அசுரனை அழிக்கும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா

அசுரனை அழிக்கும் தசரா திருவிழா

பல இடங்களில் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாதான் குலசேகரன்பட்டினம் தசரா விழாவாக பக்தர்களால் போற்றிக் கொண்டாப்படுகிறது. புகழ்மிக்க தசரா விழா நடைபெறுவதற்கான காரணத்தை புராணங்களில் இருந்து எடுத்துக் கூறுகிறார்கள். 

பல ஆண்டுகளுக்குமுன்பு தவ வலிமைமிக்க ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் வரமுனி. சக்தி மிக்கவராகத் திகழ்ந்த வரமுனி தனியாக ஒரு இடத்தில் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடம் வழியாக நாள்தோறும் சென்று கொண்டிருந்தார் அகத்திய முனிவர். 

ஒருநாள் வரமுனி தங்கியிருந்த இடத்திற்கு அருகே அகத்திய முனிவர் அங்கு வந்தபோது, அவருக்கு முறைப்படி மரியாதை கொடுக்கத் தவறினார் வரமுனி. அதுமட்டுமல்லாமல், அவரை மதிக்காமலும் வரமுனி செயல்பட்டார். 

  இதனால், மனம் வேதனைப்பட்ட அகத்திய முனிவர், வரமுனிக்கு ஒரு சாபம் கொடுத்தார். “நீர் பெரியவர்களை மதிக்கத் தவறியதால், எருமைத் தலைகொண்ட மனித உடலும்பெற்று வரவேண்டும். பின்னர், சக்திகொண்ட பெண் தெய்வத்தால் அழிந்துபோக வேண்டும்” என்று சாபம் வழங்கினார். 

அகத்திய முனிவரின் சாபம் அப்படியே பழித்தது.

அகத்திய முனிவர் சாபமிட்டதும், வரமுனியின் தலை எருமைத் தலையானது. ஆனால், மனித உடலோடுகூடிய எருமைத் தலையோடு மகிசாசூரனாக வரமுனி உருமாறினார். ‘மகிஷம்’ என்பது ‘எருமை’ என பொருள்படும்.

மகா முனிவராக தனது வாழ்க்கையை சிறப்பாக நடத்திய வரமுனிவர் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் நிகழும் என அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மகிசாசூரன் வடிவில் வாழுகின்ற நிலை ஏற்பட்டதால், வரமுனிவர் கவலைப்பட்டார். இறைவனைநோக்கி பல்வேறு வேள்விகளை நிகழ்த்தினார். இதனால், சில வரங்கள் அவருக்குக் கிடைத்தது. 

இறைவனிடமிருந்து மகிசாசூரன் வரங்களைப் பெற்றதால், தன்னை சக்தி மிக்கவனாகப் கருதிக்கொண்டு, அங்குள்ள முனிவர்களுக்கு பலவித தொந்தரவுகளை கொடுத்து வந்தார். தேவர்களையும் பிடித்து சிறையில் அடைத்தார். அந்தத் தொந்தரவுகளை தாங்க முடியாமல், முனிவர்கள் மற்றும் தேவர்கள் முத்தாரம்மன் அன்னையை வேண்டி பல வேள்விகளை நடத்தினார்கள். “மகிசாசூரன் செய்யும் தீங்குகளை விலக்கித்தர வேண்டும்” என்று வேள்வியின்போது முனிவர்கள் வேண்டினார்கள். 

முனிவர்களின் வேள்வியின்போது தோன்றிய பராசக்தி “நீங்கள் கவலைப்பட வேண்டாம். நானே மகிசாசூரனை அழிக்கிறேன்” என்றுகூறிச் சென்றாள். அவர்கள்மீது கருணைகொண்டு முனிவர்களின் வேள்வியில் ஒரு பெண் குழந்தையைத் தோன்றச் செய்தாள். அந்த பெண் குழந்தை லலிதாம்பிகையாக மாறியது. அதன்பின்னர், அந்தக் குழந்தை முழுமையான ஒரு பெண்ணாக மாறியது. இந்த நிகழ்வு தொடர்ந்து 9 நாள் வேள்விக்குப்பின்பு நிகழ்ந்தது.

10வது நாளான தசரா திருநாளில் அந்தக் குழந்தை பராசக்தி வடிவாக மாறியது. சகல சக்திகளும்கொண்ட பராசக்திதேவி மகிசாசூரனை வதம் செய்தாள். கர்வத்துடன் வலம்வந்த மகிசாசூரனை ஒழித்ததால், பராசக்திதேவி ‘மகிசாசுர வர்த்தினி’ என்றும் பெயர்பெற்று விளங்குகிறாள். 

மகிசாசூரனை ஒழித்த அந்த நாள்தான், தசரா திருவிழாவின் பத்தாவது நாள் திருவிழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது என்று புராணத்திலுள்ள ஒரு நிகழ்வு குறிப்பிடுகிறது. 

Post a Comment

புதியது பழையவை