நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரை-2
வளம்தரும் வாழ்க்கைச் சூழல்கள்
நல்ல எண்ணங்கள்தான் நல்ல வார்த்தைகளாக உருவாகிறது. நல்ல வார்த்தைகள்தான் நல்ல வாழ்க்கையை வடிவமைக்கின்றன. இந்த உண்மையை இளமைப் பருவத்திலேயே புரிந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தத்தை காணலாம்.
சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள எனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனது உறவினரின் மகன் வெங்கடேஷ் என்னிடம் வந்தான். அவனுக்கு 12 வயது இருக்கும். சிரித்த முகத்தோடு காட்சியளித்தான்.
அவனிடம் “நீ படித்து முடித்தபின் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டேன்.
உடனே - “நான் டாக்டராக போகிறேன், அங்கிள்” என்றான் வெங்கடேஷ்.
“டாக்டராகி என்ன செய்ய போகிறாய்?” என்றேன்.
“இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்ய போகிறேன்” என உறுதியாக சொன்னான் வெங்கடேஷ்.
நான் மகிழ்ந்து போனேன்!
இளம்வயதில் மிக அருமையான சிந்தனையுடனும் தெளிவான நோக்கத்துடனும் படித்து கொண்டிருக்கும் அவனைப் பார்த்து நான் வியந்து போனேன்.
இப்போது வெங்கடேஷ் பிளஸ்-2 முடித்திருக்கிறான். சமீபத்தில் அவனை சந்தித்தபோது -
“பிளஸ்&2 ரிசல்ட் வந்தாச்சு. வெறும் 718 மார்க்கை வைத்து என்ன பண்றதுன்னே தெரியலை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருக்கிறது எனக்கு காலேஜிலே சேர்ந்து படிக்க ஏதாவது ஒரு பாடத்துல இடம் கிடைக்குமா? எந்தக் காலேஜ் ஆனாலும் பரவாயில்லை” - என்று குழம்பிப்போய் சொல்லிக்கொண்டு போனான்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பள்ளிப்பருவத்தில் மிக அற்புதமாக தனது குறிக்கோளை நிர்ணயித்து “வாழ்க்கையில் மிகபெரிய நிலையை அடைய போகிறேன்” என்ற கனவோடு வாழ்க்கையை தொடங்கிய இளைய உள்ளம் இப்படி நொறுங்கி போவதற்கு என்ன காரணம்?
வளரும் மாணவ&மாணவிகளை சுற்றி விதவிதமாய் மனிதர்கள். வித்தியாசமான நிகழ்வுகள். மாறுபட்ட சூழல்கள். இவை சிலரை தடம்பதித்து முன்னேற வைக்கினற்ன. வேறுசிலரை தடுமாறச் செய்துவிடுகின்றன.
துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இந்த நிலையில்தான் சிறுவன் அல்லது சிறுமி என்ற நிலையிலிருந்து மாணவன் அல்லது மாணவி என்ற பெயரோடு ஒரு “இளைய உள்ளம்” வளருகிறது. இப்போது உடல் ரிதியாகவும், மன ரிதியாகவும் பல்வேறு மாற்றங்கள் அவர்களிடம் உருவாகின்றன.
தன்னை அறியாமலேயே ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை சுய மதிப்பீடு (Self Evaluation) செய்துகொள்ளும் பருவம் “டீன் ஏஜ்” பருவம் ஆகும்.
இந்தப்பருவத்தில் இளைய மனதுக்குள் எத்தனையோ விதமான எண்ணங்கள் சிறகடித்துப்பறக்கும். சிலவேளைகளில் எதிர்மறையான எண்ணங்களும் (Negative Thoughts) தோன்றலாம்.
இதனால், மாணவ-மாணவிகள் இளமைப்பருவத்தில் தங்களைப்பற்றி தாங்களே தாழ்வாக எண்ணி கொள்கிறார்கள். “எங்க ஊருக்கு பஸ் வராது. குக்கிராமம். பஞ்சாயத்து ஸ்கூல்ல படித்தேன். அதனாலதான் என் இங்கிலிஷ் இப்படி இருக்கிறது. நான் மட்டும் மெட்ரிகுக்லேசன் ஸ்கூல்ல படித்திருந்தால் நான் நன்றாக படித்திருப்பேன்”.
