தமிழ் வளர்த்த தலைவர்கள்-8-மொழிஞாயிறு
தேவநேயப் பாவாணர்.
- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், திருநெல்வேலி.
தற்காலத்தில் தமிழை அறிவுப்புலத்தில் நிலைநிறுத்த வேண்டும் அப்போதுதான் தமிழ் நவீன காலத்திலும் நிலைத்து நிற்கும் என்று சிந்தித்து செயலாற்றிய தமிழ் அறிஞர்கள் பலர், அவர்களின் ஈடு இணையற்ற பணியால், நவீன அறிவுலக யுகத்தில் தமிழ் நிலைத்து முன்னேறிக் கொண்டிருக்கின்றது., அதற்கான அஸ்திவாரத்தை உறுதிபட நாட்டியவர்கள் பலர், அதற்காக தமது சொந்த வாழ்க்கையை தமிழுக்காக தியாகம் செய்து, தமிழையே மூச்சாகவும் பேச்சாகவும் உயிராகவும் கொண்டு வாழ்ந்து உழைத்தவர்கள் பலர்.. அவர்களில் முதல் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க பெருந்தகையாளரே தேவநேயப் பாவாணர்.
மொழிஞாயிறு, சொல்லாராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் என பெரும் சிறப்புகளை பெற்றவர் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர்.
தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர். பன்மொழிகளில் சிறப்பாக பேசும் ஆற்றலுடையவர்.
தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென நிறுவியவர்.
கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு தமிழ் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து கட்டியவர்.. அத்தகைய பெரும் சிறப்பு மிக்க தமிழறிஞர் மொழிஞாயிறு பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் அவர்களை பற்றி இந்த வாரம் காண்போம்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 1902ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி, ஞானமுத்தன் – பரிபூரணம் ஆகிய இருவருக்கும் பத்தாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் “தேவநேசன்”.
1912- தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம், ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசௌரி உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார்.
1916- பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில்(C.M.S.) IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயின்றார்.
1919- இராமநாதபுரம் மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த) யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில், 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ(ஆறாம் வகுப்பு) ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்..
1921- ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்று 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர்
1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார் பாவாணர். மிகச் செறிவான பாடத் திட்டங் கொண்ட அத் தேர்வில்; நுழைவு, இளநிலை என்னும் கீழ்நிலைத் தேர்வுகள் எழுதாமலே நேரடியாக இறுதி நிலைத் தேர்வு எழுதிய பாவாணர் அதில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்றார். அவ்வாண்டு அத் தேர்வெழுதியவர்களுள் பாவாணர் ஒருவரே வெற்றி பெற்றார்; என்பது குறிப்பிடத் தக்கது.
“நேசன்” என்பதும் “கவி” என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் “தேவநேயப் பாவாணர்” என அமைத்துக்கொண்டார்
1925 ஆம் ஆண்டு சென்னை, திருவலிக்கேணியில் உள்ள கிறித்தவக் கல்லூரியின் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில்
அப்போது அவர் எழுதிய 'சிறுவர் பாடல் திரட்டு' நூலை இந்தியக் கிறித்தவ இலக்கியக் கழகம் வெளியிட்டது.
1926 ஆம் ஆண்டு திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார் பாவாணர். அவ்வாண்டு அத்தேர்வு எழுதியவர்களுள் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. சென்னை - பெரம்பூர்க் கலவல கண்ணனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணி மேற்கொண்டார். இப்பணி ஈராண்டு தொடர்ந்தது.
சென்னைப் பல்கலைக்கழக வித்துவான், கீ.க. தேர்வு (B.O.L) என்னும் இளநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார்;
1928 ஆம் ஆண்டு மன்னார்குடிப் 'பின்லே' கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியேற்றார். இங்கு ஐந்தாண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். பாவாணரின் முதல் மனைவி எஸ்தர் அம்மையார் 'மணவாளதாசன்' என்னும் கைக் குழந்தையை விட்டுவிட்டு இயற்கை யெய்தினார் ; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார்.
1930 ஆம் ஆண்டு தேவநேய பாவாணர் தேவநேயனார் தம் அக்கா மகளான நேசமணி அம்மையாரை மணந்தார்.
