பன்முகத்திறம் கொண்ட
பன்மொழி புலவர் கா.அப்பாத்துரை
- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,
திருநெல்வேலி.
தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தவர். சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார்.. என சிறப்புகள் பல பெற்ற பன்முகதிறம் கொண்ட பன்மொழி புலவர் கா.அப்பாத்துரை அவர்களை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
“எப்பாத் துறைக்கும் இவனோர் பழம் புலவன்
ஆப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற முப்பால்பா
நூலறிவு நூறு புலவர்கள் சேரினியன்
காலறிவு காணார் கனிந்து”
-என்று பாவேந்தர் பாரதிதாசனால் புகழ் மாலை சூட்டபட்டவர்.கா.அப்பாத்துரையார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய் மொழி என்னும் சிற்றுரில், சாசிநாதப்பிள்ளை-முத்து இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 24-06-1907 அன்று பிறந்தார். பெற்றோர் இவருக்கு சூட்டிய பெயர் “நல்லசிவம்” என்பதாகும். தொடக்கக் கல்வியை ஆரல்வாய் மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்திலும் ஒரே ஆண்டில் முதுகலைப்பட்டம் பெற்றார்
இந்தி மொழியில் ‘விசாரத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.
திருநெல்வேலி, ‘மதுரைதிரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி ‘யில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி, ‘அமராவதிப் புதூர்’-குருகுலப் பள்ளியில் அப்பாத்துரையாத் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது மாணவராயிருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் பயின்றார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.
நடுவண் அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 முடிய பணியாற்றினார். அப்பொழுது, ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் வேலை இழந்தார்.
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 முடிய அதன் ஆசிரியராகப் பணி செய்தார். மேலும், தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்.
‘திராவிடன்’, ‘ஜஸ்டின்’, ‘இந்தியா’, ‘பாரததேவி’, ‘சினிமா உலகம்’, ‘லிபரேட்டர்’, ‘விடுதலை’, ‘லோகோ பகாரி’, ‘தாருஸ் இஸ்லாம்’, ‘குமரன்’, ‘தென்றல்’ முதலிய இதழ்களில் இவரது பணி தொடர்ந்தது.
அப்பாத்துரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயபாடமாகத் திணிக்கப்பட்ட பொழுது 1938-39 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த போரில் பங்கு கொண்டார்.
அப்பாத்துரையார் இந்திமொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாய பாடமாகத் திணிக்கப்பட்டபொழுது 1938-39 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார்.
தந்தை பெரியார் தலைமையில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்பாத்துரையாரும் அவரது மனைவி அலமேலு அம்மையாரும் பெரும்பங்கு கொண்டனர்.
சரித்திரம் பேசுகிறது’, ‘சென்னை வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’, ‘திராவிடப் பண்பு’, ‘திராவிட நாகரிகம்’ உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ ‘குமரிக்கண்டம்’ அல்லது ‘கடல்கொண்ட தென்னாடு’, ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’, ‘ஜ.நா.வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’ முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
திராவிட நாகரிகம், திராவிடப் பண்பு, திராவிடப் பாரம்பரியம், திராவிட மொழி என்பவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூற்களில் அளித்துள்ளார்.
அப்பாத்துரையாரின், ‘தென்னாட்டுப் போர்க்களங்கள், என்ற வரவாற்று நூல், போர்க்களங்களில், பட்டியலன்று, போர்க்களங்களின் போர்களின் பின்புலங்கள், போர்ச் செயல்கள், போரின் விளைவுகள், போர்களின் வழியாக புலப்படும் அரசியல் நெறிகள் ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்து ள்ளது என வரலாற்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.
‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, “இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்கள் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்” என்று விதந்துரைத்துள்றளார்!
தென்னாட்டின் வரலாற்றினை அன்றிலிருந்து இன்று வரை ஆழ்ந்து ஆராய்ந்து தமிழர் வாழ்வின் பெருநிலையை அனைவரும் உணர்ந்து கொள்ளத் தூண்டும் வகையில்இவரின் நூல்கள் அமைந்துள்ளது. பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை அவர்கள் நாட்டிற்கு நல்ல பல நூல்களை ஆக்கித்தந்தது அவருடைய பேருழைப்புக்குச் சான்றாக விளங்குகிறது.