-இப்படி தன்னைபற்றியும் தான் பிறந்த ஊரைப்பற்றியும், தன் பள்ளியைப் பற்றியும் தரக்குரைவாக சிந்தனை செய்து தாழ்வு மனப்பான்மையை வளர்த்துகொண்டவர்களும் உண்டு.
“இது என்ன வீடா? சரியான குப்பைத்தொட்டி. நிம்மதியே இல்லை. எப்ப பார்த்தாலும் பிரச்சினை. ஏண்டா பிறந்தோம்முன்னு இருக்கிறது” - என்று தான் பிறந்த வீட்டைப் பற்றியும், தன்னைப்பற்றியும் நினைத்து நினைத்து வேதனைப்பட்டு வீணாக நாட்களைக் கழித்தால் இளைய வயதில் இனிமை பறந்துபோய்விடும்.
“யாருக்குத்தான் கஷ்டம் இல்லை? கவலை இல்லை உயிரினங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சினைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டால் நிம்மதி தானாக வந்துவிடும்.
“செருப்பு இல்லையே என்று கவலைப்படுவதற்குபதில் காலே இல்லாமல் கஷ்டப்படுபவர்களைப்பார்த்து எனக்குக் நடப்பதற்கு கால் இருக்கிறது என்று எண்ணினால் மனதிற்குள் மகிழ்ச்சி தானாக வந்துவிடும். எனவே படிக்கின்ற காலத்தில் மாணவ - மாணவிகள் தங்களின் மனதை செம்மையாக வைத்துக் கொண்டால்தான் படிப்பில் அதிக ஆர்வம் காட்ட முடியும்.
தங்களைப்பற்றிய நல்ல எண்ணத்தை நாளும் வளர்த்துக்கொள்ள பழகிக்கொண்டால்தான் மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் செயல்பட முடியும்.
தங்களைப்பற்றிய தாழ்வான எண்ணங்களை மாணவ-மாணவிகளிடம் உருவாக்க அவர்களின் பெற்றோர்களே அறிந்தோ, அறியாமலோ ஈடுபடுகிறார்கள்.
“என் சின்னபொண்ணு ரொம்ப நல்லவள். ஆனால் இந்த மூத்தவன் இருக்கிறானே உருப்படாதவன். சும்மா தொணதொணன்னு என உயிரை வாங்கிகிட்டு இருப்பான்”-என்று சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒருவரோடு மற்றவர்களை ஒப்பிட்டு விமர்சனம் செய்து இளம் வயதிலேயே அவர்கள் மனதை காயப்படுத்தி விடுகிறார்கள்.
இன்னும் சில பெற்றோர் “உனக்கு ஒருதடவை சொன்னால் புரியாது சரியான முட்டாளாக இருக்கிறியே”-என்று திரும்பத்திரும்பச் சொல்லி இளந்தளிர்களின் வேரில் வெந்நீரை ஊற்றிவிடுகிறார்கள்.
“எப்போ பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருந்து என்ன பிரயோஜனம்? உன் பிராகிரஸ் ரிப்போர்ட்டை பார்த்தாலே எனக்கு எரிச்சலாயிருக்கிறது. இதெல்லாம் ஒரு மார்க்கா?” - என்று சொல்வதோடு விட்டுவிடாமல், “பக்கத்து வீட்டு பரமேஸ்வரி இருக்காளே அவ மார்க்கை பார்த்தியா? சூப்பரா இருக்கு. நீ ஒரு மக்கு பிளாஸ்திரி. முட்டிமுட்டி படிச்சி என்ன பிரயோஜனம்?” - என்று ஒப்பிட்டுப்பேசி சின்ன மனதை சின்னா பின்னமாக்கி விடுகிறார்கள்.
“எப்பே பார்த்தாலும் டி.வி. முன்னாலயே தவம் பண்ணுகிற மாதிரி உட்கார்ந்துகிட்டா உனக்கு படிப்பு எங்கிருந்து வரும்?” என்றும் சிலர் சுட்டிக்காட்டி, குத்திக் காட்டுவார்கள்.