”மொழியாராய்ச்சி' - ஒப்பியன் மொழி நூல்” என்ற தேவநேயப்பாவாணரின் ஆய்வுக்கட்டுரை 1931 ஆண்டு வெளிவந்தது. அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த செந்தமிழ்ச் செல்வி என்ற இலக்கிய சஞ்சிகை இதனை வெளியிட்டது. ”திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே” என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் M.O.L. என்ற முது நிலைப் பட்டத்திற்கான ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார் தேவநேயப் பாவாணர். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்காமல் நிராகரித்தது. அதுவரை பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை.
1934 திருச்சி பிசப் ஹீப்பர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-1943) பணிசெய்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தினால் இவரது ஆய்வு கட்டுரை நிராகரிக்கப்பட்ட செயல், அவரது மொழியாராய்ச்சி வேகத்தை மென்மேலும் அதிகரிக்கும் உந்துசக்தியாகவே அமைந்தது. ‘இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்’ என உறுதிக் கொள்கிறார். தேவநேயப் பாவாணருடைய ”ஒப்பியன் மொழிநூல்” 1940 ல் வெளியானது.
அவர் தனது தமிழ் முதுகலைப்பட்டத்தை(M.A.) 1952 இல் பெற்றுக்கொண்டார்.
1943- சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி(ஓராண்டு). தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு(21.10.43). தொல்காப்பியக் குறிப்புரை வரைவு.
17 வயதில் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர் சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1944 வரை தமிழ்ஆசிரியராகப் பணியாற்றினார்.
12.07.1956அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – திரவிட மொழியாராய்ச்சித் துறையில் ஐந்தாண்டுகள் பணியாற்றினார். இது இவரது சொல்லாய்வுக்கு உறுதுணையாய் இருந்தது. வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
சொல்லாய்வில் ஈடு இணையற்ற புலமையாளராக திகழ்ந்த தேவநேயப்பாவாணர் தமிழ் வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறையில் துணைப்பேராசிரியராக சேர்ந்த அவர் பாவாணர் தனித் தமிழ்க் கழகம், தென்மொழி, உலகத் தமிழ்க் கழகம், பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி ஆகியவற்றை உருவாக்கினார்.
1963 பிப்பிரவரி முதல் சிறப்பாசிரியராகப் பாவாணர் பெயர் தாங்கித் 'தென்மொழி' இதழ் மீண்டும் தன் வீறார்ந்த நடையைத் தொடர்ந்தது.
பாவாணரின் ஆருயிர்த் துணைவியாரான நேசமணி அம்மையார் நோய்வாய்ப்பட்டு இயற்கையெய்தினார். இந்த காலகட்டத்தில் வருவாய் குறைந்து, பாவாணர் பெரிதும் இன்னல் அடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு உதவும் நோக்கில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் 'பாவாணர் பொருட் கொடைத் திட்டம்' என்னும் திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கினார். அது பற்றிய அறிவிப்புத் தென்மொழியில் வெளிவந்தது.
பாவாணர் வேண்டிய படி தென்மொழியின் 'பாவாணர் பெரும்கொடைத் திட்டம்' 06-07-64 அன்று முடிவு பெற்றது.
12.01.1964- அன்று முனைவர் சி. இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் பாவாணரின் பணிகளைப் பாராட்டி அவர்க்குத் 'தமிழ்ப் பெருங்காவலர்' என்னும் பட்டம் மதுரையில்வழங்கிச் சிறப்பித்தது.
1965 ல் தமிழ்நாட்டில் ஹிந்திக்கு எதிரான போராட்டங்கள் பரவலாக இடம்பெற்றன. அந்தக் காலப்பகுதியில் தென்மொழியில் அதன் பொறுப்பாசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்தி வல்லாண்மையை எதிர்த்துக் கடுமையாகச் சாடி எழுதியமையால், தென்மொழி ஆசிரியர் குழுவின் மீது, தமிழக அரசு இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பெற்றோர் பட்டியலில் பாவாணர் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. பாவாணர் சிறப்பாசிரியரே என்பதாலும், கட்டுரைக்குப் பாவலரேறு அவர்களே பெறுப்பேற்றுக் கொண்டமையாலும் பாவாணர் அவர்கள் வழக்கினின்றும் விடுவிக்கப் பெற்றார். அதன் பின் பாவாணர் விருப்பப்படி தென்மொழி (சுவடி: 3, ஓலை: முதல்) சிறப்பாசிரியர் என்னும் நிலையில் பாவாணர் பெயர் இடம் பெறவில்லை.
