வெற்றியை நிர்ணயிக்கும் முதன்மைத்தேர்வு - 4

வெற்றியை நிர்ணயிக்கும் முதன்மைத்தேர்வு
- நெல்லை கவிநேசன்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற மத்திய அரசின் உயர்பணிகளுக்காக தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்கட்டத் தேர்வான முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டங்கள் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். 

இனி - சிவில் சர்வீசஸ் தேர்வின் இரண்டாவது நிலைத் தேர்வான முதன்மைத்தேர்வின் (Main Examination) பாடத்திட்டங்களைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். 

முதன்மைத் தேர்வு (Main Examination)

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு ‘எழுத்துத் தேர்வு’ (Written Exam)  மற்றும் ‘நேர்முகத்தேர்வு’ (Interview Test) ஆகிய இரண்டு தேர்வுகளையும் உள்ளடக்கியதாக அமையும். முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் வெளியான பின்பு, அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மொத்தமுள்ள காலிப் பணியிடங்களின் அடிப்படையில் முதன்மைத் தேர்வு எழுதுவதற்குத் தேவையான போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது, தேவையான நபர்களைவிட சுமார் 12 மடங்கு அதிகமான நபர்களை முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணமாக - 1000 காலிப் பணியிடங்கள் இருந்தால் 12,000 பேர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

முதன்மைத் தேர்வு மொத்தம் 9 பாடங்களில் நடத்தப்படும். இந்தப் பாடங்களை இரு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை -
A. தகுதித்தாள்கள் (Qualifying Papers)
B. தரவரிசைக்கு கணக்கிடப்படும் தாள்கள் (Papers to be counted for Merit)
- ஆகியவை ஆகும். 

A. தகுதித்தாள்கள் (Qualifying Papers)
தகுதித்தாள் தேர்வுகள் இருவகைப்படும். அவை -
1. தாள் - A (Paper -A)
2. தாள் -B (Paper-B) - என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.   

தாள்-A (Paper-A)
இந்திய மொழிகள்– (Indian Languages) - [இந்திய அரசியல் அமைப்பின் 8ஆவது பிரிவின்படி (8th Schedule) அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் (Indian Languages) ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும்.]-300மதிப்பெண்கள்

தாள்–B ( Paper-B)
ஆங்கிலம் (English) - [தாள் - A (Paper-A) இந்திய மொழிகள்  மற்றும் தாள்-B (Paper-B) ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும்] - 300 மதிப்பெண்கள்

இந்த இரு தாள்களின் மதிப்பெண்கள் தரவரிசைக்கு (Rank) சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டியது அவசியமாகும். 

B.தரவரிசைக்கு கணக்கிடப்படும் தாள்கள் (Papers to be counted for Merit)

தாள்–I (Paper-I) 
கட்டுரைத்தாள் (Essay) - 250 மதிப்பெண்கள்

தாள்–II (Paper-II) 
பொதுஅறிவுப்பாடம்–I (General Studies – I) 
[இந்திய மரபுகள் மற்றும் பண்பாடு, உலக வரலாறு மற்றும் புவியியல் மற்றும் சமூகம் (Indian Heritage and Culture, History and Geography of the World and Society)] 250மதிப்பெண்கள்

தாள்--III (Paper–III)
பொதுஅறிவுப் பாடம்– II (General Studies – II)
ஆட்சிமுறை, அரசியலமைப்பு, அரசியல், சமூகநீதி மற்றும் பன்னாட்டு உறவுகள் (Governance, Constitution, Polity, Social Justice and International Relations) -250 மதிப்பெண்கள்

தாள்-IV (Paper–IV)
பொதுஅறிவுப் பாடம் – III  (General Studies) 
[தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, உயிரி - வேறுபாடுகள், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை (Technology, Economic Development, Bio–diversity, Environment, Security and Disaster  Management)] 250 மதிப்பெண்கள்

தாள் - V (Paper-V)
பொதுஅறிவுப்பாடம்–IV (General Studies–IV) 
[நெறிகள், ஒருமைப்பாடு மற்றும் திறன் (Ethics, Integrity and  Aptitude)] 250 மதிப்பெண்கள்

தாள் –VI (Paper-VI)
விருப்பப்பாடம்-தாள்-I (Optional Subject) (Paper – I) -250 மதிப்பெண்கள்

தாள் -VII (Paper-VII)
விருப்பப்பாடம்-II (Optional Subject) (Paper–II) -250 மதிப்பெண்கள்

மொத்தம் 1750 மதிப்பெண்கள்

முதன்மைத்தேர்வில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 26 விருப்பப் பாடங்களில் [மொழி இலக்கியப் பாடங்கள் (Literature) உட்பட] ஏதேனும் ஒரு பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். இந்த விருப்பப் பாடத்திலிருந்து தாள் VI, VII ஆகியவற்றிற்கான கேள்விகள் இடம்பெறும்.

விருப்பப் பாடங்களாக - (1) வேளாண்மை (Agriculture), (2) கால்நடை மருத்துவம் (Animal Husbandry and Veterinary Science), (3) மானுடவியல் (Anthropology), (4) தாவரவியல் (Botany), (5) வேதியியல் (Chemistry), (6)கட்டிடப் பொறியியல் (Civil Engineering), (7)வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் (Commerce and Accountancy), (8) பொருளியல் (Economics), (9) மின்பொறியியல் (Electrical Engineering), (10) புவியியல் (Geography), (11) மண்ணியல் (Geology), (12) வரலாறு (History), (13) சட்டம் (Law), (14) மேலாண்மையியல் (Management), (15) கணிதவியல் (Mathematics), (16) இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering), (17) மருத்துவ அறிவியல் (Medical Science), (18) தத்துவவியல் (Philosophy), (19) இயற்பியல் (Physics), (20) அரசியல் அறிவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் (Political Science and International Relations), (21) உளவியல்  (Psychology), (22) பொது நிர்வாகம் (Public Administration), (23) சமூகவியல் (Sociology), (24) புள்ளியியல் (Statistics), (25) விலங்கியல் (Zoology), (26) மொழி இலக்கியப் பாடங்கள் (Literature) ஆகியவை ஆகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல போட்டியாளர்கள் தமிழை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மொழி இலக்கியப் பாடங்களில் (Literature Subjects) ஏதேனும் ஒன்றையும் விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம். 

மொழி பாடங்களான - அசாமி (Assamese), பெங்காலி (Bengali), போடோ (Bodo), டோக்ரி (Dogri), குஜராத்தி (Gujarati), இந்தி (Hindi), கன்னடம் (Kannada), காஷ்மீரி (Kashmiri), கொங்கணி (Konkani), மைதிலி (Maithili), மலையாளம் (Malayalam), மணிப்புரி (Manipuri), மராத்தி (Marathi), நேபாளி (Napali), ஓரியா (Oriya), பஞ்சாபி (Punjabi), சமஸ்கிருதம் (Sanskrit), சாந்தலி (Santali), சிந்தி (Sindhi), தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu), உருது (Urdu) மற்றும் ஆங்கிலம் (English) - ஆகிய மொழி இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றையும் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்யலாம். 

முதன்மைத் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கு விடைகளை கட்டுரை வடிவில் எழுத வேண்டும். ஒவ்வொரு தாளிலும் தேர்வுகள் 3 மணி நேரம் நடத்தப்படும். இந்தத் தேர்வை ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலும் எழுலாம். 

முதன்மைத்தேர்வு மொத்தம் 1750 மதிப்பெண்கள் கொண்டதாகும். முதன்மைத் தேர்வை ஆங்கிலம் அல்லது தமிழ் உட்பட ஏதேனும் ஒரு மாநில மொழியில் எழுதலாம்.

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வு எனப்படும் ஆளுமைத்தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். “நேர்முகத் தேர்வு” (Interview Test) எனப்படும் “ஆளுமைத் தேர்வு” (Interview Test) பற்றி காண்போம். 

Post a Comment

புதியது பழையவை