இந்த சின்னச்சின்ன விமர்சனங்கள் பிஞ்சு மனதை பிசைந்து விடும் விதத்தில் அமைந்துவிடும். எனவே - பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பேசும்போது மிக கனவமாக பேச வேண்டும். எதிர்மறை வார்த்தைகளை (Negative Words) உபயோகிப்பதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
முட்டாள், கிறுக்கன், அறிவு இல்லாதவள், விவரம் கெட்டவன், மக்கு, அரைகிறுக்கு, மூளை இல்லாதவள் - போன்ற வார்த்தைகளை பிள்ளைகளைநோக்கி உபயோகப்படுத்தாமல் இருந்தால் அந்த இளம் உள்ளங்கள் தங்களை பெருமையாக எண்ணி மகிழ்வோடு வளரும்.
உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்போது எதையும் தானாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். இதனால் உற்சாகம் உருவாகும் இந்த உற்சாகம் பள்ளிப்பாடங்களை விரும்பி படிக்க பக்கபலமாக அமையும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்ட வேண்டும். பாராட்ட ஒரு காரணமும் இல்லையென்றாலும்கூட ஏதேனும் ஒரு வார்த்தையை சொல்லி பாராட்ட வேண்டும்.
“கிரிதேஷ் நீ போட்டிருக்கிற சட்டை பிரமாதமாக இருக்கிறது”.
“மாலா நீ எடுத்திருக்கிற மார்க் மாதிரி நம்ம குடும்பத்துல இதுவரை யாருமே வாங்கவில்லை”.
“நான் கால் வலின்னு படுத்திருக்கும்போது, நீ பொறுப்போடு டீ போட்டு கொடுத்தாயே! நல்ல பிள்ளை”.
“நீ காலையிலே ஐந்து மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பிச்சிட்டே உனக்கு தன்னால மார்க் வரும்”.
“இன்றைக்கு தெற்கு ரதவீதியில நான் போய்க்கொண்டிருக்கும்போது என் பிரண்ட் ரமேஷ்குமாரை பார்த்தேன். உன்னை பார்த்து ரொம்ப தங்கமான பையனென்று சொல்கிறார்”.
-இப்படி ஏதேனும் ஒரு காரணத்தை கண்டுபிடித்து மனம் நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளைப் பாராட்ட வேண்டும்.
காலையில் உற்சாகமாக பள்ளிக்கும்போய் மாலையில் சோர்வாக பிள்ளைகள் வீட்டுக்கு திரும்பியவுடன் - “என்ன? ஏன்? எப்படி? யார்? என்று கேள்வி கொக்கிகளை வரிசையாக அடுக்குவதற்கு பதில் “குமார் உனக்கு டீ போட்டு வச்சிருக்கிறேன். முகம் கழுவிட்டு வா” என்று அன்பாக, ஆதரவாக பெற்றோர் அழைத்தாலே அத்தனை சோகங்களும் பிள்ளைகள் மனதிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போகும். அதன்பின்னர் மனநிலை அறிந்து பிள்ளைகளிடம் பேச்சுக்கொடுக்கலாம்.
பெற்றோர்கள் ஒருபுறம் இப்படி பிள்ளைகளை நம்பிக்கை வார்த்தைகளால் வளர்த்து வந்தால் “தாழ்வு மனப்பான்மை” என்ற குணம் பிள்ளைகளிடம் தோன்றாமல் இருந்துவிடும். எப்போதுமே மன நிறைவோடு பிறர் பாராட்டும் வகையில் வாழப் பழகியவர்கள்தான் ‘தாழ்வு மனப்பான்மை’ இல்லாமல் வாழ்கிறார்கள்.
சில பெற்றோர்களைப்போலவே ஆசிரியப்பணிக்கு சரியான தகுதிப்பெறாத ஆசிரியர்களும் சிலவேளைகளில் மாணவ-மாணவிகளிடம் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள்.
அன்று பள்ளிக்கு தாமதமாக வந்தாள் செல்வி. வகுப்பு ஆசிரியைக்கு எரிச்சலாக வந்தது.
“உனக்கு படிப்பும் வராது. ஒழுக்கமும் வராது. இது ஸ்கூலா? அல்லது உங்க வீடா? நினைச்ச நேரத்துக்கு ஸ்கூலுக்கு வந்தால், பிறகு படிப்பு எங்கிருந்து வரும்?” என வகுப்பு ஆசிரியை பலர் முன்னிலையில் சொன்னபோது செல்வியின் முகம் வாடிப்போனது. அதுவும் மாணவர்கள் மத்தியில் ஆசிரியை திட்டியதால் அவமானமாகிவிட்டது. வகுப்பு வாசலில்வைத்து தன்னை ஆசிரியை அலட்சியமாக பேசியது அழுகையை வரவழைத்தது.
ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து வரும்போது தனது சைக்கிள் பஞ்சரான விஷயத்தை சொல்வதற்குள் சாட்டையடியாய் வார்த்தைகள் வந்ததால் செல்வியின் மனம் நொறுங்கிபோனது.
இன்னொரு பள்ளியில் ஒரு ஆசிரியர் தனது மாணவன் ராம்குமாரை பார்த்து “மாடு மேய்க்கப் போக வேண்டியவனெல்லம் ஸ்கூலுக்கு வந்தால் பிறகு படிப்பா வரும். நீ உருப்படமாட்டே!” என சாபம்போட்டால் அந்த சாபம் சில தினங்களுக்குள் பலிக்க ஆரம்பித்துவிட்டது.
ராம்குமார் மனதில் “நான் ஒரு உருப்படாத மாணவன்” என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டது. இதனால் படிப்பில் கவனம் இல்லாமல் சுற்றித்திரிய ஆரம்பித்தான். முடிவில் பள்ளியின் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறினான். பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு இன்று ஒரு மளிகைக் கடையில் எடுபிடி ஆளாக வேலை செய்கிறான்.
பள்ளியில் பயிலும்போது சில பெற்றோர்களின் தவறான அணுகுமுறையால் இளைய உள்ளங்கள் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள். ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மையாலும் பாதிப்புக்குள்ளானவர்களும் உண்டு.
தன்னம்பிக்கை இல்லாமல் “நான் ஒன்றுக்கும் உதவாதவன்” என தாழ்வாக நினைத்து வருத்தப்படுபவர்களும் உண்டு. இந்த நிலையை மாற்றி முழு நேரமும் இளைய மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு உதவியாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தநிலையில் பெற்றோர்களும் மாணவ-மாணவிகளின் சுயமதிப்பீட்டை வளர்க்கும் விதத்தில் அவர்களோடு உரையாடவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு சில நாட்களுக்குமுன் எனது நண்பர் முத்துராமனை சந்தித்தேன். அவர் மிகவும் டென்ஷனாக இருந்தார்.
“பையன் இப்படி கால வாருவான்னு நான் கனவில்கூட நினைக்கவில்லை”. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெறும் 405 மார்க்குத்தான் வாங்கியிருக்கான். இவனுக்கு வருஷத்துக்கு 38,000 ரூபாய் ஸ்கூல் பீஸ் கட்டியிருக்கிறேன். மிகச் சிறந்த பள்ளியில் படித்தபிறகும் இப்படி மார்க் வாங்கினால் யாரால் பொறுக்க முடியும் சார்? சாதாரண கிளார்க் வேலையில் இருந்துகிட்டு இவ்வளவு பெரிய ஸ்கூல்ல சேர்த்தபிறகும் பொறுப்பில்லாமல் இருக்கிறான். இவனை இந்த ஸ்கூல்லவிட்டு மாற்றிவிட வேண்டியதுதான் - என வருத்தத்தோடு சொல்லிக் கொண்டே போனார் நண்பர்.
“சரி எந்த ஸ்கூலில் உங்கள் மகனை சேர்க்கப் போகிறீர்கள்”? என்று கேட்டேன்.
“டவுண்ல ஏதாவது ஒரு ஸ்கூல பார்க்கணும் குறைஞ்ச பீஸ் கேட்டாங்கன்னா இவனை அந்த ஸ்கூல்ல சேர்த்திட வேண்டியதுதான். ஏனென்றால் இவனை நம்பி இதுவரை சுமார் இரண்டு இலட்சம் ரூபாய்வரை செலவழித்ததுதான் மிச்சம். இனி பிளஸ்-1வது வேறு ஸ்கூல்ல சேர்த்திடணும் சார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என விரக்தியின் விளிம்பில் நின்று கேட்டார் முத்துராமன்.
பண இழப்பு, தனதுமகன் பெற்ற குறைந்த மதிப்பெண் இவை இரண்டும் ‘இரட்டைக்குழல்’ துப்பாக்கியாய் இவரை தாக்கியிருக்கிறது. வேதனையின் வடிவமாக காட்சியளித்த நண்பரிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்.
“நீங்கள் இப்போது உங்கள் மகனை ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாற்றினால் உங்கள் மகனுக்கு அந்தச்சூழல் பிடிக்கும் விதத்தில் அமையுமா? என்பதை முதலில் நீங்கள் கவனித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு செடியை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டுசெல்லும்போது அந்த புதிய சூழல்கள் செடி ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளதா? என்பதை முதலிலேயே கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய சூழலிலுள்ள மண், தண்ணீர், காற்று இவைகள் செடிக்கு ஏற்றதாக அமையாவிட்டால் அந்தச் செடி வாடிப்போய்விடும். சில நேரங்களில் செடிகூட கருகிவிடலாம்.
இதைப்போலத்தான் ஓரு பள்ளியிலிருந்து மாற்றி, மற்றொரு பள்ளியில் உங்கள் மகனை சேர்க்கும்போது அந்த புதிய பள்ளியின் சூழல் அவனுக்கு ஏற்றதுதானா? என்பதைப்பற்றி நன்கு சிந்தித்துக்கொள்ள வேண்டும். அந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா? நூலக வசதி உள்ளதா? கட்டிட வசதிகள் இருக்கிறதா? - என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் உங்கள் மகனின் மனநிலைக்கு ஏற்றவாறு அங்குள்ள மாணவர்கள் இருப்பார்களா? என்பதையும் தீர்மானித்துக்கொள்ளுங்கள். இதுதான் மிக முக்கியம்” - என்று ஆலோசனை சொன்னேன்.
இரண்டு நாள் கழித்து நண்பர் முத்துராமனை சந்தித்தபோது -
“சார் நீங்க சொன்னபடியே யோசித்துப்பார்த்தேன். புது ஸ்கூலில் போயும் என் மகனை சேர்க்க முயற்சி செய்தேன். அப்ளிகேசனோடு 10,000 ரூபாயையும் சேர்த்துக்கொடுத்தால்தான் உங்கள் பையனுக்கு அட்மிஷன் என்றார்கள். அதுவும் 450 மதிப்பெண்களுக்குமேல் இருந்தால்தான் அட்மிஷன் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். அங்குள்ள சூழலைப்பார்த்தால் இந்தப் பள்ளியைவிட அதிகமாக பணத்தையும் கேட்பார்கள் போலிருக்கிறது. ஒரு சில மாணவர்களுக்கு மட்டும்தான் நல்ல கோச்சிங் கொடுப்பார்களாம். மொத்தத்தில் நீங்கள் சொன்னதுதான் எனக்கு சரியாக தோன்றியது. இப்போது அவன் படித்த பள்ளியிலேயே அவனுக்கு அட்மிஷன் தருவதாகச் சொல்லிவிட்டார்கள். என் மகனும் இனி நன்றாகப் படிப்பேன் என உறுதியாகச் சொல்கிறான் உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி” என்றார்.
இப்போது நண்பர் முத்துராமனின் மகன் அதேபள்ளியில் ஆனந்தமாக படிக்கிறான்.
ஒருவரது எண்ணங்கள், வார்த்தைகள், சூழல்கள் ஆகியவைதான் அவரது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. எனவே வளமான வாழ்க்கைக்கு வாழ்க்கையை வாழ நாளும் முயற்சி செய்ய வேண்டியது அவசியம் அல்லவா!
கருத்துரையிடுக