1966 ல் பாவாணரின் "The Primary Classical Langage of the World" என்னும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் முனைவர் சி. இலக்குவனார் தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், முனைவர் மெ. அழகனார் முதலானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
09-04-66 முக்கூடல் சொக்கலால்ராம் சேட்டின் 34 ஆவது பிறந்த நாளாக இருந்தது .. அன்றைய தினத்தில் இந் நிகழ்வு நாள் அமைய அந்நூல் வெளியீட்டுக்குப் பொருளுதவி செய்தார் முக்கூடல் சொக்கலால்ராம் சேட்டு.
துறையூரில் செங்காட்டுப்பட்டிப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் சார்பில், தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமையில் பாவாணர்க்குப் பாராட்டு விழா நடந்தது. பொன்னாடை போர்த்திப் பொற்கிழியாக ரூபாய் 4001/- வழங்கினார்கள்.. அத் தொகை தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு நூல்களின் வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் பாவாணர்.
06-10-66 அன்று பாவாணர் தனது மனைவி நேசமணியம்மையார் நினைவு நாளில் 'பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்' 'இசைத்தமிழ்க் கலம்பகம்' ஆகிய நூல்களை வெளியிட்டார்.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், மக்களிடம் உள்ள தமிழ்ப்பற்றை தங்களின் அரசியல் இலாபத்துக்காகவே பயன்படுத்திக் கொள்வதாக மனம் வருந்திய தேவநேயப் பாவாணர் உலகத் தமிழ்க் கழகத்தை 06.10.1966- திருச்சிராப்பள்ளியில் உருவாக்கிச் செயற்படுத்தினார்.
1967 இல் மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம்' பாவாணர் மணி விழாவைக் கொண்டாடியது. பாவாணர்க்கு 'மொழிநூன் மூதறிஞர்' என்னும் பட்டம் வழங்கியும் பொற்கிழியாக ரூபாய் 7352/- அளித்து சிறப்பித்தது. 08-09-67 அன்று நடைபெற்ற விழாவின் அழைப்பிதழ் காலதாமதமாக கைவரப் பெற்றமையால் இவ்விழாவில் பாவாணர் கலந்து கொள்ள இயலவில்லை. பட்டமும் பணமும் விழாத் தலைவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுப் பின்னர்ப் பாவாணர்க்குச் சேர்ப்பிக்கப் பெற்றன.
தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், The Primary Classical Language of the works என்ற ஆங்கில நூல், திருக்குறள் தமிழ் மரபுரை, இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்?, தமிழர் மதம், மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை, தமிழ் வரலாறு போன்ற நூல்களை ஆக்கிய அவர், 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி மொழியியல் துறையில், தமிழுக்கான தனித்துவ அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்.
1968 திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் உலகக் தமிழ்க் கழகம் தொடங்கப்பட்டது. பாவாணர் தலைமைப் பொறுப்பேற்றார். பர்.மே. அழகனார் துணைத்தலைவராகவும், பாவலரேறு பெருஞ் சித்திரனார் பொதுச் செயலாளராகவும், புலவர் இறைக்குருவனார் துணைப் பொதுச் செயலாளராகவும், திரு. செங்கை செந்தமிழ்க் கிழார் (நா. செல்வராசன்) பொருளாளராகவும் தெரிந்தெடுக்கப் பெற்றனர்.
திருச்சி மாவட்டம் புத்தனாம் பட்டியில் பாராட்டு விழா. பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்கப்பெற்றது. அப்போது 'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' 'வண்ணனை மொழிநூலார் வழுவியல்' என்னும் நூல்களை வெளியிட்டார் பாவாணர்.