குமரிக்கண்டம்அல்லதுகடல்கொண்ட தென்னாடு என்பது குமரிக்கண்டம் என்ற கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படும் கண்டத்தை பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் மாந்தரினம் குமரிக்கண்டத்தில் தோன்றி பின் வடக்கு நோக்கி பரவினர் என்று சில சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் இதன் ஆசிரியர் கா. அப்பாத்துரை. இந்நூலில் காணும் முக்கிய கருத்துக்களவான :
“ உலகின் பழப்பெரு நாடுகளில் தென்னாடு ஒன்று. அதுவே மனித இனத்தின் பிறப்பிடம் என்று மண்ணூலார் சாற்றுகின்றனர்.வரலாறு தரும் சான்றுகள் இந்நாட்டுக்குத் தனிப்பெருஞ் சிறப்புகளை வழங்குகின்றன. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, இந்நாடே மனித நாகரிகத்தின் தொட்டிலாகவும், வளர்ப்புப் பண்ணையாகவும் இருந்திருக்கிறது.
இன்றைய நாகரிக நாடுகளின் வரலாறுகளெல்லாம் சென்ற இரண்டாயிர ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. ஆனால் , இந்நாடுகளின் வரலாறு தோன்றுவதற்கு முன்பே, கிரேக்க உரோம நாகரிகங்கள் தலைசிறந்து விளங்கின. இவற்றின் கி.மு.1000-க்கும், கி.பி. 500- க்கும் இடைப்பட்ட 1500 ஆண்டுகள் ஆகும்.
தென்னாடு நாகரிகத்திற்கும், கிரேக்க உரோம நாகரிகங்களுக்கும் பல வகைத் தொடர்புகள் இருந்தன. கிரேக்க உரோம நாகரிகங்களைவிடத் தென்னாடே பழமை வாய்ந்தது என்பதற்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும், கிரேக்க உரோம நாகரிகங்கள் வரலாற்றின் பழங்கதைகளான பின்னும், தென்னாடு இன்றும் நின்று நிலவுகின்றது.
தென்னாடு இயற்கை எல்லைகளையுடைய மாநிலம். அது தெற்கு நோக்கிய முனையுடைய ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கிறது. வடக்கே விந்தியமலை அதன் நில எல்லையாகவும், நில அரணாகவும் இருக்கிறது. அதனை அடுத்துள்ள மேட்டு நிலமும் காடுகளும், அதற்கு இப்பாலுள்ள சாத்பூரா மலையும், நருமதை, தபதி ஆறுகளும் விந்தியமலை அரணுக்கு அரண் செய்பவை ஆகின்றன. முக்கோணத்தின் மேற்கிலும் கிழக்கிலும் அரபிக்கடல், வங்காளவிரிகுடா ஆகியவையும், தன்முனையாகிய குமரியின் தெற்கே இந்துமா கடல் என்று வழங்கும் குமரிகடலும் நீரரண்களாய் உதவுகின்றன.
தென்னாட்டு மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழிகள் திராவிட மொழிக் குடும்பமாக வகுக்கப்பட்டுள்ளன. விந்தியமலைப் பகுதியிலும், அதற்கு வடக்கேயும், தெற்கேயும் பல பண்படாத் திராவிட மொழிகள் உள்ளன. ஆனால், தென்னாட்டில் பெரும்பாலாகப் பேசப்படும் அய்ந்து மொழிகளே சிறப்பு வகையால் திராவிட மொழிகளென்று அழைக்கப் பெறுகின்றன். ஏன்றால், அவை கலையும், இலக்கிய வளமும் நிறைந்த பண்பட்ட மொழிகள், இம்மொழிகளுள் தென்கோடியில் தமிழும், மலையாளமும், வடபால் தெலுங்கும், கன்னடமும் இவற்றின் வடமேற்கு மூலையில் துளுவும் வழங்குகின்றன.
திராவிட மொழி இலக்கியங்கள் யாவுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம்பெருமை உடையவை. தமிழில் இவ்வெல்லை கடந்து இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம்பேரிலக்கியம் உண்டு. உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான ஆண்டு தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியுடைய மொழிகள் திராவிட மொழிகளும் சீன மொழியும் மட்டுமே என்பது குறிப்படத்தக்கது.
தென்னாட்டுக்குத் ‘தமிழகம்’ எனற பெயரும் ‘திராவிடம்’ என்னும் பெயரும் பண்டைக் காலத்திலிருந்தே வழங்கியிருந்தன என்று அறிகிறோம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே ‘வெள்ளைத் தீவு’ (மங்களூர்) முதல் மரக்காணம் (சதுரங்கப்பட்டினம்) வரையுள்ள கடற்கரைப் பகுதியைக் கிரேக்கர் தமிரிகா அல்லது தமிழகம் என்று அழைத்தனர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்ட சமஸ்கிருத புராணங்கள் இப்பகுதியைத் திராவிடம் என்று கூறின. இதனைத் தமிழகம் என்பதன் சிதைவு என்று சிலரும், ‘திருஇடம்’ என்பதன் ‘மரூஉ’ என்று சிலரும் எண்ணுகின்றனர். ஸ்பெயின் நாட்டிலும் பண்டைய பிரான்சு பிரிட்டன் நாடுகளிலும் இருந்த ’துருயித இனத்தவருடன்’ தென்னாட்டவர் கொண்டிருந்த தொடர்பை இச்சொல் காட்டுகிறது எனக்கொள்வர் ‘திருத்தந்தை ஹீராஸ்’ என்ற அறிஞர்.
திராவிட மொழிகளின் பழம்பெருமைக்கும், கலப்பிலாத தூய மொழி வளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பாக விளங்குவது தமிழ்மொழியே.” என்ற கடல் கொண்ட தென்னாடு நூலில் விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையார் தமது வரலாற்றுப் படைப்புகள் மூலம் கீழ்க்கண்ட கோட்பாடுகளை நிறுவியுள்ளார்.
1)தமிழரினம் உலகின் நாகரிகத் தொட்டில்களுள் மூத்த முதன்மையுடையது.
2)தமிழர் பண்பாட்டுக் கூறுகள் உலகின் பல பண்பாட்டுக் கூறுகளோடு கலந்து கரைந்துள்ளன.
3) தமிழ்த் தேசிய வரலாறு, இந்தியத் தேசிய வரலாறு, உலகத் தேசிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று நீங்காப் பிணைப்புடையவை.
“அப்பாத்துரையார் தமிழின் மூலத்தையே ஆராய முனைற்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல; தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” –என அறிஞர் அண்ணா போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளமை முற்றிலும் உண்மையே!
‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’, ‘டேவிட் லிவிங்ஸ்டன்’, ‘அரியநாத முதலியார்’, ‘கலையுலக மன்னன் இரவிவர்மா`, `வின்ஸ்டன் சர்ச்சில்`, `அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்`, `அறிவுலக மேலை பெர்னாட்ஷா`, `கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர்அலி`, `ஆங்கிலப் புலவர் வரலாறு`, சங்க காலப் புலவர்கள் வரலாறு`, `அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின்` -உட்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார்.
சங்க காலப் புலவர்களில் பிசிராந்தையார், கோவூர் கிழார், ஒளவையார், பெருந்தலைச் சாத்தனார் முதலிய நால்வர் பற்றி எழுதியுள்ளார்.
`கலையுலக மன்னன் இரவிவர்மா` என்னும் நூலில், ``இரவிவர்மா ஓவியத்தைத் தாய்மொழியாகக் கொண்டு அதில் கவிதை வரைந்த கலைஞன்`` என்று அவர் கூறியிருப்பதில் அனைத்துமே அடங்கிவிடுகிறது!
`நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்` என்னும் வரலாற்று நூலில், நேதாஜியை இந்தியாவின் நெப்போலியனாகக் காண்கிறார். மேலும், ``இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளரை எதிர்க்கத் துணிந்தவர்கள் இருவரே. இவர்களுள் காலத்தால் முந்தியவர் `கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி! மற்றவர், கிழக்காசியாவிலிருந்து கொண்டு இந்தியாவின் வீரக்கொடியை வானளாவப் பறக்கவிட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ்`` என்று மொழிந்து முத்திரை பதித்துள்ளார்.
`அறிவுலக மேதை பெர்னார்டு ஷா` வைப்பற்றிய நூலில், ``அவர் வாழ்க்கையில் எதிர்த்து நீந்தி வியத்தகு வெற்றிகண்ட பெரியார் என்றும் ஷாவின் வாழ்க்கை வருங்கால உலகின் இளைஞருக்குப் படிப்பினையாகத் தக்கது`` என்றும் குறிப்பிட்டடுள்ளார்.
6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.
தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் ‘குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.
அறிஞர் அப்பாத்துரையார், இளைஞர்கள் பயிலும் பாடநூல்களுக்காகவே, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவித்துள்ளார்.
கிரேக்க இலத்தீன் மொழிகள், அரபு எபிரேய மொரிகள், சமஸ்கிருதம், முதலிய எல்லா உலக மொழிகளிலும் மொழிக்கு மட்டுமே இலக்கணம் உண்டு. இலக்கியத்துக்கு இலக்கணம் இல்லை, தமிழ் மொழியில் மட்டுமே தொடக்கக் காலத்திலிருந்து மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் உண்டு.
உலக வழக்கும் செய்யுள் வழக்கும் இலக்கணத்துக்கு இலக்யிமாகக் குறிக்கப் பெற்றது தமிழ் மொழியில் மட்டுமே.
தமிழ் மொழியில் தொடக்கத்திலிருந்தே, எழுத்துக்களின் தொடர்ந்த ஒலிப்பு வேறாகவும் சொல்லின் ஒலிப்பு வேறாகவும் இருந்ததில்லை.
-எனப் `பன்மொழிப் புலவர்` அப்பாத்துரையார் தமது ஆய்வின் மூலம் தமிழின் சிறப்புத் தகுதியை உலகிற்கு பறைசாற்றியுள்ளார்.
`` தமிழிலக்கிய வானில் திருக்குறள் ஒரு கதிரவன், மணிமேகலை ஒரு பால்நிலா வெறிக்கும் தன்மதியம், சிலப்பதிகாரம் பண்மணி ஒளிவீசும் ஒரு வானவில், சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் சேனில் நிலவும் ஒளிக்கோனங்களாகிய விண்சுடர் மணிகள்``
-என தமிழிலக்கியத்தின் பெருமையையும், சிறப்பையும் தமது, `தமிழ் தந்த இன்பம்` என்ற நூலில் எடுத்தியம்பியுள்ளார்.
``தமிழ் தமிழரின் இலக்கிய மொழியாகவும், அரசியல் மொழியாகவும், அறிவுத்துறை மொழியாகவும் தொன்று தொட்டு இயங்கி வந்துள்ளது. இடையிருட்கால அடிமைச் சூழல்களிடையே தமிழர் தம் தட்டுக்கெட்டனர்`` என்ற கூறி தமிழ் மொழி வளர்ச்சி பெற தமிழர்கள் பாடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
அப்பாத்துரையார், திருக்குறளுக்கு விரிவும் விளக்கமுமாக பல்லாயிரம் பக்கங்கள் ஓயாமல் எழுதிக் குவித்தவர். `அவரது திருக்குறள் மணி விளக் உரை` என்ற தலைப்பில் ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கவியரசு கண்ணதாசன் நடத்திய `தென்றல்` வதரஇதழிலும், `அன்னை அருங்குறள்` என்ற தலைப்பில் புதிய குறள்பா படைத்தார்!
திருக்குறள் உரைக்கெனவே `முப்பால் ஒளி` என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார்.
அவரது திருக்குறள் விளக்க உரையில், உலகின் பலமொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது.
``பிறநாட்டு நல்லறிர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்``
-என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக ‘அலெக்ஸாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் ஆகிய மூவரையும் பற்றி ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய நூலை மொழிபெயர்த்து தந்து உள்ளார்.
உலக இலக்கியங்கள்` என்ற நூலில் பிரெஞ்சு, சீனம், ருசியா, உருது, பாரசீகம், கன்னடம், தெலுங்கு, ஜெர்மணி, வடமொழி, கிரேக்கம் எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளை வழங்கியுள்ளார்.
உலகின் ஆதி மொழி தமிழ் என்றும், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.
காரல் மார்க்சின் நூலை முதன் முதலில் `முதலீடு` என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தார்.
வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியத் திறனாய்வுகள், சிறுகதைகள், நாடகங்கள், பொது அறிவு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், குழந்தை இலக்கிய நூல்கள் என எத்துறைக்கும் ஏற்றதான நூற்று இருபது அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற அறிஞர்!
அறிவுச் சுரங்கம், தென்மொழித் தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை 26.05.1989 அன்றுதான் அவனியைவிட்டு அவர் மறைந்தார்.
அன்று தான் படிப்பதையும், சிந்திப்பதையும் எழுதுவதையும் அவர் நிறுத்திய நாள்.
---------------------------------------------------
Arumai, Iya,, we can Introduce this books and Author to the coming generations...
பதிலளிநீக்குகருத்துரையிடுக