொடர்ந்து நடத்தினார். 
சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. யைச் சாரும்.
 சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
கண்ணகி வழிபாடு [1950]
இளங்கோவின் சிலம்பு [1953]
வீரக்கண்ணகி [1958]
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
மாதவியின் மாண்பு [1968]
கோவலன் குற்றவாளியா? [1971]
சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
சிலப்பதிகார யாத்திரை [1977]
சிலப்பதிகார ஆய்வுரை [1979]
சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]
ஆகிய நூல்களை சிலப்பதிகாரத்தை மையமாக கொண்டு எழுதினார்.

இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார்.

சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார்.

சென்னை மாநகராட்சி கொடி

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியின் கொடி, 'கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள்' கொண்டதாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி தனது தமிழரசு கழகத்தின் கொடியில் இருந்த சேர, சோழ, பாண்டியரின் சின்னமான 'வில், புலி, மீன்' சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பரிந்துரைத்தார். இன்றுவரை ம.பொ.சி பரிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது.
பொங்கல் திருநாளை தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன் முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. 1946-ம் ஆண்டு ஜனவரி 14-ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே
.
1972 ஆம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டை பாராட்டி “பத்மஸ்ரீ” விருதினை வழங்கி கவுரவித்தது. இது தவிர சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தினரிடமிருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

பத்மஸ்ரீ, எம்.எல்.ஏ., எம்.எல்.சி., கலைமாமணி, சாகித்ய அகாடமி விருது, பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்டங்கள் இப்படி எத்தனையோபட்டங்கள், விருதுகள். அவரை தேடி வந்தாலும் 
அத்தனைக்கும் மேலாக, ‘சிலம்புச் செல்வர்’ என்பதே இன்றுவரை நிலைத்து நிற்கிறது. 

ஆங்கிலம் மூலம் கல்வி கற்று ஆங்கிலத்திலேயே பேசும் பட்டதாரிகள் நிறைந்த சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் ஆனார். அப்போது  பட்டமளிப்பு விழாக்களில் கருப்பு உடை அணிந்து கருப்பு தொப்பியும் வைத்தவர்கள்தான் கலந்துகொள்ள முடியும். தமிழ்ப் பண்பாட்டில் ஊறித் திளைத்த ம.பொ.சி.யால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் உடையான வேட்டி, சட்டையோடுதான் வருவேன் என்பதில் உறுதியாக இருந்தார். அது ஏற்கப்படாததால் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதில்லை. மதுரை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் ஆனார். அங்கேயும் இந்தப் பிரச்சினை குறுக்கிட்டது. ஆனால் மதுரை பல்கலைக்கழகத்தில் அப்போது துணைவேந்தராக இருந்தவர் தமிழ் அறிஞர், தமிழ் ஆர்வலர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். அவரிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நான், அவர்களது வழக்கப்படி ஆடை அணிய விரும்பவில்லை. கவியரசர் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் வெள்ளை வேட்டியும், ஜிப்பாவும் அணிந்துகொண்டு போகிறார்கள் என்றார்.

ம.பொ.சி.யின் தேசிய மற்றும் தமிழ் உணர்வுக்கு மதிப்பளித்த தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா உரையாற்ற வந்த அறிஞர் அண்ணாவும் அதைப் பின்பற்றினார். 

சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972 முதல் 1978 வரையிலும் ம.பொ.சி பணியாற்றினார். 1986 நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.

தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது ம.பொ.சி.யை தமிழக சட்டமன்ற மேலவையின் தலைவராக நியமித்தார். தமிழுக்கு தலைமைப்பீடம் தந்து அழகுபார்க்கிறேன் என்று அப்போது எம்.ஜி.ஆர். கூறினார். அந்தத் தருணத்தில் ம.பொ.சி. கூறிய கருத்து போற்றுதலுக்குரியது. “சட்டமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க என்ற இரு கட்சிகளுக்குமிடையே பிரச்சினைகள் வரும்போது, ஆளும் கட்சிக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் எனது மனச்சாட்சிப்படித்தான் தீர்ப்புச் சொல்வேன் என்ற உத்திரவாதம் பெற்றுத்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்” என்றார். இந்தக் காலத்துக்கு இந்த சிந்தனை மிகவும் தேவை.


“அரசியல்வாதி ஒவ்வொருவருக்கும் முக்கிய தேவை தத்துவஞானம். தத்துவஞானம் இல்லாத அரசியல்வாதி தவறுகள் செய்ய அஞ்சமாட்டார். தத்துவஞானமானது அரசியல்வாதியின் ஆசைகளை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும். ஆசாபங்கம் ஏற்படுகின்றபோது அதனை தாங்கிக் கொண்டு தருமநெறியில் ஊன்றி நிற்கின்ற ஆற்றலை தரும்.இதனை என் வாழ்க்கை அனுபவத்திலே நான் கண்டு வருகின்றேன்“ என்று ம.பொ.சி தன் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிட்டுள்ளது எக்காலமும் நினைத்து பார்க்க வேண்டியது. 

தமிழ், தமிழர், தமிழகம் என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த்தொண்டுபுரிந்த ம.பொ.சி 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி உடல்நலம் குன்றி தனது 89 வயதில் காலமானார். அவரது மறைவிற்குப்பிறகும் மகள் மாதவி அதை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் வரலாற்றை அமைத்ததில் முக்கிய சிற்பியாக விளங்கியவர் ம.பொ.சி ஆவார். தமிழ், தமிழர், தமிழகம் இருக்கும்வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.



                          ----------------------------------------------------------------------

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை