ஆனந்தம் தரும் ஆத்திசூடி-7
புலவர். டாக்டர். வை.சங்கர லிங்கம்.
'கேட்டிலும் துணிந்து நில்'
வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை அடைகின்றன.மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.
நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாக கஷ்டத்தில் உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் கஷ்டம்.
முதற்கட்டமே கஷ்டம் என்றால், அடுத்த கட்டம் இன்பம். இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.
அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.
பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.இப்போது உணவு கிடைக்கிறது பசியில்லை.
அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதார்ரானார் ஒருவர். மறுநாளோ, அவரை ‘அரிசி சாப்பிடக்கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.
வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிக்காமல் யாரேனும் வாழ்ந்திருக்கிறார்களா?
கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.
ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும்பரிசு.இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.
நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.
எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறன் என்று பொருள்.
எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.
உனது வாழ்க்கை பூஜ்ஜியத்தில் ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை.
மேடும் பள்ளமுமாக வாழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை.
ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருக்கிறது
‘ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.
தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது?, உண்மை மான் எது ?என்று தெரியவில்லையே!
அதனால் வந்த வினைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!
சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவில்லையே!
அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!
ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக் கதைகளை நமது ஞானிகள் எழுதி வைத்தார்கள்.
துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைகள் என்றும், அவற்றுக்காக கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும தேவை இல்லை என்று நம்மை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்கள்.
துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?
அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.
தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்களின கருத்துக்கள் மகத்துவமானவை.
கஷ்டத்திலும் நேர்மையாக இரு,
நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே,
உன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்.
தர்மம் தலை காக்கும்
தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.
எல்லாம் கடந்து போகும். இதைத் தான் பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் 'கேட்டிலும் துணிந்து நில்' (எண்20) என்கிறார்.
கருத்துரையிடுக