1969 ஆம் ஆண்டு பெரியார் தென்மொழிக் கல்லூரி என்னும் பெயரில், தமிழையும் பதினெண் திராவிட மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில வாயிலாகவும் கற்பிக்கும் கல்லூரி ஒன்றைச் சென்னையில் நிறுவும்படி பெரியார் ஈ.வே.இரா. அவர்கட்கு வேண்டுகோள் விடுத்தார் பாவாணர். 25-06-69 அன்று இக் கடிதத்தை வேலூருக்கு வந்த பெரியாரிடம் பாவாணர் நேரில் கொடுத்தார். கடைசி வரை அதற்கு பதில் கிடைக்க வில்லை.
நீலகிரியில் ஒரு மாதகாலம் தங்கி மொழிஞாயிறு பாவணர் அவர்கள் மலைவாணர் வழக்காற்றுத் தமிழ்ச் சொற்கள் திரட்டினார்;. தமிழன்பர்களோடு இலக்கண வகுப்பு நடத்தினார்.
பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழகத்தின் முதல் மாநாடு பறம்புக்குடியில் 1969 டிசம்பர் 28,29 ஆகிய நாட்களில் நடைபெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார், முனைவர் சி. இலக்குவனார், வ.சுப. மாணிக்கம், புலவர் குழந்தை முதலானோர் இம் மாநாட்டிற் பங்கேற்றனர் .
பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை வெளியிடப்பட்டது.
1970 ல் கருநாடகத் தமிழர்க்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, அம் மாநில முதல்வர் வீரேந்திர பாட்டீலுக்குப் பாவாணர் ஒரு வெளிப்படைக் கடிதம் 08-05-70 அன்று எழுதினார் தமிழ்நாட்டுத் தாளவாடியைக் கருநாடகத்தோடு இணைக்க வேண்டிக் கிளர்ச்சி செய்த வாத்தல் நாகராசனைத் தமிழ்நாட்டரசுச் சிறைப் படுத்தவே வன்முறைக் கும்பல் கருநாடகத் தமிழர் மீது கடுந்தாக்குதல் நடத்தியமையால் அவர்கட்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரிப் பாவாணர் எழுதிய வெளிப்படைக் கடிதம் ஆங்கில வடிவிலேயே தென்மொழியில் வெளியாகியுள்ளது.
நெய்வேலியில் 'பாவாணர் தமிழ்க் குடும்பம்' என்னும் அமைப்புத் தொடங்கப் பட்டது (02-08-1970) 'துணைவன் கொண்ட கொள்கையைத் துணைவி ஏற்கவும், துணைவியின் உணர்வைத் துணைவன் மதிக்கவும் அவற்றை மக்கள் கடைப்பிடிக்கவுமாகத் தனி நிலையிலும் குடும்ப நிலையிலும் ஒவ்வொருவரும் மொழி இன நாட்டு வளர்ச்சிக்கு உண்மையில் பயன்படச் செய்யும் பண்பாட்டு அமைப்பே பாவாணர் தமிழ்க் குடும்பம்.' அமைப்பின் நிறுவநர்: தா. அன்புவாணன் வெற்றிச் செல்வி. பாவாணரின் சொல்லாய்வு நலம் பாராட்டிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் அவர்க்கு வெள்ளித் தட்டும் வழங்கியும் பட்டுப் போர்த்தியும் சிறப்பித்தது.
சிறப்பாசிரியராகப் பாவாணர் பெயர் தாங்கி உலகத் தமிழ்க் கழக மாதிகையாக 'முதன்மொழி' வெளிவந்தது.
1971 ஆம் ஆண்டு பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாவது பொது மாநாடு மதுரையில் இருநாள் நடைப்பெற்றது. தவத்திரு. குன்றக்குடி அடிகளார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா. கோ. நிலவழகனார், பேரா. வி.மு. வில்லவதரையனார், முனைவர் க.ப. அறவாணன் முதலானோர் இம் மாநாட்டிற் கலந்து கொண்டனர் .
பறம்பு மலையில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில், பாவாணர் 'செந்தமிழ் ஞாயிறு' என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி விழாவில் கலந்துகொண்டு பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார் .
தென்மொழியில் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம்' வகுக்கப் பெற்று அறிவிக்கப்பட்டது. திட்ட உறுப்பினர் இருநூறு பேர், ஒவ்வொருவரும் மாதந்தோறும் ரூபாய் 20 பாவாணர்க்கு அனுப்பி வைப்பதென்றும் அதில் ஒரு பாதித் தொகை அகரமுதலி உருவாக்கத்திற்கும் மறுபாதித் தொகை அதன் வெளியீட்டுக்கும் செலவிடப்படும் என்றும் செம்மையான திட்டம் வகுக்கப்பட்டு முறையாகச் செயல்படத் தொடங்கியது.
மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் வால்பாறையில் பத்து நாட்கள் தங்கி மலைவாணர் வழக்காற்றுச் சொற்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டார். பாவலரேறு அவர்களும் உடன் சென்றிருந்தார். தங்கல்
1972 ல் உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில், தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்க அறைகூவல் மாநாடு தஞ்சை அரண்மனை இசை மண்டபத்தில் பெரும் புலவர் நீ. கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாவாணர் பேருரையாற்றினார். இம் மாநாட்டில் அறிவியலறிஞர், கோவை. கோ. துரைசாமி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், வீ.ப.கா. சொல்லழகனார், குடந்தை சுந்தரேசனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'தமிழர் வரலாறு', 'தமிழர் மதம்'-என்னும் நூல்கள் வெளியிட்டார்.
1973 ல் 'வேர்ச் சொல் கட்டுரைகள்' நூல் வெளிவந்தது.
1974 இல் தமிழ் நாட்டரசு வகுத்த 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கத்தின் இயக்குநராகப் பாவாணர் அவர்கள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 08-05-74 அன்று
நியமிக்க பட்டார். அப்போது அவருக்கு மராட்டிய மொழி அகரமுதலி ஒன்று தேவையாய் இருந்தது. அப்போது மூர் அங்காடியில் இராசவேல் என்ற பழைய புத்தக வணிகரிடம் அந்நூல் இருந்தது. அந்த அகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1975 இல் நெய்வேலிப் பாவாணர் தமிழ்க் குடும்பத்தினர் சுற்றுலாவாகச் சென்னை வந்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் உடனிருக்க பாவாணருடன் அளவளாவி மகிழ்ந்தனர் (16-10-75)
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திரு. ஏ.எல். சீனிவாசன் தலைமையில் நடத்திய முத்தமிழ் மாநாட்டில் பாவாணர் அவர்கள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப் பெற்றார்.
1976 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய மறைமலை யடிகளார் நூற்றாண்டு விழாவில் தவத்திரு அழகரடிகள், திரு. ந.இரா. முருகவேள், திரு. சிறுவை. நச்சினார்க்கினியன், பாவாணர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப் பெற்றார்.
1978 ல் 'மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுமை' என்னும் நூல் வெளிவந்தது.
15-01-1979 தமிழ்நாட்டரசு பாவாணர்க்குச் 'செந்தமிழ்ச் செல்வர்' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது. வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்த விழாவில் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன் (M.G.R.) பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்தியும் நினைவுத் தட்டமும் விருதும் வழங்கியும் சிறப்பித்தார். இவ்விழாவில் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், தாமரைச் செல்வர் வ. சுப்பையா, தி.சு. அவிநாசிலிங்கனார், ம.ப. பெரியசாமித் (தூரன்) ஆகியோரும் சிறப்பிக்கப் பெற்றனர்.
'தமிழிலக்கிய வரலாறு' நூலும் வெளிவந்தது.
சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் புலவர் அ. நக்கீரனார் தலைமை தாங்கினார்.
1980 ஆம் ஆண்டு 'Lemurian Languge and its Ramifications – An Epitome' பக்க அளவில் விரித்தெழுதத் திட்டமிடப் பட்டிருந்த இவ்வாங்கில நூலின் சுருக்க வடிவம், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு அயல்நாட்டுப் பேராளர்க்கெனத் தட்டச்சில் 52 பக்க அளவினதாக உருவாக்கப்பட்டது.
