நவராத்திரி திருவிழா - 2019

நவராத்திரி விழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா, தசரா விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் தசரா திருவிழாவுக்கு குடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. திருவிழா நடைபெறும் நாட்களில் குலசை முத்தாரம்மன் நாளும் ஒரு வடிவத்தில் வீதி உலா வருகின்ற நிகழ்வும் நடைபெறுகிறது. 

தசரா திருவிழா திருக்கோலங்கள்

முதல்நாளில், முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார். அப்போது, முத்தாரம்மனின் திருக்கோலம் துர்க்கையின் வடிவமாக அமையும்.

இரண்டாம் நாள் கற்பக விருட்ச வாகனத்தில் முத்தாரம்மன் பவனி வருகிறார். அப்போது, முத்தாரம்மனின் திருக்கோலம் விஷ்வகர்மேசுவரர் வடிவில் அமையும். 

மூன்றாம்நாள், ரிஷப வாகனத்தில் முத்தாரம்மன் காட்சித் தருகிறார். பார்வதியின் வடிவத்தில் முத்தாரம்மன் தோன்றுவது கண்கொள்ளா காட்சியாகும்.

நான்காம் நாள், பால சுப்பிரமணியர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் மயில் வாகனத்தில் தோன்றுகிறார்.

ஐந்தாம்நாள், நவநீத கிருஷ்ண திருக்கோலத்தில் முத்தாரம்மன் காட்சித்தருகிறார். இப்போது, அவரது வாகனம் காமதேனு ஆகும். 

ஆறாம்நாள், சிம்ம வாகனத்தில் தோன்றும் முத்தாரம்மன், மகிஷாசூர வர்த்தினி வடிவத்தில் உலா வருகிறார். 

ஏழாம் நாள், ஆனந்த நடராஜர் வடிவத்தில் பூஞ்சப்பரத்தில் முத்தாரம்மன் காட்சியளிக்கிறார்.

எட்டாம் நாள், முத்தாரம்மன், கஜலட்சுமியாகி, கமல வாகனத்தில் அருள்பாளிக்கிறார்.

ஒன்பதாம் நாள், அன்ன வாகனத்தில் காட்சியளிக்கும் முத்தாரம்மன் கலைமகள் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்குகிறார். 

தசரா நாட்களில் 9 நாட்களும் அருள்மிகு முத்தாரம்மன் கொண்டுள்ள திருக்கோலங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்வகையில் அமைகிறது. 

பத்தாம் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசாசூரசம்காரம் செய்தல்.

நாள்தோறும் நன்மைகள்

“தசரா திருவிழாவில் ஒவ்வொரு நாளும், முத்தாரம்மனை வணங்குவதன்மூலம் பல நன்மைகள் கிடைக்கும்” - என பக்தர்கள் உறுதியாய் நம்புகிறார்கள்.

முதல்நாளில், துர்க்கையை வணங்குவதன்மூலம் ராகு மற்றும் சர்ப்ப தோஷங்கள் நீங்கும். நீண்டநாள் திருமணம் நடக்காத கன்னிப் பெண்களுக்கு நினைத்தபடி திருமணம் நடைபெறும். குடும்பத்தில் குதூகலம் உருவாகும். 

இரண்டாம்நாளில், விஷ்வகர்மேசுவரரை வணங்குவதன்மூலம், தொழில், வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். நீண்டநாள் இருந்துவந்த தொழில் பிரச்சினைகள் நீங்கும். மகிழ்ச்சி உருவாகும்.

மூன்றாம்நாளில், பார்வதி தேவியை வணங்குவதன்மூலம், குடும்பத்தில் சகலவிதமான நன்மைகள் உருவாகும். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்வில் சிறந்து விளங்கவும் வழிகள் ஏற்படும். 

நான்காம்நாளில், பாலசுப்பிரமணியரை வேண்டி, வணங்குவதன்மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். நல்ல மக்களைப் பெற்றெடுத்து அவர்கள் சிறந்து விளங்கும் நிலையும் ஏற்படும். 

ஐந்தாம்நாளில், நவநீத கிருஷ்ணரை வணங்குவதன்மூலம் உடலில் உண்டாகும் நோய்கள் அகலும். இதன்மூலம், ஆயுள் அதிகரித்து நீண்டநாள் வாழும் நல்ல நிலையும் உருவாகும். 

ஆறாம்நாளில், மகிஷாசுரவர்த்தினியை வணங்குவதன்மூலம் எந்தச் செயலைச் செய்தாலும், அந்தச் செயல்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவதற்கு அம்பாள் அருள் புரிவாள். 

ஏழாம்நாள் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தை வணங்குவதன்மூலம், இம்மையிலும், மறுமையிலும் எல்லாவித நன்மைகள் உண்டாகும். 

எட்டாம்நாள் கஜலெட்சுமியை வணங்குவதால், வீட்டில் செல்வங்கள் பெருகும். சொத்துக்கள் வளரும். 

ஒன்பதாம்நாள் கலைமகளை வணங்குவதன்மூலம், படிப்பில் சிறந்து விளங்கும்நிலை ஏற்படும். கல்வி, கேள்விகளில் மேம்படுவதன்மூலம், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம். 

பத்தாம் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசாசூரசம்காரம் செய்தல்.

வேள்வியில் தோன்றிய பெண் குழந்தை, பராசக்தி தேவியாக வடிவம்கொள்ள மொத்தம் 9 நாட்கள் தேவர்களும், முனிவர்களும் வேள்வி நடத்தினார்கள். இந்த 9 நாள் வேள்வியையைத்தான் ‘நவராத்திரி’ என்று குறிப்பிடுவார்கள். நவராத்திரி திருநாளில் முதல் 3 நாட்கள் மலைமகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. அடுத்துள்ள 3 நாட்களுக்கு அலைமகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இறுதியில் உள்ள 3 நாட்களுக்கு கலைமகளுக்கு பூஜை வழிபாடு செய்யப்படுகிறது. 10வது நாளில், நள்ளிரவு 12 மணியளவில் “மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சி” நடைபெறுகிறது. 

Post a Comment

புதியது பழையவை