பன்மொழிப் புலவராகிய பாவாணர் வீட்டில் உலக மொழிகளில் உள்ள அனைத்து அகராதித் தொகுப்புகளும் இருந்தன. பாவாணர் தாமே முயன்று பல மொழிகளையும் கற்றார். திராவிட மொழிகள், இந்திய மொழிகள், உலகமொழிகள் ஆகியவற்றில் பெருமொழிகளாய் அமைந்த 23 மொழிகளைக் கற்று, அவற்றின் இலக்கண அறிவும் பெற்றவர் . சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியினை ஆராய்ந்து அதில், ஆயிரக்கணக்கான தென் சொற்கள் விடப்பட்டிருப்பதும், தமிழின் அடிப்படைச் சொற்களையெல்லாம் வடசொல்லென்று காட்டியிருப்பதும் தமிழ்ச் சொல் மறைப்பாகும் என பாவாணர் சுட்டிக்காட்டினார்.
காலமெல்லாம் பாவாணர் சொல் வழக்காறுகளைத் தொகுத்தார். அவர் தொகுத்த சொற்களஞ்சியச் செல்வத்தினைத் தாம் எழுதியவற்றில் வாரி வழங்கினார். எழுதுவது போலவே பேசுவார். அவர் நூல்கள் போலவே உரையாடலிலும் ஊடகமாகச் சொல்லாய்வு தலைதூக்கி நிற்கும். பாவாணரைப் பற்றி, “சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று யாம் உண்மையாகவே கருதுகின்றோம்,” என மறைமலையடிகளார் குறிப்பிடுகிறார்.
பலசொற்கள் வடமொழியில் இருந்தே வந்தது என்று பலர் கூறியபோது அதனை மறுத்து அவை தூயதமிழ்ச் சொற்களே என மெய்ப்பித்தவர் பாவாணர். “புத்தகம்” எனும் சொல் வடசொல்லில் இருந்து வந்ததாகக் கூறுவர். இதனை மறுத்து பாவாணர், “புத்தகம்” என்னும் சொல் “பொத்தகம்” என்பதன் வழிவந்த சொல்லாகும்.
அதாவது புல்லுதல் – பொருந்துதல், புல் – பொல் – பொரு – பொருந்து – பொருத்து – பொத்து – பொட்டு, பொத்துதல் – பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல், பொத்து – பொத்தகம் – பொத்திய (சேர்த்தல்) ஏட்டுக்கற்றை, எழுதிய ஏட்டுத் தொகுதி என விளக்கி இதை தூய தமிழ்ச்சொல் என்று மொழிகிறார்.
கோயில்களில் தமிழ் வழிபாடு முறைதான் பின்பற்றப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர். ஆலயங்களின் மத வழிபாடு மட்டுமின்றி, பிறப்பு-இறப்பு குறித்த சம்பிரதாய முறைகளைக்கூட தமிழ்மொழியில்தான் பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறியவர்.
சொல்லாய்விற்காக அரும்பாடுபட்டவர் பாவாணர். “மொழியாராய்ச்சி” என்ற பாவாணரின் முதற்கட்டுரை, செந்தமிழ்ச்செல்வி ஜூன் – ஜூலை திங்களிதழில் 1931ம் ஆண்டு அவரது 29ம் அகவையில் வெளிவந்தது. “உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு” என்ற அவரது இறுதிக் கட்டுரை அதே இதழில் 1980ம் ஆண்டு டிசம்பர் திங்களில் வெளிவந்தது. இருப்பினும் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை நகரில் 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியபோது வெளியிடப்பட்ட மலரில் இடம்பெற்றதும், பாவாணரால் மாநாட்டரங்கில் படிக்கப்பெற்றதும் ஆகிய கட்டுரை, “தமிழனின் பிறந்தகம்” என்னும் கட்டுரையாகும்.
மாநாட்டு அரங்கில் இக்கட்டுரைக்கு பாவாணர் விளக்கம் கூறிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.. ஆம்
05.01.1981 அன்று மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் `மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்ற தலைப்பில் ஒன்றேகால் மணி நேரம் உரையாற்றி கொண்டிருந்தார்.. அவர் ஆற்றிய உரை, மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கவனிக்கப்படுகிறது.
அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வழியால் பாதிப்படைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் நலம் பாதிப்பால் தொடர் சிகிச்சை பலனின்றி 1981 ஜனவரி 16அன்று பின்னிரவு அதிகாலை ஒரு மணிக்கு இயற்கை எய்தினார். ‘தமிழ்ச்சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படும் பாவாணர், தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராகவும் விளங்கியவர் தனது 79 வயதில் மறைந்தார். 17.01.1981-அன்று சென்னை, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அவரது உடல் நல்அடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக எந்த அளவு பாடுபட்டாரோ அதே அளவுக்கு அவர் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வு மேம்பட வேண்டும் எனவும் பாடுபட்டார். தமிழ்ச்சமூகத்தில் சாதிப்பெயர்களை பெயரின் பின் சேர்க்கும் பழக்கத்தைக் கைவிட வைப்பதற்கான உந்துதலை ஏற்படுத்திய தேவநேயப் பாவாணர், சாதிகளுக்கு இடையேயான கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.
பிற தென்னாசிய மொழிகளுடன் ஒப்பிடுகையில், நவீன தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் இன்று வெகுவேகமாக முன்னேறிக் கொண்டு உள்ளது. இந்த நிலைக்கான ஆரம்பகட்ட அத்திவாரத்தை இட்டவர் என்ற பெருமையில், தேவநேயப்பாவாணர் என்றும் தமிழ்ப்பெருந்தகையாளாராக போற்றப்படுவார் என்பதில் சந்தேகமில்லை
`மறைமலை அடிகளின் தமிழர் மறுமலர்ச்சி சிந்தனையின் ஒரு தொடர்ச்சிதான் தேவநேய பாவாணர். இவரின் `சொற்பிறப்பியல்' நூலைப் பாராட்டி, முன்னுரை எழுதிக் கொடுத்துள்ளார் மறைமலை அடிகளார். பாவாணரின் ஆய்வில் குறிப்பிடத்தக்கது, `தமிழ்தான் உலகிலேயே தோன்றிய முதல் செம்மொழி' என்ற ஆய்வுதான். மேலும், சம்ஸ்கிருதம் என்பது தமிழ் மொழியிலிருந்து சொற்களை எடுத்துதான் செம்மைத்தன்மை அடைந்தது என்றும் அவர் கண்டறிந்தார்.
அவரின் மிக முக்கியமான இன்னொரு பங்களிப்பு, தமிழர் தோன்றிய இடமான லெமூரியா கண்டத்தைப் பற்றியது. இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப்போன லெமூரியாதான், தமிழன் தோன்றிய முதல் இடம் என்பதைச் சொன்னது. இதன் காரணமாகத்தான், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு `குமரி' என்ற பெயர்வந்தது. `The Primary Classical Language Of The World' என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். தமிழ் மொழியிலிருந்து சொற்கள் எப்படி பிறமொழிகளுக்குச் சென்று புதிய சொற்கள் உருவானது என்பதைப் பற்றி அந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். `செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி' என்ற திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கு இயக்குநராக பாவாணரை நியமித்தனர். அது இன்றும் செயல்பட்டுவருகிறது. இது அவரின் மிக முக்கியமான பங்களிப்பு. அவரின் தமிழ்த் தொண்டு போற்றக்கூடியது'' என்றார்.
தமிழ்த் தேசியத்தின் தந்தை' என அழைக்கப்படும் `பாவலரேறு பெருஞ்சித்திரனார்', `தென்மொழி இயக்கம்' என்ற அமைப்பை நடத்திவந்தார். அந்த இயக்கம் தேவநேய பாவாணரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அந்த இயக்கம்தான் பாவாணருக்கு `மொழி ஞாயிறு' என்ற பட்டம் வழங்கி கௌரவித்தது. இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி, தபால்தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது மலேசிய அரசு.
அவர் ஆற்றிய பணிகளே, பிற மொழிகள் மத்தியில் தமிழை தனிப்பெரும் கம்பீரத்துடன் நிமிர்ந்திருக்கச் செய்துள்ளன. மொழியியல் துறையில் இவரது அளப்பரிய பங்களிப்பின் காரணமாக, “மொழிஞாயிறு” என்ற சிறப்புப் பட்டம் இவரை வந்தடைந்தது.
பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.
வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில்கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை.
‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.
கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்! உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே.
ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, ‘நான் தமிழன்’ என ஏறு போற் பீடு நடை நடக்க,
தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி
தமிழ் வாழ்க
-----------என்று முழங்கியவர் தேவ நேயப் பாவாணர்.
-----------------------------------------------------------
கருத்துரையிடுக